RSS

Thursday, February 7, 2008

ஐஸ்கிரீமும் நானும்..!

ஐஸ்கிரீமும் நானும்..!



மருத்துவமனை சுவர்களோடு
மனம் பேசும் வாசனை
பினாயில் நெடியோடு
கரைந்து போகும்..!

வெள்ளை உடுப்பிட்டு
புன்னகையை பூட்டி
அறைகளின் உயிருக்கு
பூ வைத்தியம்.!

இன்று முதல்
பூக்கள் நடுவில்
இரவுப் பணி..!

அந்த அறையை
அடையும் போதெல்லாம்
மனம் துடிக்கும்..!
வெள்ளை உடை தாண்டி
தாயுள்ளம் பரிதவிக்கும்.!

"சிஸ்டர்..! நீங்களே..எப்பவும் ஊசி போடுங்களேன்.
காலையில் வந்த சிஸ்டர்.. கை வலிக்க போடுறாங்க..!"

புன் சிரிப்பு ஒட்டவைத்து
மென் ஊசி போட்டு
உச்சி முகர்ந்து முத்தமிட்டு
உறங்கச் சொல்கிறேன்..!

மூன்று மாத கெடுவில்
முத்தான பிள்ளை
முகம் மாறா சிரிப்புடன்
சொல்கையில்
செவிலிப்பணி தாண்டி
சொல்லறுத்து விழி செல்துடித்து
அழுகிறது..!

மருத்துவ அறிக்கையில்
மாதம் இரண்டு கடந்து
பதினைந்து ஆகிருந்தது.!

"சிஸ்டர்.. எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடனும்..!
நாளை வாங்கி வருவீங்களா?"
ரகசிய குரலோடு சுற்றுமுற்றும் பார்க்கிறான்
பயமாய்..!

தலையாட்டி விடைபெறுகிறேன்..!

அடுத்த இரவுக்கு காத்திருந்தது
இருவரின் மழலை மனமும்
..!

ஐஸ்கிரீம் வாங்கி
பையில் பத்திரப்படுத்தி
ஓடிச் செல்கிறேன்
அறை நோக்கி..!

மருத்துவர் கூட்டம்
கூடி இருக்க..
அவசரப்பிரிவில்
அவதியுறும் மழலை..!

புற்றுநோயின் புற்றுக்குள்
புதையுறுகையிலும்..
என் முகம் கண்டதும்
கண்ணில் வெளிச்சம்..!

ரகசிய சம்பாசனையில்
"ஐஸ்கிரீம் இருக்கா?" ஆவல் வினா..!

ஆமென்று நான் தலையசைக்க
நிம்மதியொளி முகத்தில் தெரிய
மெல்ல மூடியது மழலைக் கண்கள்..!

ஐஸ்கிரீமும் நானும்
அடங்கா துக்கத்தில்
உருகி வழிந்து
ஓடிக் கொண்டிருந்தோம்..!

__________________
~பூள்.

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வலையில் ஒரே காதல் கவிதைகளாகப் பார்த்து அலுத்து இருந்தேன். உங்கள் கவிதையைப் படிக்க நிறைவாக இருக்கிறது. இதையே சிறுகதை வடிவில் எழுதி இருந்தால் இன்னும் நல்லா வந்திருக்குமோன்னு தோணுது..

பூமகள் said...

மிக்க நன்றிகள் ரவிசங்கர் சகோதரரே.

உண்மை தான். சிறுகதை எழுதி அதிக பழக்கம் எனக்கில்லை. அதனால் தான் கவிதை வடிவில் எழுதினேன்.

உங்களை மகிழ்வித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்து வாங்க. விமர்சிங்க. எல்லா கவிதைகளையும் படித்து உங்க கருத்தை பதிவிட்டு செல்லுங்கள்.

அன்புடன்,
பூமகள்.