RSS

Monday, February 23, 2009

ஸ்லம்டாக் மில்லியனர் திரை விமர்சனம்






ஸ்லம்டாக் மில்லேனியர் (ஆங்கில மொழிப் படம்)


படத்தின் ஆரம்ப காட்சி சிறுவர் பட்டாளத்தின் கொண்டாட்டங்களோடு, மும்பை நகரின் மிக அழுக்கான அடிப்படை வசதிகள் கூட சரிவர இல்லாத இடத்தில் வாழும் குழந்தைகளின் விளையாட்டுகளைக் காட்டுவதிலிருந்து ஆரம்பிக்கிறது படம்..

காவலர்கள் துரத்த சிறார்கள் ஓடும் காட்சி அமைப்பும், அதற்கு தகுந்தாற்போன்ற பின்னணி இசையும் தூள் கிளப்புகிறது..

அண்ணன் சலீம்,தம்பி ஜமால் என்ற இரு சிறார்களை நோக்கி குவிகிறது கதை..

ஒரு சில ஆரம்பக் காட்சிகளிலேயே மும்பையின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வறுமை நிலையையும் சட்டென மூஞ்சியில் அறைந்தார் போல அப்பட்டமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளரைப் பாராட்டியே ஆக வேண்டும்..

மழையில் நனையும் சிறுமி லத்திகாவை தாங்கள் ஒதுங்கியிருக்கும் இடத்துக்கு அழைப்பதிலாகட்டும், தாஜ்மகாலின் கதையை பார்வையாளரிடம் சொல்லும் விதத்திலாகட்டும் சிறுவனாக வரும் ஜமால் அசத்தியிருக்கிறான்... மென்மையான மழலை மாறா முகத்தை வைத்துக் கொண்டு அமிதாப் பச்சனிடம் ஆட்டோகிராஃப் வாங்க செய்யும் ஆர்ப்பாட்டம் திரையரங்கையே குலுங்கச் செய்கிறது.. அக்காட்சியில் எத்தனை தடை வந்தாலும் தனது குறிக்கோளை அடைய உழைக்கும் அந்த ஈடுபாடு அழகாக வெளிப்பட்டிருக்கிறது..

சிறுமி லத்திகாவுடனான காட்சிகள் தொடங்கி ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையோடு கட்டிப் போட்டுவிடுகின்றன..

மூன்று கோணங்களில் படத்தை மிக அழகாக கோர்வையாக்கித் தந்திருக்கும் இயக்குனரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

கோன் பனேகா கரோர்பதி (மில்லேனியர்) நிகழ்ச்சியில் துவங்கி, காவலர் விசாரணை வழியே பின்னோக்கி வரிசையாக பழைய நிகழ்வுகள் முதல் ஒவ்வொன்றாக அடுக்கி இறுதியில் நிகழ் காலம் கொண்டு வந்திருக்கும் பாணி அருமை.

கதா நாயகியாக நடித்திருக்கும் பெண் அசத்தியிருக்கிறார்.. நிறைய இடங்களில் அழகான பின்னணி இசை மனம் கவர்கிறது..

இறுதியில் ஜமால் - லத்திகா சந்திப்பும் அதன் பின் வரும் பாடலும்............... சொல்ல வார்த்தைகளே இல்லை..



என் அருகே அமர்ந்திருந்த சீனப் பெண் மிக ரசித்துப் படத்தைப் பார்த்ததை அவ்வப்போது வந்த சிரிப்பொலியிலிருந்து உணர முடிந்தது.. உலக மக்களில் பெரும்பான்மையோரை இப்படம் கவர்ந்திருக்கிறது..

இந்த இனிய விமர்சனத்தை நான் எழுதுகையில் ஓர் இனிய செய்தி என் செவிக்கு எட்டியது.. ஆம் ஸ்லம்டாக் மிலேனியர் படத்துக்கு 8 ஆஸ்கர் விருதுகள் கிட்டியிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமானுக்கு இரு விருதுகள் சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல் இசைக்காக கிட்டியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

மொத்தத்தில் ஸ்லம்டாக் மிலேனியர் இந்தியாவின் மும்பை நகர அடித்தட்டு மக்களின் நிலையை வாழ்வியல் எதார்த்தத்தை அப்பட்டமாக காட்டியிருக்கும் ஓர் வரலாற்றுக் கல்வெட்டு.

__________________
-- பூமகள்.

Wednesday, February 18, 2009

கண்ணாமூச்சி..!

காதலர் என்று
கண்ணாமூச்சியாடும்
இரவுக்கும் பகலுக்குமான
ஊடலில் சிக்கியபடியே
வாழ்க்கை..!

இருள் தோய்ந்த
நள்ளிரவின் கீறலில்
சிக்கிக் கொள்ளும்
சில நியாபகங்கள்..

கலங்கி கண்கள்
காலையில் படிக்கும்
நாளைய பொழுதின்
அவசரப் பாடம்..!

எத்தனை வலித்தாலும்
வாய் முழுக்க பல்லுடன்
சிரித்து வைக்கிறேன்...

நம் பேச்சு புரியாத
எதிர்வீட்டு குழந்தையை
பார்க்கும் போதெல்லாம்..!!
__________________
-- பூமகள்.

Friday, February 13, 2009

எதிரிகள் வாழ்க..!



எதிரிகள் வாழ்க..!!

நெருப்பு நாவுகள்
சிரிப்போடு சாடுகையில்..
கரைக்கும் அமிலமாய்
சிறையிடும் வார்த்தைகள்..!

உணர்ந்தழுது வெதும்பி
கிடக்கையில்..
உள்ளத்தின் நாவசைந்து
மென்மையாய் உரையாடும்..!

முன்னாளில் பகைவரால்
வேல் பாய்ச்சிய
வசைகள் பல
தசை கிழித்து
உள வேர் முறுக்கிய
கதை படிக்கும்..!

கூர் ஊசி நூறு
உரசிப் போன
நெஞ்சமது..
இன்னாளின் இடரெல்லாம்
இம்மியளவாய் தோன்ற வைக்கும்..

துயர் கடந்து
லேசாகி மனம் மெல்ல
மேலெழும்பும்..

எல்லாம் தாங்கி
ஏற்றமதைக் காண
கற்பித்த எதிரியே - நீவீர்
வாழ்க வாழ்கவே...!

--- பூமகள்

Wednesday, February 11, 2009

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பார்வையில் எழுத்தாக்கங்கள்..!

சென்ற வருடத்தில் ஓர் இரவு எதேட்சையாக எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு கல்லூரியில் பங்கேற்ற ஒரு கலந்துரையாடல் பட்டறையின் ஒலியாக்கம் எங்கள் ஊர் வானொலியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது..

இடையிலிருந்து கேட்டதால்.. பேசுவது யார் என்ற தெரியாமலேயே இவரின் பேச்சு என்னை ஈர்க்கத் தவறவில்லை...

கல்லூரி மாணவர்கள் வரிசையாக கேள்வி கேட்க.. ஒவ்வொன்றுக்கும் ஆழ்ந்து.. பல விசயங்களைச் சொல்லும் முனைப்போடு வெளிப்படையாக பேசினார்...

நிறைய கவிஞர்களைப் பற்றி.. அவர்தம் கதைகளைப் பற்றி... சிறுகதையில் எவையெல்லாம் பதிவாக்கப்பட்டிருக்கின்றன.. எவை விடுபட்டுவிட்டன.. என்பது பற்றிய ஆழ்ந்த ஆராய்ச்சி அவரில் இருந்ததை அவரது பேச்சிலிருந்து உணர முடிந்தது..

அவர் பேசுகையில்.. எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளில் பெரும்பான்மையானவை.. நடுத்தர வர்க்கத்தின் பயத்தை அப்பட்டமாக பதிவாக்கியிருந்ததாகச் சொல்கிறார்.. உதாரணங்களாக... ஒரு நுழைவுச் சீட்டு வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் நடுத்தர வர்க்கத்து நபர்.. நாம் செல்வதற்குள் சீட்டு முடிந்துவிடக் கூடாது.. சீட்டு கொடுக்கும் நேரம் முடிந்து விடக் கூடாது என்று பதைபதைப்பாரோ.. அவ்வாறான சின்ன சின்ன படபடப்புகளையும் அழகாக கதையில் கொண்டு வந்து எதார்த்தத்தை விவரித்திருப்பாரென உரைத்தார்..

மற்றுமொரு கதையில்.. ஒருவர்.. மருத்துவமனைக்குச் செல்கிறார்..அங்கே... பெரிய வரிசை.. மருத்துவருக்காக காத்திருக்கிறது... இவரது எண்ணமெல்லாம் எப்படி செவிலிப் பெண்ணிடம் தனது டோக்கனுக்கு பதிலாக முந்தைய டோக்கன் வாங்கி உள்ளே பார்க்கச் செல்வது.. என்பதிலேயே இருக்கிறது.. நோயைப் பற்றிய நினைப்பு போய்.. அங்கே.. இந்த மாதிரியான நடுத்தர வர்க்கத்து ஏக்கம் மிகுந்த படபடப்பை பதிவாக்கியிருப்பதாக உரைத்தார்..

மேலும்..
எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய.. "விரல்" கதை..எப்படி வித்தியாசமான கதைக்களத்தோடு இருந்தது என்பதை உணர்த்தினார்..
"விரல்" கதையின் சுருக்கத்தையும் சொன்னார்..

ஒரு எழுத்தாளர்.. குடித்துவிட்டு.. அவரது நண்பர் வீட்டுக்கு.. பணம் தேவைப்பட.. வாங்குவதற்காகச் செல்கிறார்..

அவர் சென்ற நேரத்தில்.. நண்பர் இல்லை.. கதவைத் திறந்து.. நண்பரின் மனைவி.. இவரின் நிலை கண்டு தனித்து இருக்கும் தன்னிடம் ஏதும் தகறாரு செய்ய கூடும் என அஞ்சுகிறார்..

நண்பரின் மனைவி.. "அவர் இல்லை போயிட்டு வாங்க" என்று சொல்லி பட்டென்று கதவடைக்கிறார்..

மீண்டும் கதவு தட்டி "உங்களிடம் இருக்கும் தொகையாவது தாங்கள்..அவசரமாக பணம் வேண்டும்" என்று இவர் வினவி உள்ளே செல்ல முயல்கிறார்..

இவர் உள்ளே வர முற்பட.. "அவர் இல்லை.. போயிட்டு வாங்க" என்று சொல்கிறார்...

இவரது மறுமொழியைக் கூட வாங்காமல் பட்டென்று கதவு சாத்தப்படுகிறது.. இவரது சுண்டுவிரல்.. கதவிடுக்கில் சிக்கி பயங்கரமாக வலிக்கிறது..

இவர் வலியில் "கதவைத் திறங்கள்" எனக் கத்த.. அந்த நண்பரின் மனைவியோ... இவர் கதவு திறக்கத் தான் கூப்பாடு போடுகிறாரென நினைத்து.. திறக்காமலே பதில் சொல்கிறார்..

இறுதியாக.. இவரது வலியினை உணர்ந்து கதவு திறந்து விடுகிறார்.அப்போது..சுண்டுவிரல்.. நைந்து போய் ரத்தம் வழிகிறது..
அப்போதும்..அந்த பெண்மணி, "வீட்டில் அவர் இல்லை.. வெளியில் எங்காவது சென்று மருத்துவனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி கதவடைக்கிறார்.

இவர் வலியோடே.. மற்றொரு நண்பரைப் பார்க்கிறார்.. பையில் பணமிருக்கிறதா என வினவ.. இருக்கு என்று அவர் சொல்ல..

இவர் நண்பர்.. அவரின் நிலை கண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.. அங்கே.. செவிலிப் பெண்.. கை விரல்.. எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.. இத்தனை நைந்த நிலையில் மருத்துவர் தான் வந்து சிகிச்சை அளிக்க முடியும்.. ஆகவே காத்திருங்கள் என சொல்கிறார்..

உடன் வந்த நண்பர்..வேறு மருத்துவனை போய் கைக்கு சிகிச்சை பார்ப்போமென அழைக்க..
காத்திருந்த அடிபட்ட நண்பர்.. "பையில் பணமிருக்கில்ல.. பக்கத்துல பிரியாணிக் கடையில் நல்லா பிரியாணி போடுவாங்க.. வா சாப்பிடலாம்" என அழைக்கிறார்..

அவரது நண்பர்.. முதலில் அதிர்ச்சியாகி..பின்பு.. இருவரும் ஒன்றாக பிரியாணிக் கடை நோக்கி பயணப்படுகிறார்களென கதை முடிந்திருக்கும்..

இதில்.. கை விரலே.. அடிபட்டு.. ரத்தம் சொட்டச் சொட்ட எலும்பு உடைந்த நிலையில் ஒருவர்.. அதைப் பற்றி கவலைப்படாமல்.. சாப்பிட போகலாமென அழைப்பது முற்றிலும் வித்தியாசமான கதை..

இது நிஜ சம்பவமாகத் தான் இருக்குமென எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் விவரித்தார்..

மற்றுமொரு நிஜச் சம்பவத்தை அசோகமித்திரம் எப்படி பதிவாக்கியிருந்தார் என்பதையும் உரைத்தார்..

அடுத்து இப்படியாக அமைந்த அசோகமித்திரனின் வேறு ஒரு கதைநாயகர்கள் பற்றியும் கூறினார்..

ஒரு நண்பருக்கு ஒருவர் புதிதாக வேட்டி வாங்கித் தருகிறார்.. அவரும் அதை அணிந்து பார்க்கிறார்..அந்த நண்பரை இருக்கச் சொல்லிவிட்டு.. புதுவேட்டியோடு வெளியில் கிளம்புகிறார்..

சற்று நேரம் கழித்து அழுக்கான பழைய வேட்டியோடு அந்த நண்பர்
திரும்பி வருகிறார்..

பார்த்த இந்த பரிசளித்த நண்பர்.. அதிர்ந்து.. எங்கே அந்த புதுவேட்டியென்று கேட்க.. "எனக்கெதுக்கு புதிது.. நல்லவிலைக்கு ஒருவருக்கு விற்றுவிட்டேன்.. அவர் கட்டியிருந்த வேட்டியை வாங்கிட்டு வந்துட்டேன்" என்று இயல்பாக பதிலளிக்கிறார்..

இங்கே... இப்படியுமா இருப்பார்கள் என்றால்.. உண்மைச் சம்பவம் இது என்று ராமகிருஷ்ணன் அவர்கள் சொல்வதை ஏற்காமலும் இருக்க முடியவில்லை..

தனது படைப்பைப் படித்து பார்க்கத் துடிக்கும் ஒவ்வொரு வாசகரையும் ராமகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று பார்ப்பதாகவும்..அது தான் தகுந்த செயலென்று கூறினார்..

படைப்புகள் காலத்திற்கு ஏற்ப நிற்கும்.. உதாரணமாக.. மகாக்கவியின் பாடல்களான.. "ஆசை முகம் மறந்து போச்சே" மற்றும்.. "காற்று வெளியிடைக் கண்ணம்மா" பாடல்கள் எல்லாம் அவர் காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதில்லை என்றும்... இப்போது இக்காலத்தில் பரவலாக பிரபலமாகியிருக்கிறது என்றும் கூறினார்..

சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறுகதைகளின் பங்கு பற்றிய ஒரு கல்லூரி மாணவரின் கேள்விக்கு விடையளிக்கையில்..

குஜராத் ஜாலியன் வாலாபாக் படுகொலையெல்லாம் எங்ஙனம் நடந்தது என்பதற்கான.. பதிவுகள் ஆவணங்கள் செய்து வைத்திருந்தனர்.. இங்கே... (தமிழ்நாட்டில்)நடந்த பெரிய பெரிய நிகழ்வுகள் எல்லாம் பதிவாக்கப்பட்டாமலேயே போய்விட்டன..

முக்கியமாக.. உப்புச் சத்தியாகிரகம்.. காந்திஜியின் வருகை... விதவைத் திருமணம்.. இவையெல்லாம் தான் பதிவாக்கப்பட்டிருக்கிறது...

சுதந்திர காலத்தில்.. வெள்ளையர் நம்மை ஆள வேண்டும்.. அவர்கள் தான் நம்மை காப்பாற்றுவார்களென ஒரு இயக்கமே தமிழகத்தில் தான் போராடியது என்று கூறி வருந்தினார்..

நிறைய பயணங்கள் செய்வார்... என்று கூறினார்.. நடந்து.. பேருந்தில்.. இப்படி பல..

அவரது ஆஸ்ரேலியப் பயணத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்... ஒருமுறை.. ஆஸ்ரேலியாவின் பல்கலைக் கழகத்துக்கு... செல்கையில்..அங்கிருக்கும் ஒரு பேராசிரியர்.. அவருக்கு சொல்லிக் கொடுத்த பேராசிரியரை எப்படி வணங்கினார்.. எங்ஙனம் அவரது எல்லா வெற்றிகளிலும் அவரது பெயரை கூடவே.. இன்னாருடைய மாணவர் என்றும் எழுதியிருந்தார்.. என்று உரைத்தார்..

அப்படி சொல்லிய பேராசிரியருக்கே.. அறுபது வயதிருக்குமெனில்..அவரது பேராசிரியருக்கு எத்தனை வயதிருக்கும்.. ஆனால்.. அடிக்கடி அவரைச் சந்தித்து நிகழ்வுகள் பற்றி பரிமாறிக் கொள்ளும் அந்த மதிப்பைப் பார்த்து அசந்து போனதாகச் சொன்னார்..

ஒரு நல்ல கல்லூரி.. ஒரு மாணவரை கல்லூரி முடித்த பின்பும் மீண்டும் மீண்டும் வரச் செய்யும்படி அமைய வேண்டும் என்று சொன்னார்..

இன்னும் பல விடயங்கள் பற்றி என் அறிவிற்கும் அப்பால் உரைத்தார்... எனது மூளையில் தெளிவாக பதிவாகிய மிகச் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

இன்னும் விசாலமாக இலக்கியம்.. சிறுகதைகள் மற்றும் எழுத்தாளர்கள் சார்ந்த தமிழறிவை வளர்க்கும் முயற்சியில் நான் பயணிக்கிறேன்..!!

நன்றி: ஞானவாணி வானொலி
__________________
-- பூமகள்.

Monday, February 9, 2009

காத்திருப்பு...!

நீ
அழைக்கும் வரை
நம் வீட்டில்
பெரிய வரிசையில்
காத்திருக்கின்றன..

நம் வீட்டு அழைப்பு மணி
முதல்
அலைபேசி வரை..
என் பின்னாலேயே...!!

--பூமகள்.

நான் கடவுள்..! - திரை விமர்சனம்


பிரம்மிப்பூட்டும் ஆர்யாவின் சிரசாசனத்தோடு ஆரம்பித்து அதிரடியான துவக்கத்தோடு ஆரம்பித்திருக்கும் பாலாவுக்கு ஒரு சபாஷ்.

காசியின் கொஞ்சம் கொஞ்சமாக அசுத்தமாகிக் கொண்டிருக்கும் அழகில் எஞ்சியிருப்பதை அழகாக காட்ட முயன்றிருப்பது புரிந்தது.

ஆர்யாவின் அசத்தல் உடல் வாகுவுக்கு 3 வருட அதீத உழைப்பு அவசியமற்றதாகவே தோன்றியது. சில மாதங்களே போதுமானதாக இருந்திருக்கலாம். அத்தனை பாடுபட்டும் படத்தில் மிகக் குறைவாக ஆர்யாவைக் காட்டியிருப்பது வருத்தமளிக்கிறது.

படத்தில் பிச்சையெடுப்பவர்களின் மனங்களையும் வலிகளையும் காட்டியிருப்பது உலகின் இருண்ட பாகத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தது. நரகத்தில் சில நிமிடங்கள் இருந்தது போன்ற பிரம்மையை சில கொடூர காட்சிகளும் வார்த்தையாடல்களும் காட்டியது.

ஆங்காங்கே தூவியிருக்கும் நகைச்சுவை படமெங்கும் நிரம்பியிருந்தது கச்சிதம்.. பிச்சைக்காரர்களாக வந்து சிரிக்க வைத்தாலும்.. மனம் விட்டு சிரிக்க இயலாதபடி ஏதோ ஒரு பாரம் மனதை அழுத்தியது.. அவர்களுக்காக யோசிக்க வைத்தது..

படத்தில் பெண்களை அடித்து உதைக்கும் காட்சிகள் மிகக் கொடுமையாக இருப்பதால் படம் பார்க்கிறோம் என்பதை மறந்து எழுந்து திரையில் வரும் வில்லனை கொல்ல மனம் துடிக்கிறது. மென்னுள்ளம் படைத்தவர்கள், குறிப்பாக பெண்கள் இப்படத்தைத் தவிர்ப்பது நலம். நிறைய இடத்தில் கத்தரிக்கு வேலை வைத்திருப்பது புரிந்தது. வசனங்களின் பல இடங்களில் 'ஒலி' தடை செய்யப்பட்டுயிருப்பது அதிக கெட்ட வார்த்தை பிரயோகம் இருப்பதை உறுதி செய்தது. வன்முறைக்காட்சிகள் அதி பயங்கரமாக வந்திருக்கிறது.

ஆர்யாவின் கம்பீரமான உடல் வாகுவும்.. மந்திர உச்சரிப்புகளும் ஏதோ ஒரு யோக நிலையை நம்மில் ஏற்படுத்திவிடுகிறது..



படத்தின் ஆரம்பத்தில் வரும் பாடலும் இடையில் வரும் "பிச்சைப் பாத்திரம்.." என்ற மது பாலகிருஷ்ணனின் தேனமுத குரலில் வரும் பாடலும் மனத்தில் அமர்ந்து நகர மறுக்கிறது.. கே.ஜே.ஜேசுதாஸின் குரலை நினைவுறுத்தியதை மறுப்பதற்கில்லை.

அதே போல் படமெங்கும் தன்னைக் கடவுளாக சொல்லிக் கொள்ளும் கூட்டம், கஞ்சாவுக்கு அடிமையாக இருப்பது மட்டும் சரியா?? என்ற பகுத்தறிவுக் கேள்வியும் மனதில் எழாமல் இல்லை. ஆர்யா கதாப்பாத்திரமும் அவ்வண்ணமே சதா கஞ்சாவும் கையுமாக இருப்பது மனதை நெருடுகிறது. ஆயினும், அகோரிகளின்( தன்னை கடவுளாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்கள்) உண்மையான வாழ்க்கை நிலை இப்படித் தான் இருக்கிறதோ என்னவோ என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டியதாக இருந்தது.

பூஜாவின் மிக இயல்பான நடிப்பு அசர வைக்கிறது. குறிப்பாக பூஜா முதன் முதலில் ஆர்யாவுடன் பேசும் காட்சி, சற்றே இழுவை போல தோன்றியது. அழுத்தமான வசனங்கள் குறைவாக இருந்தது படத்தில் ஒரு பெரும் குறை. பல காட்சிகள் இழுவையாகவே தோன்றியது.

எல்லாவற்றையும் தாண்டி, படத்தின் பலம்.. ஆர்யாவின் நடிப்பு, கண்களில் தெறிக்கும் வெம்மை, கயவர்களைக் கண்டவுடன் இனம் காணும் அகம், பார்த்த இடத்திலேயே கொன்று தீர்க்கும் செயல் என எல்லாமே நம் மனக் குமுறல்களுக்கு ஆறுதலாக..!!

படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு நிமிடம், சுற்றியுள்ள அனைவரும் மறந்து மனம் ஒரு நிலைப்பட்டு, யோக நிலையை அடைந்ததை என்னால் மறுக்க முடியாது.

நான் கடவுள்.... மொத்தத்தில், அல்லவை அழிக்க காத்திருக்கும் ஒவ்வொரு தூய மனத்துக்குமான அடையாளம்..!!

-பூமகள்.

வேண்டுதல்....!

இன்று பெய்த மழையால்
துடைத்துவிடப்பட்ட வானத்தில்..
முளைத்துவிட்டிருந்தது
ஒன்றிரண்டு காளான் நட்சத்திரங்கள்...!

அல்லவை அழிக்க
எரி நட்சத்திரமாகுமாவென
அங்கலாய்த்தபடியே
இன்னும் என் மனம்...!!
__________________
-- பூமகள்.

Friday, February 6, 2009

வரம்...!!

என்றுமே இறக்காதிருப்பேன்..

எழுத்துகளின் ஈரம்
என் ஆன்ம வேர் தீண்டும் வரையிலும்..

நல்லுறவுகளின் கீதம்..
என் மனச் சுவர்கள் முட்டும் வரையிலும்..

வல்லூறுகளின் வேசம்..
தூசாகி தீயில் பொசுங்கும் வரையிலும்..

காலங்கள் மாறினாலும்..
சூழல்கள் குழப்பினாலும்..

என்றுமே இறக்காதிருப்பேன்..
எழுதி விட்டுப் போன
ஒரு சில காகிதச் சிதறல்களிலேனும்...

Tuesday, February 3, 2009

தவம்...!



நெடிய பிரிவுக்கு பின்
தாய் விரல் இறுகப் பற்றும்

மழலை போல

தொலைந்து போன

எழுத்துச் சுவடுகள்

தேடி வந்து

விரல் பிடித்து
உயிர்த்தெழ

காத்திருக்கின்றன..


தன் மழலை வாசம்

தாயறிவதைப் போல

என் எழுத்துகளின் வாசம்

நானறியத் தலைப்படுகிறேன்...


வெகு நாட்கள்

முக்காடு இட்டு
புழுதி படிந்து
உறங்கிய சுவடுகள்
அதன் மேனியெங்கும்
மழலை கதக்கிய
பால் வாசனையை நினைவூட்டின..!


மழலையால்
கலைத்து போடப்பட்ட
விளையாட்டு பொம்மை போல
ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன
கவிக்கருக்கள்..!


மறந்து போனாலும்
நினைவூட்டியபடியே இருக்கின்றன
என்றோ நட்டு வைத்த
நட்புப் பூக்கள்..


விடியலுக்காக ஏங்கும்
குருவிக் குஞ்சின் மனதைப் போல்
கவி வருகைக்காக ஏங்கித் தவிக்கும்
உள்ளத்தின் ஓர் பிம்பம்..!!


-பூமகள்.