RSS

Sunday, October 31, 2010

மரணம் ஒத்த நிகழ்வில்..


வாழ்த்த வந்த
உனைக் கண்டு
பாதியானது என் மீதியும்..

அர்ச்சதை அரிசியும்..
தாளச் சத்தமும்
வசதியானது என்
விசும்பலுக்கு துணையாய்...

கட்டப்பட்ட புதுமஞ்சள்
கயிறு வாசம்..
உன் வாசம் போக்கச் செய்ய
உழன்றுகொண்டிருந்தது என்னில்..

மாலைகளின் சுமை
மனச் சுமையோடு
போட்டியிட்டுத் தோற்கடித்துக் கொண்டிருந்தது..

அழ கண்கள் மன்றாடுகின்றன..
இயலா சூழல் இம்சையாக்குகிறது..
துடிக்கும் சுடுபாறை மீனாய்
துவண்டு அழுகிறேன் மனதோடு..

நடுக்கமான நிமிடங்கள்
நெளிந்து நழுவ இயலா
மூச்சடைக்கும் அறையில்
நான் சிக்கித் தவிக்கிறேன்
கூண்டுக் கிளியாக..

உணர்வுகள் உறைக்காத ஓர் நிலையில்
இமை மூடுகிறேன்..

இறந்த என் உடலைப் பார்ப்பது போல்
எனை உற்றுப் பார்க்கிறது என் மனம்..

மரணத்தை ஒத்த
நிகழ்வில் மூழ்கித்
தொலைந்திருந்தேன் அப்போது..!

--
பூமகள்.

Wednesday, October 20, 2010

மழைச்சாரல் தந்த மனச்சந்தம்..!!


மழை விட்டு அன்று தூரலோடு உறவாடிக் கொண்டிருந்தது தென்றல்.. சில்லென்ற உணர்வு கால் பாதங்களில் ஏற வீட்டினுள் அப்படியொரு சில்லிப்பு.. மெல்ல தென்றல் வலுவுற்று தூரலை தூர அனுப்பிக் கொண்டிருந்தது. சற்றைக்கெல்லாம் வானம் மொட்டவிழ்ந்த மலராக பளிச்சிட்டது. மழை விட்டபின் உண்டாகும் உலகம் முற்றிலும் அழகானது. ஏதோ அழகு கலை நிபுணர் வந்து செய்து விட்ட அலங்காரம் போல வெளியெங்கும் மின்னும் வைரக் கற்கள் போல் இலைகளில் துளிகள். அத்தகைய உலகத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.. எப்போதும் அந்த புதிய உலகைக் கண்ணுற ஏங்கி, ஈரத்தின் கசகசப்பையும் பொருட்படுத்தாமல் ஏதேனும் வாங்கவேனும் காரணம் சொல்லி நடை போட்ட காலங்கள் மனதில் எழுந்து பூப்பூத்தன. அப்படி இப்போது செல்லமுடியாத சூழலானாலும், வீட்டு முற்றத்தின் தோட்டத்தையும், அடுத்துள்ள தோப்பையும் அதோடு ஒட்டி வண்ணங்களால் தன்னை வடிவமைக்கும் வானத்தையும் பார்க்கும் சிலிர்ப்பு நெஞ்சில் எழ.. சத்தமில்லாமல் வெளியே வந்து விட்டேன்..

மருதாணி மரத்தில் ஈரத் துளிகளை தன்னில் சுமந்து நிறை மாத கற்பிணியாக ஒவ்வொரு இலையும் தன் தலை தாழ்த்தி தென்றலோடு தன் சுமையைப் பகிர்ந்து கொண்டிருந்தது.. மணக்கும் அதன் சுகந்தம் நாசி தொட ஏதோ நுரையீரலைப் புதுப்பித்தது போன்ற ஒரு பிரம்மை மனதில் எழுந்தது. பாரிஜாத மலரின் காய்கள் தன் பங்குக்கு தன் பக்க எடையைக் கூட்டி மருதாணிக் காய்களை முட்டிமோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இரண்டையும் சமரசம் செய்ய அவ்வப்போது வந்து சென்றது வந்தென்றல் நாட்டாமை.

இறகு விரித்துப் பறக்க விரும்பி முடியாமல் போன சோகத்தில் ஓர் வண்ணத்துப் பூச்சி தன் ஓரமடிந்த சிறகை இலையில் அப்பித் தத்தளித்துக் கொண்டிருந்தது.. ஈரம் வழிந்த அந்த இலையில் வண்ணத்துப் பூச்சியின் இறகு வடித்த கண்ணீராக தெறித்துக் கொண்டிருந்தது மிச்சமிருந்த சாரல்.. விடை தெரியாமல் விழிக்கும் மழலையின் முகம் போல் என் முகம் செய்வதறியாது திகைத்து நின்றது.. அகவலொன்று தொலைதூரத்தில் கேட்க.. தென்னந்தோப்புப் பக்கம் விழி பாய்ந்தது.. கோலமயில் கோலமிடுகையில் வருகை தந்த, சென்ற நாட்களை மனம் அசைபோட்டது. இன்றைக்கு சத்தத்தை மட்டுமே மொத்தமாகத் தந்து எங்கோ நின்று தன் அழகை வானுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்று தேடலானேன். விழி எட்டிய தூரம் வரை மயில் சுவடு தெரிய மறுத்ததால், ஏமாற்றத்தை மயிலிறகால் ஆற்ற வேண்டியதாகிவிட்டது. அடுத்த முறை வருகையில் மயிலோடு ஓர் பஞ்சாயத்து பாக்கி இருக்கும்.

மூன்று தெரு சந்திக்கும் புள்ளியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் என்னிடம் ஒரு குரல்.. "அக்கா.. வேலை ஏதாவது இருக்கா அக்கா... புல்லு வெட்டுவேன் அக்கா.. தொட்டி கழுவுவேன் அக்கா..".. குள்ளமான, சற்று தடித்த ஒரு சிறுவன்.. தன் நா, உதடு வறண்டு நின்றிருந்தான். சிறுவன் என்ற சொல்லுக்கும் இளைஞன் என்ற சொல்லுக்கும் இடைப்பட்ட நிலையினை காட்டியது அவன் முகம்.

"
இரு தம்பி.. "என்று சொல்லி, அம்மாவை அழைத்தேன். அம்மாவோடு அவன் பேச்சு வார்த்தை ஒரு சொம்பு தண்ணீரோடு ஆரம்பமானது.

"
தம்பி.. அதிகம் படர்ந்த மருதாணி கிளையையும் பாரிஜாத கிளையையும் வெட்டிடுப்பா.. "அம்மாவின் குரல் கெஞ்சலுக்கும் அதிகாரத்திக்கும் இடையில் தோணித்தது.

அதுவரை என் ரசனையில் ஒளிர்ந்தபடி இருந்த அந்த மழைத் துளி நிரம்பிய மருதாணிக் கிளை மெல்ல மெல்ல தன் கிளையை இழந்து களை இழக்கலானது. அதைக் காண மனம் ஒப்பாமல் வீட்டுக்குள் தஞ்சம் கொண்டேன்.. சற்றைக்கெல்லாம் பாரிஜாத மரம் தன் அனைத்து கிளைகளையும் இழந்திருந்தது.. அதுக்குள் அந்த சிறுவனின் கையில் மருதாணி தன் சிவப்பை கொஞ்சம் கீறி ஏற்றியிருந்தது.

பதறியபடி அம்மா, "மருந்து வேண்டுமாப்பா" என்று கேட்க.. நானோ "மருந்து போடேன் தம்பி" என புலம்பலாயினேன்.. அவனோ, உதடு சுழித்து "வேணாம்க்கா..". சரி.. "தண்ணீரில் கழுவவாவது செய்யேன்.. ரத்தம் நிறுகுமல்லவா" என மறுபடி நான் சொல்ல.. "வேண்டாமக்கா.. கழுவினால் சரியாகாது" என்று அதனை தன் கையால் துடைத்துவிட்டு வெகு சாதாரணமாக குடிக்க தண்ணீர் கேட்டு நின்றிருந்தான்.

படிக்கலையாப்பா? இன்னிக்கி விடுமுறையும் இல்லையே.. என்று நான் வினவ.. தலையை மட்டும் இடவலமாக ஆட்டிவிட்டு தன் வேலையில் கவனமாக இருந்தான்.. எனக்கோ அவன் எதிர்காலம் குறித்த கேள்வி முள்ளாக தைக்கத் துவங்கியது. இரு சிறுவர்கள் வந்திருந்தனர். இருவரின் எதிர்காலம்?? சற்றைக்கெல்லாம் வேலை முடித்து பணம் பெற்றுக் கொண்டு நடையைக் கட்டினர். வெளியில் அவர்கள் போகும் திசையைப் பார்த்திருந்த எனக்கு கண்ணில் பட்டது அந்த பட்டாம்பூச்சி. இறகுகள் உலர்ந்து ஊதாப்பூக்களை வட்டமிட்டபடி இருந்தது இலையில் ஒட்டி தப்பித்திருந்த அதே வண்ணத்துப் பூச்சி..!!

Saturday, October 16, 2010

இயலறிதல்..!!


தூக்கத்தின் விழிப்பில்
தூரலிடும் மேகத்தின்
தூறிகை மைச் சிதறலாய்
தூபமிடும் தவிப்புகள்..!

அக்னிப் பிழம்பின்
ஆனந்த மழையினில்
அடங்கி ஏறும்
ஆட்கொள்ளும் ந(பு)கைப்புகள்..!

துயில் தொலைத்த
தூரமளக்கும் ஈரவிழி
உணர்த்தும் ஊழ்
உள்வலி என்றும்..!

காணா புதிரும்
காணும் ஆவலும்
கண்ட கனவில்
கானலாய் போகும்..!

ஆழ்மூளை அழுத்தும்
ஆழ்தூக்க குறை
அம்மா பெயருக்கு
அடுத்த பொருள் உணர்த்தும்..!
--பூமகள்

Monday, October 4, 2010

உணர்வின் உறவு..!!

உணர்வுகளால் சுற்றப்பட்ட
பந்தொந்தொன்று கொண்டு
நாம் இருவரும் விளையாட
எத்தனித்தோம்..

உருண்டு திரண்டு
இருந்த அதுவோ
அழகான தன்
விசையால் நம்மை
பிணைத்துக் கொண்டே இருந்தது..

இருவரிடமும் மாறிமாறி
இடம் பெயர்ந்து ஒரு நாள்
ஓய்ந்து கொஞ்சம்
துயில் கொண்டது..

வேடிக்கைப் பார்க்கும்
வேண்டிய கூட்டம்
தருணம் பார்த்து
அதைச் சுட்டுச் சென்றது..

உணர்வுகள் தொலைத்த நம்மில்
உறவுகளின் தூபம்
தூவப்பட்டது..

வார்த்தைகள் வலிக்க
வரையப்பட்டது உறவுகளுக்காக
ஓர் அக்னியுத்தம்..

உடைந்து அழும் குரலொன்று
இடையிடை நம்மில் வந்தமர்ந்தது..
எங்கென ஆராய
ஓர் மூலையில் உறவுகளால்
கிழிக்கப்பட்ட நம் உணர்வுப் பந்து
செயலற்றுக் கிடந்தது..!!

__________________
-- பூமகள்.