RSS

Thursday, August 22, 2013

பேரட் மீனின் பேரன்டிங்..!


பேரட் மீனின் பேரன்டிங்..!

     இருந்த பத்து மீன்களில் எஞ்சியிருக்கும் மூன்று ச்சிலிட்சில் இரு கிளிமீன்கள் எங்கள் வீட்டினை அழகாக்கிக் கொண்டிருக்க, சமீபமாக அதன் வழக்கத்தில் ஒரு மாறுதலைக் காண முடிந்தது. கூட இருக்கும் ஒரேயொரு சிறு மீனை இரு கிளி(parrot) மீன்களும் மாறிமாறி துரத்திக் கொண்டிருந்தன. அருகில் சென்று பார்த்தால் கூலாங்கற்களுக்கு மேல் கடுகளவிலான நிறமற்ற முட்டைகள். (நாமெல்லாம் மீனை ருசித்துப் பார்த்திருக்கிறோம். அதன் முட்டையையெல்லாம் எங்கு கண்டிருக்கிறோம். ஒருவேளை, மீன் முட்டை கோழிமுட்டையளவு இருந்திருந்தால் ருசிக்கப் பார்த்திருப்போமோ என்னவோ..!) எங்கள் வீட்டு குழந்தையோடு சேர்த்து பெரு மகிழ்ச்சியில் குழந்தையானோம் நாங்களும். ஆசையாசையாய் இணையத்தில் அதைப்பற்றிப் படித்து அத்தனையும் மீன்களானால் என்ன செய்வது, இடம் போதுமா என்று பதட்டமானோம். மூன்று நாட்கள் நகர்ந்தன. இதற்குள் பல்லாயிரம் முறை அவைகளைக் கண்டிருப்போம். அந்த மூன்று நாட்களும் முட்டையை கவனிப்பதை விட, மீன்களைத் தான் கவனித்தோம். படித்தவர்கள் நாமெல்லாம் parenting என்று சொல்வோமே, அதனை வெகு அழகாக அவ்விரு மீன்களும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன. முட்டையின் அருகில் மட்டுமல்ல அந்த சுற்று வட்டாரத்துக்கே தாதா ஆகிவிட்டிருந்தது தந்தை மீன் என்று என்னால் நம்பப்படுகிற அளவில் பெரிய மீன். மீன் தொட்டிக்குள் அருகில் வரும் மீன்களை ஆக்ரோசத்துடன் துரத்துவது என்றில்லை, மீன் தொட்டிக்கு அருகே நாமே சென்றாலும் நம்மைக் கடித்துவிடும் உக்ரம் அதன் செயலில் தெரிந்தது. நான்கு, ஐந்தாவது நாட்களில் அந்த முட்டைகள் எல்லாம் நிறமற்ற தன்மையிலிருந்து கோல்கேட் வெண்மைக்கு மாறிப் போயின. எங்கள் முகங்களும் தான். வெண்ணிறமானால் மீன்குஞ்சாகாது என்பது இணைய ஆராய்ச்சியில் கண்ட உண்மை. சோக கீதம் பாட வேண்டிய மீன்களோ, அவற்றை உண்டுவிட்டு அதன் இயல்பான வழக்கத்துக்கு மாறிப் போயின. நாங்கள் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு அதனை நினைத்தபடியே இருந்தோம். என்ன மாதிரியான parenting இது?? மீன்களுக்கு எத்தனை பொறுப்புணர்ச்சி. Finding Nemo - உண்மைதானோ??!!

     எதற்க்காக இதனைச் சொல்கிறேன் என்றால், parrot மீன்கள் மற்றொருமுறை பெற்றோராகியிருக்கின்றன. பார்ப்போம். மச்சாவதாரக்கடவுளே காப்பாற்று..!! 

--பூ.

4 comments:

Anonymous said...

வணக்கம்
பூமகள்

மீன் கதை அருமையாக உள்ளது வாசித்து ரசிக்கும் படியுள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

நினைப்பது நிறைவேறட்டும்...

'பரிவை' சே.குமார் said...

மீன்கள்...
ம்... இந்த முறை உங்கள் ஆவல் பூர்த்தியாகும்... கவலைப்படாதீர்கள்.

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் சகோதரி...

இன்றைய வலைச்சரப் பதிவில் தங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன்...

நேரமிருப்பின் வந்து பாருங்கள்... அதற்கான சுட்டி கீழே...

http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_7.html

நன்றி...

வாழ்த்துக்களுடன் சே.குமார்