RSS

Saturday, June 21, 2014

பரிட்சை நிமிடங்கள்..!

       கொஞ்சம் நடுக்கத்தோடு தான் அதை எடுத்தேன்.. மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் துளையிட்டுக் கொண்டிருந்தன. எங்கோ எப்போதோ படித்த கருத்துகள் எல்லாம் நினைவில் வந்து மீண்டும் குழப்பியது. சாலையில் சென்று கொண்டிருக்கையில் கீழே ஒரு விலைமதிப்பான பொருளைப் பார்க்கிறீர்கள்.. என்ன செய்வீர்கள்? யாரும் கவனிக்காத போது எடுப்பீர்களா? அல்லது அருகில் வருவோரைக் கேட்பீர்களா?? எடுக்காமல் சென்றுவிடுவீர்களா??!! இந்த கேள்விக்கான பதில் சற்று குழப்பமானது.. 

     எடுத்துவிட்டால் உரியவரை எங்ஙனம் கண்டுகொள்வது?? எடுப்பதை ஒருவேளை மற்றவர் பார்த்தால் என்ன நினைப்பார்கள்??!! சரி.. எடுக்காமல் தாண்டிப் போனால் என்னவாகும்??!! யாருடையதோ, நமக்கென்ன.. என்ற சுயநலப் போக்காக ஆகிவிடாதா??!! இப்படி பல்வேறுவிதமாக மூளை ஆட்டுவித்து முடிவெடுக்க முடியாமல் தயங்க, மனதின் அடி ஆழத்தில், ஒருவேளை வேறொருவர்  எடுத்து உரியவரிடம் தராமல் விட்டுவிட்டால்??!! எடுத்துவிடுவதே உத்தமம் என்று ஒருவாறு முடிவெடுத்தேன்.. 

     மகளிருக்கான ஓய்வு அறை ஒன்றில் எனக்கு முன் எதோ நிகழ்ச்சிக்காக உடை மாற்றிக் கொண்டிருந்த வளரிளம் பருவத்து சிறுமிகளில் ஒருவர் தனது ஐபோன் கைபேசியை விட்டுவிட்டு சென்றுவிட்டார். சரியான நேரத்தில் நான் கண்டதும் தான் இப்படியான மனப் போராட்டத்தில் மாட்டிக் கொண்டேன். எடுக்காமல் விட மனமின்றி, எடுக்கவும் தயக்கமாக ஒருவாறு நடுக்கத்தோடே எடுத்தேன். வெளியே கலவர முகத்தோடு யாரேனும் நிற்கிறார்களா என பார்த்தேன்.. ஒருவரையும் காணோம். எடுத்ததை அங்கிருந்த அலுவலகத்துக்குச் சென்று முறையாக ஒப்படைத்த பின்பே மனம் ஆசுவாசமானது. மீண்டும் அங்கு செல்ல ஒரு சீனப் பெண் என்னை அந்த குறிப்பிட்ட அறையை உபயோகித்தீர்களா என்று வினவ, நானோ, உங்கள் கைபேசியை காணவில்லையா ? என்றேன். ஒரு சிறுமி இப்போது தான் வந்து கேட்டுவிட்டுச் சென்றதாக கூறினார். நான் அலுவலகத்தில் ஒப்படைத்த விவரம் கூறி, அவர்களிடம் அந்த தகவலை உரியவரிடம் சொல்லிவிடும்படி கூறினேன். கூட்டம் நிரம்பி வழியும் அந்த இடத்தில் நான் செய்தது சரியென்றாலும் இப்போது இந்த நொடி, உரியவரிடம் அந்த பொருள் போய் சேர்ந்திருக்குமா என்ற பதபதைப்பு நெஞ்சில் மிச்சமிருக்கிறது. உரியவரிடம் அது சேர்ந்திட வேண்டுமென்பதே என் பிரார்த்தனையும்..! ( அந்த சிறுமி என் மீது ஏதும் கோபம் கொண்டு சாபமிடாமல் இருக்கக் கடவுக ஐபோன் ஆண்டவா..!! )


--பூமகள்.

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

அந்த கைபேசி உரியவரை சென்று அடைய நானும் இறைவனை வேண்டுகிறேன்! நன்றி!

'பரிவை' சே.குமார் said...

உரியவரிடம் கண்டிப்பாகச் சேர்ந்திருக்கும் என்று நம்புவோமாக...