Friday, April 11, 2014

அடையாளம்..!

அடையாளம்

வீழ்ந்து கிடக்குமொரு
தெருவோரப் பொருள்
யாரின் பிரயத்தனத்தையும்
விட்டுவைக்கவில்லை..

கடந்து சென்ற
சிறார் கூட்டமொன்று
கல்லெறிந்துவிட்டு
சிரித்தபடி சென்றது..

சில நகர்வுகளுக்கு பின்
வலிமுணகலேதுமின்றி
சுரத்தற்றிருந்தது..

சுட்டெரிக்கும் சூடேற
நிழலுக்காய் ஒதுங்கிய மூதாட்டி
வழியும் செந்நிற வெற்றிலைச் சாற்றை
கையொதுக்கி அதில் தேய்தபடி
சென்றுவிட்டிருந்தாள்..

ஆங்கொன்றும் இங்கொன்றுமாய்
நடமாடுமெவரும் அதைக்
கவனித்ததாய் தெரியவில்லை..

இருள் படர்ந்ததொரு பொழுதில்
தடுமாறும் போதைசூழ் மனிதனின்
கால்விரலைப் பதம் பார்த்ததில்
வெகுண்ட அவன்
அதை வசைபாடி வீசியதில்
புதரொன்றில் வீழ்ந்து
காணாமலே போனது
பொலிவிழந்த ஊரின்
பெயரழிந்த பெயர்ப்பலகை..!!

--பூமகள்.

3 comments:


  1. வணக்கம்!

    அடையாளம் முற்றழிந் தால்என்ன? ஊழல்
    எடையேறும் நாட்டில்! எதிா்த்தே - படையாளும்
    எண்ணம் ஒழித்தார்! எளியோர்தம் நெற்றியிலே
    வண்ணம் குழைத்தார் வளைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.