RSS

Saturday, March 15, 2014

அடக்கம் அமரருள் உய்க்கும்..!!



நிஜத்தில்
எளிமையாய் இருப்பது
எளிதான காரியமில்லை..

அடங்கிப் போனால்
அலட்சியப் பார்வையையும்..
அமைதியாய் போனால்
ஏமாளியாகவும் நடத்தும் 
சுற்றம்...

இறுதியில்
எளிமையாய் இருப்பதும்
பெருமைக்காய் என்பர்.....!

இறுமாப்பு நிறைந்த
இதயத்துக்கு..
வறியோரின் நேச உணவு
ருசிப்பதில்லை..

ஏதுமில்லாதது போல்
இருத்தலும் ஓர்
ஜென் நிலைதானோ..??!!
--பூமகள்.

Thursday, March 13, 2014

ஞாயிறு திங்கள்..!

இரவு கடந்த விடியல்
வழிந்திருக்கும் ஊரில்..
உறக்கம் தெளிந்த விழிகள்
காணக்கிட்டுவதில்லை..
ஞாயிறு காலைகள்..!!

பால் வாங்கவோ,
கறி, மீன் வாங்கவோ
விரையும் மனிதர்கள்
சொல்லிவிடுகிறார்கள்
தனது ஏதேனுமொரு செய்கையில்..
விடுமுறைக் களைப்பை..!

பசித்தலின் உணர்வு
அடக்கியாளும் குழந்தையின்
நீண்ட தூக்கம் அதன்
விடுமுறை நாள் விடியலாகிறது..!!

ஏழு நாட்களும் ஒன்றென்று
சமைத்தலின் விதி புரிந்த
மங்கையர் மனம்
ஏங்கும்
எட்டாத எட்டாவது
விடுமுறை நாளுக்காக..!

                    --பூமகள்.