நடிப்பு: ஸ்ரீகாந்த், பார்வதி
இயக்கம்: சசி
இசை: S.S.குமார்
பூ படம் பற்றிய விமர்சனம் எழுத வெகு நாட்களாக மனதுக்குள் போராட்டம்.. நேரம் அமைந்தது இன்று தான்.
அழகான உணர்வு தரும் சுகந்தத்தை படம் முழுதும் நுகர்ந்து கொண்டே இருக்க முடிந்தது.
மளிகைக் கடை வைத்திருக்கும் தனது அன்பான கணவருடன் தான் நடத்தும் இல்லறத்திலிருந்து துவங்குகிறது படத்தின் நாயகி மாரி(பார்வதி)யின் அறிமுகம்..
தனது ஊர் திருவிழாவுக்குச் செல்ல வெகு நேரம் கணவருடன் அடம் பிடித்து ஊருக்குச் செல்ல முதல் ஆளாக பேருந்துக்காக காத்திருக்கும் இடம் அழகான பதிவு.. புளுதி பறக்கும் வெயிலில் பேருந்து வரும் திசையின் வெட்ட வெளி நோக்கி காத்திருக்கும் மாரியோடு சேர்ந்து நாமும் கொஞ்சம் வியர்ப்போம்.. பேருந்தில் ஏறி கம்பியினூடே தலை சாய்த்தபடியே மாரி தனது பழைய நினைவுகளுக்குச் செல்ல பேருந்து ஊர் நோக்கி முன்னேறுகிறது..
தனது மாமன் மகன் தங்கராசு(ஸ்ரீகாந்த்) மேல் உயிரினும் மேலான அன்பு வைத்திருக்கும் மாரியின் அன்பை அந்த அற்புதக் காதலை ஒவ்வொரு காட்சியிலும் வெகு இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனர் சசிக்கு எனது மனமார்ந்த பாராட்டு..
ஸ்ரீகாந்த் இத்தகைய கதையைத் தேர்ந்தெடுத்து நம் மனங்களில் வெகு உயரத்துக்குச் சென்றுவிட்டார்.. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு மத்தியில் இவரின் மனப்போராட்டமும், தவிப்பும் படத்தில் வெகு அழகாக காட்டப்பட்டிருக்கிறது.. வழக்கம் போல் ஸ்ரீகாந்த் வெகு அழகு நடிப்பிலும் அழகிலும்..
சொல்லப்படாத காதலின் ஆழம் சொல்ல இரு தனித்த பனைமரங்களையே குறித்திருப்பது கவித்துவம்.. சின்னச் சின்ன முக பாவங்களையும் வெகு எதார்த்தமாக வெளிக்காட்டி நிஜ கிராமியப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் படத்தின் நாயகி பார்வதி.
ஒரு பெண்ணாக, நாயகி உணர்ந்த எல்லா உணர்வுகளையும் வெகு அழகாக என்னில் இறக்கி ரசிக்க முடிந்தது..
தன் தங்கராசுவைக் காண ஓடோடி வந்து காத்திருக்கும் போதும்.. அதன் பின் வரும் பழைய நினைவுகளும் கதையோட்டத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது..
பட்டாசுத் தொழிற்ச்சாலையில் வேலை பார்க்கும் நாயகி மாரியும், அவருடன் நட்பு பாராட்டும் தோழியும் நட்பின் ஊடல், கூடல்களை வெகு இயல்பாக காட்டி நடிப்பில் கலக்கியிருக்கிறார்கள்..
மொட்டை வெயில், பரந்த காய்ந்த புளுதி பறக்கும் வானம் பார்த்த பூமி, மாரியின் தவிப்பு என படம் முழுதும் நம்மை தவிக்க விடும் காட்சிகள் அதிகம்..
ஊர்த் திருவிழாவுக்கு வந்து சேரும் மாரி, தன் தங்கராசுவைப் பார்த்தாரா?? என்ன நடந்தது என இறந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் எதார்த்தம் நிரப்பி காட்டியிருக்கும் காட்சிகள் அற்புதம்..
மாரியின் மனம் சொல்ல.. முதல் ஓரிரு காட்சிகளிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது இயக்குநரின் திறனை மெச்ச வைக்கிறது..
மாரியின் காலில் மளிகைக் கடை படிக்கல் விழ, மாரி அதற்கு கூட அழுகாமல் சிரித்துக் கொண்டே இருக்கும் நிகழ்வு நெகிழ வைக்கிறது.. அதற்கான காரணம் படத்தின் இறுதியில் சொல்லியிருப்பது வெகு சிறப்பு..
பாடல்கள் இசையால் மெல்ல வருடிச் செல்கிறது.. குறிப்பாக, "சொந்த வேரொடு தான் கொண்ட காதலினை.." என்ற பாடல், பாடகி சின்மயி குரலில் தேனாய் இனிக்கிறது.. படத்தின் மொத்த கருத்தையும் இவ்வொருபாடலே சொல்லிச் செல்கிறது.. படத்தின் சிறப்பான பகுதிகளுள் இப்பாடலுக்கு தனியிடம் இருக்கும் என்பது திண்ணம்..
ஒரு அழகான படம் பார்த்தால் அதன் தாக்கம் வெகு நாட்களுக்கு இருக்கும் என்பார்கள்.. அத்தகைய தாக்கத்தை என்னால் இப்போதும் உணர முடிகிறது.. அதன் தாக்கமே என் இந்த விமர்சனத்துக்குக் காரணம்..
பூ - இலக்கிய தரம் வாய்ந்த ஒரு சிறந்த நாவலைப் படித்த உணர்வை என்னில் ஏற்படுத்தியது..
மொத்தத்தில்,
பூ - புனிதம், கவித்துவம், அற்புதம்.