skip to main |
skip to sidebar
பழைய பேப்பரோடு
போட்டு மறக்க
முடியா சில..
கையெழுத்தோடு காதல் பேசிய
கடிதங்களும்...
வலி சொல்லி படபடக்கும்
விவாகரத்து பத்திரங்களும்..
மறக்க முடியாமல்
மறைக்கப்பட்டிருக்கும்
அலமாரியின் ஏதோவொரு
இடுக்கில்..!
தூசு தட்டி எடுத்து
தங்கமீன் குடம் வாங்க..
தயங்கியது மனம்..
கண்கள் குளமானதால்..!
~பூமகள்.
வலியின் விழி நீர்..!
காலைப் பொழுதின்
துயில் கலக்க
பனித்திரை விடிகாலை..!
சுண்டி இழுக்கும்
அடிவயிற்று வலியால்
விழி தானாய் ஈரமாகும்..!
வன்வலியுணர்வு நரம்பு சுட..
பன்வலியோடு பறக்கும் கால்கள்..!
எட்டு மணி பேருந்து..
எட்டா தூரத்தில்..
சாய்ந்து வரும்..
கூட்டத்தினூடே..!
முட்டி மோதி..
மகளிர் கூட்டத்தில்
முழங்கை அழுத்த,
"ம்மா" என்ற அலரல்..
பேருந்து சத்தத்தில்
கரைந்து போகும்...!
நெரிசலில்
வயிற்றை பிடித்து ஒருகை...
கம்பி பிடித்து மறுகை..
கண்கள் மட்டும்
ஜன்னல் பார்க்கும்
கண்ணீரோடு....!
காலை உணவு
ரோட்டோரக் கடையில்
சுடச்சுட மணம் பரப்பும்..
வாசம் மட்டும் நுகர்ந்து
வாய் நிறைய சுவைக்கும்..
வலி கொஞ்சம் குறையும்..
வாசனை பிடிச்ச மகிழ்ச்சியில்..
ஒரு திடீர் நிறுத்தம்..
சட்டென ஏதோ அதிர
உள்ளிருக்கும் வலி
பளீர் என்று ஓங்கி அறையும்..!
வலி பொறுக்காமல்
உதடு கடிக்க..
பின்னிருந்து ஒரு கை..
உரசிப் பார்த்து
எக்காளமாய் சிரிக்கும்..!
திரும்பி முறைத்து..
முன்தள்ளி நிற்க..
திரும்பவோர் திடீர் வளைவில்
இடையில் மீண்டும் இடர்..
உள்வலி இடரும்..
அசதியின் கோபமும்
அந்நியள் ஆக்கும்..
திரும்பிப் பார்த்து
உரத்து ஒலிக்கும்
"தள்ளி நில்லுங்க...!"
பேருந்து ஸ்தம்பித்து
குரல் வந்த இடம்
பார்க்கும்..!
பார்வைக் கணைகள்
நெருப்பு கக்க,
கூனிக் குறுகி
பின்னவன் நிற்க..
நிம்மதி பெருமூச்சோடு
அடுத்த யுத்தத்துக்கு
தயாராகும் மனது..!
__________________ ~பூமகள்.