RSS

Friday, March 28, 2008

கரைந்தும் கரையாதவை..!!

கரைய துவங்கியது
கவித்துவ காலம்..!!
கவியத் துவங்கியது
கண்களில் சோகம்..!!

இருளத் துவங்கியது
இமைகளின் ஓரம்..!!
குவியத் துவங்கியது
தவிப்பின் காரம்..!!

இயங்கத் துவங்கியது
இரயிலடி சத்தம்..!!
துளிக்கத் துவங்கியது
விழியீர மிச்சம்..!!

கையசைக்கச் துவங்கியது
இதயத்தின் வேரும்...!!
மெய்யசைய மறுத்தது
என்மன தேரும்..!!
____________
-பூமகள்.

பார்வைப் பயணம்..!!அவன் கொண்ட பிம்பம்..
புரியவில்லை விழிகளுக்கு..!!

திரும்ப திரும்ப
பார்த்து பார்த்து
தேடிக் கொண்டிருந்தன
அகன்ற விழிகள்
அர்த்தங்களின்
அர்த்தங்களையே..!!

உயிர் துளைக்குமளவு
தேடித் தீர்த்தது விழிகள்..!!


தள்ளி நின்ற பார்வைகள்..
தள்ளிச் செல்ல மனமின்றி
முட்டிக் கொண்ட
நேரங்களில்..
விட்டுச் சென்றன..
காற்றிடைவெளிகளை..!!

மின்னல் வெட்டின
தருணங்களில்
காந்தத்தின்
எதிர்துருவமாயின..
பார்வைகள்..!!

ஊமைக் கண்கள்
தளும்பி நின்றன...
தவிப்புடனே
மோனநிலையில்..!!

தலை தூக்காத
தலைப்புடன் நீ..!!
தலை திருப்பாத
தவத்தில் நான்..!!


_________________
-பூமகள்.

Wednesday, March 19, 2008

விழிப்பு கடந்து...!!

ஏக்கம் தொலைத்து
ஏகாந்தத்தில் எழுந்து
வெளிச்சம் பார்க்கிறேன்..!!

குயில்களின் சிறகடிப்பும்
குருவிகளின் கூவலும்
கன்னம் முழுக்க மஞ்சள்
தடவி சிவந்து சிரிக்கும்
கிழக்கின் கீழ் வானமும்...

கடிகார கூப்பாடில்
கனவு கலைந்து
சலித்துக் கொள்கிறேன்...
நூறாவது மாடியில்
மூச்சு முட்டும் வன்கட்டிட
முகப்புகளை கவலையோடு
பார்த்த வண்ணமே..!!


(இறுதி வார்த்தையில் துவங்கி சில நொடிகளில் எழுதிய கவிச்சமர் கவிதை..!)

__________________
~பூள்.

Monday, March 10, 2008

பனித்துளி..!!

வானவில் தந்து
நிறமிழந்த பனித்துளி
வாங்கினேன் மேகத்திடம்..!!

மழைக் கம்பி பிடித்து
மரங்களில் பாசியாகி
பச்சை வண்ணம் தொட்டு
நிறம் மாறி மகிழ்கிறது..!

செம்மண் பூமின்
சிவந்த மேனியில்
சிலிர்த்து இறங்கி
சிவப்பாடை
உடுத்திக் கொள்கிறது..!

கருசக்காட்டிலும்
களிமண் பூமியிலும்
சாம்பல் நிறம் பூசி
கருமையால் பொட்டிட்டு
புன்னகை பூக்கிறது..!!

எப்படி எப்படியோ
நிறம் மாறினாலும்
அதிகாலைப் பனியில்
நடுங்கிய புல்வெளியில்
நிறமின்றி ஜொலித்து
எதையோ என்னுள்
புரியவைக்கிறது..!!
__________________
~பூமகள்.

Saturday, March 8, 2008

அம்மா..!

தாயே நீ சொல்லும்
ஒவ்வொரு சொல்லும்
என்னை உயிர் தொட்டு
உரசிச் செல்கிறது..!

உறவுகளின் உள்முகத்தில்
இன்பம் செதுக்கி
உன் இனிமை காணுகையில்
எனை மறந்து களித்திருக்கிறேன்..!

எங்கோ தொடங்கும்
உரையாடல் உன்
மென்னுளம் காட்டி
விடைபெற்றுச் செல்லும்..!!

பருப்பு ரசப் பக்குவமும்
பாங்காக பேசும் உன்
வெகுளித்தனமும்
வெள்ளந்தி மனமும்
என்னோடு சீராக
அனுப்பி வைப்பாயா
அம்மா..!!

(கவிச்சமரில் நொடிப்பொழுதில் தோன்றிய கவிதை)

-பூமகள்.

Tuesday, March 4, 2008

கலைந்த புன்னகைகள்..!

கலைந்த புன்னகைகள்..!!


எப்படி இருக்கே..
இந்தியாவில் பார்த்தது..
எப்போ இங்கு வந்தே...!!


(கண்கள் பார்த்து தோழி கேட்டு நின்றாள்)

இப்ப தான் மேரேஜ் ஆச்சு..
உன்ன பார்ப்பேன்னே நினைக்கல..
எப்படி இருக்கே நீ??
ஏதும் விசேசம்??


(எண்ணவோட்டத்தை பிடித்து பதில் கொடுத்தாள்)

ஆமாம்.. இப்ப தான் கன்பார்ம் ஆயிருக்கு..
2 மாசம்..


(நாணம் செவ்விதழில் சிந்தி பளிங்கு முழுக்க சிதறியது)

(வெட்கி சிவந்து, பின் அவளே பேசலானாள்.)

இந்தியாவே பார்ப்பது மாதிரி உன்ன பார்த்தது..
வா உன்னோடு நிறைய பேசனும்..

கண்டிப்பா வர்றேன்..
ஆனா இப்போ இயலாத சூழல்..
அவர் காத்திட்டு இருப்பார்..
அவசரமா போனும்..!


(அலைபேசி இலக்கங்கள் இடமாறின..விடைபெற்று கிளம்பினேன்..)

ஒரு மாதமிருக்கும்..!
மீண்டும் காண்கிறேன்..!

ஹே... எப்படி இருக்கே??

(உற்சாகத்தில் நான்..!)

ம்.... இருக்கேன்..!

(விழியோரம் கசிந்தது நீர்த்துளி... வார்த்தையில் வெறுமையுடன் அவள்..)

ஏன் என்னாச்சு?
உடம்பு சரியில்லையா?
டாக்டரைப் பார்த்தியா??

(பதறிய மனத்துடன் நான்..)

போன வாரம் தான்
பார்த்தேன்.. கடைசியா..!!


(கடைசியா- இந்த வார்த்தையில் இருந்த அழுத்தம்
ஏதோ விபரீதத்தை உணர்த்தியது)


என்ன சொல்றே நீ??

(பதட்டம் குறையாமல் நான்)

என் பொண்ணை சாவடிச்சிட்டேன்..!
சாவடிக்க வைக்கப்பட்டேன்..!


(எங்கோ பார்த்து அழுகிறாள்.. என் கண் பார்க்க திராணியில்லை)

ஏன் என்னாச்சு??
ஏன் ஏன்??

(புரியாமல் மூச்சடைத்து நான்..)

பெண் பிறவி கூடாதாம்
பெரும் செல்வம் தின்னுமாம்..
வேண்டாம் என்று கை கழுவிட
தினம் நெருப்பில் சுட்டு பாரு காயம்..!


(வெந்த புண்ணை காலில் காட்டி.. துன்ப சுமையை என் நெஞ்சில் ஏற்றினாள்)

துடித்த இதழில்
தவித்து மறித்தன
வார்த்தைகள்..!!


(ஆறுதல் சொல்ல வார்த்தை எழவில்லை..!
கண்களால் பேசி..கரைந்து நகர்கிறேன்..!)

இங்கிலாந்தின்
இந்தியர் நிலையாக
ஓராயிரம் புன்னகை - நிதம்
கலைத்துவிடும் கதை
கருத்தாய்வுடன் மாண்பு
குலைத்து நிற்கிறது..!


செய்தி:
கருத்தாய்வு முடிவு: "இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்களிலிடையே
பெண்சிசுக்கருக்கலைப்பு அதிகமாகிறது.."


__________________
~பூள்.

வினாவா ?? - விடையா??

வினாவா ?? - விடையா ??

உன் விழி
சொல்லும் சொல்
வினாவா விடையா
புரியாமல் நான்..!

வியந்து பார்த்து
அசந்து நிற்கிறேன்
உன் விழிக் கருப்பையில்
எனது பிம்ப மழலை..!

பூரித்து பூக்கிறது
எனது செவ்விதழ்
பூக்களும்...!

(பதில் விமர்சனமிட.. புதுக்கவிதையாக கிடைத்த கவி முத்து இது..)
________________
பூமகள்.

Monday, March 3, 2008

மாய சந்தோசமே..!!

நிம்மதியுடனான எனது
உடன்படிக்கை
நிராகரிக்கப்பட்டது என்று
என்னை விட்டு நீ
பிரிந்தாயோ அன்று...!

ஆழ்ந்த உறக்கத்தில்
உன்னை யோசித்த நினைவுகள்
முள்ளாய் கண்ணில்
குத்தும்..!

அடுத்து வருவாயோ
வளம் தருவாயோ என்று
நெஞ்சம் விம்மி
நெருப்பில் கனக்கும்..!

என்னதான் உறவானாலும்
உன் உறவு இல்லையெனில்
வேசமாகும் பாசங்கள்..!

எப்போது வருவாய்
காகிதத்தில் படபடக்கும்
எல்லோருக்குமான
மாய சந்தோசமே..!!
-பூமகள்.
(ஒரு சில வினாடிகளில் கவிச்சமரில் தோன்றிய கவிதை.. உங்களுக்காக..!)