RSS

Wednesday, February 27, 2008

காதலிக்க நேரமில்லை(விஜய் நெடுந்தொடர் பாடல்)





பாடல் வரிகள்:

என்னைத் தேடி காதல் என்ற
வார்த்தை அனுப்பு..
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த
அர்த்தம் தருவேன்..!!

செல்லரிக்கும் தனிமையில்
செத்துவிடும் முன்
செய்தி அனுப்பு....ஓ....!!


என்னிடத்தில் தேக்கி வைத்த
காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர
தெரியவில்லை..!!


காதல் அதை சொல்லுகின்ற
வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு... ஓ...!!


பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்..!!
மரங்கள் கூட நடப்பது போலே
நினைத்துக் கொள்கிறேன்..


கடிதமொன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்..!!
கனவில் மட்டும் காதல் செய்து
இரவைக் கொல்கிறேன்..!!


(என்னைத் தேடி)

யாரோ உன் காதலில் வாழ்வது
யாரோ..
உன் கனவினில் நிறைவது
யாரோ...
என் சலனங்கள் தீர்த்திட
வாராயோ...!!


ஏனோ என் இரவுகள் நீள்வது
ஏனோ..
ஒரு பகலென சுடுவது
ஏனோ..
என் தனிமையின் அவஸ்தைகள்
தீராதோ...??


காதல் தர நெஞ்சம் பாக்கியிருக்கு..!
காதலிக்க அங்கு நேரமில்லையா??

இலையைப் போல் என்
இதயம் தவறி விழுதே...!!

(என்னைத் தேடி)
__________________
~பூமகள்.

Friday, February 22, 2008

நானோவுக்கு அடுத்து மடிக்கணினி புரட்சி..!

மடிக்கணினியின் இமாலய வளர்ச்சியைத் தொடர்ந்து, இப்போது ஹெச்.சி.எல் நிறுவனம் 13,990/-இந்திய ரூபாயில் மடிக்கணினி ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது.

இனி வீட்டுக்கு ஒரு நானோ போல வீட்டுக்கு நாலு மடிக்கணினி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இது பற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.

-பூமகள்.

Wednesday, February 20, 2008

முரணித்த மனிதம் - கடவுள்??

முரணித்த மனிதம் – கடவுள்???

வாழ்க்கை பாதையின் முக்கிய அத்யாயம் தேடி தமிழ் நாட்டின் தலைப்பகுதிக்கு பயணப்பட்டது என் கால்கள். நம்பிக்கையும் வண்ணம் மின்னும் கனவுகளும் நிறைந்திருக்க என் கண்கள் வழி தேடி சென்றது.

ஒட்டடைகளின் வீடு , ஒரு அடுக்கடுக்கு குடியிருப்புகளின் இரண்டாம் தளத்தில் அமைந்திருந்தது.ஒட்டடைகளோடு சில மனிதர்களும் இருக்க, நானும் புதியவளாய் பேயிங் கெஸ்டாகச் சேர்ந்தேன்.

மூச்சு முட்டும் தூசுகள் நடுவில் சிற்றெறும்பின் கடியும் சேர்ந்து என்னை அன்புடன் வரவேற்றது. ஒவ்வொருவரும் ஒரு துருவத்தில் இருக்க, என் துருவம் எதுவென அனுமானிக்க இயலாத படி.. திசையிலியாக நான் பரிணமித்தேன்.ஒருவரோடு ஒருவர் முகம் திருப்பும் முகங்கள் அனைத்தும் என் முகம் பார்த்து பூத்துச் சிரித்தன. என் அன்பின் பூச்சால் அவ்வீட்டின் அமைதி நிரப்பினேன்.


ஒத்துவராத சமையல் ஆட்களால் வார்டன் அம்மா தினமும் பெல் அடித்து பாடும் சுப்ரபாதம்.. “இன்று உணவு இல்லை. வெளியில் சாப்பிடுங்க”.

அனுதினமும் மேக்கி பாக்கெட்டும், முட்டை பொரியலும் சமைத்து சமைத்து அலுத்துப் போனது. வெளியுணவு உண்டு வயிறுக்குள் போர் ஆரம்பித்திருந்தது.

வயிற்றில் நடந்த மகாப் போரில்.. வெற்றி பெற்றது வயிறே..! என்னை தோற்கடித்து படுக்கையில் சாய்த்தது. யாருமற்ற அறையில் ஒட்டடைக்கு வலிக்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் மேல் சுவரின் மின்விசிறி பார்த்தே விழி நிறைந்தது.

உடல் சோர்ந்து கிடைக்கையில் எங்ஙனம் எழுவது.. எங்ஙனம் சாலை கடந்து உணவு வாங்குவது??


மாலை வந்தது.. பூ நட்பு மருத்துவம் பார்த்து அழைத்து வந்தாள். கஞ்சி தவிர வேறு சுவைக்க கூடாதென மருத்துவர் சொன்னது நினைவில் வந்து வாட்டியது.
உணவுக்கே இங்கே பஞ்சமிருக்க.. கஞ்சிக்கு ஏது வழி??

விழி நீர் துடிக்க, ஆறுதலோடு நட்புக்கரங்கள் வார்டன் அம்மாவிடம் அழைத்து சென்றது.
பூவுடல் குறித்து பூவோடு சென்று விளக்கமளித்து கஞ்சிக்கு ஏற்பாடு செய்வதாய் நம்பிக்கை மூட்டியது.

அறைக்கதவு திறக்க.. தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது கடவுளின் துதிகள் கொண்ட அலைவரிசை. அவர்கள் அலைவரிசையில் மூழ்கியிருக்க.. வருந்தி அழைத்து தோழி இதழால் வார்த்தை உதிர்த்தாள்.

பூவைத் தாங்கியபடி, பூ நட்பு.. பூவுடல் தளர்ந்ததால், இரவும் காலையும் கஞ்சி தேவை. வேலையாட்களிடம் சொல்லி ஏற்பாடு செய்ய முயலுங்களென எனக்காக அங்கே கெஞ்சிக் கிடந்தது எனது நட்பு.

அலுத்துக் கொண்டு தலை திருப்பி நின்றனர். வேலை ஆட்கள் செய்வாரென தெரியாது என வெடுக்கன சொல்லி அன்பின் உருவத்திற்கு துதி பாட தலை திருப்பிக் கொண்டனர். அன்னையும் பொண்ணும் அலுக்காமல் சொல்லி சட்டென கிரில் கதவடைத்து உள் சென்றுவிட்டனர்.
பூவிதழ் வாட.. மனம் முழுக்க வெறுமை நிலைக்க தளர்ந்த படியே நட்போடு வந்தேன். ஏனோ கண்கள் மட்டும் மடை திறந்து அழுதது.

கடவுள் துதியை எப்போதும் பாடும் அவர் உள்ளத்தில் அன்பில்லாத நிலை கண்டு முதல் முறை வியந்து அதிர்ந்தேன்.

ஜீரணிக்க முடியாத துயர் இது என மன வேதனை கொண்டு அழுது புலம்பினேன். மனிதம் இல்லாத மனிதர், கடவுள் மட்டும் துதித்தென்ன லாபமென கோபம் முட்டி அழுகையாய் வந்தது.

முரணான இது போன்ற நிமிடங்கள் ஏராளம் ஏராளம்.

மனிதம் வேறு கடவுள் வேறல்ல..!

அடுத்தவர் துன்புற.. காத்து ரட்சிப்பது தான் கடவுள் குணம்.

என்று இதை புரிந்து கொள்வார்கள்????
__________________
~பூள்.

Tuesday, February 19, 2008

எதிர்நீச்சல்

எதிர்நீச்சல்

என் கல்லூரி கால நினைவலைகளில் மிக முக்கியமாக எந்த ஒரு சந்தோசமான திருப்பமும் இல்லாவிடினும் முக்கியமாக ஒரு அதிர்ச்சி மிக்க சம்பவத்தை என்னால் என்றுமே மறக்க இயலாது.

நான் படித்த கல்லூரியில் என் பேட்சில் எனது நெருங்கிய உறவினரின் மகனும் வேறு பாடப் பிரிவில் படித்து வந்தார். அவர் படித்தது சற்று கடினமான படிப்பாக கருதப்படும் எலக்ரிக்கல் அண்ட் எலக்ரானிக்ஸ் துறை.

நான்கு ஆண்டுகள் படிப்பில் மூன்றாம் ஆண்டை அடியெடுத்து வைத்திருக்கிறோம்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் மாற்றத்தால் எல்லா கல்லூரிகளும் முதல் முறையாக அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் வந்தன. இதனால், முதல் அடி எங்கள் தலையில் தான் விழுந்தது.

கடினமான பாடத் திட்டம், முதல் ஆண்டு வேறு பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு, இரண்டாம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மாற்றியதால் குழப்பமான பாடங்கள். தேர்வுகள் மிக மிக கடினமாக அமைந்தன.

ஒவ்வொரு செமஸ்டரிலும் ஏதேனும் ஒரு தேர்வு, மிகவும் பயப்படும் படி அமைந்துவிடும். இப்படியான கால கட்டத்தில் ஆங்கில வழிக் கல்வி பயிலாத என் போன்ற பல தமிழ் வழி மாணவர்கள் திணறிப் போயினர். நான் எப்படியோ சமாளித்து விட, பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் பெரும் அவதியுற்றனர்.

என் உறவினரும் என் போலவே தமிழ் வழி கல்வி பயின்றவர். ஒரு தனி வீடு எடுத்து தனது சக தோழர்களுடன் தங்கி படித்துவந்தார். என் தந்தையின் மிக நெருங்கிய நண்பரும் மிகப் பெரும் ஆங்கில பேராசியரும், லண்டன் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் வெகு நாட்கள் பணியில் இருந்தவருமான ஒரு மிகப் பெரும் ஆசான் எங்களுக்கு உதவ வேண்டி, நட்பு பொருட்டு மட்டுமே தனது பெரும் இக்கட்டான உடல் நிலையையும் பொருட்படுத்தாது பலப்பல இடர்களுக்கு இடையிலும் வாரம் ஒரு முறை எங்கள் எல்லாருக்கும் வகுப்பு எடுக்க, என் உறவினர் வீட்டுக்கே வந்து அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலப் புலமைக்கு வழி வகுத்தார்.

அங்கே எங்களோடு பயின்ற என் உறவினர் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவன் அதில் சேர்ந்து பெரும் திணறலுக்கிடையிலும் விடா முயற்சியாய் பயின்று வந்தார். இத்தகைய நல்வழிக்கு நாங்கள் வித்திட்டதாலோ என்னவோ.. என்னையோ.. என் அம்மாவையோ எங்கு கண்டாலும் அன்புடன் விசாரிப்பார்.

மூன்றாம் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் முடிந்து ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 13 தேர்வுகளில் அரியர் வைத்த நிலையில் அந்த தேர்வில் மறுபடி 5 தேர்வுகளில் அரியர் விழுந்திருக்கிறது.

இரவு ரிசல்ட் பார்த்துவிட்டு, காலையில் எப்பவும் போல் எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு வந்தாலும், இந்த மாணவர் மட்டும் வழக்கமாக ரிசல்ட்டுக்கு அடுத்த நாள் கல்லூரிக்கு வராமல் வீட்டிலேயே உறங்கிக்கொண்டு இருப்பார். அதே போல், என் உறவினர் “ஏண்டா.. இன்னிக்கி காலேஜ் வரலையா?” என்று காலையில் கேட்க, “இன்று வரலை.” என்று சொல்ல, சரி எப்பவும் போல் இன்று விடுப்பு எடுத்து நாளை வருவான் என்ற நம்பிக்கையில் சென்றுவிட்டார்.

மதிய உணவு இடைவேளையில் ஏதோ புத்தகம் எடுக்க தனது வீட்டுக்கு வந்த என் உறவினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் தங்கியிருந்த வீடு பெரிய ஹால், இரு படுக்கை அறைகள் என சகல வசதியும் கொண்ட நேர்த்தியான வீடு. அதில் முன் புற கதவு தாழிடாமல் இருக்க, எப்பவும் போல் என் உறவினர் உள்ளே செல்ல… ஹாலில் அந்த மாணவனைக் காணாமல் படுக்கை அறைக்கு செல்ல… அங்கே அவர் கண்ட காட்சி…

மின்விசிறி மாட்டுவதற்காக வைத்திருந்த கம்பியில் துணி கொண்டு தூக்கில் தொங்கும் நிலையில் அவர் வகுப்பு தோழன்.

ஸ்டூலோ… ஒரு சேர் கூட இல்லாத நிலையில், ஜன்னல் கம்பிகள் கொண்டு ஏறி.. எட்டிப் பிடித்து தூக்கில் தொங்கியிருக்கிறான்.

மொத்தம் 18 பேப்பரில் அரியர் இருப்பதால் எதிர்காலம் குறித்த அச்சமும் பயமும் தன் மீது தனது கிராம மக்களே வைத்திருக்கும் பாசமும் நம்பிக்கையும் எண்ணி எண்ணி இப்படி ஒரு மகா கொடுமையை அந்த மாணவன் செய்திருக்கிறான்.

இது நடக்க இரு நாட்களுக்கு முன்பு தான் வழியில் என்னையும் என் அன்னையையும் பார்த்து அன்புடன் விசாரித்த அவர், சமீப காலமாக உடல் வலிமை பெற உடற்பயிற்சி நிலையத்துக்கு கூட சென்று கட்டு மஸ்தான உடல் வாகுவை ஏற்படுத்தி எங்களை எல்லாம் பெரும் ஆச்சர்யத்தை உண்டாக்கியிருந்தார்.

உடல் வலிமை அடைந்த அளவு உள்ளத்து வலிமை இல்லாது போனது ஏன்?? 18 அரியர் என்ன.. என் வகுப்பில் அதே போல் 25 அரியர் வைத்தவர் கூட இன்று எல்லா தேர்வையும் எழுதி பட்டம் பெற்று அவர்களுக்கு பிடித்த வேலையில் மகிழ்வுடன் எதிர்நீச்சல் போட்டு வெற்றியுடன் இருக்கிறார்கள்.

ஏன் இப்படியான கோழைத் தனமான முடிவுகளுக்கு நம் இளைஞர்கள் ஆளாகிறார்கள்??

உடல் வலிமைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் உள்ளத்து வலிமைக்கு யாருமே கொடுப்பதில்லை??

இந்த செய்தி கேட்டு, பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, கல்லூரியே அழுதது. ஒரு நாள் விடுப்பும் விட்டது. எல்லாரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பேசும் அந்த நல்ல மாணவன் இழப்பு அவன் குடும்பத்திற்கு மட்டுமல்ல.. அவர்கள் ஊருக்கே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த கிராமத்திலிருந்து பொறியியல் படிக்க வந்த முதல் மாணவர் இவர் தானாம்.

படிப்பு வராவிட்டால் என்ன, வேறு எத்தனையோ வழி இருக்கு சாதிக்க.. திரும்ப வீட்டுக்கு சென்றிருந்தால் கூட அவர்கள் சொந்த தொழில் ஏதும் செய்து முன்னேறியிருக்கலாமே… இப்படி பலப்பல அவர்கள் கிராம மக்களால் கண்ணீருடன் கூறப்பட்டது.

இந்த மாணவரின் இழப்பு, அவரின் தாயாரை மனநிலை சரியில்லாமல் போகும் அளவு பாதித்திருக்கிறது.

இளைஞர்களே… உங்களுக்கு ஏதேனும் ஒன்றில் தோல்வி வந்தால் உடனே தற்கொலை தான் தீர்வு என எண்ணுவதை விடுங்கள்.

நமது இறப்பில் கூட ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். இயற்கையாய் நிகழும் மரணத்தை தவிர, நாமே தேடிக் கொள்வது மிக மிக முட்டாள்தனமான செயல்.

பிறந்ததற்கான ஒரு அர்த்தத்தை இவ்வுலகில் ஏற்படுத்திச் செல்ல வேண்டும். உருகி ஓடும் மெழுகு கூட, தன்னை அழித்து உலகுக்கு வெளிச்சம் பரப்பிச் செல்கையில், நாம் எத்தகையதொரு மாற்றத்தை உலகுக்கு அளித்துச் செல்ல வேண்டும்??

பலரது கண்ணீரைத் துடைக்கா விட்டாலும் பரவாயில்லை. பலரின் கண்ணீருக்கு காரணமாக இல்லாமல் இருக்கலாம் அல்லவா??

எதிர்நீச்சல் போட துணிவில்லையெனில் மனிதனாய் பிறந்து பயனென்ன?

வாழ்க்கை வாழ்வதற்கே..!


__________________
~பூள்.

Wednesday, February 13, 2008

கருத்த காலம்..!

கருத்த காலம்..!


வெளிச்சம் தேடி
விழி சென்ற
திக்கெல்லாம்
இருள் அப்பி
திரும்புகிறேன்..!

ஓரத்தில் பெயர்ந்திருக்கும்
சுவரின் பூச்சு..
சுவாசத்தில் சேறு பூசி
சிரித்தது போல்
திணறும் மூச்சு..!


பட்டினியின் பற்கள்
கணுக்கணுவாய் சுவைக்கும்
அணுவை அனுவும்..!

மூன்று நாள்
இருவேளை மேக்கியோடு
தலைசுற்றி இரைதேடி
சாலை கடக்க
சோ(சா)தனை முயற்சி...!


திட்டும் வாகனவோட்டிக்கு
புரியுமா என் பசிச்சுற்றல்??

அறைத் தோழி
அலுவல் செல்ல..
வெறுமை அறைந்து
அழ வைக்கும்..!


சந்தை என்று
வந்த பின்னே
பல்லு பிடித்து
பார்க்கும் உலகம்..!

ஒவ்வொரு இரவும்
ஓராயிரம் வலியோடு
அடுத்த நாளுக்கு
தயாராகும் மனம்..!


யாரும் இல்லாவிடினும்
நிதம் அருகில்
வந்து வாலாட்டி ஓடும்
வேப்பமர அணிலைப்
போலவே வாழ்க்கையும்..!
__________________
~பூள்.

Tuesday, February 12, 2008

ஈரவெளிக் காற்று..!

ஈரவெளிக் காற்று..!



குறுக்கு பாதையில்
சூழல் கிரகித்து
நடைபோடுகிறேன்..!

மார்பளவு சுவற்றில்
வண்டி பிடித்து
ஏறி நின்று..

அக்கா கை பிடித்து
அனிச்சையாய்
அநாயாசமாய்
நடைபழகும் மழலை..!


வேறு திசையில்
பெரியவர் நின்றிருக்க..
பிஞ்சு விழும் பதைப்பு
நெஞ்சில் எழுந்து
என்னை ஆட்டுவிக்கிறது..!


குறுகுறு பார்வையில்
எனைக் கண்டு
குறும்பாய் சிரிக்கிறது
இளம் தளிர்கள்..!


வரும் துயர் எண்ணி
அஞ்சி அழைத்துச்
சொல்லி என் வழி
செல்கிறேன்..!

ஏங்கும் விழிகளோடு
சோகமாய் பார்க்கும்
ஈரவிழிகள்..!


நிம்மதி பெருமூச்சு
நெஞ்சில் வந்தாலும்
எங்கோ ஓர் ஓரத்தில்
மழலையின் கண்கள்
கேட்ட கேள்விக்கு
விடை சொல்ல
இயலாமல் இன்னும்
நான்...!!
__________________
~பூள்.

Thursday, February 7, 2008

ஐஸ்கிரீமும் நானும்..!

ஐஸ்கிரீமும் நானும்..!



மருத்துவமனை சுவர்களோடு
மனம் பேசும் வாசனை
பினாயில் நெடியோடு
கரைந்து போகும்..!

வெள்ளை உடுப்பிட்டு
புன்னகையை பூட்டி
அறைகளின் உயிருக்கு
பூ வைத்தியம்.!

இன்று முதல்
பூக்கள் நடுவில்
இரவுப் பணி..!

அந்த அறையை
அடையும் போதெல்லாம்
மனம் துடிக்கும்..!
வெள்ளை உடை தாண்டி
தாயுள்ளம் பரிதவிக்கும்.!

"சிஸ்டர்..! நீங்களே..எப்பவும் ஊசி போடுங்களேன்.
காலையில் வந்த சிஸ்டர்.. கை வலிக்க போடுறாங்க..!"

புன் சிரிப்பு ஒட்டவைத்து
மென் ஊசி போட்டு
உச்சி முகர்ந்து முத்தமிட்டு
உறங்கச் சொல்கிறேன்..!

மூன்று மாத கெடுவில்
முத்தான பிள்ளை
முகம் மாறா சிரிப்புடன்
சொல்கையில்
செவிலிப்பணி தாண்டி
சொல்லறுத்து விழி செல்துடித்து
அழுகிறது..!

மருத்துவ அறிக்கையில்
மாதம் இரண்டு கடந்து
பதினைந்து ஆகிருந்தது.!

"சிஸ்டர்.. எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடனும்..!
நாளை வாங்கி வருவீங்களா?"
ரகசிய குரலோடு சுற்றுமுற்றும் பார்க்கிறான்
பயமாய்..!

தலையாட்டி விடைபெறுகிறேன்..!

அடுத்த இரவுக்கு காத்திருந்தது
இருவரின் மழலை மனமும்
..!

ஐஸ்கிரீம் வாங்கி
பையில் பத்திரப்படுத்தி
ஓடிச் செல்கிறேன்
அறை நோக்கி..!

மருத்துவர் கூட்டம்
கூடி இருக்க..
அவசரப்பிரிவில்
அவதியுறும் மழலை..!

புற்றுநோயின் புற்றுக்குள்
புதையுறுகையிலும்..
என் முகம் கண்டதும்
கண்ணில் வெளிச்சம்..!

ரகசிய சம்பாசனையில்
"ஐஸ்கிரீம் இருக்கா?" ஆவல் வினா..!

ஆமென்று நான் தலையசைக்க
நிம்மதியொளி முகத்தில் தெரிய
மெல்ல மூடியது மழலைக் கண்கள்..!

ஐஸ்கிரீமும் நானும்
அடங்கா துக்கத்தில்
உருகி வழிந்து
ஓடிக் கொண்டிருந்தோம்..!

__________________
~பூள்.

Wednesday, February 6, 2008

முள்ளாகும் முல்லைகள்..!

முள்ளாகும் முல்லைகள்..!



காலை அவசரத்தில்
நூடில்ஸ் சிற்றுண்டி..!
வாயில் பாதி..
தட்டில் மீதி..!

ஃப்ரி.கே.ஜி ரைம்
தேர்வு.. - மனனம்
மனத்தில்..!

மாலை வந்ததும்
பூட்டிய வீடு..!

சோர்ந்து சாவி வாங்கி
தொலைக்காட்சி காட்டில்
கார்டூன் நண்பர்கள்..!

துப்பாக்கி தூக்கி
சுட்டு வீழ்த்தும்
தீரர்கள்..!

நீரின்றி மழலை
இமைக்காமல் குடிக்கும்
வன்முறை பானம்..!

குடித்து தீர்ந்ததும்
குற்றுயிராய் கிடக்கும்
மனிதம் கீழே..!

அன்னையின் அன்பு
முத்தத்தோடு வாழும்..!
பேச நேரமின்றி இரவுணவு
சமைத்தலில் மாயும்..!

மறுநாள் பள்ளியில்..
சின்ன சலசலப்பு..!
வன்முறையில் முடியும்..!

முல்லைகள் முள்ளாவது
என்று புரியும் நமக்கு??




(வெளிநாட்டில் எல்.கே.ஜி குழந்தை துப்பாக்கியோடு பள்ளிக்குச் சென்று மற்றவரைச் சுட்டுக் கொன்றதாக செய்தி அறிந்தேன். அதன் தாக்கத்தில் எழுதியது.)




__________________
~பூமகள்.

Sunday, February 3, 2008

காவியம் பாட வா..!