RSS

Friday, August 13, 2010

ஊடல் கொள்வோம் வா..!!எப்போதும் போலவே
அன்றும் நீயே
சண்டையை
துவக்கி வைத்தாய்..!!

என்னோடு சண்டைபோட
சுலப வழி எப்பொழுதும்
உனக்கு
இருக்கவே இருக்கிறது..

நாளை செய்ய எத்தனித்து
விடுபட்ட வேலை மேல்
உன் வேல் விழி பாயும்..

அரும்பி விடும் உன்னுள்
அந்த அரிவாள் வாக்குவாதம்..

விடாப்பிடியாய் நீ பேச..
என் நியாயம் நான் பேச..

காரணங்கள் கரைந்து
ஏனோ என்
விழியோரம் நனைக்கும்..

கோபத்தோடே
அலுவலகம் சென்றிடுவாய்..

எதுவும் கேக்காமல்
ஊமையாகும்
வாயும் வயிறும்..

மதியம் அழைப்பு வரும்..

இயல்பு திரும்ப
இயல்பாக பேச
முயல்வாய்..

வறண்ட கிராமத்தில்
நீர் முடக்கும்
கையடி குழாய் போல்
உணர்வு முடக்கி
நான்

உணவு அனுப்பி
உண்ண வைப்பாய்..
உன் பாசம் சொல்லி
நெகிழ வைப்பாய்..

பாறையை பூவாக்கும் வித்தை
பிரயோகிப்பாய்..
கல்பாறை கற்கண்டாகும்..

வீடு திரும்பிய
உனைச் செல்லமாய்
குத்தி நெஞ்சில்
முகம் புதைப்பேன்..

அர்த்தமற்ற சண்டையின்
அரிய நோக்கம்
அறியச் செய்வாய்..

முன்னை விட
தித்திக்கும்
நம் காதல் அன்று..

இறுதியில் சொல்வாய்..
இதற்குத் தான்
காத்திருந்ததாக…!!

--
பூமகள்.

Thursday, August 12, 2010

இடுக்கண் வருங்கால்..!


இடுக்கன் வருங்கால்..!!

வெட்ட வெட்ட
வளரும் நகமாக
வளர்ந்து கீறும் நினைவுகள்..

அதிகம் வலித்த
தருணம் அனைத்தும்
ஒருங்கே கூறும் அவை..

உறவு தரும் வார்த்தை
உளியடியாய் இறங்கி
ஆறுதலுக்கு பதில்..
ஆறா வடுவாக்கும் நெஞ்சில்..

கதறி அழ நினைத்தும்
காய்ச்சல் குழந்தை முகம்
கலக்கமாய் நினைவூட்டும்
கசந்து வற்றும்
அம்மா பால்..!

மருத்துவர் சொல்படி
மென்று முழுங்கி
ஜீரணிக்க முயலும்
ஜீரணமாகாத நினைவுகளோடு
புதியதாய்
புதிய தாய்..!


Monday, August 9, 2010

தி லாஸ்ட் ஏர்பெண்டர் (3D) - விமர்சனம்

The Last Airbender - 3D
Manoj Night Shyamalanகொஞ்ச நாள் முன்பு டாய் ஸ்டோரி முப்பரிமாணத்தில் காணச் சென்ற பொழுதே இந்தப் படத்துக்கான முன்னோட்டத்தை முப்பரிமாணத்தில் விளம்பரப்படுத்தினர். அதைப் பார்த்ததிலிருந்தே கட்டாயம் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் என்னில் வேரூன்றியது. மேலும், சியாமளனின் தி வில்லேஜ் பார்த்த அனுபவமும் பார்க்கத் தூண்டியது.

எங்கள் ஊரில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்றிருந்தது.

படத்தின் முதல் சில காட்சிகளிலேயே அதாவது எழுத்து போட ஆரம்பித்த உடனிருந்தே அந்த முப்பரிமாண காட்சியமைப்பு நம்மை கட்டிப் போட்டுவிடுகிறது.. படம் முப்பரிமாணத்தில் அசத்துகிறது.சீன மத துறவி போல் வரும் சிறுவன் இந்த படத்தின் ஹீரோ. ஆங் என்று தன்னை அறுமுகம் செய்தாலும் அவன் அவதார் என்று எல்லோராலும் சொல்லப்படுகிறான். அவன் என்ன செய்வான், எப்படி செய்வான் என்பது போன்றவை படத்தில் கண்டு நீங்கள் மகிழ இங்கு ரகசியம் காக்கப் படுகிறது.

நமது ஆன்மீக நம்பிக்கையில் முக்கியமாகக் கருதப்படும் பஞ்ச பூதங்களினால் உருவான உலகம் போலவே இங்கு நான்கு பூதங்களை கொண்டு மட்டும் அதாவது பெண்டாஸ்டிக் ஃபோர் படத்தில் வருவது போல நான்கு பூதங்களை கைக்குள் வைக்கும் உத்தி தான் படத்தின் கரு.

ஒரு அண்ணன் மற்றும் தங்கையுடன் படத்தின் கதை ஆரம்பமாகிறது. அதற்கு முன் உலகம் பற்றிய ஓர் முன்னோட்டம் கதைக் கரு பற்றி நமக்கு விளக்கப்படுகிறது.

படத்தில் ஹீரோவாக வரும் சிறுவன் அவ்வப்போது தனது குழந்தைத்தனத்தால் நம்மை சில இடங்களில் சிரிக்க வைக்கிறான்.. தனது குருவை நினைத்து வருந்தும் இடத்திலும், தன் ஊரினைக் கண்டு மனம் வெதும்பி நிற்கையிலும் கிளாஸ். பல்வேறு மன ஓட்டங்களை தனது சிறிய முகத்தில் கொண்டு வந்து அற்புதமாக நடித்து அசத்தியிறுக்கிறான் சிறுவன். அழகான தன் வித்தையால் நம்மை எல்லாம் ஆட்கொண்டும் விடுகிறான். இறுதியில் ஓர் இடத்தில் என் கண்ணைப் பனிக்கவும் வைக்கத் தவறவில்லை…என் ஓட்டு இந்த சிறுவனுக்கே.


சிலம் டாக் மில்லேனியரில் நடித்த ஹீரோ இதில் நடித்திருக்கிறார். தேர்ந்த நடிப்பை வெளியிட வாய்ப்பற்ற நிலை. தன் பங்கைப் பூர்த்திசெய்திருக்கிறார். ஆனாலும், ஸ்லம் டாக்கில் நடித்த நடிப்பின் பிரதிபலிப்பு தெரிகிறது இதிலும்.. இவருக்கு மாமாவாக வரும் வயதானவரின் பாத்திரம் அற்புதம். அவர் சில இடங்களில் தனது தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.

நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய பூதங்களை அவதார் எனப்படுபவர் என்ன செய்கிறார்கள்.. ஏன் செய்கிறார்கள்.. அவர்களுக்குள்ளாக நடப்பவை என்ன.. உலகத்தின் சுத்தமான ஆன்மாக்களாகக் கருதப்படும் இவை கொண்டு உலகத்தின் சம நிலை எவ்வாறு பாதிக்கிறது போன்ற பலவற்றிற்கு விடை படத்தில் காணலாம்.

படத்தின் சில காட்சியமைப்புகள் அற்புதம்.. கிராபிக்ஸ் எதுவென அறியாத வண்ணம் கலக்கியிருக்கிறார்கள்.. பனிக்கரடி போன்று வரும் பறக்கும் மிருகம் அசர வைக்கிறது. மாய ஜால படங்கள் பார்த்த எபக்ட் கட்டாயம் உங்களுக்கு திரையில் இருக்கும்.

வழக்கம் போல் படம் சில இடங்களில் மிக மெதுவாகத் தோன்றுகிறதென்று என்னவர் சொன்னார்.. அப்படி எனக்கு எந்த இடத்திலும் தோன்றவே இல்லை என்பதே உண்மை. இறுதிக் காட்சி அடுத்த படத்துக்கான அடித்தளம் போல் அழுத்தமில்லாமல் அமைத்து தன் பாணியை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் அனைவரும் முப்பரிமாணத்தில் கட்டாயம் அந்த சிறுவனுக்காகவே பார்க்க வேண்டிய படம்.