RSS

Friday, August 31, 2007

முகமூடி மனிதர்கள்...!!

மெல்லிய புன்னகை
வாஞ்சை பேச்சு
வஞ்சனை உள்ளம்
வசிய மனிதர்..!

நிஜ முகம் களைந்து
பொய் முகங்களின்
பேரூர்வலம்
தெருவெங்கும்.....

நிஜ முகங்கள் தேடி
நிதம் வாடும்
என் மனம்....!!

முகத்தில் சிரிப்பு
மொத்தத்தில் வெறுப்பு
முகம் காட்டா
அகம் ஏராளம்.....!!

யாரிடமும்
மெய்முகம் காட்ட
மறுப்பதென்ன
மானிடா???

உண்மையாய்
உறைவது
உறுத்துதோ
உனக்கு....??????????

உள்மன
அழுக்கை அகற்றி
ஆழ்மன அழகில்
லயித்துப்பார்
கொஞ்சம்........

ஆன்மா பேசும்
அமைதி மொழி...!
அறிந்து கொள்
அது நல் வழி...!

-பூமகள்.

Tuesday, August 28, 2007

பஞ்சு மேகம்...!!


காற்று வந்து
காது துடைத்து
கலைத்துப் போகும்
பஞ்சு மேகம்...!!

விண்ணில் கோடி
விதைகள் கொண்டு
விதைத்த பருத்தி
பஞ்சு மேகம்...!!

நட்சத்திர மழலை
கண்ணாமூச்சி ஆட
வைக்கும் பிஞ்சு
பஞ்சு மேகம்..!!


நனைந்த நிலவு
நுதல் முற்றும்
சுற்றிக் கொள்ளும்
பஞ்சு மேகம்...!!

பகலவன் கொஞ்சம்
இளைப்பாறிச் செல்லும்
சொகுசு பக்கணம்
பஞ்சு மேகம்...!!

கடலோடு
மணம் கொண்டு
கருவாகி
மழை ஈன்று
பஞ்சரிக்கும்
பஞ்சு மேகம்...!!

வானத்தோடு
மின்னல் சண்டை
அமைதித் தூது
வெளிர்
பஞ்சு மேகம்...!!

அண்டையோடு
சண்டையிட்டும்
அன்பு குழகி
ஆர்ப்பறிக்கும்
தரணி மெச்சும்
பஞ்சு மேகம்...!!



அர்த்தங்கள்:
பஞ்சரித்தல் - கொஞ்சிப் பேசுதல்
பக்கணம் - ஊர், கிராமம்
குழகுதல் - கொஞ்சுதல், வசீகரித்தல்

-பூமகள்.

Sunday, August 26, 2007

சத்தமாய்....!!



பேரலையோடு
பரள் பேசும்

புதுக்கவிதை

சங்கமச் சத்தம்...


பூ அவிழ
பூக்காம்பு கேட்டு

மயங்கும் மரகத

வனப்புச் சத்தம்..

இளவெயில் பட்டு
இலையூஞ்சல் ஆடும்
குயில் பாட்டு

குழையும் சத்தம்...


மூங்கில் காட்டில்
முட்டும் காற்று

முத்தம் தந்து

முனகும் சத்தம்..

மெல்விரல் படின்
இலை மூடும்
தொட்டாச்சிணுங்கி

நாணிச் சிணுங்கும்
வெட்கச் சத்தம்...


காதல் மொழி
பேசும் அழகு
பேடைக்கிளி இரண்டும்

கொஞ்சும் சத்தம்...


நள்ளிரவு நிலாநேரம்
நீரின் மேலே

தவளை தாவும்

தளுக் சத்தம்...


வண்டு வரும்
பூச்செண்டு அறியும்
ரம்மிய கமக

ரீங்காரச் சத்தம்...


கேட்கா சத்தம்
கேட்கும் நித்தம்

கேள்விக் குறியாய்

வாழ்க்கை மட்டும்..


வாழச் சொல்லி
வார்த்தை முட்டும்
சத்தமே சத்தமாய்..

சொல்லும் மனதின்
சத்தம்...!!

-பூமகள்.

Friday, August 24, 2007

சிறு பூவிற்கு வாழ்த்து..!

ஆயிரம் பூக்கள்
இயைந்த மாலை
அழகாய் பிறந்து
வந்தது இன்றே..!

வசந்தகால
வனப்புகொண்டே
வாசமுடனே
வந்தது இன்றே..!

வாஞ்சை கொண்டே
வெள்ளி மின்னல்
வானம் விட்டே
வந்தது இன்றே..!

வாசல் தேடி
வானவில் கோடி
வண்ணவெள்ளமாய்
வந்தது இன்றே..!

வாழ்த்துக் கூறி
ஆசி வழங்க
அக்கா வந்தேன்
அன்பு கொண்டே..!

வாழ்வு முற்றும்
இன்பம் காண
இனிய வாழ்த்து
கூறினேன் நன்றே..!

வாழ்க நீ..!
வளர்க மேலும்..!
வானம் கூட
தொட்டுவிடும் தூரமே..!!

-பூமகள்.

வெளிச்சம் தேடி....!!

இருட்டு அப்பிய
இரவு நேரம்..

அலையும் தூங்கும்..
அந்திச் சாமம்..

ஆழ்கடல் அருகே..
தனியே பயணம்
துடிப்பே துணையாய்..

உப்புக் காற்றும்
உவர்ப்புக் கொண்டே
உறங்கும் மெல்ல..

வெள்ளிப் பரள்கள்
வான முகட்டில்
வந்து வந்து
வெளிச்சம் காட்டும்...!!

விண்ணில்
நகபதி நகர்வலம்..
நட்சத்திரத் திருவிழா..!!

வெளிச்சம் பிடிக்க..
வலையை வீசியேன்..
விண்ணை நோக்கி....

முகிலில் மறைந்த
விண்மீன்கள்..
வலையில் சிக்கின
வண்ண மீன்களாய்..!!


-பூமகள்.

Thursday, August 23, 2007

தாய்த் தொடர்வண்டி...!!

நல்லிரவு ரயில் பயணம்
நங்கூரமிட்ட நிமிடங்கள்..

நகரும்மெல்ல நினைவலைகள்..


மழைத்தூரல் பட்டு
மனம் நனையும் விந்தை..
பனிக்காற்று படிந்து

வந்துசில்லிப்பூட்டும்

சின்ன உள்ளத்தை..


தண்டவாள தாளத்தோடே

ஒய்யார நினைவோட்டம்..


வெளிச்ச மின்மினிகளாய்

ஆங்காங்கே தெரியும்

அகங்கள் அழகே..

சன்னலோர பயணத்துக்கு
ஈடில்லையென்றுணர்த்தும்..

கவிகள் பல ஆக்கும்

அந்த பயணத்தின் ஆரம்பமே..


துணைக்கு வரும் நிலவு மட்டும்

துடைத்து விடும் இரவை மெல்ல..


தூக்கத்தை விடுத்து

தூரவானம் பார்த்தபடி

சொர்க்கம் எட்டும்

சன்ன எண்ணோட்டம்..

தாயின் மடியில்

துய்த்த நினைவை

திரும்ப வைக்கும்

தாய்த்தொடர்வண்டி....!!



-பூமகள்.

Wednesday, August 22, 2007

ஒரு பத்திரிக்கையாளன் நிலை

நித்தம் நித்தம் புதுயுகம்
நிஜத்தைத் தேடி
பொய்யை எழுத
நிஜமாய் அலைவிக்கும்
பெருச்சாளிக் கூட்டம்
மேலதிகாரிகளாய்.......!


முதல் நாள்

இன்று
அரசியல் தலைவரோடு
பேட்டி


நிரம்பக் கேள்வி பல
நிரப்பி நேரில்
சென்றேன்
ஆர்வத்தோடே
அலுவலகத்திற்கு...


என் கேள்விகள் கூட
மீள்திருத்துகைக்குட்பட்டது
மேலதிகாரியால்..
மீளமுடியா துயர்கொண்டது
என் உள்ளம்...


பேசும் முன்பே
வார்த்தைக் களவா?
கேட்கும் முன்பே
கேள்வித் தடையா?
கேள்வியே தடையா?

விம்மித்தவித்து
வேகமாய்ச் சென்றேன்
பேட்டிக்காக..
முடிந்தது பேட்டி
சிரித்தார் தலைவர்....
அழுதது - என்
கொலையான வினாக்கள்..!


இரண்டாம் நாள்

நட்சத்திர பகுதிக்காய்
நாள் முழுக்க புரட்டி
முழுவிவரம் எடுத்து
அழகாய் கோர்த்தேன்
உண்மைச் செய்திகளை..
அழைத்தது மேலிடம்
கிசுகிசு குரலில்
பொய் எழுதச்சொன்னது..
மெல்ல என் பேனா
துடிதுடித்து இறக்க
எத்தனித்துக் கிடந்தது
என் சட்டைப் பையில்.....


மூன்றாம் நாள்..


அழைப்பு வந்தது
காவல்துறையிடமிருந்து....
ஆர்வமாய் போனேன்
சத்தியம் அங்கே
காக்கப்படுமென்ற
நம்பிக்கையோடே..

காசுக்கு மயங்கி
கதையெழுதச் சொன்னர்
அப்பாவி பற்றி....
திரும்ப வந்தேன்
தீர்க்கமான முடிவுடனே...


நான்காம் நாள்


வெள்ளைக்காகிதத்தில்
மெய்யெழுதினேன்
ஆம்...ராஜினாமாக் கடிதம்..


உண்மைகள் தற்கொலை
செய்வதில்
உடன்பாடில்லை
எனக்கென்றேன்..

பிழைக்கத் தெரியாதவன்
என்றனர்

நகைத்துத் திரும்பினேன்...


ஆமாம்...
யாரேனும் யோசித்துக்
கூறுங்களேன்...



புதுப் பத்திரிக்கைக்கு
என்ன பெயர்
வைக்கலாம்???!!!

-பூமகள்

Monday, August 20, 2007

அரசியல்


ஒட்டிய வயிறாயினும்
ஒட்டவில்லை
ஒட்ட எத்தனித்தும்
ஓட்டமெடுத்தது என் மனம்...!
ஓட்டுச் சந்தையில்,
பிரியாணிக்காய்
விற்றுப் போன
ஏழையின்
ஓட்டு கண்டு...!

-பூமகள்.

Saturday, August 18, 2007

நீ...!!

நீ
பார்க்கா பிரபஞ்சம் !

நீ
சுவைக்கா அமிர்த‌ம் !

நீ
அழியா மாற்ற‌ம் !
நீ
தூரா மழை !

நீ
சலிக்கா தமிழ் !
நீ
அறியா உன்னதம் !

நீ
மரியா மனிதம் !
நீ
எழுதா என்கவி !
நீ
முடியா வாழ்க்கை !

நீ
தடியா தாரகை !

நீ
சுமக்கா பாரம் !
நீ
அரும்பா தளிர் !
நீ
விசும்பா துயர் !

நீ
துடைக்கா இரவு !

நீ
வெடிக்கா பஞ்சு !

நீ
முளையா விருட்சம் !

-பூமகள்

Monday, August 13, 2007

வலி



வண்ணங்களின் வலி
வண்ணச்சித்திரம் வரையும்!
எண்ணங்களின் வலி
வண்ணச்சரித்திரம் புனையும்!

−பூமகள்.

Sunday, August 12, 2007

தாய்மை

சுமப்பதும்
சுவைக்கிறது செல்லமே − என்
வயிற்றில் நீ
நெளியும் போது...
சுமையாய்த்தான் தோனுது − உன்
தளிர் முகம்
காண
காத்திருக்கும் போது....!

−பூமகள்.

Saturday, August 11, 2007

நிதர்சன உண்மை..!

நாளைய கனவுகளை
இமைகளில் சுமந்து
இன்றைய தினங்களை
இல்லாமல் ஆக்குகிறேன்...!
நேற்றைய நினைவுகளை
நெஞ்சத்தில் சுமந்து
நிதர்சனங்களை
நிராகரிக்கிறேன்...!
நேற்றும் நாளையும்
இப்படியிருக்க,
இன்று மட்டும்
சிரித்தபடி செல்கிறது எகத்தாளமாய்...!
வெறும் கையுடன்...
நான்!



- பூமகள்.

Friday, August 10, 2007

வாழ்வின் அர்த்தங்கள்.....!


வாழ்வின்
அர்த்தங்கள்
அறியும்
வேட்கையில்
நான்...!!



* பூவின்
மகரந்தம்
திருடும்
தென்றல்
மெல்ல
எனை
வருடும் போதும்....


*புதுச்சட்டை
போட்ட
ஏழைச்
சிறுவனின்
சிரிப்பைப் போல
வானம்
மழையால்
நகையாடும் போதும்....


* மழையில்
நனையும்
குருவிக்குஞ்சை
சுருக்கென
இறகால்
பொத்தும்
தாய்க்குருவியின்
கதகதப்பின் போதும்....


* நாளைய
விடியலை
நம்பிக்கையோடு
பார்த்திருக்கும்
இரவு
உறங்கும் போதும்....

* சற்றே
முகம்
வாடினது
காணாமல்
வாஞ்சையாய்
கை பற்றி
அனுசரிக்கும்
ஸ்நேகத்தின் போதும்....

துளித்துளியாய்
அறிகின்றேன்..
வாழ்வின்
அர்த்தத்தை....!!


- பூமகள்.

Thursday, August 9, 2007

About myself


அன்பு உறவுகளே..!

நான் பூமகள். எனது எழுத்துகளையும் சிந்தனைகளையும் உங்களோடு பகிர விழைகிறேன். கவிதை படிப்பதும், படைப்பதும் என் ஆர்வம்.
உங்களின் வருகைக்கு நன்றிகள்..! மீண்டும் வருக..!!
பதிவுகள் மூலம் உங்கள் விமர்சனத்தினையும் பகிருங்கள்.

அன்புடன்,
பூமகள்.