RSS

Wednesday, April 21, 2010

கரைந்த அன்பு…!



அன்றும் அதே
புன்னகையோடே
விடைபெற்றாய்..

இறுதியில் இனிக்கும்
நெல்லிக்கனியாய்
இனிக்காமல் போனது
உன் முத்தம் அன்று..

நீ தந்த முத்தக் குவியலை
முகர்ந்து பார்க்கிறேன்
உன்னிடமிருந்து நான்
ஆசையாய் கேட்டு வாங்கிய
கைப்பையில்…

இறுகப் பற்றிய
உன் விரல் இடுக்குகள்..
கொடுத்த நடுக்கம்
இன்னும் என்
விரல்களில் மிஞ்சி நிற்கிறது..

நீயின்றி போன
வீடும் தாழ்வாரமும்
வெறுமையைக் குலைத்து
எனைப் பார்த்த கணத்தில்
என்னுள் அப்பி அழுகிறது..

வரவேற்கத் தேடும் உன் விழி
தொலைந்து போன
அந்த முற்றம் நிரம்பிய
சோகம் தாளாமல்..

இப்போதெல்லாம்
நான் ஊருக்குப்
பயணிப்பதே இல்லை..
என் செல்லப் பாட்டியே…!!

உறைந்த நிமிடம்..!



வெயில்
பொழுது
துயில் கொள்ள
சாய்வுநாற்காலி தேடி
தோய்ந்து இருந்தது

கடலின் அருகில்..!

தூரத்து வானின்
கருத்த சீலையால்
மறைக்காத இடங்கள்
சிவந்த மேனியாய்
சித்திரம் காட்டியது!

எப்போது வேண்டுமானாலும்
விடைபெற காத்திருக்கும்
கொடியில் மாட்டிய பட்டம் போல்
நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..!

சிறுத்தையின் வேகத்தில்
சீறி வந்தாய் என் முன்..!
சிருங்கார பார்வையில்லை..!
சிரிப்பூட்டும் இதழில்லை..!

புரியாமல் பார்க்கின்றேன்..!
புரிந்தே நீ காண மறுக்கும்
என் விழியோர நேர்பார்வை..!
புரியத்துவங்கியது ஏதேதோ என்னுள்..!

"விலகிப்போ...மறந்துபோ..."
வார்த்தை சொல்லி

விலகி நின்றாய்..!

இரு வார்த்தையில் மரணம் வருமோ?
இதயத் துடிப்பு நின்று போனது..!
உள்ளம் உடைந்து, விழி வெடித்து
வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!

மேகத்துக்கு எப்படிக் கேட்டது??
முட்டிக் கொண்டு அதுவும் அழுதது..!

என் உயிர் பிய்த்து

உடல் மட்டும் சவமாய்

உறைய வைத்து

விட்டுச் சென்றாய்..!

சிதறிய கண்ணீர் மழைநீரோடு

மெல்ல உரையாடியது..!
வெகு நேரம் நின்று மழையோடு

விவரம் சொன்னேன்..!

வெறுத்து தகர்ந்து மெல்ல நகர்ந்தேன்
இதயத்து வலியோடு..!

சாலைகள் புதிதாய்..!
மழை மட்டும் என்னோடு
மருளாமல் துணையாய்..!

யாருமில்லை.. எவருமில்லை..!
இருட்டத் துவங்கும் தூரம் வரை
இரு காலும் இலக்கின்றி
நடந்து சோர்ந்தது..!

ஏதோ ஒரு கடை..!
உள்ளும் புறமும்
ஈரத்தோடு நுழைகிறேன்..!

உள்ளே அழுதாலும்
வெளியே வெளிரிச் சிரிக்கிறேன்..
"நக வெட்டி" வேண்டுமென்றேன்..!
வாங்கிவிட்டு வெளிவந்தேன்..!

மனம் கேட்டது!
உன் "நினைவு வெட்டி" கருவி!

வானம் வாஞ்சையோடு
வன்மழை மள்கி
மெல்லிய தூறலாக்கி
மனம் லேசாக்கியது..!

தூறலோடே திரும்பி
வந்தேன்..!
வெடித்து அழுதேன்..!
இப்போது கனமழை
என் வீட்டில்..!

Thursday, April 15, 2010

புன்னகைக்குப் பின்னால்…!!


எழுதி பல நாட்கள் ஆனதாலோ என்னவோ, எதைப் பற்றி எழுத வேண்டுமென்ற தீர்மானம் போடுவதற்கே பல காலம் எடுத்துக் கொள்கிறது மனம்… இதோ இதைப் பற்றி கட்டாயம் எழுதியே ஆகவேண்டுமென்று அமர்ந்துவிட்டேன்..

வெளி நாட்டில் அக்கம் பக்கத்தில் இருக்கும் வேற்று நாட்டவரோடு வெறும் புன்னகையை மட்டுமே உதிர்த்து வாழ்க்கை நடத்தும் பலரைப் போலவே, நானும் வாழ என்னைத் தயார் செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் என்னை புன்னகை பூத்து வரவேற்றது ஒரு பிலிஃபைனியப் பூ. அவர் பெயர் நினைவில் இல்லை.. ஆனால், எப்போதும் துறு துறுவென்று ஓடிக் கொண்டும், அந்த ஓட்டத்துக்கு இடையிலும் என்னை நோக்கி ஒரு புன்னகை பூத்துக்கொண்டும் இருக்கும் அவரோடு பேச மனம் ஏங்கியது..

அந்த கனவு, இத்தனை மாதங்கள் கழித்து ஈடேறியது.. வெறும் நட்பு பார்வைகளை மட்டுமே பரிமாறிக் கொண்ட எங்களுக்குள் பேச்சு தொடங்கப்பட்டது ஓர் பொன்னாளில்..

அவரின் பரஸ்பர அறிமுகத்துக்குப் பின்னால், மீண்டும் சில நாட்கள் கழித்து என் வாசலில் மீண்டும் அவர் கடந்து போகையில் பேச வாய்ப்பு கிடைத்தது..

அவர் எப்போதும் மலர்ந்த முகத்தோடு, அழகிய குதிரை வாலோடு ஓட்டமும் நடையுமாக ஓடி வருகையிலும் என்னைப் பார்த்ததும், முகம் மலர்ந்து பேசலானார். அவரின் கையில் பார்த்த விளையாட்டுப் பொருளைப் பார்த்து ஆச்சர்யம் எனக்கு… கையில் ஸ்கேட்டிங் வீல்ஸ்.. இப்போது தான் சிறுவர்களோடு விளையாடிவிட்டு வருவதாக அவர் கூறுகையில் இருந்த அந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது.. தான் வீட்டுப் பணியாளினியாக இருப்பதாகவும், கூடவே இளங்கலைப் பட்டம் படிப்பதாகவும் தெரிவித்தார். அது நாள் வரை நான் அவரை அவ்வீட்டில் இருக்கும் நபர் என்றே நினைத்திருந்தேன்.. எட்டு வயதிலும் ஆறு வயதிலுமான தனது இரு மகள்கள் தன் அம்மாவுடன் ஃபிலிபைனில் இருப்பதாகத் தெரிவித்தார்.. என்னால் நம்பவே முடியவில்லை.. காரணம், அவர் அத்தனை இளமையாக இருந்தது தான்… குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் போன் பண்ணுவதற்கே வருத்தமாக இருக்கிறது.. எப்போது போன் செய்தாலும், எப்போ அம்மா வருவீங்க.. என்று குழந்தைகள் அழுவதை கேட்க முடியவில்லை என்று அந்தத் தாய் சொல்கையில் என்னவோ போல் செய்தது என் மனம்…

எதார்த்தமாக பேச்சு வளர்ந்து கொண்டே போகையில், உங்கள் கணவர் எங்கு வேலை செய்கிறார் என்ற கேள்வியைத் தொடுத்தேன்.. தனது இரண்டாவது குழந்தை ஒரு வயதாக இருக்கையில் இறந்து விட்டார் என சொல்கையில் அந்த விழிகளில் தெரிந்த வலியும், வலிமையும் என்னை நிலைகுலையச் செய்தன.. அவ்விடத்தில், அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, வேறேதும் பேச வாயெழாமல் கண்கள் பனித்தது எனக்கு.. அவரே தொடர்ந்தார்.. குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக அவரை இழந்து வாழ்வது ரொம்பவே கடினமெனச் சொன்னார்.. அவ்விடத்தில், 'மொழி' படத்தில் பிரகாஷ்ராஜ் சொர்ணமால்யாவிடம் அவர் கணவர் பற்றி கேட்கையில் சொர்ணமால்யா எப்படி கண்கள் பனிக்க, தன்னம்பிக்கையோடு பதில் சொன்னது நினைவு வந்தது.. அதே போல் பதிலளித்தார்.. தான் விரைவில் படிப்பு முடித்து, நல்ல அலுவலக வேலையாகப் பார்க்கப் போகிறேன் என்று அவர் சொல்கையில் இருந்த தன்னம்பிக்கையும் தன் குழந்தைகளுக்காக வாழ வேண்டுமென்ற வைராக்கியமும் மனம் நெகிழச் செய்தன..

நன்கு படித்து நிச்சயம் நல்ல வேலைக்கு செல்வீர்களென அவரை உற்சாகப்படுத்தினேன்.. தனக்கு நிறைய நல்ல நண்பர்கள் என் நாட்டிலிருந்து கிடைத்திருப்பதாகச் சொல்லி மகிழ்ந்தார்.. நானும் அவரின் நட்பு வட்டத்தில் இருப்பதை நினைத்து மகிழ்ந்தது மனம்..

அவரின் இவ்வளவு அழகான புன்னகைக்குப் பின்னால், இத்தனை பெரிய வலியும் இழப்பும் இருக்குமென நான் அணுவும் நினைக்கவில்லை.. அவரின் நட்பு எனக்கு இந்நாட்டில் கிடைத்த குறிஞ்சிப் பூ என்று சொன்னால் அது மிகையில்லை.

நட்புடன்,
பூமகள்.