RSS

Wednesday, April 16, 2008

போராட்டம்..!!

ஆரம்பிச்சாச்சென சொன்னது
விழிகளிரண்டும்..!!
கண்ணாமூச்சி ஆடி..
களைத்துவிட்ட கடைவிழியில்
முத்தாக படிந்தது பதநீராக
பாவை நீர்...!!

போராடி விழுந்த
விழுப்புண்ணுமில்லை..!
போராட்டம் நிகழ்ந்த
தடையமுமில்லை..!

களைப்படைந்த கண்கள்
புரியாமல் முழிக்கும்..!!
கணினி பொறியாளியா??
இல்லை - நான்
களத்தின் போராளியா??!!
__________________
~பூள்.

Tuesday, April 15, 2008

மக்கள் தொலைக்காட்சியின் சித்திரை உலா விமர்சனம்

சித்திரை உலா நிகழ்ச்சி விமர்சனம்

நான் நேற்று சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளில் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, ஒவ்வொரு அலைவரிசையும் புதிய படங்களைப் போட்டிப் போட்டுக்கொண்டு ஒளிபரப்பிக்கொண்டிருக்க.. எதேட்சையாக மக்கள் தொலைக்காட்சிக்குத் தாவ, அங்கே நான் கண்ட நிகழ்ச்சி என்னை மகிழ்ச்சிப் பெருங்கடலில் ஆழ்த்தியது.

ஆமாம்.. "சித்திரை உலா" என்ற நிகழ்ச்சி தான் அது.


அதில் சென்னை அம்பத்தூரில் இருக்கும் “தாய்த் தமிழ் பள்ளி”யைச் சேர்ந்த 21 குழந்தைகளை வெளியில் சுற்றுலாவாக அழைத்துச் சென்று.. அவர்களோடு சந்தோசமாக விளையாடி அவர்களுக்கு புதியவற்றைக் கற்றுத் தரும் நிகழ்ச்சி.

இதில் வரும் தொகுப்பாளினி ஏற்கனவே வேறொரு நிகழ்ச்சியில், ஏழைக் குழந்தைகள் இருவரை அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்தமான உடையோ, விளையாட்டுப் பொருளோ எதுவாகினும் வாங்கித் தந்து திரும்ப கொண்டு வந்து விடுவார். அந்த நிகழ்ச்சியின் பெயர் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி எங்கள் வீட்டில் பிரபலம். அதே தொகுப்பாளினி தான் இந்த நிகழ்ச்சியையும் வழங்கினார்.

நான் நிகழ்ச்சியின் பாதியிலிருந்து கவனித்ததால் ஆரம்பம் முதல் என்னென்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நான் பார்க்கையில் இரு வேன்களில் குழந்தைகள் மாமல்லபுரம் நோக்கிப் பயணப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சி தொகுப்பாளினி, அன்புடன் எல்லா குழந்தைகளிடம் உரையாடி, எழுதுகோலையும் கையேட்டையும் கொடுத்து, இது வரை பார்த்து வரும் அனைத்தையும் அழகிய தமிழில் எழுதும் படி சொன்னார். அதிகம் யார் எழுதுகிறார்கள் என்று இறுதியில் பார்ப்போம் என்று சொல்லி குழந்தைகளின் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கினார்.

அந்த குழந்தைகளிடம் எந்த பாரபட்சமும் இன்றி அன்புடன் எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டி, தனி ஒரு பெண்ணாக அழகான வழி நடத்திச் சென்றார். ஒரு உணவகத்தில் உணவு உண்ணச் செய்து, இறுதியில் பரிமாறிய ஐஸ்கிரீமுக்கு தூய தமிழ் சொல் என்ன என்று வினவி, குழந்தைகளை உண்ணும் போதும் ஆழ்ந்து சிந்திக்க வைத்தார். கூடவே நம்மையும் சிந்திக்க வைத்தார்.. இறுதியில் அவரே சொன்னார்… ஐஸ்கிரீமுக்கு தூய தமிழ் சொல் “பனிக்கூழ் என்பது தான்.

ஒவ்வொரு முறை மக்கள் தொலைக்காட்சி பார்க்கையிலும் ஒரு புதிய சொல்லையோ அல்லது நிகழ்ச்சியின் தரமோ மனதில் பதிந்து நெகிழச் செய்துவிடுகிறது..!!

அத்தகைய வகையில் அமைந்த இந்நிகழ்ச்சி என் மனத்தில் பெரும் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தத் தவறவில்லை..!!

ஒரு பெண் தொகுப்பாளினி இத்தனை அழகாக 21 குழந்தைகளை வழி நடத்தி, ஆசிரியைகளையும் விட அன்புடனும் பொறுப்புடனும் அமுதத் தமிழில் அழகாக கற்றுத் தந்த செயல் என்னை பெருமிதம் கொள்ளச் செய்துவிட்டது. ஆகவே, இந்த விமர்சனம் எழுதி, எனது மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

நிழல் உருவங்களையே எல்லா தொலைக்காட்சிகளும் முதன்மையாக போற்ற.. நிஜத்தை அதுவும் அடுத்த தலைமுறையினரின் சிறப்பான முன்னேற்றத்தையே முதன்மையாக கொண்டு செயல்படும் மக்கள் தொலைக்காட்சி தன்னிகரற்ற தொலைக்காட்சி என்பதில் சிறிதும் ஐயமில்லை…!!
__________________
~பூள்.

Thursday, April 3, 2008

விடியல் தேடி..!அதிகாலை பனியில்
இருள் தலைதுவட்டி
இமை திறக்காமல்
காத்திருந்தது.!!


மெல்ல கண் மலர்கிறேன்.!
முகத்தோடு புன்னகை
ஒட்டும் ரோஜாவனத்துக்கு
தண்ணீர் ஊற்றுகிறேன்..!!


வாசலின் முகம் கழுவி
தென்னங்கீற்றால் தலைவாரி
பச்சை வண்ணமிட்டு
வெண் பொட்டிடுகிறேன்..!!

புள்ளிகள் தானே
கோடிட்டு கோலமாகின்றன
கற்பனை முகடில்!!


எண்ணத் திரையை
மண் தரையில்
பிரதி பதிக்கிறேன்..!!

புரிந்து போடப்படும்
இக்கோலமும் பல
ராஜகுமாரர்களுக்கு
புரியா கடவுளின் கோலம்
போலவே இன்னமும்..!!

__________________
~பூள்.