RSS
Showing posts with label இயற்கைபற்றியகவிதை. Show all posts
Showing posts with label இயற்கைபற்றியகவிதை. Show all posts

Monday, August 17, 2015

சிலிர்ப்பு!

சிலிர்ப்பு!


வெம்மைச் சுவடுகளின்
இடுக்குகளில்
பன்னீர் தெளித்தது யார்??!!
மண் வாசத்துடன்
நண்பகல் வெயிலின் துளிகள்
பூமியின் தலை துவட்டும்
பூப்பொழிவான
ஒரு குட்டி மழை!!


-பூமகள்.

Thursday, March 21, 2013

கிளிஞ்சல் புதையல்..



கடல் சிப்பிகளின்
மௌன மொழி புதிர்கள்
புனையும் அதிசயம்
புரிவதே இல்லை எப்போதும்..
கடல் சேரும் கணங்களில்
ஓடியோடி சேர்க்கும் சிப்பிகள்
கடந்த தன் துயர் பகரும்..
பாதி உடலொடு சிதிலமான
தன் வாழ்வையும்
தொலைந்து போன உரிமையாளரின் மிச்ச சுவடையும்
காட்டும் சிப்பிகள்
உறங்கிக்கொண்டே இருக்கிறது
அலைகளின் மடியில்..
கரைசேரும் கனவுகளோடு
கை சேரும் நாளுக்காக..

 
--பூமகள்.

Tuesday, April 19, 2011

சித்திரையின் சித்திரங்கள்..!!



*
அன்று..

வெயில்
அவர்களுக்காகக்
காத்திருந்தது..

அம்மா முந்தானையின்
காற்றாய் வீசும் மரத்தினடி
அவர்கள்..!!

இன்று..

வெயில்
அவர்களுக்காக
காத்திருந்தது..

தார்ச் சூடு தாங்காமல்
ப்ளாஸ்டிக் கூரையடி
அவர்கள்..!!

################

*

மழை
பிரசவிக்கும்
மேகம்..
மலடானது..

மரப் பஞ்சம்..!!

*

கழுத்தறுந்த மரக் கொம்பு
தவித்து நிற்கும்
கூடிழந்த பறவைகள்..

எங்கும் கூடாரங்கள்..
குருவிகளுக்கெங்கே
வாழ்வாதாரங்கள்??!!

*
__________________
-- பூமகள்.




Thursday, June 5, 2008

இன்று மட்டும் என்ன??




பூக்கள் இன்று
அதிகமாகவே
அழகாயிருந்தன..

ஒரு வேளை
என் வருகையை
முன்பே அறிந்து
மனமடல் திறந்து
சிரித்தனவோ?

காற்றில் என்ன
சுகந்தம்..??

ஓ...!!
நான் தடவ மறக்கும்
வாசனையை பரவ
விட பார்த்திருக்கும்
மகரந்த குழல்களின்
மாட்சிமையா??

வானத்தில் மேகம்..
புத்தோவியம் வரைந்து
ஏதோ ரகசியம் என்னோடு
மட்டும் பேசும் சங்கேத
மொழி எதற்கு...??

ஓ....!!
என் ராஜகுமாரரை
வரைந்து எனை
வெட்கப் பட வைத்து
கீழ் வானத்தை இன்னும்
சிவப்பாக்க திட்டமோ??

சாலைகள் என்ன..
முன்னை விட
பளபளப்பாய்...??

என்னை
அதனில் பதிக்க
(
பாத)ரசமேதும்
பூசிக் கொண்டதோ??

இன்று மட்டுமென்ன..
எல்லாமே புதுமையாய்..!!!

ஓ....!!
நான் எழுதிக் கசக்கிய
காகித கிறுக்கல்களை
காற்று காட்டிக்
கொடுத்து
விட்டனவோ..?

இல்லையில்லை..
இருக்காது..
இது...
வசந்தம் நோக்கி
காத்திருக்கும்..
இயற்கையின்
வரவேற்புக் கம்பளம்..

நானும் காத்திருக்கிறேன்..
குயில்களின் கூவலோடே..
வசந்தம் வரும் வழியில்...!!


-பூமகள்.

Sunday, December 16, 2007

கிளை தேடி...!





கிளை தேடி..!

கிளைகள் தேடும்
காற்றுப் பாதையில்
ஓர் விடுபட்ட இலை..!

தொலைத்த கிளையை
தேடும் விழியுடன்
தொலையா நினைவு..!

தெரிந்தே தேடும்
துன்பத்தின் வழியாக
தவிக்கும் பச்சிலை..!

துவண்டு விழுந்ததும்
தட்டி எழுப்பின
அன்புக் கரங்கள்..!

குற்றுயிராய் இருக்கும்
சருகுக்கு புரிந்தது
விடுபட்ட கிளையோடு
சிநேகம் இனி
செயற்கை என்று..!

உரமாகும் முயற்சியில்
இப்போது சருகு..!!
__________________
~பூமகள்.

Sunday, December 2, 2007

மழை...!!


மழை..!!




மழை இரவில்
கருக்கல் பயணம்..!!


ரகசியம் பு(உ)ணர
கரு மேக முகடு
கவ்விய இரவை
போர்வையாக்கியதால்
புலப்பட்டது காரிருளாயினும்
காட்டிக்கொடுக்க காத்துக்கிடந்தன
வானத்து எட்டப்பர்கள்..!!


சிதறிய கொலுசின் சிப்பாய்களாய்
மேகத்திரை(சிறை) தப்பித்து
நட்சத்திர மின்மினிகள்
கண்சிமிட்டி ஒளி சிந்தி
காட்சிக் கொடுத்தன...!!



முகில்கள் தழுவலின்
ஓங்கிய உரசல்
இடிகளாய் வந்து
இடித்துரைத்துக்
காட்டிச் சென்றன..!!



முகிலின் பு(உ)ணரல்
முரண்பட்டதால்
வாள் கொண்டு
போரிட்டதை மின்னல்
வெட்டி வெட்டி
வந்துரைத்துப் போயின..!!



மேக மைந்தன் முரணில்
முட்டி வென்றதால் வானம்
மகிழம்பூக்களாய் முகில்ப்பூக்கள் தூவி
வரவேற்க..!! - பூமிக்கு
பூமழையாக பொழிந்ததுவே..!!
__________________
~பூமகள்.

Saturday, November 3, 2007

வௌவால் காவியம்...!!

சமீபத்தில் செய்தி ஒன்றில் கேட்ட விசயம் என்னை இக்கவி எழுத இசைத்தது.

வௌவால்களின் மீது இரக்கம் காட்டி அதற்கு அடைக்களம் கொடுத்து மருத்துவம் பார்க்கும் ஒரு தம்பதிகளைப் பற்றி சொன்னார்கள். உலகிலேயே பெரும்பான்மையினரால் வெறுக்கப்படும் ஒரு உயிரியான வௌவால்கள் மேல் கருணை காட்டிய முதல் தம்பதிகள் அவர்கள் தானாம்.



அநேகமாக வௌவாலுக்காக எழுதிய முதல் கவிதை இது தான் என்று நினைக்கிறேன்..!!

இயற்கையின் படைப்பு பலருக்கும் பிடிக்காத வௌவாலும் ஒன்று..!

படைத்தல் இயற்கை என்பதால் பாவப்பட்ட உயிர் வௌவால் என்ன செய்யும்??




வௌவால் காவியம்

பகலவன் துயில விரையும்
மாலை ஆறஞ்சு
நேரம்..!
பாழடைந்த மண்டபம் அருகில்

தனிமைப் பயணம்..!



சட்டென்று குதித்தது
சருகுகள் இடையே அந்த

சின்ன கரிய வௌவால்..!



மெல்ல என் கண்ணோக்கி

மெதுவாக தமிழ் பகர்ந்தது...!


"நீர் கவியென்று யாமறிவோம்."

நிதானமாக சொல்ல விழைந்தது.


"எவையெல்லாமோ கவிக்கரு
எய்தி முக்தி அடைகையில்
எம்மையும் வைத்து பாடுவீரோ??!!"

கெஞ்சி நின்று கேள்வி கேட்டது

பிஞ்சு குட்டி வெண்ணுள்ள
வௌவால்..!!

பார்த்து புன்னகைத்து
பகலவனின் பளிங்கு
வெளிச்சம் அணையுமுன்
பக்கத்தில் அமர்ந்து
பையில் துலாவி
காகித பதிவில்
எழுத முனைந்தேன்..!


காத்திருந்தது தலைகீழாக
கள்ளமில்லா
வௌவால்..!

"எலியும் பறவையும்
எடுத்து வைத்ததுபோல்
இறக்கையும் எலி உருவமுமாய்
உண்டான விசித்திரம்..!!

வேகத்திலும் விசையறிந்து
திசை குறி தப்பாது
பறக்கும் அற்புதம்..!!

சந்துபொந்தில் இல்லை
உறக்கம்... அந்தரத்தில்
அரும்பும் தூக்கம்..!!

தண்ணீர் தேசத்தில்
எலி நாயகருக்காய்
கண்ணீர் விடவைத்தார்
வைரக் கவிஞர்..!!

வருந்தி வாழும்

வௌவாலுக்கும் காவியம்
வடிப்போம் வள்ளல்
நெஞ்சுடையீர்..!

தலைகீழாய் பிறந்து
நேராய் நீ வாழ்கையில்
தலைகீழாய் வாழும்
தாயுள்ள வௌவால்
நேராய் கேட்கிறது
அன்பு வைக்க ஏன்
அருளில்லையென்று..!"


எழுதுகோலின் இடைபற்றி

சிந்தித்துக் கிடக்கையில்

சங்கடம் சொல்லி

தன்கடன் முடித்து

துக்கத்தில் அழுதது

துள்ளும் வௌவால்..!


சாத்தானின் கூட்டமென்று

சாத்திரம் சொல்லி

சற்றும் புத்தியின்றி

கல் கொண்டு

தன்னை சாத்தி

சங்கடப்படுத்தும்

சங்கதி சொன்னது..!


"மண்ணில் இருக்கும்
மண் புழு கூட
உழவரின் நெஞ்சில்
புதல்வராய் இருக்கையில்
தம் உயிர் மட்டும்
தாழ்வா??"
என்று
வௌவால் வடிவாக

கேட்பது போல்

எழுதி முடித்தேன்.


வாசித்துக் காட்டி

வரிகள் விளக்கையில்

வடிந்தது வெள்ளம்

வௌவாலின் கண்களில்...!


வருந்திப் பதைத்து நான்

ஏனென வினவ..


வருத்தமில்லை அது

வௌவாலின் நன்றி

நவிலல் என்று

வகையாய் உரைத்து

புகையாய் பறந்தது..!



__________________

~ பூமகள்.



Saturday, October 6, 2007

மழை வேண்டி..!!

மழை வேண்டி..!!



மாலை வனப்பில்
கீழ்வானம் பார்த்து
மனமும் கொஞ்சம்
மயங்கும் வேளை..!!

பறவைக் கூட்டமும்
கூடு நோக்கி
துயில்கொள்ள விரையும்
அந்திசாயும் சமயம்...!!

காற்றில் ஏதோ
முனகும் சத்தம்....
காற்றைக் கொண்டே
காது தீட்டி
குரல் வந்த திசை
நோக்கி
கூர்மையாக்கினேன்..

பச்சிளம்பயிர்
பரவசமின்றி
எதிர்புறம்..!!

இமைகலங்க
அசைவற்றிருந்தது
இயற்கை மழலை..!!

பதறித் துடித்து
ஏனென
வினவியது என்
வாஞ்சையுள்ளம்...!!

விக்கும் குரலில்
வலி சொல்லியது
மெல்லிய செடி..!!

தாகத்திற்கு
நீரின்றி
தன்னுடல் கருகும்
தன்னிலைவிளக்கிற்று...

உற்றுநோக்கியது என்
உள்ளக் கண்கள்..
ஆம்....
பச்சையுடல்
பாழ்பட்டுக் கொண்டிருந்தது..
அழகிழந்து
காயும் சருகாகி
காட்சி கொடுத்தது...

வான்மழையே
தாய்பாலென
வேதம் சொல்லி
தவித்து புலம்பியது
பச்சிளம்பயிர்...

வருந்தும் பயிரின்
விம்மல் நிறுத்தி
வள்ளலாரைப் போல்
வெடித்துக் கதறினேன்
சத்தமின்றி...

பயிர்மழலை
பசிபோக்க
மழை வேண்டி
மன்றாடியது என்
மென்னுள்ளம்..!!

மழையே வா..!!
வானமுதே வா..!!
பச்சைப்பட்டாடை
தரித்து பூமி
மகிழ்ந்திட
மடைதிறந்து வா..!!

வேண்டிமுடித்து
வெகுநேரம்
வான் பார்த்திருந்தேன்..!!

காரிருள் சூழ்ந்தது...
மின்னல் சொல்லெடுத்து
கார்மேகங்கள் கலந்துரையாடி -அதன்
கல்மனம் கரைந்தது..

மழைத்துளிகள்
பயிர்தொட்டு
முத்தமிட்டு
பசிபோக்கி
மகிழ்ந்தது..!!

அடுத்த நாளின்
அந்திவரும் வேளை
அதே திசைநோக்கி
அனிச்சையாய் என்
அழகுவிழிகள்..!!

தேடும் முன்னே
திகைப்பும்
நகைப்புமாய்
நனைந்து நின்றது
பயிரிளம்பிஞ்சு..!!

நன்றி நவிழ்ந்து
நல்லாசி கூறி
தன் கையசத்து
சாமரம் வீசி
தென்றலனுப்பியது..!!

சிலிர்த்து நடுங்கி
பூரித்த நெஞ்சில்
கனத்த மழை
மகிழ்ந்து
முகிழ்ந்தது..!!


-பூமகள்.

(இக்கவிதையை நிஜமாகவே என் வீட்டின் அருகில் மழையின்றி வாடிக் கொண்டிருக்கும் பயிர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..!! அதன் தாக்கத்தில் மனம் கனக்க எழுதியதே இக்கவி.)

நிஜத்தில் பயிரின் நிலை.....!!
இன்று பயிர் எனக்கு தன் சோக முகத்தைக் காட்டியது இப்படித்தான்....!!


பயிர் மழலையின் கண்ணீர் கோலம்....!!


Tuesday, August 28, 2007

பஞ்சு மேகம்...!!


காற்று வந்து
காது துடைத்து
கலைத்துப் போகும்
பஞ்சு மேகம்...!!

விண்ணில் கோடி
விதைகள் கொண்டு
விதைத்த பருத்தி
பஞ்சு மேகம்...!!

நட்சத்திர மழலை
கண்ணாமூச்சி ஆட
வைக்கும் பிஞ்சு
பஞ்சு மேகம்..!!


நனைந்த நிலவு
நுதல் முற்றும்
சுற்றிக் கொள்ளும்
பஞ்சு மேகம்...!!

பகலவன் கொஞ்சம்
இளைப்பாறிச் செல்லும்
சொகுசு பக்கணம்
பஞ்சு மேகம்...!!

கடலோடு
மணம் கொண்டு
கருவாகி
மழை ஈன்று
பஞ்சரிக்கும்
பஞ்சு மேகம்...!!

வானத்தோடு
மின்னல் சண்டை
அமைதித் தூது
வெளிர்
பஞ்சு மேகம்...!!

அண்டையோடு
சண்டையிட்டும்
அன்பு குழகி
ஆர்ப்பறிக்கும்
தரணி மெச்சும்
பஞ்சு மேகம்...!!



அர்த்தங்கள்:
பஞ்சரித்தல் - கொஞ்சிப் பேசுதல்
பக்கணம் - ஊர், கிராமம்
குழகுதல் - கொஞ்சுதல், வசீகரித்தல்

-பூமகள்.

Sunday, August 26, 2007

சத்தமாய்....!!



பேரலையோடு
பரள் பேசும்

புதுக்கவிதை

சங்கமச் சத்தம்...


பூ அவிழ
பூக்காம்பு கேட்டு

மயங்கும் மரகத

வனப்புச் சத்தம்..

இளவெயில் பட்டு
இலையூஞ்சல் ஆடும்
குயில் பாட்டு

குழையும் சத்தம்...


மூங்கில் காட்டில்
முட்டும் காற்று

முத்தம் தந்து

முனகும் சத்தம்..

மெல்விரல் படின்
இலை மூடும்
தொட்டாச்சிணுங்கி

நாணிச் சிணுங்கும்
வெட்கச் சத்தம்...


காதல் மொழி
பேசும் அழகு
பேடைக்கிளி இரண்டும்

கொஞ்சும் சத்தம்...


நள்ளிரவு நிலாநேரம்
நீரின் மேலே

தவளை தாவும்

தளுக் சத்தம்...


வண்டு வரும்
பூச்செண்டு அறியும்
ரம்மிய கமக

ரீங்காரச் சத்தம்...


கேட்கா சத்தம்
கேட்கும் நித்தம்

கேள்விக் குறியாய்

வாழ்க்கை மட்டும்..


வாழச் சொல்லி
வார்த்தை முட்டும்
சத்தமே சத்தமாய்..

சொல்லும் மனதின்
சத்தம்...!!

-பூமகள்.

Friday, August 24, 2007

வெளிச்சம் தேடி....!!

இருட்டு அப்பிய
இரவு நேரம்..

அலையும் தூங்கும்..
அந்திச் சாமம்..

ஆழ்கடல் அருகே..
தனியே பயணம்
துடிப்பே துணையாய்..

உப்புக் காற்றும்
உவர்ப்புக் கொண்டே
உறங்கும் மெல்ல..

வெள்ளிப் பரள்கள்
வான முகட்டில்
வந்து வந்து
வெளிச்சம் காட்டும்...!!

விண்ணில்
நகபதி நகர்வலம்..
நட்சத்திரத் திருவிழா..!!

வெளிச்சம் பிடிக்க..
வலையை வீசியேன்..
விண்ணை நோக்கி....

முகிலில் மறைந்த
விண்மீன்கள்..
வலையில் சிக்கின
வண்ண மீன்களாய்..!!


-பூமகள்.

Thursday, August 23, 2007

தாய்த் தொடர்வண்டி...!!

நல்லிரவு ரயில் பயணம்
நங்கூரமிட்ட நிமிடங்கள்..

நகரும்மெல்ல நினைவலைகள்..


மழைத்தூரல் பட்டு
மனம் நனையும் விந்தை..
பனிக்காற்று படிந்து

வந்துசில்லிப்பூட்டும்

சின்ன உள்ளத்தை..


தண்டவாள தாளத்தோடே

ஒய்யார நினைவோட்டம்..


வெளிச்ச மின்மினிகளாய்

ஆங்காங்கே தெரியும்

அகங்கள் அழகே..

சன்னலோர பயணத்துக்கு
ஈடில்லையென்றுணர்த்தும்..

கவிகள் பல ஆக்கும்

அந்த பயணத்தின் ஆரம்பமே..


துணைக்கு வரும் நிலவு மட்டும்

துடைத்து விடும் இரவை மெல்ல..


தூக்கத்தை விடுத்து

தூரவானம் பார்த்தபடி

சொர்க்கம் எட்டும்

சன்ன எண்ணோட்டம்..

தாயின் மடியில்

துய்த்த நினைவை

திரும்ப வைக்கும்

தாய்த்தொடர்வண்டி....!!



-பூமகள்.