RSS

Friday, June 15, 2012

ஓர் மரக்கதவும் மரவெட்டை மனிதர்களும்….!!




அத்தெரு வழி நடக்கையிலெல்லாம் எல்லார் கண்ணிலும் அக்கதவு படும்.. நீண்ட பெரிய மரக்கதவு பல ஆண்டுகாலமாக மழை கண்டு ஈரமேறி, வெயிலின் காட்டலில் முறுக்கேறி இளவட்ட பயல்களின் அரும்பு மீசை முறுக்கைப் போல் வளைந்து நெளிந்து நிற்கும்..

அந்தக் கதவு பல நேரம் அடைத்தே இருக்கும்.. வெகு சில நேரத்தில் மட்டுமே அதன் மேல் அச்சிறுமி ஏறி இங்குமங்கும் ஆடிய நிலையில் காணலாம்.. அவள் செந்தூர வானத்தின் வெளிறிய மேகம் போல் வெளுத்திருந்தாள்.. அது அழகால் வந்த வெண்ணிறமாய்த் தெரியவில்லை.. சத்தின்றி, ரத்தமற்று மெலிந்து காணும் அவள் உடல் அதனை நன்கு உணர்த்தியது..

அவள் கண்கள் எதையோ தொலைத்த சோகத்தை காட்டிக் கொண்டே இருக்கும்.. எப்போதேனும் அவ்வழியில் அவளொத்த பிள்ளைகளைப் பார்க்கையில் அவள் ஏக்கம் அதில் மேலும் எட்டிப் பார்க்கும்.. பள்ளிச் செல்ல சீருடையோடு போகும் பள்ளிக் குழந்தைகளின் சிரிப்பொலியும் பேச்சுகளும் அவளை கதவிடுக்கில் ஒளிந்தபடி பார்க்க வைக்கும்.. அவளை நான் கடக்கும் ஒவ்வொரு முறையும் அவள் முற்றத்தில் பெரும்பாலும் கூட்டி தண்ணீர் இட்டுக் கொண்டிருப்பாள்.. வீட்டினுள்ளிருந்து வரும் கஞ்சியின் வாசனை அவள் அரிசிச் சோறு சமைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிக் கொடுக்கும்..

கிழிந்த தன் உடுப்புகளில் அழகழகாய் தையல் கடை குப்பை துணித் துண்டுகளைக் கச்சிதமாய் தைத்திருப்பாள்.. அது அந்த அழுக்கேறிய உடப்பை வனப்பாக்கியிருக்கும்.. ஒன்பது பத்து வயதிருக்கும் அவளுக்கு… தலை முழுக்க தேங்காய் நாறான கூந்தலை பல நேரம் அவள் அலட்சியப் படுத்தி ஒருவாறு முடிந்திருப்பாள்.. சில நேரம் அதில் பக்கத்து வீட்டில் மலரும் சின்ன ரோஜாக்களைச் சூடியிருப்பாள்.. 


அக்கதவுகளுள் செல்ல யாருக்கும் துணிவு வந்ததில்லை.. காரணம் பல நேரம் அக்கதவு வழி கசியும் இறுமலோடான கரடு முரடான கெட்ட வார்த்தைகளென்று ஒரு நாள் யாரோ சொல்ல அறியப் பெற்றேன்.. மற்றுமொரு நாள், அவ்வசை மொழிகளை அக்கதவைக் கடக்கையில் கேட்டுமிருந்தேன்.. அச்சிறுமி கதவைத் திறந்து அதைத் தாங்கி விசும்பியபடி நிற்பதைக் காண நேர்கையில் அவள் விழி நம் விழி பார்த்ததும் குனிந்து கொள்ளும்.. ஆற்றாமையும் அவமானமும் அவள் முகத்தை இன்னும் இருளுக்குக் கொண்டு சென்றிருக்கும்..


அச்சிறுமி பற்றிய நினைவு தொடர்ந்து சில காலம் உறக்கமில்லா நெடிய இரவுகளாக என் இரவுகளை மாற்றியது.. அழுதழுது வீங்கிய கண்களோடு வேறொரு சமயம், சிறுமியைக் காண்கையில் அவள் தன் பிசுபிசுப்பான முடியை வாரிக் கொண்டிருந்தாள்.. அவளுக்கென்று தோழியில்லை.. யாரோடும் அவள் பேசுவதைப் பார்த்ததுமில்லை.. 


அவ்வீடு பற்றி யாருக்கும் அதிக நாட்டமிருந்ததில்லை.. ஓர் வயோதிகர் கடும் இறுமல் நோயால் போராடுவதாகவும், அவரின் பேத்தியான அச்சிறுமி தான் அவருக்கு துணையெனவும் பக்கத்து வீட்டு பூந்தோட்டக்காரர் உரைத்திருந்தார்..


ஓர் காலை நேரம், என் பணிக்குச் செல்வதையும் தவிர்த்து, அச்சிறுமி வீட்டினுள் நுழைந்து என்னவென்று தெரிந்து கொள்ள எண்ணி வெகு வேகமாக நடந்த வண்ணம் அத்தெருவை அடைய..


தெருவில் அச்சிறுமி வீட்டருகே பெருங்கூட்டமொன்று கூடியிருந்தது.. விரைந்து அக்கூட்டதினுள் நுழைந்து அவள் முகம் காண தேட அதிர்ச்சியில் கண்கள் உறைந்தது..


அழுக்குத் துண்டையும் கிழிந்த பழுப்பேறிய வேட்டியையும் எலும்புடலோடிருந்த அம்முதியவர் அக்கதவருகே விழுந்திருந்தார்.. கண்கள் மேல் நிலைக்க.. வாய் திறந்த நிலையில் அவரின் நிலை அவர் மரணமடைந்திருப்பதைக் காட்டியிருந்தது.. கைகளிலும் கால்களிலும் சங்கலி பூட்டியிருக்க.. அது பாதியறுந்து கீழே கிடந்தது..


சிறுமி ஓர் மூலையில் தன் கால்களைக் கட்டிக் கொண்டு செய்வதறியாது அழுத வண்ணம் இருந்தாள்.. அவளோடான என் அன்புப் பார்வை அவள் அருகில் எனைக் கொண்டு சென்றது.
என் வருகை அவளறியச் செய்ய.. கதவு தாண்டி அவள் குடிசை நுழைந்தேன்.. மூளையில் கிடத்தப்பட்ட அந்த கட்டிலும், மற்றொரு மூலையில் கூட்டப்பட்ட அடுப்பும் போடப்பட்டிருந்தது.. இரு அலுமனியப் பாத்திரமும், ஒரு மண் பானையும் அடுப்பருகே வைக்கப்பட்டிருந்தது..


சிறுமியின் விசும்பல் ஓயவில்லை.. வேடிக்கை பார்ப்பவர் மெல்ல கலையத் துவங்க.. நான் காவல் துறைக்கு தகவல் சொல்ல ஆளை அனுப்ப ஏற்பாடு செய்தேன்.. அச்சிறுமி குறித்து அடுத்த வீட்டு தோட்டக்காரரிடம் சொந்தங்கள் பற்றி கேட்க.. எங்கிருந்தோ ஒரு வருடம் முன்பு வந்தனர்.. உறவென்று இவ்வூரில் யாருமில்லை என்றுரைத்தார்..


உடலை கதவருகிருந்து எடுத்து கூடத்தில் கிடத்தி, மாலை வாங்கி வந்து அணிவித்தேன்... சிறுமி அப்போதும் அழுகை ஓயாமல் விசும்பிய வண்ணமே இருந்தாள்.. மெல்ல அவள் தலை கோத, அவள் திடுக்கிட்டு ஏறிட்டாள்.. கண்கள் சிவக்க.. முகமெல்லாம் வீங்கியிருக்க அவளின் கோலம் மனதை வாட்டியது..என் கண்கள் கண்டதும் சின்ன ஆறுதல் கிட்டியிருக்கக் கூடும்.. அழுகை நின்றிருந்தது.. சற்று நேரத்தில் இறுதிச் சடங்குகள் செய்து அவரை மின்மயானத்துக்கு எடுத்துச் செல்ல ஆட்கள் வந்தனர்.


கூட்டம் வேடிக்கை மட்டுமே இன்னும் பார்த்துக் கொண்டிருந்தது… ஒரு சிலர் தங்களுக்குள்ளேயே ஏதோ பேசி வெளியேறத் தலைப்பட்டனர்.. சிறுமி அதன் பின் அழவே இல்லை.. இருந்த இடம் விட்டும் அசையவுமில்லை.. மாலை நெருங்க.. அவளை விட்டு எப்படி செல்வதென்று யோசனை வரத் துவங்கியது.. அவள் நாள் முழுதும் உண்ண மறுத்ததால் பசியில் வாடித் துவண்டு அவ்விடத்திலேயே படுத்திருந்தாள்.. சொல்லாமல் செல்லச் சொன்ன சிலர், என்னிடம் சொல்லாமலே சென்றிருந்தனர்.. இறுதியில் ஓர் முடிவெடுத்து அவள் கை பற்றி வெளியே வந்தேன்..


அவ்வீட்டு கதவு அதன் பின் திறக்கவே இல்லை.. வழியெங்கும் மஞ்சள் பூக்கள் எங்களை இளஞ்சூரியன் வெளிச்சத்தில் வரவேற்றுக் கொண்டிருந்தது.. அச்சிறுமியுடனான எனது பந்தம், பின்னாலில் அப்பா மகளாக மாறிவிட்டிருந்தது.. குழந்தையில்லாத என் மனைவி அவளின் அம்மாவாக மாறிவிட்டிருந்தாள்.. எங்கள் வீட்டு முற்றம் இப்போது இனிய விளையாட்டுகளினால் நிரம்பிவிட்டிருந்தது..

(முற்றும்)

-- பூமகள்


Monday, May 21, 2012

ப்ரியமானவளுக்கு…..!!




எரிகின்ற நதி நான்..
நீரூற்றாய் வந்திட்டாய்...

காட்டுப் பூவைப் போல்
கலையாய் நீ வந்தாய்..

கலங்கிய மனதை
கை பிடித்து ஏற்றுவித்தாய்..

என் பசிதனை உணர்ந்து
உணவிட்டு மகிழ்வித்தாய்..

மெய்சிலிர்க்கும் நொடியனைத்தும்
மெய்யாக தந்திட்டாய்..

உன் அன்பாலே குளிர்வித்தாய்..
ஏழையென் ஏக்கம் மாய்ப்பித்தாய்

என் வலிதனை மறந்து
உன் வலிக்காய் அழவைத்தாய்..

உன் வலி தர மறுக்க..
ஏனோ மௌனப் பூட்டிட்டாய்..

எரிகின்ற நதியென்றே
எனை மீண்டும் ஆக்கிட்டாய்!!

                                             -பூமகள்.


Thursday, January 12, 2012

எறும்பு பாடல் - முதல் குழந்தைப் பாடல் முயற்சி





எறும்பு அண்ணா எறும்பு அண்ணா
எங்கே போறீங்க??

மழை வருமா மழை வருமா
பார்க்க போறேங்க…

மழையும் வந்தா வெயிலும் வந்தா
எங்கே போவீங்க..??

மண்ணுக்குள்ளே சுரங்கம் வைத்தே
ஒளிந்து கொள்வோங்க..

மழை வருகையில் புயல் வருகையில்
என்ன செய்வீங்க..??

மழைக்காலம் முடிய நீரும் வடிய
வீட்டில் விழித்தே இருப்போங்க..

பசியும் வந்தா தாகமும் வந்தா
என்ன செய்வீங்க??

வருடம் முழுக்க சேர்த்த உணவை
பகிர்ந்து உண்டே வாழ்வோங்க..

சேமித்து வைத்தே சேர்ந்தே உண்டே
நன்மை செய்தீங்க..!!

இனமும் வாழ இன்பமும் வளர
நல் வழி சொன்னீங்க…!!

இன்றே சேர்த்து இனிதே சேர்த்து
பகிர்ந்தே கொடுப்போமே..!!

பண்பும் வளர சேர்ந்தே உண்டு
பல்லுயிரும் காப்போமே..!!

--பூமகள்.