ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டு, இன்னும் எல்லார் மனதிலும் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் படத்தை நான் என்னவோ சென்ற வாரம் தான் புளூ ரே தொழிற் நுட்பத்தில் அதி துல்லியமாக இரு பரிமாணங்களில் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.. திரையரங்கில் பார்க்க இயலாத சூழலால் இத்தனை காலம் காத்திருந்த எனக்கு சொர்க்க லோகம் சென்ற உணர்வை படம் ஏற்படுத்தத் தவறவில்லை.
படத்தின் நாயகன் தனது வெகு எதார்த்தமான நடிப்பாலும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கிலும் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார். பெண்டோரா கிரகத்தில் இருக்கும் புது விதமான நாவி இன ஜீவராசிகள், அந்த கிரகத்தின் இயற்கை கொண்டிருக்கும் அழகு, அவர்கள் இருக்கும் அந்த வெள்ளைப் பூ, விழுதுகள் கொண்ட ஒளிரும் கடவுள் மரம் என நம்மூர் மாயஜாலக் கதைகளைக் கண் முன் விரிய வைத்து வாய் மூடாமல் பார்க்க வைத்த அத்தனை தொழிற் நுட்பக் கலைஞர்களுக்கும் சிரம் தாழ்த்தி வாழ்த்த வேண்டும் போல் தோன்றுகிறது.
எப்போதும் ஏலியன்ஸ் எனும் வேற்று கிரக ஜீவராசிகள் நம் கிரகத்தை ஆக்ரமிப்பது போலே சிந்தித்துக் கொண்டிருந்த ஹாலிவுட் இப்போது முதல் முறையாக மனிதர்கள் வேற்று கிரகத்தை நோக்கிப் படையெடுப்பது போல் அமைத்திருப்பது வித்தியாசத்திலும் வித்தியாசம்.
மனிதர்கள் அவதாராக மாறி அந்நாவி இனத்தோடு சேர்ந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருக்கும் கனிம வளத்தைக் கொள்ளை அடிக்கும் திட்டத்தோடு மில்லிட்டரி படையும் அறிவியலாளர்களும் சேர்ந்து பெண்டோரா கிரகத்தை ஆக்கிரமிக்கிறார்கள்.
கதா நாயகர் அறிமுகமும் அவர் அவதாராக இயங்கி நாவி இனத்தோடு சேர்ந்து பயிற்சி பெறுகையில் நடக்கும் குறும்புகளும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கின்றன. அப்படி மாறுவது மாட்டிரிக்ஸ் படத்தில் வருவது போலவே மூளை கொண்டு அவதாரை இயக்கும் படி அமைத்திருக்கிறார்கள். தொட்டால் ஒளிரும் பூக்கள், நடக்கும் போது ஒளிரும் புல்வெளி, வண்ணமயமான மரங்கள், பூக்கள், தொங்கும் மலை, விழுதுகளில் முன்னோர் சத்தம் கேட்கும் திறன் என இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை காணுகையில் நாம் எத்தனை இயற்கை அன்னையை தண்டித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது.
கதா நாயகன் அவதாராகி ஒரு இடத்தில் அக்கிரக நாய்களோடு போராடி கொன்று போடுகையில் உடன் உதவ வரும் நாவி இன கதா நாயகியிடம் நாயகன் நன்றி சொல்ல, அதற்கு நன்றி சொல்லும் காரியம் செய்ய வில்லை நாம். இது நடந்திருக்கக் கூடாது.. இம்மிருகங்கள் தேவையில்லாமல் இறந்து விட்டன என்று சொல்லி சில மந்திரங்கள் சொல்லி அதன் ஆன்மாக்கள் சாந்தியடையச் செய்யும் நாயகி மனதில் உயர்ந்து நிற்கிறார். அவர்கள் கிரகத்தின் இயற்கை மேல் அவர்கள் கொண்ட அன்பும், அவர்களின் வாழ்க்கை அதனோடு இயைந்து போன மாண்பும் படமெங்கும் கண்டு வியக்க வைத்தது. நம்மில் இழந்து கொண்டிருக்கும் மர நேசம் நாயகி மூலம் படத்திலேனும் காண நேர்ந்தது.
படத்தில் வரும் மிருகங்கள் எனில், ஆங்காங்கே வரும் காட்டு யானை, நீண்ட வித்தியாசமான தந்தம் போன்ற எழும்பமைப்புடன் வந்து அசர வைக்கிறது.. கூடவே பச்சை, நீலம், சிவப்பு வண்ண ராட்சஸ பறவைகள், விசிறி போல் பறக்கும் பூச்சி, ஒளிரும் பூச்சிகள், காண்டாமிருகம் போன்ற மிருகம், ஓ நாய்கள், குதிரைகள் என அனைத்துமே வித்தியாசமான கற்பனைத் திறனில் படைக்கப் பட்டு கண்களுக்கு விருந்தாகிறது.
மனிதர் நினைப்பதை செய்யும், குதிரை, வண்ண ராட்சஷப் பறவை என எல்லாமே அசர வைக்கிறது.
மனிதப் படை அந்த கடவுள் மரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கையில் ஏனோ என் கண்களிலும் ஈரம் பனிக்கிறது.. அதுவரை அத்தனை அழகான வனமாக இருந்த அந்த இடம், சிறிது நேரத்தில் மூச்சு முட்டும் கரும் புகையோடு சாம்பல் காடாக காணுகையில் மனம் துடிக்கிறது.. ஏனோ நம் ஊரில் சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் பல நூறு பெரும் மரங்களை வெட்டி, வெகு சில அரளிச் செடிகளை நட்டுச் சென்ற நமது அரசு நினைவுக்கு வந்து மேலும் வேதனைப்படுத்தியது.
ஒரு இடம் பசுமையாய் இருக்கையிலும், சாம்பல் காடாய் மாறுகையிலும் பார்ப்பதற்கு நிறைய திடம் வேண்டும்.. அந்த திடம் என்னிடம் இப்படம் பார்க்கையில் இல்லாமல் போனதை உணர முடிந்தது.. அதுவரை அத்தனை அழகான கிரகமாகக் காட்டப்பட்ட பெண்டோரா, மனிதர்களின் தாக்குதலால் எப்படி சிதறடிக்கப்படுகிறது என்று இதை விட எவரும் துல்லியமாகக் காட்ட முடியாது.
கதா நாயகன் போன்றே இந்த கிரகத்தின் மீது தீராத பாசமும், காதலும் கொண்ட மற்ற மனிதர்களும் எப்படி தங்களது முயற்சியை மேற்கொண்டு பெண்டோராவைக் காப்பாற்ற முற்படுகிறார்கள் என்பதை வெகு அழகான கோர்வையான படமாக்கல் மூலம் அசர வைத்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் கதா நாயகருடன் வரும் வயதான பெண், வில்லனாக வரும் மில்லிட்டரி படை கேப்டன் முகத்தில் இருக்கும் வித்தியாசமான காயத்தாலும், கடும் உறுதி படைத்த முக பாவத்தாலும் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள்.
கதா நாயகன், அவருக்கு உதவும் ஹெலிகாப்டர் ஓட்டும் பெண், அவன் நண்பர் இருவர் என நால்வர் படை எப்படி மனிதர்களின் தாக்குதலை எதிர் கொள்கிறது என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வேர்கள் கொண்டு அவர்கள் காட்டும் ஒரு முக்கிய காட்சி அசர வைக்கிறது.. நம் ஆணி வேர் வரை பாயும் அவரது கற்பனைத் திறன் சிலிர்க்க வைக்கிறது.
படத்தை முப்பரிமாணத்தில் காணாதது வெகுவான வருத்தத்தை எனக்கு அளிக்கிறது.. என்றாவது பார்த்து விடுவேனென மனதில் நம்பிக்கை மட்டுமே நிலைக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் இப்படத்துக்காக ஒரு புதிய வகை கேமிராவைக் கண்டறிந்தார் என கேள்விப்பட்டேன். இத்தனை வயதிலும் எத்தனை விடா முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் இவரால் இது சாத்தியமாகும் என எண்ணி எண்ணி வியக்கிறேன்.
அவதார் - நிச்சயம் அவதாராக மாறி ஒரு நாளேனும் அக்கிரகத்தில் உலவும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்க வைக்கிறது.. இது எட்டாக் கனியாகினும், நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையை முடிந்த வரைக் காக்கவும், அழிக்காமல் தடுக்கவும் செய்தால் அதுவே நமக்கு பெண்டோரா போன நிறைவைத் தரும் என்பது திண்ணம்.
அவதார் - ஐ சீ யூ. ( ஐ சீ யூ என்றால்
நாவிகள் பேசும் மொழியில் ஐ லவ் யு என்று அர்த்தமாம்..)