RSS

Sunday, September 30, 2007

பிறவா பிறையே...!!

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு எட்டாச்சு...!!

எப்போ நீ பிறப்பே
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!

இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...

என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய்
எழுவாயா???

விரதமும் வேண்டுதலும் - உன்
வரவைச் சொல்லலையே...!!
வாடகைத்தாய் வாங்கக்கூட
காசுபணம் எனக்கிலையே...!!

சோதனைக்குழாய் முறைக்கும் - முதல்
சோதனையிங்கு பணத்திலாமே??
சொச்ச ரொக்கமில்லையினா
சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!!

உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என்
உயிரே தவிக்குதிங்கே...!!
நஞ்சுரைக்கும் வல்லூறால் - என்
நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!

ஆண்டுபல போனாலும் - உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!
'ம்மா'-னு நீ சொல்ல தவமிருக்கும்
இந்த தரிசுத்தாய் நானாச்சு..!!

பேதையாகி பிதற்றுறேனே - உன்
பிஞ்சுமுகம் காணாமலே...!!
காலம் வந்து கனிந்துவிட்டால் - நீ
என்கண் முன்னாலே...!!

காத்திருந்து கருகினாலும் - உன்
நினைப்பு மட்டும் நித்தியமாய்...!!
பூத்திருக்கும் புதுப்பூவாய் - நீபிறக்க
இன்னும் எத்தனைநாள் சத்தியமாய்..??

பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா
சீர் சிலையே..!! - என்
வயிற்றில் வளரா
வளர் பிறையே...!!

என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???

-பூமகள்.
Monday, September 24, 2007

தேடல்..!!

காற்றின் சுவாசத்தில்
மூச்சிரைக்க
சுகந்த தென்றலின்
சொச்சம் தேடும்
நாசிகள் இரண்டும்..!!

பிம்பத்தின் விளிம்புகளில்
இடுக்கியிருந்து
வம்பு செய்யும் காட்சியின்
மிச்சம் தேடும்
கண்கள் இரண்டும்..!!

ஒலியலையின் ஓரத்தில்
வழிந்து வரும்
சங்கீத சங்கதிகளில்
நிசப்தம் தேடும்
செவிகள் இரண்டும்...!!

எண்ணங்களின் வழியில்
எடுத்து வரும் வார்த்தைகளில்
வண்ணவரிகள் தேடும்
வடிவிதழ்கள் இரண்டும்...!!

யௌவன தேசத்தின்
சந்துகளில் சிருங்காரிக்க
மோகன யோகம் தேடும்
இதயங்கள் இரண்டும்...!!

சிக்காத கணங்களை
சிறைபிடிக்க எண்ணி
அகன்ற வெளியில்
காத்து நின்று தேடும்
கைகள் இரண்டும்..!!

பாலைவன பரப்பில்
பூக்களின் களம் காண
பாதைகள் தேடும்
பாதங்கள் இரண்டும்..!!

-பூமகள்.

Saturday, September 22, 2007

துளித்துளியாய் கவித் துளிகள்......!!


தூங்கினாலும் தூங்காமல் சிமிட்டும்
உன் கண்கள் என் இமையில்....!!

கவிதைகள் விதையாகி
தைக்கும் நெஞ்சங்களை...!!

என்னில் விதைத்த விதை
உன்னில் மரமானது எப்படி?

வானமே வசப்படும் நீ
என் வசமாகும் போது...!!

வண்ணவோவியம் காவியமாக
சின்னத்தூரிகை தேய்ந்ததுவே...!!


இருள் களைந்து விடியும் வானம்
துயர் துடைக்கும் அன்பின் பானம்...!!

தூரிகை துப்பட்டாவில்
தலைதுவட்டும் வண்ணங்கள்...!!

சன்னலோர சாரல் விடும் தூது
மழைத்துளி சிதறல்களாய் என்னுள்...!!

மணலோடு முத்தமிடும்
புனலோடு வரும் மீன்கள்...!!


ஆயுள்ரேகையாய் மாறிப்போன
கையின் காப்புக்கள்...!!

உடைபட்ட சில்களில் சிதறிய பிம்பம்..
ஒன்றானாலும் பிரிந்தே..!!(இன்னும் வளரும்)
-பூமகள்.


Wednesday, September 19, 2007

அம்மா...!!

வயிற்றுச் சிறையில்
வாஞ்சையாய் வைத்து
கருவறை
வகுப்பறையில்
வித்தை பல
பயிற்றுவிக்கும்
கற்பிணி ஆசான் நீ...!!

துடிப்பை உணர்ந்து
வயிற்றைத் தடவி
துள்ளல் அடக்கி
துயிலவைக்கும்
மென்மையின் இதம் நீ...!!

உயிர்கொண்டு என் மீது
உணர்வோடு நித்தம்
உரையாடும் சத்தம்
தொப்பில் கொடி உணவுடனே
தகவல் பரிமாறும்
தகவல் தொழில்நுட்பம் நீ...!!

கருவறையில் நான்
கபடிவிளையாடி
உதைத்து வலித்தாலும்
வலிதாங்கி செல்லமாய்
இடுப்பைப் பிடித்து
வெட்கிச் சிவக்கும்
செவ்வாம்பள் மலரும் நீ..!!

குமட்டிக் குமட்டி
எல்லாம் கொட்டி
தலைசுற்றிப் போனாலும்
திட்டாமல் எனைத்
தாங்கும்
தன்னிகரற்ற உன்னதம் நீ...!!

'மலர்'முகம் காண
மாத்தவம் கொண்டு
மாவலி கண்டு
இம்சையை இச்சையாய் ஏற்று
பூமகளை பூவாய்
இப்பூமியில் பெற்றெடுத்த
பூமாதேவியும் நீ....!!


-பூமகள்.

Tuesday, September 18, 2007

கல்லூரிச் சுற்றுலா

எல்லோருக்கும் இருப்பது போல் எனக்கும் என் கல்லூரி நாளில் நடந்த ஒரு சம்பவம் என்னால் என்றுமே மறக்கவே முடியாத தினமாக அமைத்துவிட்டது.

பட்டாம் பூச்சியாய் கல்லூரியில் நுழைந்து இறுதி ஆண்டுக் கல்விப்பயணம் ஆரம்பித்திருந்த வேளை. கல்லூரி நான்காம் ஆண்டு. உல்லாசச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர் வகுப்பு மாணவர்கள். 4 நாட்கள் சுற்றுலா.

முதல் நாள் இரவு ஆட்டம் பாட்டத்துடன் கிளம்பியது. பேருந்தினுள்ளும் தொடர் வண்டியை ஓட்டி வந்தனர் என் வகுப்பு மாணவர்கள். எல்லா புதுப் பாடல்களுக்கும் புது நடனத்தை புகுத்தி எங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர் மற்றும் சிலர்.

காலையில் விடிந்ததும் நாங்கள் சென்று சேர்ந்த இடம் மைசூர். ஊர் சுற்றி முதல் நாள் இரவு அசதியின் உச்சத்தில் மீண்டும் எங்களின் தங்கிடம் தேடி வந்தோம்.

அடுத்த நாள் ஆசிரியர் தினம். ஆகவே.. எங்களோடு வந்த ஆசிரியர்களுக்காக விசேசமாக கேக் வாங்கி அவர்களை வெட்டச் செய்து மகிழ்ச்சியாய் கொண்டாடினோம் ஆசிரியர் தினத்தை சரியாய் நள்ளிரவு 12 மணிக்கு.

அந்த மகிழ்வுடனே இரு தினங்களையும் மைசூரில் கழித்து அடுத்த இடத்தை நோக்கி பயணப்பட்டிருந்தோம். அடுத்து நாங்கள் சென்றது பெங்களூர். அன்று கிருஷ்ணர் ஜெயந்தி ஆகவே முதலில் நாங்கள் சென்றது "இஸ்கான் டெம்பில்". பல வளைவுகளைக் கொண்டு மிக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்தோம் தரிசனத்திற்காய். கூட்ட நெரிசல் வேறு. எங்கள் வகுப்பு மாணவர்கள் என்னோடு வந்த தோழிகள் அனைவருக்கும் எங்கள் முன்னாலும் பின்னாலும் பாதுகாப்பாய் இறுதி வரை கூட்டிச் சென்றதை இன்று வரை என்னால் மறக்கவே முடியாது.

கூட்டத்தில் பல இடர்களை கடந்து கண்ணியமாய் எங்களை பாதுக்காத்து காப்பாற்றிய நல்லுள்ளம் படைத்த மாணவர்களை நிச்சயம் நான் இங்கு நினைவு கூற கடமைபட்டிருக்கிறேன்.

என் குடும்பம் அப்போது மிகுந்த கஸ்டமான சூழலில் இருந்தது. சுற்றுலா செலவும் அங்கு உணவருந்தவுமே என் பெற்றோர் கொடுத்த பணம் சரியாக இருந்தது. என் உயிர் தோழி என்னோடு எல்லா சமயத்திலும் கூடவே இருந்தாள். என் பணம் முழுக்க என் சாப்பாட்டிற்கும் அங்கு பூங்கா அனுமதிச் சீட்டு வாங்கவும், புகைப்படம் எடுக்க வசூலிக்கும் கட்டணத்திற்குமே சரியாய் போனது. இதற்கிடையில் மெஜஸ்டிக் என்ற இடத்தில் சில பொருட்களை வாங்க தோழிகளோடு சென்றேன்.

என் அருமை தோழியுடன் நானும். ஒரு துணிக்கடைக்குச் சென்றோம்.அங்கு அழகழகாய் சுடிதார்கள் நியாயமான விலையில். எந்த பெண்ணுக்கும் ஆடைகள் மேல் பிரியம் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. எனக்கும் சின்ன மனத்தில் குட்டி ஆசை.

ஒரு துணியேனும் அங்கு சென்று எடுத்துவிடுவது என்று. ஆனால் என் எதிர்பார்ப்புக்களை முறியடித்தது என் கைவசம் இருந்த நிதி நிலமை.

ஒரு துணியை ஆசையாய் எடுத்து பார்த்தவண்ணம் இருந்தேன். என் தோழியும் வேறு அவளுக்காய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

என் பட்ஜெட்டில் எனக்கு பிடித்த கலரில் துணியை செலக்ட் செய்தேன். ஆனால்... எடுக்க பணம் இல்லை. அவள் என்ன நினைத்தாலோ அவள் செலக்ட் செய்ததை வேண்டாம் என்று சொல்லி என் துணிக்கு பணம் தந்தாள். அன்புடன் என் கை பற்றி, "வைத்துக் கொள் மிகவும் ஆசை பட்டாய் என்று எனக்கு தெரியும். மெதுவாக உன்னால் முடிந்த போது பணம் கொடு" என்று சொன்ன நிமிடத்தையும் அந்த நாளையும் என்னால் என் வாழ்வில் மறக்கவே முடியாது.
என் கண்கள் பனித்ததை அவள் பார்த்திருக்கக் கூடுமோ என்னமோ... அவள் சிரித்தாள் ஆறுதலாய் என் கை பற்றி. நான் வார்த்தை வர இயலாமல் ஒரு கணம் தடுமாறி பின் என் மனமாற நன்றி சொன்னேன் அவளிடம்.


என்னடா இது??? ஒரு துணியை தோழி வாங்கிக் கொடுத்ததற்கா இத்தனை ஆர்பாட்டமான விவரிப்பு என்று யாரேனும் நினைக்கக் கூடும்.

ஆனால், வாழ்க்கையில் நான் அன்றிருந்த சமயம், எனது ஆசையை நிறைவேற்ற அவள் எடுத்த அந்த சிரத்தை என்னால் இன்னும் மறக்கவே முடியவில்லை. நான் மறந்தால் அது என் நட்பிற்கு நான் செய்யும் துரோகம். பின்னர் அதற்கான பணம் அவள் வாங்க மறுத்தும் கொடுத்து விட்டேன் என்றாலும்.. அவளின் அந்த உணர்வை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அடுத்த நாள் தான் நான்காம் நாள். இறுதியாக பெங்களூரின் அழகை ரசித்து விட்டு சரியாக ஒரு மணி அளவில் கோவை நோக்கி பயணமானோம்.

சுமார் 2 மணி அளவில் ஓசூர் நோக்கி பேருந்து போய்க் கொண்டிருந்தது. பேருந்தில் பாதிப்பேர் தூங்கியவண்ணம் இருந்தனர். தொலைக்காட்சியில் குஷி படம் குஷியாய் ஓடிக் கொண்டிருந்தது. ஜோதிகா கோவத்தில் சிவந்தவண்ணம் இருந்தார்.

அப்போது தான் அந்த அடுத்த மறக்க முடியாச் சம்பவம் நடந்தது. நாங்கள் பயணம் செய்த பேருந்து நிலை தடுமாறியது. நாங்களும் பயத்தில் நிலை தடுமாற, ஓட்டுனர் தன் கட்டுப்பாட்டிற்குள் பேருந்தை கொண்டுவருவதற்குள் ஒரு இரு சக்கர வாகனத்தில் மோதிவிட்டிருந்தது.

நடந்தது இது தான், சாலையின் ஓரம் நின்றிருந்த ஒரு லாரி மெதுவாக புறப்பட எத்தனிக்க,அதன் பின்புறம் இரு பெண்கள் இருசக்கர வாகனத்தில் அந்த லாரியை ஓவர் டேக் செய்ய முயல,எங்கள் பேருந்து லாரியிலும் மோதாமல், பக்கச் சுவரிலும் மோதாமல் நிறுத்த முயலும் போது அந்த இரு சக்கரவாகனத்தின் மீது லேசாக மோதியது.

என் வகுப்பு பசங்கள் உடன் இறங்கி உடனே அவர்களைத் தூக்க, பேருந்தில் என் வகுப்பு மாணவி..
"வீல்..!!" என்று சத்தமிட்டாள். கூட்டம் கூடியது.

அந்த பெண்ணிற்க்கு தலையில் அடிப்பட்டிருந்தது,கூடியிருந்த கூட்டம் எங்களை முறைக்க ஆரம்பித்தது தமிழ்நாட்டிற்க்கும்,கர்நாடகாவுக்கும் பிரச்சினை இருந்த நேரமது,ஓட்டுனரை பாதி பேர் ஏகவசனத்தில் திட்ட ஆரம்பித்திருந்தனர்.
காவல் துறை வந்தது,ஓட்டுனர் எதோதோ கெஞ்சி பார்த்தார்,பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றார்கள். எங்களுடன் வந்திருந்த ஆசிரியர்களுக்கும் என்ன செய்வதென்றேதெரிய வில்லை. இவ்வளவு களேபரமும் நடந்துக் கொண்டிருக்க இருட்ட ஆரம்பித்து விட்டது..

விபத்தில் காயமுற்ற அந்த பெண்மணியின் கணவரை தொடர்பு கொண்டு கெஞ்சியதில் அவர் இரவு தான் காவல் நிலையத்திற்கு வரவேன் என்று சொல்லி விட்டார். ஓட்டுனர் அந்த டிராவல்ஸ் கம்பெனியின் உரிமையாளை தொடர்பு கொண்டு பேசுவதும் காவல் நிலைத்திற்குள் போவதுமாக இருந்தார்.

என்னோடு சேர்த்து அனைத்து மாணவிகளும் பேருந்திலேயே அமர்ந்து காவல் நிலையத்தின் முன் சிறைபட்டிருந்தோம். மகிழ்ச்சியாய் முடிய வேண்டிய பயணம்... இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை எல்லார் மனத்திலும். மதியம் 2 மணிக்கு நடந்த சம்பவம் இரவு 8 மணி ஆகியும் முடியவில்லை. அங்கேயே நாங்கள் அனைவரும்.

இருட்ட ஆரம்பிக்க, எங்களின் பாதுகாப்பு கருதி, என் வகுப்பு மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டில் மாணவிகள் அனைவரையும் அழைத்துச் சென்று தங்க வைத்தனர். எங்களின் துணிப்பைகள் எல்லாம் பேருந்திலேயே இருந்தன. கவலை தோய்ந்த முகத்தோடு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிய வண்ணம் காத்துக் கிடந்தோம். எங்களுக்காய் சில மாணவர்கள் எங்களோடும்.. சிலர் பேருந்திற்கு பாதுகாப்பாயும்.. முழித்துக் கிடந்தனர்.

அங்கே என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் கையில் காசும் இல்லாமல் திரும்பிப் போகும் வழி தெரியாமல் விழித்தவண்ணம் கிடந்தோம்.

இரவு முழுக்க தூங்காமல் இருந்தோம். ஒரு வழியாய் பேருந்தை விட்டுவிட்டனர் என்ற நல்ல செய்தி காதில் விழுந்தது. உடன் புறப்பட்டு மகிழ்ச்சியாய் திரும்ப பேருந்தில் ஏறி கோவை நோக்கி பயணப்பட்டோம்.
இதற்கிடையில் ஓட்டுனர் பதற்றமாய் இருந்தததால் பேருந்து இரு முறை சாலையின் ஓரத்திற்கு சென்றது. என் மாணவர்கள் தூங்காமல் விழித்திருந்து அவரிடன் பேசிய வண்ணமே நல்ல படியாய் எங்களை சுமார் காலை 11 மணி அளவில் கோவைக்கு கொண்டு சேர்த்தனர். கல்லூரி அன்று நடந்துகொண்டிருந்தது. அன்றைய தினம் கண்டிப்பாக வரவேண்டும் என்று எங்கள்
துறை தலைவர் (HOD)சொன்னது என் நினைவுக்கு வந்தது. ஆனால்.. உடல் அசதியும் வலியும் இந்தச் சம்பவத்தால் தூங்காமல் இருந்த கண்ணும் என்னை வீட்டிலேயே தூங்கச் செய்துவிட்டிருந்தன...

இந்த சம்பவங்கள் உண்டான அந்த நாட்களை என்னால் என்றும் மறக்கவே முடியாது.
-பூமகள்.

Friday, September 14, 2007

வாழ்க்கைத் தத்துவம்..!! (ஹிந்தியில்)

இனி ஒரு விதி செய்வோம்....!!

அவசரம்...!!


துரத்தப்படாத
அப்பிய
தூக்கம்
முகத்தில்
தூக்கலாய்...


அவசர நிலை
பிரகடணம்
நான்கு புள்ளி
கோலம்
வாசல் வரவேற்பாய்...


இம்சை செய்யும்
குழந்தைக்காய்
இரண்டு
இட்லி ஊட்டல்
போராட்டம்
மினி சீரியலாய்...


அள்ளி முடிந்த
அரையடி கூந்தல்
அவரசக் குளியல்
நேர மிச்சமாய்...


சேலை தவிர்த்து
சுடிதார் தரிப்பு
வேகக் கூட்டல்
வசதி மிக்கதாய்..


தலை
துவட்டலோடே
தொலைந்து போகும்
தினம்
பேருந்துப் பயணம்
தீரும் கணங்களாய்...


இரை உண்ண
மறந்ததை
இரைந்துரைக்கும்
இரைப்பையின்
வலி
நினைவூட்டலாய்....


இத்தனையும் தாண்டி
இன்முகம் காட்டும்
என் முகம்
அலுவலக
வரவேற்பாளினியாய்....!!

-பூமகள்.

Sunday, September 9, 2007

பிச்சைக்காரி...!!

பிச்சையெடுக்கும்
பிஞ்சுக் கைகள்
பிறந்ததே பாரமாய்
சுமக்கும் தாயின்
உடலும் உள்ளமும்...!

கங்காரு குட்டி போல்
கட்டியிருக்கும்
பிரியா பந்தம்..!

வேலையின்றி
வேலை செய்யும்
தெம்பிருந்தும்
பிச்சை கேட்கும் தாயே??? - உனைப் போல்
சோம்பேறிப் பிள்ளை
வளர்க்க எண்ணமா???

வியர்வை சிந்தி
வேலை செய்து
வாழ்ந்தால் உனை
வியந்து பார்க்கும்
உலகமல்லவா???!!!!!


காசு கேட்டு
காலம் தள்ள
சுடவில்லை
மனம் உனக்கு????

விருந்து கேட்காதே.. - இனி
வேலை கேள்..!
விருந்து படை உன்
வியர்வை வைரங்களால்!
-பூமகள்.

குறிப்பு:


நான் ஒரு சமயம் வெளியில் சென்றபொழுது ஒரு நிகழ்ச்சி என்னை பாதித்தது. அதன் தாக்கமே இக்கவிதை.

கடைத்தெருவில் ஒன்றரை வயது குழந்தையை வயிற்றைச் சுற்றி துணியால் கட்டிக் கொண்டு பிச்சைகேட்டாள் என்னிடம் ஒரு பிச்சைக்காரி..!
அவளின் நிலை கண்டு எனக்கு பரிதாபம் வரவில்லை. மாறாக கோபம் வந்தது. அதன் வெளிப்பாடே இந்தக் கவி. அதற்காக என்னை யாரும் இறக்கமில்லாதவள் என்று நினைக்கவேண்டாம். அவள் மிகவும் பலசாலியாகவே இருந்தாள், ஊனம் கூட இல்லை. ஆகவே தான் என்னால் கோபத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.

இதோ இங்கே அந்தக் கவி உங்களுக்காய்..!

Saturday, September 8, 2007

மௌனம்...!!!

womanalonebeach, womanalone beach,  Image Hosting

நிசப்தத்தில்
சப்தமாய் உன்
நினைவுகள்..

மௌனமே மொழியாக்கி
விட்டிருந்தேன்
அன்று....
அமைதிப் பட்டம்..!!

சத்தமின்றி
சண்டையிடும் என்னுள்
இருக்கும் உன்
உணர்வுகளின் மிச்சங்கள்....

மௌனமே தண்டனையாய்..
மெல்ல சாகடிக்கும்
உனக்கான
நினைவுகள்...
நிசப்த யுத்தம்
சத்தத்திற்காய்
சத்தமாய்... என்னுள்..

சிக்கித் தவித்து
விம்மும் மனத்துடன்
மௌனத் தவிர்ப்புபோராட்டம்
இன்று..
வாயாடிப் பட்டம்...!!

−பூமகள்.

தோழியே உனக்காக...!!


முதன்முதலில்
மிரட்சியாய்
புது உலகின்
பிரவேசம்...
கல்லூரி முதல் நாள்..!!


உன் நட்பு
கொண்ட பின்பு தான்
நடக்கப் பழகினேன்
நிஜமாய்..!


மலையாய் நீ
இருந்தும்
வாழ்த்துவதென்னவோ
மடுவாகிய என்னை மட்டும்
எப்போதும்...!!


என்
சாதனைகளை
சாத்தியமாக்கும்
சக்தி கொடுத்தது - உன்
சுகந்த வார்த்தைகளே...!


ஏணியாய்
இருந்து
எனை உயர்த்தி
எட்டியிருந்து
ரசிக்கும் உன்
நெஞ்சம்..!!


ஏழையாய் நான்
இருந்தும்
சீமானாக்கும்
நமக்கான நட்பே.....!!


கேட்காமலேயே கொடுக்கும்
உன் கைகள்...!
கேட்டேவிடுவேன் எப்படி
கேட்டது
என் மனச்சத்தம்
உனக்குள் என்று....???!!!!


தோழியே...ஆயிரம்
நட்பை தூசியாக்கும்
நமக்கான புரிதல்கள்...!!

தூரங்கள் மைல்களிலே தான்..!
நமக்கான தூரங்கள்
இதயத்தின் சுவர்கள் மட்டுமே...!


பாதைகள்
பிரிந்தாலும் என்
வழியில்
நம் நட்புடனே
பயணிக்கிறேன்...!!


(குறிப்பு :
என் உயிர் தோழி ஒருவரின் அன்பினால் ஆட்கொண்டு எழுதிய கவி இது..! இந்தக் கவிப்பூவை அவளுக்கும் எனக்குமான நட்பிற்கு சமர்பிக்கின்றேன்..!)

-பூமகள்.