RSS

Saturday, September 10, 2016

சிறுபிரிவின் கணப்பொழுதில்..!

இரவென்னும் பெருவெளியில்
கடந்து சென்ற கனவுகள்
உன் நினைவெழுப்பி விட்டுவிட
கொட்டக் கொட்ட விழிப்பில்
நான்..!

கதவோரச் செருப்பும்
கொக்கியிலிட்ட உன் உடையும்
எடுக்காமல் காக்கிறேன்..
உன்னிருப்பையே
எதிர்வீட்டவரும் நம்பட்டுமே..!

குட்டியிட்ட பூனை போல்
வீட்டினுள்ளே சுற்றுகிறேன்..
அறைகளின் ஒவ்வொரு இடுக்கிலும்
இறைந்திருக்கும் ஓர் பொருளேனும்
உனதிருப்பை உணர்த்தும்..

கடிகார முள்ளெல்லாம்
கீரீச்சிட்டு நகர்கிறது
இரைச்சலோடே நொடியெல்லாம்
காதடைக்கக் கடக்கிறது..

உன் அன்புணர்த்தும்
இதுபோன்ற சிறுபிரிவே
நிஜமான உறவுகளையும்
நமக்கே தான் காட்டிடுமே!

--பூ.

Friday, April 15, 2016

காதலும் கடந்து போகும்..! -- விமர்சனம்

காதலும் கடந்து போகும்..! -- விமர்சனம்


ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்டுவதிலிருந்தே காலங்காலமாய் ஹீரோவின் அறிமுகம் முதலில் வரும் அந்த சம்பிரதாயத்தை உடைத்திருக்கிறார் நலன். பிரேமமில் கலக்கியதைப் போல பத்து மடங்கு இதில் திறமை காட்ட இடமிருந்தபடியால் மடோனா தனது திறமையை நன்கு ரசித்துச் செய்திருக்கிறார். 

மெல்ல மெல்ல நகரும் திரைப்படம் பின்னணி இசை மூலம் வேறு உயரத்துக்கு நம்மை அழைத்துச் சென்று ரசிக்க வைக்கிறது. வேலை பறிபோய், பின் வேலை தேடும் சில காட்சிகள், சென்னையில் வேலை தேடி அலைந்த நினைவுகளை பல பெண்களும் தங்களை ஹீரோயினுடன் ரிலேட் செய்து படத்தில் ஒன்ற உதவுகிறது. 

விஜய் சேதுபதி, எந்த பாத்திரமானாலும் அந்த பாத்திரமாகவே மாறி எக்ஸ்பிரஷனில் கலக்குகிறார்.. இறகைப் போன்ற மென்மையான ஒரு உணர்வை படம் நெடுக உணர்ந்த வண்ணமே இருக்க முடிகிறது.. சிலருக்கு மிக மெதுவாகத் தோன்றலாம்.. ஆனால் அப்படி எனக்குத் தோன்றவில்லை.. ரசிக்கும்படியான காட்சிகள், குறிப்பாக அந்த கோயில் குளத்தின் முன்னான ஹீரோ ஹீரோயின் காட்சி.. அருமை.. 

இறுதியில் ஹீரோயினின் சிரிப்பு நம் மனதிலும் உதட்டிலும் ஒரு புன்னகையை ஒட்டிச் செல்கிறது.. ரசனையான படம்.. தமிழ் சினிமா அடுத்த நகர்விற்கு அழகாக முதலடி வைத்திருக்கிறது.. வழக்கமான 'தண்ணி'க் காட்சிகள், வழக்கமான ஹீரோ ரவுடி போன்ற நெருடல்கள் தான் குறையென்று தோன்றுகிறது.

அப்பாடா.. இப்பவாவது பேய் படங்களுக்கு ப்ளீஸ் லீவ் விடுங்க பாஸ்.. !! 😊

--பூ.

Monday, September 7, 2015

இல் இல்லாதவர்..!!

இல் இல்லாதவர்..!!

மௌனச் சாரலின்
சில்லிட்ட உணர்வுகளால்
நிரம்பி வழியும் அந்தி!!

பொழுதெல்லாம் 
வெம்மையில் வெக்கி
நாணிச் சிவந்த முகில்!!

ஊடலும் கூடலுமாய்
மோனத்தில் கரைந்து
கானல் காட்டும் நிலா!!

அடுப்படி அழுத்தலில் 
அம்மாக்கள் பணித்திருக்க.. 
வழி தீரா பயணத்தில்
அப்பாக்கள் அரண்டிருக்க..
கூடு தேடும் குருவிகளாய்
சன்னல் சிறை சாய்ந்துறங்கும்
மின்மினிகள்..!!

அழுக்கேறிய உடையின்
சல்லடை நுழைக்காற்றின்
கூதலோடு போராடும்
சாலையோரத் துயிலோரை
அடித்தெழுப்பி கறக்கும்
விதிமுறை பாதுகாவலர்களை
அனைவரும் கடந்திருப்போம்..
இல் இல்லாதோரின் 
வலி உணராமலேயே!!

--பூமகள்.




Monday, August 17, 2015

சிலிர்ப்பு!

சிலிர்ப்பு!


வெம்மைச் சுவடுகளின்
இடுக்குகளில்
பன்னீர் தெளித்தது யார்??!!
மண் வாசத்துடன்
நண்பகல் வெயிலின் துளிகள்
பூமியின் தலை துவட்டும்
பூப்பொழிவான
ஒரு குட்டி மழை!!


-பூமகள்.

Thursday, March 5, 2015

காய்ச்சல் காலம்..!

நோயில் வீழ்ந்து 
கடக்கும் நாட்களில்
நம் வீடு நமக்கே 
புதிதாய் தெரிகின்றன..!

கலைந்து கிடக்கும் பொருட்களும்
துவைக்கப்படாத துணிகளும்
நிறைந்திருக்க..
சொல்லப்படாத மெல்லிய
காதல் இழையோடும்
அன்பானவர் அருகிருப்பின்
ஆண்டுக்கிருமுறையேனும்
வந்து செல்லலாம்
கொஞ்சூண்டு
காய்ச்சலும்
தடுமனும்..!!

--பூமகள்..!