RSS
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

Friday, October 14, 2011

புரட்டாசியும் புன்னகைக்கும்..!! - 2


பூக்கள் நிறமிழக்கின்றன - உன்
குளிர்கூந்தல் விடுத்து
கோடை பதம் சேர்ந்ததால்..!


-பூமகள்.


புரட்டாசியும் புன்னகைக்கும்..!!


பாதி எழுதிய பல்பம்..
எழுதாமலே பழுதான ஃபவுன்டன் பேனா..
தொலைந்து போன பொம்மை அழிப்பான்..
தேடிப் பிடித்தேன் அம்மா வீட்டில்.. - நான்
உன்னில் தொலைந்ததை அறியாமல்..!!


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


விண் தாண்டும் வேலையின் கடிது - உன்
உளக்கண் தாண்டும் வேலை..!!

-பூமகள்.


Thursday, January 27, 2011

உனக்காக..!!




உனை எழுத நினைத்து
தோற்றுப் போகிறேன்
ஒவ்வொரு முறையும்
நான்..!!

வார்த்தைகளுக்குள் வராமல்
வழி மாறிப் போகிறாய்
நீ..!!

உனைத் தொடரவே
நான் பயணிக்க..

என் பயணங்களின் தூரம்
சொல்லாமல் செல்கிறது
காலம்..!!

வளைந்து, மறைந்து,
வேகம் கூட்டி
கண்ணாமூச்சி ஆடுகிறா ய்
நீ..!!

குழந்தைகள் விளையாட்டாய்
உனையடைய துரத்துகிறேன்
நான்..!!

இலக்கின்றி ஓடி
ஓர் இடத்தில்
நிற்கிறாய்..!!

மூச்சிரைக்கும் இதயங்கள்
பேசிக் கொள்கின்றன..!
நா ம் மௌனம் உடைக்க
முயல்கிறோம்..!

வழக்கம் போலவே
தென்றல் நமைப் பற்றி
மென்னிறகால்
கவிதை தூவிச் செல்கிறது
நம்மிருவருக்குமிடையே..!!

--
பூமகள்.

Sunday, October 31, 2010

மரணம் ஒத்த நிகழ்வில்..


வாழ்த்த வந்த
உனைக் கண்டு
பாதியானது என் மீதியும்..

அர்ச்சதை அரிசியும்..
தாளச் சத்தமும்
வசதியானது என்
விசும்பலுக்கு துணையாய்...

கட்டப்பட்ட புதுமஞ்சள்
கயிறு வாசம்..
உன் வாசம் போக்கச் செய்ய
உழன்றுகொண்டிருந்தது என்னில்..

மாலைகளின் சுமை
மனச் சுமையோடு
போட்டியிட்டுத் தோற்கடித்துக் கொண்டிருந்தது..

அழ கண்கள் மன்றாடுகின்றன..
இயலா சூழல் இம்சையாக்குகிறது..
துடிக்கும் சுடுபாறை மீனாய்
துவண்டு அழுகிறேன் மனதோடு..

நடுக்கமான நிமிடங்கள்
நெளிந்து நழுவ இயலா
மூச்சடைக்கும் அறையில்
நான் சிக்கித் தவிக்கிறேன்
கூண்டுக் கிளியாக..

உணர்வுகள் உறைக்காத ஓர் நிலையில்
இமை மூடுகிறேன்..

இறந்த என் உடலைப் பார்ப்பது போல்
எனை உற்றுப் பார்க்கிறது என் மனம்..

மரணத்தை ஒத்த
நிகழ்வில் மூழ்கித்
தொலைந்திருந்தேன் அப்போது..!

--
பூமகள்.

Friday, August 13, 2010

ஊடல் கொள்வோம் வா..!!



எப்போதும் போலவே
அன்றும் நீயே
சண்டையை
துவக்கி வைத்தாய்..!!

என்னோடு சண்டைபோட
சுலப வழி எப்பொழுதும்
உனக்கு
இருக்கவே இருக்கிறது..

நாளை செய்ய எத்தனித்து
விடுபட்ட வேலை மேல்
உன் வேல் விழி பாயும்..

அரும்பி விடும் உன்னுள்
அந்த அரிவாள் வாக்குவாதம்..

விடாப்பிடியாய் நீ பேச..
என் நியாயம் நான் பேச..

காரணங்கள் கரைந்து
ஏனோ என்
விழியோரம் நனைக்கும்..

கோபத்தோடே
அலுவலகம் சென்றிடுவாய்..

எதுவும் கேக்காமல்
ஊமையாகும்
வாயும் வயிறும்..

மதியம் அழைப்பு வரும்..

இயல்பு திரும்ப
இயல்பாக பேச
முயல்வாய்..

வறண்ட கிராமத்தில்
நீர் முடக்கும்
கையடி குழாய் போல்
உணர்வு முடக்கி
நான்

உணவு அனுப்பி
உண்ண வைப்பாய்..
உன் பாசம் சொல்லி
நெகிழ வைப்பாய்..

பாறையை பூவாக்கும் வித்தை
பிரயோகிப்பாய்..
கல்பாறை கற்கண்டாகும்..

வீடு திரும்பிய
உனைச் செல்லமாய்
குத்தி நெஞ்சில்
முகம் புதைப்பேன்..

அர்த்தமற்ற சண்டையின்
அரிய நோக்கம்
அறியச் செய்வாய்..

முன்னை விட
தித்திக்கும்
நம் காதல் அன்று..

இறுதியில் சொல்வாய்..
இதற்குத் தான்
காத்திருந்ததாக…!!

--
பூமகள்.

Wednesday, April 21, 2010

உறைந்த நிமிடம்..!



வெயில்
பொழுது
துயில் கொள்ள
சாய்வுநாற்காலி தேடி
தோய்ந்து இருந்தது

கடலின் அருகில்..!

தூரத்து வானின்
கருத்த சீலையால்
மறைக்காத இடங்கள்
சிவந்த மேனியாய்
சித்திரம் காட்டியது!

எப்போது வேண்டுமானாலும்
விடைபெற காத்திருக்கும்
கொடியில் மாட்டிய பட்டம் போல்
நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..!

சிறுத்தையின் வேகத்தில்
சீறி வந்தாய் என் முன்..!
சிருங்கார பார்வையில்லை..!
சிரிப்பூட்டும் இதழில்லை..!

புரியாமல் பார்க்கின்றேன்..!
புரிந்தே நீ காண மறுக்கும்
என் விழியோர நேர்பார்வை..!
புரியத்துவங்கியது ஏதேதோ என்னுள்..!

"விலகிப்போ...மறந்துபோ..."
வார்த்தை சொல்லி

விலகி நின்றாய்..!

இரு வார்த்தையில் மரணம் வருமோ?
இதயத் துடிப்பு நின்று போனது..!
உள்ளம் உடைந்து, விழி வெடித்து
வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!

மேகத்துக்கு எப்படிக் கேட்டது??
முட்டிக் கொண்டு அதுவும் அழுதது..!

என் உயிர் பிய்த்து

உடல் மட்டும் சவமாய்

உறைய வைத்து

விட்டுச் சென்றாய்..!

சிதறிய கண்ணீர் மழைநீரோடு

மெல்ல உரையாடியது..!
வெகு நேரம் நின்று மழையோடு

விவரம் சொன்னேன்..!

வெறுத்து தகர்ந்து மெல்ல நகர்ந்தேன்
இதயத்து வலியோடு..!

சாலைகள் புதிதாய்..!
மழை மட்டும் என்னோடு
மருளாமல் துணையாய்..!

யாருமில்லை.. எவருமில்லை..!
இருட்டத் துவங்கும் தூரம் வரை
இரு காலும் இலக்கின்றி
நடந்து சோர்ந்தது..!

ஏதோ ஒரு கடை..!
உள்ளும் புறமும்
ஈரத்தோடு நுழைகிறேன்..!

உள்ளே அழுதாலும்
வெளியே வெளிரிச் சிரிக்கிறேன்..
"நக வெட்டி" வேண்டுமென்றேன்..!
வாங்கிவிட்டு வெளிவந்தேன்..!

மனம் கேட்டது!
உன் "நினைவு வெட்டி" கருவி!

வானம் வாஞ்சையோடு
வன்மழை மள்கி
மெல்லிய தூறலாக்கி
மனம் லேசாக்கியது..!

தூறலோடே திரும்பி
வந்தேன்..!
வெடித்து அழுதேன்..!
இப்போது கனமழை
என் வீட்டில்..!

Wednesday, August 12, 2009

என் இதயச் சுவடுகள் - 2


உன்னோடு பேசிய பின்
அடுத்து உன் குரல்
கேட்கும் வரையிலும்
என்னுள் நீடித்திருக்கிறது..
உன் வார்த்தைகளின் வாசம்..

அந்த வாசத்தில் கிறங்கி,
தூக்கத்தில் உளறும்
குழந்தையைப் போல..
ஏதோ எழுத முற்படுகிறது ..
என் மனம்..!!

Wednesday, August 5, 2009

என் இதயச் சுவடுகள்...!! - 1


உனை முதலில் பார்த்த
வினாடிச் சிறகுகளின்
படபடப்பின் மத்தியில்
உன் சின்ன விழியால்
எனை பார்த்த அந்த நொடியில் தானடா..
என்னுள் வண்ணங்கள்
தோய்த்து சிறகுகள்
விரித்தது
ஓர் வண்ணத்துப்பூச்சி தேவதை...