RSS

Friday, December 20, 2013

உப்பு மழை..!!

மழை பார்க்கையிலெல்லாம்
நினைவில் நீ..!
நீயெனைக் கடைசியாய்
கடக்கையில்
நனைத்த மழை
உப்புக்கரித்தது தெரியுமா??!!

உன் ஊரில்
பெய்யும் மழையின்
இறுதித் துளியேனும்
நினைவூட்டுமா எனை??''

              --பூ.

Thursday, October 17, 2013

துளித்துளியாய்..! - 2

மழையின் வெள்ளத்தில்
அடித்துச் செல்கிறது
மனத்தின் வெப்பம்..!!

&&&&@@@@&&&&&

இடியின் இடிபாடுகளின் வழி
மேக முறைப்புகளுக்கு பயந்து
தம் துயரெல்லாம் கவிழ்ந்து வடிக்கும்
ஓர் செம்பருத்திப் பூவின்
மகரந்தத்தில் ஒடிங்கியிருக்கும்
ஓர் மழைத் துளி..!

&&&&

இருளெல்லாம் நனைக்கிறது
இரவுப் பணி முடித்து
எழுப்புகிறது விடியலை - மழை..!!

--பூ.

துளித்துளியாய்..!!


தூரத்து பனிச்சிகரத்திலிருந்து
உருளும் ஒற்றைப் பனித்துளியாய்
கடந்து கொண்டிருக்கும்
காலமும் காற்றும்
உன் கவிதைகளை
நினைவுச்சிகரத்திலிருந்து
கடத்திக் கொண்டேயிருக்கின்றன
சுவடுகள் விட்டதை அறியாமல்..!!

--பூ.

&&&&&&

மழை தனித்து வருவதேயில்லை..
கொஞ்சும் மேகத்தோடு
இடி இசையில்
உன் நினைவுகளையும்
பொழிந்துவிடுகிறது என்னில்..!!

--பூ.

&&&&&

Thursday, August 22, 2013

பேரட் மீனின் பேரன்டிங்..!


பேரட் மீனின் பேரன்டிங்..!

     இருந்த பத்து மீன்களில் எஞ்சியிருக்கும் மூன்று ச்சிலிட்சில் இரு கிளிமீன்கள் எங்கள் வீட்டினை அழகாக்கிக் கொண்டிருக்க, சமீபமாக அதன் வழக்கத்தில் ஒரு மாறுதலைக் காண முடிந்தது. கூட இருக்கும் ஒரேயொரு சிறு மீனை இரு கிளி(parrot) மீன்களும் மாறிமாறி துரத்திக் கொண்டிருந்தன. அருகில் சென்று பார்த்தால் கூலாங்கற்களுக்கு மேல் கடுகளவிலான நிறமற்ற முட்டைகள். (நாமெல்லாம் மீனை ருசித்துப் பார்த்திருக்கிறோம். அதன் முட்டையையெல்லாம் எங்கு கண்டிருக்கிறோம். ஒருவேளை, மீன் முட்டை கோழிமுட்டையளவு இருந்திருந்தால் ருசிக்கப் பார்த்திருப்போமோ என்னவோ..!) எங்கள் வீட்டு குழந்தையோடு சேர்த்து பெரு மகிழ்ச்சியில் குழந்தையானோம் நாங்களும். ஆசையாசையாய் இணையத்தில் அதைப்பற்றிப் படித்து அத்தனையும் மீன்களானால் என்ன செய்வது, இடம் போதுமா என்று பதட்டமானோம். மூன்று நாட்கள் நகர்ந்தன. இதற்குள் பல்லாயிரம் முறை அவைகளைக் கண்டிருப்போம். அந்த மூன்று நாட்களும் முட்டையை கவனிப்பதை விட, மீன்களைத் தான் கவனித்தோம். படித்தவர்கள் நாமெல்லாம் parenting என்று சொல்வோமே, அதனை வெகு அழகாக அவ்விரு மீன்களும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன. முட்டையின் அருகில் மட்டுமல்ல அந்த சுற்று வட்டாரத்துக்கே தாதா ஆகிவிட்டிருந்தது தந்தை மீன் என்று என்னால் நம்பப்படுகிற அளவில் பெரிய மீன். மீன் தொட்டிக்குள் அருகில் வரும் மீன்களை ஆக்ரோசத்துடன் துரத்துவது என்றில்லை, மீன் தொட்டிக்கு அருகே நாமே சென்றாலும் நம்மைக் கடித்துவிடும் உக்ரம் அதன் செயலில் தெரிந்தது. நான்கு, ஐந்தாவது நாட்களில் அந்த முட்டைகள் எல்லாம் நிறமற்ற தன்மையிலிருந்து கோல்கேட் வெண்மைக்கு மாறிப் போயின. எங்கள் முகங்களும் தான். வெண்ணிறமானால் மீன்குஞ்சாகாது என்பது இணைய ஆராய்ச்சியில் கண்ட உண்மை. சோக கீதம் பாட வேண்டிய மீன்களோ, அவற்றை உண்டுவிட்டு அதன் இயல்பான வழக்கத்துக்கு மாறிப் போயின. நாங்கள் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு அதனை நினைத்தபடியே இருந்தோம். என்ன மாதிரியான parenting இது?? மீன்களுக்கு எத்தனை பொறுப்புணர்ச்சி. Finding Nemo - உண்மைதானோ??!!

     எதற்க்காக இதனைச் சொல்கிறேன் என்றால், parrot மீன்கள் மற்றொருமுறை பெற்றோராகியிருக்கின்றன. பார்ப்போம். மச்சாவதாரக்கடவுளே காப்பாற்று..!! 

--பூ.

Saturday, August 3, 2013

விடைகளின் விடை
நகல் கலக்காத நிசமென்ற ஐயமுடன்,
விடை பகிராத வினாக்களோடு
நிதம் தொடர்கிறேன்..

நத்தையின் வேகமாய்
நகரும் நிகழ் காலத்தில்..
பருந்தின் வேகத்தில் -என்னுள்
பின்னோக்கி பயணிக்கிறாய்..

கசப்பான விடைகளையே
ருசியறிந்த செவிகள்..
இனிப்புண்ண காத்திருக்கும்
வீசப்படும் விடைகளுக்காய்..

வருங்கால நித்திரையில்
உனக்கும் வரக்கூடும்
இது போன்ற நெருக்கும் 
சொப்பனங்கள்..

விடைகள் மட்டும் அப்போது
விடையறிந்திருக்கும் 
கட்டாயம்..!


--பூ.

Friday, March 29, 2013

இறுதி விசும்பல்கள்..!

விழும்புகளின் விசும்பல்கள்
கேட்பதே இல்லை யாருக்கும்..

உயிரோசைகளின் சத்தமெல்லாம்
மலையுச்சியின் விழும்பின்
காதுமடலெங்கும் ஒலித்தொலித்து
மரத்துக்கிடக்கின்றன..
குயிலோசை கூட அறியாதபடி..

மரத்தின் உச்சிக்கொம்பெங்கும்..
இளந்தளிர்களின் ஓசை
புரிவதே இல்லை அதிலேறும்
குரங்குகளுக்கும் குருவிகளுக்கும்..
கிளை முறிந்து விழும் தருணங்களை
நடுங்கியபடி எதிர்கொள்கின்றன அவை..

இறுதிக் கணங்களின்
சுமையான படுக்கையின்
பழுப்பேறிய தலையணையில்
விசும்பிக் கரைந்த துயர்
புரிவதே இல்லை யாருக்கும்..
தன் மரணம் வரும்வரையிலும்..

 --பூமகள்Tuesday, March 26, 2013

நானும் என் டேலியாக்களும்..!!


நானும் என் டேலியாக்களும்..!!     இது என் பால்ய கால நிகழ்வுகளில் மிகப் பிடித்தமான ஒன்று.. எனது ஆரம்பப் பள்ளி நாட்கள் முதலென்று கொள்ளலாம்.. எங்கள் தெருவில் தினமும் ஒரு பூ வியாபாரி தனது மிதி வண்டியில் மூங்கில் கூடை மற்றும் மூங்கில் தட்டு நிறைய வண்ண வண்ணப் பூக்களோடு காலை நேரங்களில் வருவார். சுமார் எட்டு எட்டரை மணியளவில் அவரை எங்கள் தெருவில் கட்டாயம் பார்க்கலாம். அவர் பெரும்பாலும் பன்னீர் ரோஜா வகைப் பூக்களைக் கொண்டு வருவார். ஒன்று நாலேனா வீதம் ரூபாய்க்கு நான்கு பூக்கள் தருவார்.. அதன் மணம், மனம் நிறைக்கும். பல நாட்களில் உதகை ரோஜா வகைகள் கொண்டு வருவார்.

     வித்தியாசமான சில நாட்களில் பல வண்ண நிறங்களில் டேலியா  மலர்களைக் கொண்டு வருவார். அப்போது அவர் சத்தம் கேட்டவுடன் ஓடும் நாங்கள், அவர் வைத்திருப்பது டேலியா என தெரிந்தால் இன்னும் அடித்துப் பிடித்து ஓடி அவரை நெருங்குவோம்.. அவரோ வீதியின் சரியான மையப்புள்ளியில் நின்று கொண்டிருப்பார். அங்கு இருப்பவர்கள் முதலே வந்து பிடித்த மலர்களைக் கவர்ந்து கொள்ள, நாங்கள் செல்கையில் மீதமிருக்கும் பூக்களுக்கு அடிதடி நடக்கும்.. பெரும்பாலும் எங்கள் வீதியிலேயே நான் தான் மிகச் சிறியவளாக (இப்போ மட்டும் என்ன..??!! )இருந்த காரணத்தால் என் அன்பு அக்காக்கள் எனக்கு நல்லப் பூக்களைத் தாமே தேடிக் கொடுக்கவும் செய்வார்கள்.. அப்போதிருந்தே டேலியாக்கள் மேல் தீராத தாகம் எனக்கு...

     இரட்டை ஜடை பின்னில் இட்டு, ரிப்பன் வைத்து அதில் டேலியா வைத்துப் பள்ளிக்குப் போகும்போது, கை தானாக தலைக்குச் சென்று பூவைத் தொட்ட வண்ணமே இருக்கும்.. அன்று முழுக்க அந்த டேலியா பற்றிய நினைவாகவே இருக்கும். பக்கத்திலிருக்கும் தோழியிடம் மதியப் பொழுதில் “வாடிருச்சா டி?!” என்று கேட்டு கண்ணாடி இல்லாத குறை போக்குவேன்.. அடிக்கடி டேலியாப் பூ வாங்க அப்போதைய வீட்டின் நிதித் துறை யோசிக்க, எப்போதேனும் கிடைக்கும் டேலியா மேல் தனிக் காதல் பிறந்தது இயல்பு தான் அல்லவா??!!

     பள்ளிக் காலம் முடிவதற்கு முன்பே வீடு மாற்றி, ஒரே ஊரில் சொந்த வீட்டுக்கு குடி போன போதும், மகிழ்வையும் தாண்டி அன்பான சுற்றமும், என்னைக் கவர்ந்த டேலியா பூ விற்கும் வண்டிக்காரர் வருகையையும் இழந்து அங்கு நிறைய நினைந்து வருந்தியிருக்கிறேன். உதகைக்கு போன நாட்களில் அங்கு தாவரவியல் பூங்காவிலிருந்து டேலியா விதைகள் வாங்கி வந்து நடவிட்டு, பின் பத்து நாட்களாக இரவும் பகலும் அந்த இடத்தையே நோட்டமிட்டு, ஏமாந்த காலமும் உண்டு. இப்போதும் பூ சந்தைக்கு என் வீட்டிலிருந்து யார் போனாலும் முதலில் சொல்லுவது “டேலியா வாங்கி வாங்க...!” இதைக் கேட்டு என் அத்தை ஒரு முறை, இந்த காலத்திலும் டேலியா விரும்பும் ஒரு பெண்ணா என்று சிரித்தபடி கேட்டே விட்டார்.. எந்த காலமானால் என்ன, பூவுக்கு பூ பிடிப்பதில் ஆச்சர்யம் இல்லை தானே??!!

அன்புடன்,
பூமகள்.
மைப் பேனாவும் நானும்..!!


மைப் பேனாவும் நானும்..!!

 


     இந்த முறை இந்திய பயணத்தில் போன தடவை விட்டு வைத்த சில பலத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன்.. அந்த சிலதில் சீனிப்புளியங்காய், நொங்கு, அப்புறம் பேனா.. அதுவும் லெட் பேனா கூடாது.. பள்ளி நாட்களில் மை ஊற்றி எழுதுவோமே அந்த பேனா.. சென்ற முறை இந்தியப் பயணத்தில் வாங்காமல் வெறுமணே பார்த்து விட்டு மட்டும் வந்தேன்.. காரணம், பேனாவில் தாளில் எழுதி வெகு வருடம் ஆனது தான்..

     பள்ளி நாட்களில்.. மை பேனாக்களுக்கு இருக்கும் வரவேற்பு அலாதி. அதிலும் கண்ணாடி வைத்த பேனா வைத்திருந்தால், அதில் எழுதும் அழகே தனி தான்.. மை அளவை அதில் பார்த்து பார்த்து எழுதியும், சில துளிகளை தோழிகளிடம் கடன் பெற்றும் எழுதும் நாட்கள் மனக்கிடங்கில் சுமந்துகொண்டிருக்கும் வசந்தமான நினைவுகள்..     முதன் முதலில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்காக அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்த ஹிரோ பேனா தான் மிக பத்திரமாக என்னால் பாதுகாக்கப்பட்ட ஒன்று.. பின்னர் அதன் போலவே கருஞ்சிவப்பு நிறத்தில் அடுத்த பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கும் அப்பா வாங்கித் தந்தார்.. அப்போதெல்லாம் எழுத்து மிக அழகாய் வருவது மை பேனாவில் எழுதினால் மட்டுமே. லெட் பேனா எனக்கு அவ்வளவு வசப்பட்டதில்லை..

     புது நோட்டுப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் பெயர் எழுதி பின் மை பேனாவால் எழுதும் ஆவல் மனதில் நீங்காமல் பசுமையாக இருக்கிறது இன்றும்.. அத்தகைய அனுபவம் கிடைக்க வேண்டி, இம்முறை கடைக்கு வேறு பொருள் வாங்கச் சென்று பின் போன முறை பார்த்த அந்த பேனாவின் மேல் நாட்டம் வந்தது.. ஒரு மை பேனாவும் ஹிரோ பேனாவும் வாங்கியாயிற்று.. மைப் புட்டி மாத்திரம், கொண்டு வர எதுவாக இருக்காது என்றெண்ணி வாங்காமல் விட்டு விட்டோம்.. ஒரு சிறிய நோட்டு, ஒரு பெரிய நோட்டு என்று சில நோட்டுகளும் வாங்கியாயிற்று.. அதையெல்லாம் வாங்கும் பொது இருக்கும் மகிழ்ச்சி.. பள்ளித்துவக்கத்தில் புதிய நோட்டுகளும் புத்தகங்களும் வாங்கும் பொது வருமே.. அத்தகைய ஒரு மகிழ்ச்சி.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. சில நேரங்களில் வெகு சின்னச் சின்ன விசயங்கள் கூட நம் மனதுக்கு அளவில்லா மகிழ்ச்சி தரும் இல்லையா?!!

     பேனாவும் நோட்டுப் புத்தகமும் காத்துக் கொண்டிருக்க, மைப் புட்டிக்காக மனம் தேடிக் கொண்டிருக்கிறது. இங்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏக்கத்தோடு பேனாவைத் தடவிக் கொடுத்தபடி நான்..!!

அன்புடன்,
பூமகள்.