RSS

Thursday, September 30, 2010

கிள்ளை உள்ளம்..!!


மற்றோர் இருக்க
எனை நாடி
என்னோடு இருந்தும்
எங்கோ நின் கவனம்..!

என் அருகாமை
கிட்டியதும்
அடுத்தது நோக்கி
உன் மனம்..!

என் முக பாவங்கள்
உனை முற்றுகையிட்டும்..
முகம் நோக்காமல்
சிதறும் உன் ஆட்டச் சிந்தை..!

எப்படியாகினும்
என் மென்கோபம் தோற்கடிக்கும்
பொக்கைவாய்ப்
புன்னகைப்பூவின் முகம்..!!

--பூமகள்.

Wednesday, September 22, 2010

வான்முகில் மனத்தாருக்கு ஓர் மகுடம்..!!




நம்ம வாழ்க்கையில தினம் தினம் பல புதிய மனிதர்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அப்படியான சந்திப்புகளும் அவர்களுடனான நமது பரிமாறல்களும் காலத்துக்கும் நினைவிருக்குமா என்றால் பலருக்கு பெயர், முகம் உட்பட பல மறந்திருக்கும். ஆனால், மறக்காமல் அவர்கள் நம்மில் விட்டுச் செல்லும் ஒன்றே ஒன்று... அவர்களைச் சந்தித்தவேளையில் அவர்கள் நம்மில் ஏற்படுத்திய அந்த உணர்வு. அந்த உணர்வே அடுத்து அவர்களைச் சந்திக்க வைக்கவோ அல்லது சந்திக்காமல் தவிர்க்கவோ வைக்கும் கிரியா ஊக்கியாக செயல்படும். அப்படிச் சந்திக்கும் மனிதர்கள் எல்லாருமே நம்மில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறார்களா என்றால்.. அது அவர்களால் நமக்குக் கிடைத்த பலன்களைக் கொண்டு கணக்கிடுகிறோம். ஒருவரால் இத்தகைய ஆதாயம் எனக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் என்பதால் மட்டுமே முகஸ்துதி பண்ணி பேசுபவர்களும் உண்டு.. வெறும் பலன்கள் சார்ந்த குறுகிய வட்டச் சிந்தையாளர்களின் வழக்கம் இது. சிலரிடம் சில நிமிடங்கள் பேசினாலே, பல நல்ல விசயங்களை நமக்கு சொல்லாமல் சொல்லி புரிய வைத்திருப்பர்.. சிலரிடம் சில வினாடிகள் பேசினால் கூட, ஹையோ.. ஏன் இப்படியும் சிந்தித்துப் பேசுகிறார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியில் வேறு வழியின்றி தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருப்போம்.

சந்திப்பவர்கள் எத்தகையவர்களாய் இருந்தாலும்.. அவர்கள் மேல் நம் மதிப்பும் அன்பும் உயரும்படி அவர்களின் பேச்சும் சிந்தையும் உள்ளதா என்பது தான் முதல் கேள்வியாக அனைவர் மனதிலும் இருக்கும். அப்படிச் சந்திப்பவர்களின் சிந்தை, செயல், பேச்சு எல்லாமே ஒன்று போலவே இருப்பின் அவர்கள் நம்மில் பெருமதிப்பைப் பெறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் நம் பொது வாழ்க்கையில் சந்திக்கும் பலரில் ஒரு சிலர் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருப்பார்கள். காரணம், தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்து பொது வாழ்க்கையில் வருவாயை விட சேவை முக்கியமாகக் கருதி உழைத்துக் கொண்டிருப்பார்கள்.. அப்படிப்பட்டவர்கள் இந்த சமுதாயத்தில் கடவுளாகவே கருதி வெகு ஜன மக்களால் மதிக்கப்படுவார்கள்..

அப்படிப்பட்டவர்கள் பற்றி எழுத எண்ணி இந்த முன்னுரையை வழங்குகிறேன்..

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மகுடமானவருக்கோர் மகுடம்..!!


இவரோடான என் அறிமுகம் நான் ஓர் புன்னகைப்பூவை பெற்ற போது நிகழ்ந்தது. இவர் பற்றிய அறிமுகமோ, முன்னுரையோ யாராலும் எனக்கு வழங்கப்படவில்லை.. இவரின் கனிவும், ஐயங்களைத் தெளிவாக்கும் குணமும் என்னை இவர் நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இவரின் பொறுமை விளக்கும் அந்த நிகழ்வு தான் என்னைப் புரட்டிப் போட்டது. என் பூவுக்கு உரமேற்ற பூவின் வேர் பூவைத் தாங்கிக் காத்திருந்த வேளை, அனைத்து வகைப் பூக்களும் வந்தால் ஒழிய அந்த உரமேற்றல் நடக்காதென்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

உரமேற்ற காத்திருந்த பல்வகைப் பூக்களில் சில பூக்களுக்கு தாய்த் தண்டின் தணிப்பு தேவைப்பட.. அழுது வடியும் பூக்களோடு வேர்கள் தாயிடம் தேடின. அனைத்துப் பூக்களும் ஒருங்கே சேர பல மணி நேரமானது. அனைத்தையும் பொறுத்த என் பூவின் வேரோ, இறுதியில் கேட்டே விட்டார். 'அனைவருக்கும் ஒருங்கே உரமேற்ற எங்ஙனம் சாத்தியம்? ஒரு பூ அழுதால் அப்போ திரும்புவதற்குள் மற்றொரு பூ சென்றுவிடுகிறதே'.. இதைக் கேட்ட அவரோ, புன்னகைத்தவாரே உரைத்தார். 'உங்கள் செடியில் இது எத்தனையாவது பூ? இன்னும் காலம் அனுபவங்கள் பல தரும். பூவோடு பயணப்பட்ட வேளையில் உங்களுக்கு பூவால் பல தாமதங்கள் ஆகும். பொறுமை மிக அவசியம்.' இந்த முரண்பட்ட சண்டையில் எங்களுக்குள் புதிய புரிதல் உண்டானது.

பூவின் நலன் குறித்த எனது ஐயங்களை, பூந்தோட்டத்தின் காவல்காரர் போல அவர் ஒவ்வொருமுறையும் பொறுமையாக எனக்கு விளக்குகையில் மனம் மகிழ்ச்சியில் திழைத்தது. சொல்லவொண்ணா அமைதியில் நிறைந்தது.

பூவுக்கு உரமேற்ற முக்கியமான தருணம் வர, மீண்டும் இவரோடான என் சந்திப்பு நிகழ்ந்தது. மகிழ்ச்சியாய் சந்தித்த அந்த தருணம் இன்னும் நினைவில்.. பூவின் மலர்ச்சி.. வளர்ச்சி குறித்த மகிழ்ச்சி.. இப்படி மகிழ்ந்து இறுதியில் உரமேற்றவும் செய்து அனுப்பிவிட்ட பின் பூ வாடி சுருண்ட நிலையில் தவித்துப் புலம்பி பூந்தோட்டத்தின் காவல்காரருக்கு அழைப்பு விடுத்தேன். பதறிப் போய் மறுதினம் பூவைத் தான் சந்திக்க வேண்டுமென உடன் வரச் சொன்னார். பதறினாலும், பதறாமல் பூவின் குருதி பார்த்து மதிய உணவு மறந்து என் பூவின் பசியாறக் காத்திருந்தார். சிதறாமல் சிக்கனமாய் தான் அறிந்ததைச் சொல்லி, பூவினை தன் கட்டுப்பாட்டில் சில தினம் விடச் சொன்னார். மெல்ல எனக்கு தலை சுற்றினாலும், அதிகம் பேசாமல் ஆசுவாசப்படுத்தினார்.

பூவினைச் சேர்த்த பின் அடுத்த சில நிமிடங்களில், பூவுக்கு நிகழ்ந்த கொடுமையின் சீற்றத்தை எனக்குப் புரிய வைத்தார். எப்போது வேண்டுமானாலும் கடல் சேரப் பார்க்கும் கரை மணலைப் போல என் விழியில் வரக் காத்திருக்கும் கண்ணீரை ஆராய்ந்தது அவர் மனம். திடமான பின் மீண்டும் மிச்சத்தை உரைத்து நகர்ந்தார் தன் மூன்றாவது சந்திப்பில்.. வலிமிகு செய்தியை வலிவரா மருந்து தட்வி கொடுப்பது போல் மெல்ல மெல்ல என்னில் ஏற்றி பெரு வலி வராமல் தடுத்தார்.

இப்படியாக, என் பூ, பூத்தவேளை முதல் இக்கட்டான இக்கால கட்டம் வரை எனக்கும், என் மனதுக்கும் உரமேற்றும் மாவேலையைச் செய்த புண்ணியம் அவருக்கே உரியது. என் உயிரின் பாதி எங்கோ இருக்க.. என் உயிரோ உலர்ந்த சருகாய் படுக்கையில் கிடக்க.. என்னில் சூழலைத் தாங்கும் வலிமைத் தந்து அழாமல் இருக்க வழிவகை செய்தார்.

சில நூறு ரூபாய்களோடு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தினம் காணும் தொழில் முறை நபர்கள் முன் இவர் வித்தியாசமானவர். எந்த நேரத்திலும், எந்த நிமிடத்திலும் நம் பூ பற்றிய இக்கட்டான சூழலில் இவரைத் தொடர்பு கொள்ளலாம். முடிந்த மட்டும் இவரைச் சந்திக்காமலே சரியாக்க முயற்சிக்கும் இவர், சந்திக்க அவசியம், அவசரம் நேர்கையில் தவிர்ப்பதும் இல்லை. அதிதீவிரமான சமயத்தில் நம் பூவை விட்டு நகர்வதும் இல்லை. இவ்வகை மனிதர்கள் இருப்பதால் தானோ என்னமோ, எத்தனை அழிவு வந்தாலும் இன்னும் இந்த பூமியில் மழையும் எழிலும் இன்னும் மிச்சமிருக்கின்றன.

ஒரு நூறு ரூபாய்க்கு பல்லாயிரம் ரூபாய்க்கான தகவல்களைச் சொல்லி பூவின் வாழ்வு மலரத் தேவையானதைத் திரட்டிக் கொடுக்கும் ஓர் அற்புத அமுத சுரபி இவர். நமக்கு மட்டுமல்ல.. தம்மைச் சுற்றி வரும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் அதே பொறுமையும் மலர்ச்சியும் கொண்டு மருத்துவம் பார்க்கும் இவர் மாமேதை.

தன் சொந்த வாழ்க்கையின் பல அற்புதமான தருணங்களை இழந்து கொண்டிருக்கும் போதும், அதன் வலி தன்னில் அடக்கி நம் வலி போகச் செய்யும் வன்மை மிக்கவர் இவர். தன் பிஞ்சுப் பூவின் பிறந்த நாளைக் கொண்டாடாமல் ஆயிரமாயிரம் வாடின பூக்களை நலமாக்க எண்ணி நள்ளிரவு வரை இயந்திரம் போல் இயங்கும் இவர், என் மனதில் உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டார். என்னோடு இதைப் பகிர்ந்த வேளையில் எங்களுக்குள்ளான உரையாடல் நின்று வினாடிகள் தமக்குள் மௌனப் பூட்டு பூட்டிக் கொண்டன. எனக்கு இவருக்கு சொல்ல பதிலேதும் இல்லை.. மனதால் நன்றி மட்டுமே இறுதியில் சொல்ல முடிந்தது. அவ்வாறு பகிர்கையில் அவர் விழி சொன்ன வலியை எந்த சின்னப் பூவின் மலர்ச்சி கொண்டு சரியாக்க இயலும்? இழந்த மனிதர்களும், இழந்த காலமும் திரும்ப கிடைக்கவே கிடைக்காதவை.. அந்த உண்மையைப் புரிந்ததாலோ என்னவோ, வாழ்க்கையின் எதார்த்தத்தையும் வளர்ச்சியையும் சட்டெனப் புரிந்து தனக்குத் தானே ஆசுவாசமாவதையும் அடுத்த சில நிமிடங்களிலேயே கண்டு வியப்பில் ஆழ்ந்தேன்.

இவ்வகை மனிதர்கள் இன்னும் பல்லாயிரம் பூந்தோட்டங்கள் பூத்துக் குலுங்க காவலாக அமைந்து நம் தேசத்தை நல்பூக்களின் தேசமாக மாற்ற வேண்டுமென்பது என் அவா. இவர் புகழ் பரப்ப இத்தகைய பதிவுகள் அவசியம் இல்லை. அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவர் இவர்.

எனக்கு உங்கள் இடத்தில் பார்த்த ஒரு வாசகம் நினைவு வருகிறது..

Doctor, you remains a difference, as Always.



(அடுத்த மகுடம் - உரியவர் வரும் வரை..)

Sunday, September 5, 2010

நன்றி..!!

நன்றி கூறுவேன் என்று
நா எழ முயல..
விழியின்
பனித்துளி முத்தாகி
முந்தி நவிழ்ந்திருக்கும் நன்றி...

வறண்ட பாலையால்
நிரப்பப்பட்ட பூமிபோல்
நா முழுதும் வறண்ட
வாயில் வார்த்தை
வெந்திருக்கும்..

வெளி வந்த உஷ்ண
புகைச்சலில்
எரிந்து கொண்டிருக்கும்
உனக்கும் எனக்குமான
பாச சம்பாஷனை பற்றிய
ஊர் புரளிகள்..!!


-- பூமகள்.

Saturday, September 4, 2010

எல்லையற்ற மனவெளி..!!



எங்களுக்குள்ளான உரையாடல்கள் இப்படித் தான் எப்போதுமே ஆரம்பிக்கும்.. முகமலர்ந்து எனைப் பார்த்து புன் சிரிப்புடன் கதவருகில் வந்து நிற்பார் பக்கத்து வீட்டு வட இந்திய விருந்தினப் பெண். உள் அழைத்து அமர வைத்து விருந்தோம்பல் முடித்து ஆயாசமாய் அமர்ந்து கதை பேச ஆரம்பிக்கும் முன் அவரே வெகு தூரம் பேசியிருப்பார்.. தம் பிரிவு குறித்தும் தங்களின் கடவுள் நம்பிக்கை குறித்தும் சொற்பொழிவாற்றுவார். நம் பக்கம் எப்பவும் போல் கேட்டலும் அதைச் சார்ந்த பதில்களும் தொடரும்.. பேசுபவர் கொஞ்சம் அவரே தன் பாணி மாற்றி பேச்சை கேள்வி - பதில் பேட்டியாக்குவார்..

உங்க வீட்டு திருமணம் எப்படி நடக்கும்? இப்படி ஆரம்பிக்கும் அவரின் கேள்விகள்.. ஒரிரு வாக்கியத்தில் என் விடை முடிய.. மீண்டும் அடுத்த கேள்வி அவரே ஆரம்பிப்பார்.. திருமணத்தின் முன் தேடு படலம் முதல் திருமணம் முடிந்து பிள்ளைப் பேறு வரை கேள்வி பதில்.. அவர்களின் வழக்கம் என இரு வேறு கலாச்சார பரிமாறல்கள் நடந்தேறியிருக்கும்..

குழந்தை பிறப்பு முதல் குழந்தை வளர்ப்பு பராமரிப்பு வரை அனைத்தும் அலசி காயப்போட்ட பின் வீட்டு நிலவரம் அறிய எத்தனித்தார் அவர். சொந்த வீட்டு நபர் பற்றி நாம் கூற.. அவரின் பட்டியலோ ரேசனுக்காக காத்திருக்கும் மக்களின் வரிசையைப் போல் நீளும். தந்தை வழி சொந்தம் அனைத்தும் ஒரே வீட்டில் ஒன்றாய் இருக்கும் அந்த பாங்கு அவர் சொல்லச் சொல்ல.. நம் விழி விரியும்.. ஏக்கப் பெருமூச்சு என்னுள் மேலோங்கும்..

காதல் திருமணமெனில் தன் ப்ரிவினரால் உண்டாகும் எதிர்ப்பு, ஜாதகம், இனம், பிரிவு சார்ந்த பற்று பற்றி விரிவாக எடுத்தியம்பும் அவர் பேச்சு.. மெல்ல எனை நோக்கி அந்த கேள்வி வீசப்படும்..

உங்கள் வீட்டில் நடந்த திருமணம் எப்படி...

எங்க வீட்டில் எதையும் பார்க்கவில்லை..

உங்களவர் எந்த ஊர்??

நம் நாடல்ல..

அப்படியெனில் எந்த பிரிவு?

அதை நாங்கள் பார்க்கலை..

எந்த மதம்?

அதுவும் எங்களுக்கு தெரியாது..

பின்னே உங்கள் இனமா??

என் முகத்தில் சிரிப்பை ஒட்டவைத்து பதிலுரைத்தேன்..
அனைத்தும் வித்தியாசம் தான்..

அப்போ ஜாதகம் பார்த்தீங்களா??

இல்லை.. இதயத்தைப் பார்த்தோம்..

புருவம் உயர்த்தி ஆச்சர்ய முகபாவத்தோடு ஒரு சில நிமிடம் அமைதி காத்தார். விடைபெற்று எழுந்து சென்றவர் அதன் பின் அது பற்றி பேசவே இல்லை.

புதியதோர் உலகம் செய்வோம்..!!

அன்புடன்,
பூமகள்.

Friday, September 3, 2010

பயணத் துணை..!!



உன் சுவடு விடுத்து
பல நூறு மைல்
பயணித்த வேளையில்..

அடுத்த பயணியாய்
நீ என் பின்னே..

விண் நோக்கி
விழி விரிய வைத்த
கணங்கள் என்
மனக் கண்ணில்..

தெரிந்தும் தெரியாதது
போல் சக பயணிகளோடு
நாம் இருவரும்..

விலக்க முயற்சிக்கும்
காந்த எதிர்புலங்களாய்
விழி முட்டி தவிர்க்கும்
வாழ்க்கையின் எதார்த்தம்..

இதழோரப் புன்னகையோ
விழியோர ஈரமோ
இருவரும் அறியாதபடி
கலைந்து இயல்பெனக்
காட்ட முயற்சிக்கிறோம்..

மண்ணில் காணக்
கிடைக்காதது..
ஏனோ விண்ணில்
கண்ட விந்தை..

எடுத்து அப்பிய
இறுகிய முகத்தை
இருவரும் காட்டி
அவசர கதி உடை
பூண்டு நகர்கிறோம்..

வலி மரத்த இதயம்
முன்னிலும் அதிகம்
வலித்தது அன்று..

ஒரு வார்த்தை
பேசியிருக்கலாமோ??

--- பூமகள்.