RSS

Sunday, August 31, 2008

வருகை..!!

முன் வருகையில்..
பிரிய மனமில்லை..

பின் வருகையில்..
இருக்க
மனமே இல்லை..

முன் வந்த பொழுது..
இரண்டு..

பின் வந்த பொழுது..
இருபது..

அந்நிய குடியுரிமை ரத்தத்தில்..
ஊறிப் போன
இந்தியக் குழந்தையின்..
இன்றைய நிலை..!!

உன் அழுகை..!

அழுது கொண்டிருந்தாய்
நான் உன்னை
முதன் முதலாக
பார்க்கையில்..

ஆதரவு கரங்கள் தேடி..
கைகள் அசைத்து..
கண்கள் இறுக்கி..
கண்ணீர் வழியாத
உன் அழுகை..

சோகத்துக்கு பதில்
மகிழ்ச்சியை வரவழைத்தது..

ஆம்..
அப்போது தான்
என் கைகள்
பூமியுடனான
உனது பந்தத்தை
எழுதி முடித்திருந்தது..


(மழலை மொட்டுகளை மலர வைக்கும் மருத்துவ பிரம்மாக்களுக்காக..!!)

Saturday, August 23, 2008

ந(ம்)ல் நட்பு..
ந(ம்)ல் நட்பூ...

பூவாகி மலர்ந்து மணம் வீசும் காலம்....
வாழ்வின் எல்லைக் கோடு வரை நீளும்..!!

அவற்றின் சுவாசப் பைகளில்..

சில்லரைச் சிதறல்களாக..
நம் சிரிப்பொலிகளைப் பதிவாக்கி
அவ்வப்போது குலுக்கிப் பார்க்கிறேன்..

சத்தமற்ற தனித்த பொழுதெல்லாம்..
நம் நட்பெனக்கு..
சத்தமெழுப்பி
இசைபாடி மகிழ்விக்கிறது..


பல மைல்கள் தொலைவிருந்தாலும்..
பேசி மாதங்கள் பல கடந்திருந்தாலும்..

சில காலம் நிரம்பிய உன்னை
பல நேரம் தினமும் நினைத்திருப்பேன்..

மனதினுள் வேண்டிக் கொண்டே
இருக்கிறேன்..
எனக்காக அல்ல
உனக்காக..


நம் உரையாடல்கள்..
நான் பேச...
நீ பதிலுரைப்பது..
மௌன மன படங்களாகவே
என் கண் முன் விரிகிறது..

உன் பதிலை
நானே யூகிக்கிறேன்..

என் பதிலை
நீயும் யூகித்திருப்பாய் என்ற
நம்பிக்கையில்..

புரிதலின் எல்லை
நாம் வரைந்த
கோடுகளையும் கடந்து நிற்கிறது..


உலகின் எங்கிருந்தாலும்
எனக்கான நட்பு..

மகிழ்வில் உன்னோடு
ஆரவரிக்கும்..
துயரில் உன்னோடு
தோள் கொடுக்கும்..

கலங்காதே என் நட்பே...!!

(என் தோழிக்கு சமர்ப்பணம்...!!)

Friday, August 8, 2008

செந்தமிழில் எண் கணிதம் - சொல்லாடல்கள்..!

பண்டைய தமிழர் காலத்தில் இருந்து வந்த எண்களை எப்படி தமிழில் அழைத்தார்களென ஒரு திருமண வாழ்த்து மடலில் கண்டேன்..

அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இலக்கம் - சொல்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அளவைகள்

@ நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

@ பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்


@ பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்


@ முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி


@ பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
__________________
--- பூள்.

மகிழம்பூ மனசில் பூக்கும் பூக்கள் எத்தனை..?!!


தமிழில் சங்க காலத்தில் வழங்கப்பட்ட மலர்களின் பெயர்கள் சமீபத்தில் ஒருதிருமண மண்டபத்தில் மணமக்களை வாழ்த்த கொடுக்கப்பட்ட புத்தகத்தில்அமைந்திருந்தது.படித்ததும் பூமனம் இதழ் விரித்து புன்னகைத்தது.. எத்தனை நாட்கள் இதனைத் தேடியிருப்பேன்..!


அந்த நறுமணத்தை உங்களில் வீச இதோ வருகிறது நூறு பூக்களின் அணி வகுப்பு..!!


ஒரு பூ காணலை… அதற்கு பதில் இந்தப் பூமகளை ஒன்றாக கருதிக் கொள்ளலாம் தானே??!!
 1. காந்தள்
 2. ஆம்பல்
 3. அனிச்சம்
 4. குவளை
 5. குறிஞ்சிப்பூ
 6. வெட்சி
 7. செங்கொடுவேரி
 8. தேமா
 9. செம்மணிப்பூ
 10. பெருமூங்கிற்பூ
 11. கூவிளம்
 12. எறுளம்பூ
 13. மராமரம் பூ
 14. கூவிரம்
 15. வடவனம்
 16. வாகை
 17. வெட்பாலைப்பூ
 18. செருவிளை
 19. கருவிளம்பூ
 20. பயனி
 21. வாணி
 22. குரவம்
 23. பச்சிளம்பூ
 24. மகிழம்பூ
 25. சாயாம்பூ
 26. அவிரம்பூ
 27. சிறுமூங்கிற்பூ
 28. சூரைப்பூ
 29. சிறுபூளை
 30. குன்றிப்பூ
 31. குருகலை
 32. மருதம்
 33. கோங்கம்
 34. மஞ்சாடிப்பூ
 35. திலகம்
 36. பாதிரி
 37. செருந்தி
 38. அதிரம்
 39. செண்பகம்
 40. கரந்தை
 41. காட்டுமல்லிகை
 42. மாம்பூ
 43. தில்லை
 44. பாலை
 45. முல்லை
 46. கில்லை
 47. பிடவம்
 48. செங்கருங்காலி
 49. வாழை
 50. வள்ளி
 51. நெய்தல்
 52. தாழை
 53. தளவம்
 54. தாமரை
 55. ஞாழல்
 56. மௌவல்
 57. கொகுடி
 58. சேடல்
 59. செம்மல்
 60. சிறுகும்குரலி
 61. வெண்கோடல்
 62. கைதை
 63. சிரபுன்னை
 64. கபஞ்சி
 65. கருங்குவளை
 66. பாங்கர்
 67. மரவம்
 68. தனக்கம்
 69. ஈஙகை
 70. இலவம்
 71. கொன்றை
 72. அரும்பு
 73. ஆத்தி
 74. அவரை
 75. பகன்றை
 76. பலாசம்
 77. அசோகம்
 78. வஞ்சி
 79. பித்திகம்
 80. கருதநாச்சி
 81. தும்பை
 82. துழாய்
 83. நந்தி
 84. நரவம்
 85. தோன்றி
 86. புன்னாகம்
 87. பாரம்
 88. பீர்க்கம்
 89. குருக்கத்தி
 90. சந்தனம்
 91. அகிற்பூ
 92. புன்னை
 93. நரந்தகம்
 94. நாகற்பூ
 95. நள்ளிருள்நாறி
 96. குறுந்தகம்
 97. வேங்கை
 98. எருக்கு
 99. ஆவாரம்பூ
குறிப்பு:

மொத்தம் எத்தனை பூக்கள் உள்ளன எனத் தெரியவில்லை.. ஏதேனும் தவறு அல்லது விடுபட்டிருந்தால் சான்றோர்கள் இங்கு சொல்லித் திருத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்..!

அந்நியமான அத்தியாயம்..!

பாதியில் எழுதப்படாமலே
விடப்பட்ட கதை
ஒன்று மீண்டும்
படிக்க முனைகிறேன்..

முதல் பக்கத்தின்
மூலையில் உடைந்து
சிக்குகிறது மனம்..

கொக்கி போட்ட
வார்த்தையாடல்களில்..
மீதியும் அகப்பட்டுக்
கொ(ல்)ள்கிறது..

பக்கங்கள் கடந்து போக..
தாயின் கைவிட்டுப் போகும்
குழந்தை போல..
விலக மறுத்து
முந்தைய பக்கத்திலேயே
மண்டியிட்டு அழுகிறது..

ஓராண்டு கழித்து
அடுத்த அத்தியாயம்
எழுத முற்படுகையில்..
புரிகிறது..
விலகிப் போன
எழுத்துகளுக்கும்
எனக்குமான
அந்நியம்..!

பிரமிட் தொழில் என்றால் என்ன?

பிரமிட் தொழில் என்ற தலைப்பைப் பார்த்ததும்.. எகிப்திலிருந்து பிரமிட் செய்து விற்கும் தொழில் என்று குழம்பிக் கொண்டு படிக்க வந்திருக்கீங்களா??

அப்படியெனில்.. உங்களுக்கு இந்தக் கட்டுரை பயனளிக்குமென நம்புகிறேன்... சமீபத்தில் ஒரு தினசரியின் இலவச இணைப்பில் படித்த ஒரு கட்டுரை என்னில் பல தெளிவுகளை ஏற்படுத்தியது.. அவ்வகைத் தெளிவை உங்களுக்கும் உண்டாக்க கடமைப்பட்டிருக்கிறேன்..

------------------------------------------------------------
பிரமிட் அல்லது சங்கிலித் தொடர் தொழில்கள்.. என்றால் என்ன??
அதாவது... மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் குறைவான முதலீட்டில் அதிக லாபம் ஏற்படுத்தும் ஒரு வகையான சூது தான் இது..

ஒருவரிடமிருந்து(கம்பெனி நிர்வாகி) ஒரு பத்து பேர் 1 கூப்பன் வாங்கினால், 10 கூப்பன்கள் அவருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அவர், அந்த 10 கூப்பனையும் அவருக்கு தெரிந்த 10 பேரின் தலையில் கட்டி(விற்று).. கம்பெனிக்கு கட்ட வேண்டும். அதில் ஒரு பகுதி லாபமாக 10 கூப்பனை விற்றவருக்கு செல்லும். அந்த 10 நபர்களிடமும் பத்து பத்து கூப்பன்கள் மேலும் வழங்கப்பட்டு.. அவர்கள் ஒவ்வொருவரும் தலா 10 நபர்களை கண்டுபிடித்து கூப்பன்களை விற்றால் தான் லாபம் பார்க்க முடியும்.. அதாவது.. 1, 10, 100,.... இப்படியாக கூப்பன் வாங்குபவர்களின் எண்ணிக்கை பன்மடங்காகிவிட்டுப் போகும்..

ஆரம்பத்தில் இவ்வகைத் தொழிலில் நுழைந்தவர்களுக்கு அதிக லாபம் கிட்டவே செய்தது.. ஆனால்... கடைசியில்.. சங்கிலி அறுபட்டு.. இறுதியில் சேர்ந்தவர்களுக்கு கூப்பன்கள் மட்டுமே மிஞ்சும்... இது மிகப்பெரும் மோசடி என்று பெரும் போர்க்கொடிகளே பல நாடுகளில் தூக்கப்பட்டு விரட்டப்பட்டிருப்பதாகவும் அறியப்பெற்றேன்.. உதாரணம் அமெரிக்கா.

உண்மையில் இந்த சங்கிலித் தொடர் தொழில் ஏன் ஒரு கட்டத்துக்கு மேல் நிலை தடுமாறுகிறது??


எளிய உதாரணம் சொல்ல வேண்டுமானால்,

ஒரு வெள்ளைத் தாளோ.. அல்லது ஒரு செய்தித்தாளின் ஒரு தாளோ எடுத்துக் கொள்ளுங்கள். அதனை இரண்டாக மடியுங்கள். மூன்றாக.. இப்படி மடித்துக் கொண்டே போனால்.. 7 மடிப்புகளுக்கு மேல்.. உங்களால் மடிக்கவே முடியாது.. மிஞ்சினால் கடினப்பட்டு.. சுத்தியால் அடித்தால்.. 8 மடிப்புகள் மடிக்கலாம்..

அதாவது... ஒருவரிடமிருந்து வாங்கிய கூப்பன்.. மற்றொருவர் 5 நபர்களுக்கு விற்கிறார்.. மேலும் அந்த ஐந்து நபர்.. ஒவ்வொருவரும்.. 10 நபர்களைத் தேடி ஓடுகின்றனர்.. அடுத்தடுத்த மடிப்புகளில்.. 6ஆவது மடிப்பில்.. இந்தியாவில் உள்ள அத்தனை நபர்களுக்கும் விற்றாலும்.. ஏழாவது மடிப்பில்.. உலகத்தினர் அனைவருக்கும் கூப்பன் விற்றாக வேண்டிய நிலைக்கு எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கும்.. இறுதியில் கூப்பன் வாங்கியவருக்கு... மிச்சமாக.. கூப்பன்கள் மட்டுமே மிஞ்சும்.. ஆனால்.. மேலிருக்கும் தலைமை முதலாவதான முதலாளிக்கு கோடிகோடியாக பணம் கொட்டும்..

இவ்வகை பண மோசடியை அறியாமல்.. பலர் இதில் இறங்கி.. உழைக்காமல் எளிதில் பணம் சம்பாரிக்கும் நோக்கில் உலவி.. அநியாயமாக பணமிழந்து திரும்புவது வேதனை...

இதில் சக உபரித் தொழிலாக.. வெளிநாட்டு சவரக் கட்டிகளும்.. முகப்பூச்சுகளையும்.. பல்துலக்கும் தூரிகைகளையும் கொடுத்து விற்கப் பணிக்கின்றனர்.. அதுவும்.. ஒரு பல்துலக்கும் தூரிகையின் விலை..100 ரூபாய்... நமக்கு வேப்பங்குச்சியே மேல் என்று தலை தெறிக்க மக்கள் ஓட்டமெடுப்பதையும் பார்க்கிறேன்..

அவ்வகை மல்டி லெவல் மார்க்கெட்டிங்.. ஆதாரமே ஆட்டங்கண்ட நிலையில்... இதனைக் குறித்த தெளிவான பார்வையை அக்கட்டுரை ஏற்படுத்தியிருந்தது..

சமீபத்தில் சன் செய்தி அலைவரிசையிலும் இவ்வகையான மோசடிக்கு ஆளான பலர் குறித்த ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்தது.. ஆகவே.. இவ்வகை தொழிலால் வரும் விளைவுகளை தெளிவாக்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதில் ஒரு மனநலமருத்துவர் அச்செய்தி குறித்து கருத்து தெரிவிக்கையில்..

"உழைக்க தயங்கும் சோம்பேறிகளும்.. எளிதில் பணக்காரர் ஆகவேண்டுமென்ற பேராசைக்காரர்களும் தான் இவ்வகை மோசடிகளுக்கு ஆளாகும் முக்கிய நபர்கள்"
என்று குறிப்பிட்டார்..

ஆகவே.. மக்களே.. இனி யாரேனும் இவ்வகையான கூப்பன்கள் கொண்டு உங்களை நெருங்கினால்.. மெல்ல என்னை நினைவு கூர்ந்து அறிவாளியாகி விடுங்கள்..!!