RSS

Friday, March 27, 2009

பூமி மணித்துளி(Earth Hour)

பூமி மணித்துளி(Earth Hour)


மனித இனத்தின் மகத்தான விஞ்ஞான வளர்ச்சியினால் பூமிக்கு உண்டாகும் கலக்கம் கொஞ்ச நஞ்சமல்ல...


அண்டார்ட்டிக் பனி உருகுதல் முதல்... ஓசோன் ஓட்டை வரை நம் எல்லைகளை நாம் விரிவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறோம்...


அத்தகைய பாதகத்தை ஒரு மணி நேரமாவது நிறுத்தி கொஞ்சம் பூமியை ஆசுவாசமாக மூச்சுவிட வைத்து அதன் இயல்பில் இருக்க வைக்கும் நோக்கத்தோடும் பூமியின் மேல் மனித இனத்தின் மாசுக்கேட்டை உணர்த்தும் வகையிலும் இந்த பூமி மணித்துளி அனுசரிக்கப்படுகிறது.


இதனை "World WildLife Fund" என்ற அமைப்பு உலகெங்கும் உள்ள ஒவ்வொரு தனி நபரையும், வியாபாரிகளையும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களையும் பூமி மணித்துளியை அனுசரிக்கக் கேட்டுக் கொண்டுள்ளது.


பூமி மணித்துளியின் நோக்கம் - பூமியின் மீது உண்டாகிவரும் தட்ப வெப்ப நிலை மாற்றத்தையும் அதற்கான தீர்வு காணும் உத்வேகத்தையும் உலகளவில் உருவாக்க வேண்டுமென்பதே.


இவ்வருடம், மார்ச் 28 ஆம் தேதி, இரவு 8.30 மணி அமெரிக்க நேரப்படி இந்த பூமி மணித்துளி நேரமாக அனுசரிக்க இருக்கிறார்கள்.அப்போது ஒரு மணி நேரம் பூமியில் உள்ள அனைவரும் மின்சாரத்தை நிறுத்தி எர்த் ஹவரை அனுசரிக்க வேண்டுமென சொல்கிறார்கள்.


ஆனா இது இந்தியாவுக்கு பொருந்தாது.. நாம தான் தினம் தினம் ஒரு நாலு மணி நேரமாவது இந்த எர்த் ஹவரை அனுசரிச்சிட்டு இருக்கோமே...!!


இன்னும் மின்சார வெளிச்சத்தையே காணாத ஏழை நாடுகளுக்கும் இவை பொருந்தாது.. பொருந்தும் நாள் விரைவில் வர வேண்டுமென்பதே என் பிராத்தனைகள்.


நல்ல விசயமாகபடவே.... நான் தயாராகிவிட்டேன்... அப்போ நீங்க??!!

Thursday, March 26, 2009

விஷமாகும் விளம்பரமும் தடுமாறும் குழந்தை மனமும்..!


கடந்த சில நாட்களாக ஒரு விளம்பரத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது...

கொஞ்சம் அதிர்ந்து போன நான் இது பற்றி எழுதியே ஆக வேண்டுமென்று தோன்றவே என் இப்பதிவு...

ஒரு ஐந்து வயது குழந்தை தன் தந்தையிடம் வந்து "அப்பா... நான் அழகா இருக்கனா?"

அப்பா, "நீ ரொம்ப அழகா இருக்கம்மா... "

குழந்தை உடனே, "பின்னே ஏன் ஸ்கூல்ல யாருமே என் கிட்ட பேச மாட்டீராங்க..."

உடனே தந்தை ஒரு புது காரில் தன் மகளை ஏற்றி பள்ளிக்கு வருகிறார்.. வழியில் போகும் சிறார் எல்லாம் அக்குழந்தையைப் பார்க்க...

பள்ளியில் இறங்கும் குழந்தை பெருமிதத்துடன் இறங்குகிறது... அருகில் வர பல சிறுவர், சிறுமியர் வட்டமிடத் துவங்குவர்...

ஒரு பெரிய கார் நிறுவனத்தின் இம்மாதிரியான விளம்பரம் கண்டு கொஞ்சம் அதிர்ந்து போனேன்..

எல்.கே.ஜிக்கு செல்லும் குழந்தைகளிடமே இவ்வகை பணக்கார மோகத்தை உருவாக்கி அவர்களின் சமத்துவத்தை பறிக்கும் நிலையாக இதைக் கருதுகிறேன்...

கார் இருந்தால் தான் மதிப்பார்கள்... என்ற பெருமிதம் கலந்த கர்வத்தை தவறாக சிறு வயதிலேயே வளர்க்க அனுமதிக்கும் செயலாகவே இதனை நான் கருதுகிறேன்..

அப்படியெனில் பள்ளிக்கு வரும் மற்ற கார் இல்லாத குழந்தைகளின் மன நிலை???


எங்கே சென்று கொண்டிருக்கிறோம்...

விதைகள் வெம்பும் முன் காத்தல் நம் கடமையல்லவா??

சிந்திப்போமா இனியேனும்...????!!

Thursday, March 12, 2009

இது நியாயமா??!!


இது நியாயமா?


என் எல்லா சொற்களையும்

உன் கன்னக்குழியில்

புதைத்துவிட்டு

மீண்டும் மீண்டும்

சொல்லச் சொல்கிறாயே..


இது நியாயமா??!!


இதயச் சிறையில்

இன்பமாய் அமர்ந்து

நிதம் எனை

சிறையிலடைக்கிறாயே..


இது நியாயமா??!!


நான் பார்க்கையில்

நீ பாராமல்

நான் பாராமல்

எனைப் பார்க்கிறாயே..


இது நியாயமா??!!


இப்பிறவி முக்தியாகுமென

நீ சிலாகிக்க..

ஏழு பிறவியும் போதாதென

எண்ண வைக்கிறாயே...


இது நியாயமா??!!Monday, March 9, 2009

தேன் கூட்டில் ஓர் நாள்...!

ஒரு பெரிச வாசல்.. அதன் முற்றமெங்கும் அலங்கார தோரணங்கள்.. அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள்.. எதையோ தீவிரமாக செய்யும் முனைப்பில்..

மிகப் பெரிய கதவின் முன்னால், ஓர் காக்கி உடுப்பு பணியாளர்.. பவ்வியமாக சிரித்து வணங்குகிறார்.. வண்டி நிறுத்திய இருவர்.. விவரம் பகிர்ந்து உள்ளே நுழைகின்றனர்..

வலப்புற அலுவலகம் நோக்கி அகக்காவல் பணியாளர் கை காட்டிய திசையில் நான்கு கால்களும் விரைகிறது..!!

மெல்லிய புன்னகையோடு ஒரு பெண் பொறுப்பாளர் வரவேற்கிறார்… அமரச் செய்து.. வருவதாகக் கூறி செல்கிறார்.

அமைதியான அந்த சின்ன அறையில்.. நான்கு விழிகளும் துலாவுகின்றன.. சுவர்களில் காட்டிய சித்திரங்கள்.. அறிவியலாளர் அப்துல் கலாம் முதல் முதல்வர் கருணாநிதி வரை வருகை தந்தமையைப் பறைசாற்றுகின்றன.. மனம் நெகிழ்ந்து அவர்களின் கண்கள் விரிகிறது..

சிறிது நேரத்தில் அப்பெண் வந்தமர்கிறார்.. “இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்ப ரெடியாயிருங்க..” என்ற ஒரு வாக்கியம் சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

சிறிது நேரத்தில் சமிஞை வர கிளம்புகிறார்கள் இருவரும்..!!

ஒரு பெரிய அறையினை நோக்கி பயணப்படுகிறது.. அங்கே பொறுப்பாளர்களில் முக்கியமானவர்.. இருவரையும் ப்ளாஸ்டிக் நாற்காலிகளில் அமரச் செய்கிறார்.

எதிரில் ஒரு பெரிய குழந்தைகள் கூட்டம்.. வரிசையாக அமர்ந்து சிரித்து, சிணுங்கி, எங்கோ பார்த்து பயந்து, தலை குனிந்து.. தலை நிமிர்ந்து… பக்கத்திலிருப்பவரைப் பார்த்து.. இப்படி பல விதங்களில் குழந்தைகள்..!!

மாலை 6.30 மணி ஆகியிருந்தது.. பொறுப்பாளர்.. கடவுள் வாழ்த்து பாடச் சொல்கிறார். அனைவரும் எழுந்து நிற்க..

அனைத்து விதமான புல்லாங்குழல்களும் ஒருங்கே எல்லா ராகத்தையும் வாசித்தால் என்ன சங்கீதம் பிறக்குமோ.. அவ்வகை சங்கீதம் இருவரின் காதுகளையும் அடைமழை அமுதமாக நுழைகிறது.

கண் மூடி நின்று பிஞ்சுகளுக்காக பிராத்தித்து விழிக்கையில்.. இருவரின் கண்களிலும் கண்ணீர் திரண்டிருந்தது.. அங்கே… உடல் குறைபாட்டினால் மனம் குறைபடாத குழந்தைகள்..

பாடிக் கொண்டிருந்த சில குழந்தைகளில்..

தனக்கென சுதி அமைத்த குழந்தைகள்.. பாடுவோரை வேடிக்கை பார்த்தபடியே.. மௌனத்தில் இசையமைத்த குழந்தைகள்.. இப்படி ஒவ்வொரு வடிவில்.. நூற்றுக்கணக்கான பிஞ்சுகள்..!

பிராத்தனை முடிந்ததும்.. பொறுப்பாளர் பேச ஆரம்பிக்கிறார்.

“திருவாளர் பெயர் கூறி, அவர்களின் இனிய உள்ளத்தால் இன்று நமக்கு இவ்வேளை உணவு பறிமாறப்படுகிறது. அவர்களின் குடும்பமும் அவர்களும் என்றும் வளமோடு வாழ பிராத்திப்போம்..!”

இப்படி கூறியதும்.. மறுபடி வானை எட்டும் குரலோசையில்.. வாழ்த்துப் பாடல் பாடப்படுகிறது..!! மெல்லிய குயில்களுக்குள் இத்தனை வலிமையா??!!

பார்த்துக் கொண்டிருந்த இருவரின் மனமும்.. ததும்பி பரவச நிலையில் உடல் சிலிர்த்து நிற்கிறது.

அதுவரைக் கண்டிராத ஓர் உன்னத நிலையில்.. குழந்தைகளின் மொழி கேட்டு கற்பாறை உடைந்து கண்கள் கலங்குகிறது. பாடுவது நமக்காக என்ற பெருமிதத்தில் அல்ல.. பாடப்படும் அக்குழந்தைகளின் உள்ளதினைக் கண்டு..!!

பொறுப்பாளர் பேச அழைக்கிறார். இவருவருமே வார்த்தைகளற்ற மௌன நிலையில் அசைவற்று நிற்க.. அங்கே 'நா' எழ மறுத்து அழ வைக்கிறது.

தலையசைத்து இருவரும் மறுக்க, பிராத்தனை முடிக்கப்படுகிறது.

“ அக்கா… உங்க பேரு என்னக்கா??” ஓடி வந்து கை கொடுக்கும் ஆவலோடு சின்ன சின்ன மழலை முத்துகள்..!!

“என் பேரு… ****** உங்க பேரு என்ன? என்ன படிக்கிறீங்க??” இருவரில் ஒருவர் கேட்க.. கை பிடித்து குலுக்கிய மகிழ்ச்சியில்.. மழலை கண்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.

முறைத்த படியே சில குழந்தைகள்… பார்த்து பயந்தபடியே சில குழந்தைகள்:.. அழகாக சிரித்து பேச விரும்பிய சில குழந்தைகள்.. இன்முகத்துக்கு பூட்டிட்டு.. சலிப்புப் பார்வையில் சில பிஞ்சுகள்..!!

அப்பப்பா.. எத்தனை எத்தனை பரிதவிப்புகள் ஒவ்வொருவர் முகத்திலும்..??!!

இருவர் உள்ளமும் இனம் புரியாத புதிய உணர்வில் சிலிர்ந்து நிற்கிறது..

இரவுணவு பரிமாற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வரிசையாக குழந்தைகள் தட்டெடுத்துக் கொண்டு அமர்கிறார்கள்.. . நம் கையால் பரிமாறி, பிஞ்சுகள் உண்பதைப் பார்க்க கண் கோடி வேண்டும்.. அத்தகையதொரு பரவச உணர்வு பெற்ற மகிழ்ச்சியுடன் இன்முகம் மாறாமல் “லட்டு” இனிப்பு இருவராலும் பரிமாறப்படுகிறது.

ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் ஒன்றாக அமர்ந்து மலர் வனத்தில் தேனமுதை உண்பதைப் போல ஒரு தோற்றம்..!!

இரு முதிய பாட்டிகள்..!! அவள் பார்க்க.. கண்கள் அறியாமலே கலங்கி நிற்கிறது. குழந்தைகளும் முதியவரும் ஒன்றே தான்..!!

பரிமாறி முடிந்ததும்.. சுற்றிக் காட்டப் படுகிறது..!! அழகிய வகுப்பறைகள்.. பூச்செடிகள்.. கிளிகள்… படுக்கை அறைகள்..

எல்லாம் கடந்து அவர்களின் அன்பான மனம்.. எதையெதையோ சொல்லாமல் சொல்லிக் கொடுத்திருந்தது.

விடைபெற்று கிளம்புகின்றனர்.. இருவரும்..!!

போக மனம் இல்லாவிடினும்.. பயணம் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.

முற்றத்தில் அழகிய வண்ணக்கோலம் போடத் தயாராகும் பெண்கள்..!! ஏற்கனவே, வண்ண எண்ணங்களால் மனம் நெகிழ்ந்த இருவரும்.. மகிழ்ச்சியோடும் ஒரு வித துயரம் அப்பிய கணத்த மனத்தோடும் வெளிப்படுகின்றனர்.

நேரம் 7.30.. மணி…

ஒரு மணி நேரப் பயணத்தின் போதும்.. ஒன்றுமே பேசாமல் அந்தி வானம் பார்த்தபடியே பயணம் தொடர்கிறது.

கீழ்வானத்தில் சூரியன் உறங்க… விழிப்பு நிலையில் மனத்தினுள் மனசாட்சி ஓங்கி பேசியபடியே வந்தது..!!

உடம்பை உரசிய தென்றல் காற்று… மனத்தினுள் சுகந்த உணர்வையும் ஏற்படுத்தத் தவறவில்லை..!!

குழந்தைகள் காப்பகத்திலிருந்து இத்தனை உணர்வையும் ஆட்கொண்ட இருவரும்.. கடைசியில் பூவின் இல்லம் அடைய..

அது வரை நிகழ்ந்த அத்தனையும் அம்மாவிடம் ஒப்புவிக்கும் பூவைப் பார்த்த தந்தை மென்சிரிப்போடு மௌனமாகி ரசிக்கிறார்..!!

(முற்றும்)

--
பூமகள்.

Sunday, March 8, 2009

நேரம்...

நேரங்கள் மட்டுமே
நிரம்பி வழியும்
கோப்பைகளுக்குள்
தத்தளிக்கிறது மனம்..

நிற்கவோ,
நடக்கவோ
நேரமில்லை...

ஓடியபடியே
குடித்துப் போகிறேன்
ஒவ்வொருமுறையும்
நிமிட பானங்களை..

அவதியில் குடித்ததால்
அஜீரணமாகின்றன..
சில கசப்பான பொழுதுகள்..

இருந்தும்
எல்லாரும் போலவே
நிற்காமல் ஓடி
நேர பானத்தைக்
குடித்து வைக்கிறேன்
நானும்...!!

---------------------------
பூமகள்.

ஸ்பரிசம்....

துணை இல்லாமலே

தவிழ்ந்த வயதில்

தாமே எழுந்து நடந்ததை

வியந்து உச்சி முகர்ந்ததிலும்..


ஓடி விளையாடி

களைத்து திரும்பி

முந்தானை வாசத்தில்

தலை சாய்கையில்

சிகை கோதுகையிலும்..


புரியாத உன் பாசம்..

நீ பொக்கை வாயுடன்

முத்தம் கொடுக்கையில்

புரிந்தது என் செல்ல

அம்மாயி..


நீ இல்லாத வீட்டில்

உன் ஸ்பரிசத்தை

உணர

அதே மருதாணி மரத்தை

கட்டியபடி நான்..

__________________

-- பூமகள்.


Friday, March 6, 2009

வழி விடுங்கள்

வழிவிடுங்கள்..

வேகாத வெயிலில்
வெந்து போன காலுடன்
பாரமிழுத்தபடி சாலை கடக்க
பெரியவர் வர கூடும்..

கூடை நிறைய
வத்தல் பொட்டலங்கள் கொண்டு
வதங்கிய முகத்துடன்
வயதான மூதாட்டி
நீரருந்த வரக் கூடும்..

வழி விடுங்கள்..

அபலை மனிதத்தை
குற்றுயிராக்கி
காசு பார்க்கும்
கயவர் கண் படாத படி
அவர்கள் செல்ல

வழி விடுங்கள்...

-----------
-பூமகள்.

Tuesday, March 3, 2009

பொழுதுகள்..

போகும் ஒவ்வொரு
கணமும் சொல்லும்
இழந்து விட்ட காலத்தையும்
இழக்கப் போகும் காலத்தையும்..

அந்த பொழுதின்
நிரந்தரமற்ற தன்மையில்
நிரம்பியிருக்கும்
நிதர்சனத்தின் நிழல்..

உழைக்காமல் தூங்கும்
திண்ணை தூங்கிகளின்
வாழ்க்கையில்
இல்லாமலே போகும்
இவ்வாறான பல
'வெட்டி'ப் பொழுதுகள்..

இவ்வகை
வெறும் பொழுதுகளை
வெட்டினவர்களே
காலத்தின் பொன்னேட்டில்
வாழ்பவர்கள்..!!

_______________
பூமகள்.

Monday, March 2, 2009

இல்லைகளின் இருப்பில்...
இல்லைகளின் இருப்பில்..

"அம்மா பால்.."
சத்தமில்லை..

'டண் டண்' எனக்
கதவு தட்டும்
கூர்கா தடியில்லை..

'தொப்' எனத்
தடுப்புச் சுவர் தாண்டி
வந்து விழும்
செய்தித்தாளுமில்லை..

சன்னலோர
தென்னையுமில்லை..

வாசலில் வரவேற்கும்
அவசரக் கோலமுமில்லை..

அடிக்கடி அம்மாவீடு போகும்
'மின்சார மனைவி'யுமில்லை..

எப்போதாவது
தண்ணீர் கேட்டு
கதவு தட்டும்
ஊமைப்பாட்டியுமில்லை..

முல்லைப் பூப் பந்தலில்லை..
நெல்லி மர நிழலுமில்லை..

இல்லைகள் நீண்டு
தன் இருப்புகளை
உணர்த்தியபடியே
இருக்கின்றன..

இவ்வெல்லா
இல்லைகளுக்குள்ளும்
ஒளிந்த படியே
தாய் வீட்டு நினைவுகளும்
இல்லையில் அழுத்தமாக
இருந்த படியே.....!!__________________
-- பூமகள்.