RSS

Tuesday, July 27, 2010

இல்லாத இல்..!


இருளோடு இயைந்து
இமை மூடும்
நேரத்தில்
கனவுகள் தொலைத்து
ஒரு பயணம்..

வேரோடு பெயர்த்தெடுத்து
புகுந்த வீட்டில்
வேர்விடும் முன்னே
தாக்கும்
வெட்டுக் கிளிகளின்
விடம்
அன்பிலை பரப்பாமல்
அழிக்கப் பார்க்கும்...

நிம்மதியை நாடி
நிதம் நினைத்து
பதமாக புறப்பட்ட
நாட்களெல்லாம்
கானலானது
கண் முன்னே..

அதிகாலை
அவசர அவதியில்
அப்பாவோடு
போட்டிக்கு நின்று
முதலாய் கிளம்பிய
நாட்கள் கனவில்
நடைபயின்றபடியே..

இளைப்பாற ஓடி
தினம் சாயும்
நாற்காலிச் சண்டை
இனி இல்லை வீட்டில்..

அந்நிய நாட்டிலிருந்து
ஆசையாய் வந்தாலும்
இல்லத்தரிசி என்ற பட்டத்துடன்
இல்லம் மாறியதும்
அந்நியமாகி
மறைந்து போகின்றது
அனைத்துமே..!


--பூமகள்.

Monday, July 19, 2010

ஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு

பொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவர்கள் மறந்தார்கள் என்று எண்ணத் தோன்றியது. ஆகவே, அனைவரும் அறிய இப்பதிவு.

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 2 கிண்ணம் (நீரில் நன்று 3 அல்லது 4 முறை கழுவி தண்ணீரை வடித்து வெகு சில துளிகள் தண்ணீருடன் சிறிது உப்பு சேர்த்து 10 மணி நேரம் ஊற வைக்கவும். இடையிடையே ஜவ்வரிசியை குளிக்கி/பிரட்டி வைக்கவும்)

உருளைக்கிழங்கு - 3 பெரியது (சிறிது உப்புடன் வேக வைத்தது).
எண்ணெய் - 3 மேஜைக் கரண்டி
பெருங்காயப்பொடி - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
வறுத்த நிலக்கடலை - ஒரு கை
எலுமிச்சை - 1
சர்க்கரை - 1.5 மேஜை கரண்டி
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - ஒரு துண்டு
கருவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்குகளை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வறுத்த நிலக்கடலையோடு இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து இரு சுற்றுகள் வெகு சில வினாடிகள் மிக்சியில் பொடித்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலை முழுவதும் பொடியாகாமல் பாதி உடைந்து இருக்க வேண்டும். பின், வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், வெந்தயம், பெருங்காயத் தூள் ஆகியவற்றைப் போட்டு தாளித்து பின் கருவேப்பிலையைப் போட்டு வதக்கிய பின் அரைத்து வைத்த கலவையைப் போட வேண்டும். பின் உருளைக் கிழங்கு துண்டுகளை அதில் சேர்த்து நன்கு பிரட்டி வதக்க வேண்டும். இதில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளர வேண்டும். பின், அடுப்பை நன்கு குறைத்து சிம்மில் வைத்து ஜவ்வரிசியைச் சேர்த்துத் தேவையான அளவு உப்பு சேர்த்து மெல்ல கிளற வேண்டும். அதில் எலுமிச்சையைப் பிழிந்துவிட வேண்டும். அதிக நேரம் கிளறினால் ஜவ்வரிசி பசை போல் ஆகி வாணலியில் ஒட்டிக் கொள்ளும். ஆகவே, குறைவான சூட்டில் சில நிமிடங்கள் கிளறி கொத்தமல்லி இலையை கடைசியில் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

எல்லாப் பொருட்களும் முன்பே சமைத்தவை.. ஆகவே, மிதமான சூட்டில் ஜவ்வரிசி வதங்கினாலே வெந்துவிடும். அதிக நேரம் ஜவ்வரிசியை ஊற வைத்திருப்பதால், அடுப்பில் அதிக நேரம் கிளற வேண்டிய அவசியம் இல்லை..

சமைத்துப் பாருங்கள்.. கட்டாயம் அடிக்கடி செய்வீர்கள். இதனை வட நாட்டு இந்தியர்கள் விரதம் இருக்கும் காலங்களில் விரதம் முடிந்த பின் உண்பார்களாம். செஞ்சு தான் பாருங்களேன்.

குறிப்பு: நான் இரு முறை செய்து சுவையாக உண்ட பின்னே தான் சொல்கிறேன்.. தைரியமாக செய்யுங்க.. ;-)