RSS

Monday, July 7, 2014

நீங்கள் எத்தனை அழகானவர்??!!

நீங்கள் எத்தனை அழகானவர்??!!

எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையுடையோருக்கான மதிப்பும் அங்கீகாரமும் கொஞ்சம் நிறம் குறைந்த, மாநிறத்தில் இருப்பவர்களுக்குக் கிட்டுவது அவ்வளவு எளிதல்ல.

"கருவாயா", "கருவாச்சி" என்ற பட்டப் பெயர்கள் கொண்டு சிறு பிராயம் முதல் வளரும் குழந்தைகளின் மன நிலை எத்தகையதாக இருக்கும்??!!

நம்முடைய உடலும் உடல் கொண்ட உறுப்புகளும் செல்களும் நிறம், வடிவம், உயரம் என எல்லாமும் நம் பெற்றோர் முதல் முன்னோர் வரையானவர்களின் வடிவமைப்புதான். இதில் அழகாய் பிறந்ததற்கும், அழகாய் இருப்பதற்கும் ஒன்றுமே செய்யாத நாம் பெருமை கொள்ள என்ன இருக்கிறது??!! அறிவியல் ரீதியாய் பார்த்தாலும் மாநிறமான, கருத்த நிறமுள்ளவர்களை விட சிவந்த நிறமானவர்களுக்குத் தான் சூரிய ஒளியாலும் இன்ன பலவாலும் தோல் சம்பந்தமான பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்..

பெண் பார்ப்பதில் நமது முதல் எதிர்பார்ப்பு நல்ல நிறமான மணப்பெண் வேண்டும் என்பதே. புற அழகை மட்டுமே முன்னிருத்தி தேடப்படும் இன்றைய சூழல் பெரும் முதலாளிகளுக்குக் கொண்டாட்டமாகிறது. பல வண்ணங்களில் விதவிதமான கெமிக்கல் பூச்சுகள் விற்பனைச் சந்தையாக நம் நாடு மாறிவருவதற்கு முதல் துவக்கம் இந்த அழகு சார்ந்த நமது புரிதலே. நிறம் ஒரு தகுதியல்ல. படித்தவர், படிக்காதவர் என்ற பேதமின்றி இன்று ஒருவர் தன் உழைப்பாலும் முயற்சியாலும் தன் வாழ்வில் எத்தனை முன்னேறினாலும் அவருடைய நிறம் கருப்பாகவோ, மாநிறமாகவோ இருந்துவிட்டால் அதை ஒன்றையே காரணம் காட்டி எள்ளி நகையாடுவதும் நடக்கவே செய்கிறது..

அழகு அகம் சார்ந்த விசயம் என்பது அந்த காலத்து மனிதர்கள் வாழ்ந்து காட்டி புரியவைத்தார்கள்.. நல்ல நிறமான, உயரமான அழகான தாத்தாவுக்கு சற்று கருத்த, உயரம் குறைந்த ஒரு பெண்ணை மணமுடித்து அவர்களுக்கு ஐந்து குழந்தைகளுடன் மகிழ்வாக வாழ்ந்தார்கள்.. அங்கே அகம் சார்ந்த அழகே வாழ்வை செழிப்பாக்கியது.,

அழகு குறித்த நமது தெளிவு மாறினாலொழிய நம் ஊரில் ஒவ்வொரு மனங்களிலும் ஊறிப்போயிருக்கும் நிறவெறி மறையாது..

இனி ஒருவரை எங்ஙனம் பார்ப்பீர்கள்??!!  புற அழகையா? அக அழகையா??!!

-- பூமகள்.