RSS

Friday, November 18, 2011

இனிய உளவாக..!!


இனிய உளவாக..!!

இன்சொல் - இந்த வார்த்தையையே இக்காலத்தில் மறந்துவிட்டோமோ என்ற பயம் இந்த முறை இந்தியப் பயணத்தில் தோன்றியது.
வரவேற்பாளர்கள் முதல் செவிலியர் வரை அனைவரிடத்தும் கண்டதும் வருத்தமும் தோன்றியது. அழகாக, கனிவாக பேசுபவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்..
எல்லாரும் ஏதோ ஒரு இறுக்கம் சூழ்ந்த உலகில் தன்னை சிக்க வைத்த மூச்சு முட்ட வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு பிரம்மை எனக்கு எழுந்தது..

காரணங்களை ஆராய முற்பட்டேன்..

இக்கால பரபரப்பான சூழ்நிலை..
தன் மதிப்பை நிலை நாட்ட..
பொறுப்பற்ற மனநிலை..
அற்பணிப்பற்ற பணி..
மேலிடத்தின் நெருக்கடி..

இப்படி பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போனாலும்.. விருந்தோம்பலுக்கும், மரியாதையும் அன்பும் கலந்த மொழியாளுமைக்கும் பெயர் பெற்ற நம் ஊரிலா இந்நிலை என்று
வருத்தமாக இருக்கிறது.

ஒரு சிறிய உதாரணம்..

ஒரு வரவேற்பாளினியை முக்கியமான ஒரு சான்றிதழுக்காக தொடர்பு கொள்ள நேர்ந்தது.. சரியாக பதில் சொல்லாமல் பட்டும் படாமல் பதிலளித்தவாறு இருந்தார். எப்படியோ நான் வருவதற்கு இன்னும் இரு நாட்களில் தயாரித்துத் தருவதாகச் சொல்ல.. நானும் அவருக்கு பத்து நாட்கள் முன்பே நினைவூட்டினேன்.
தேதி முதற்கொண்டு அனைத்தையும் தெளிவாக சொன்ன நிலையிலும்.. அவர் இரு நாட்கள் முன்பு நினைவூட்டுங்கள் என்று பதிலளித்தார். சரி என்று சரியாக 2 நாட்கள் முன்பு நினைவூட்ட மறுபடி அலைபேச, அவரோ.. நீங்கள்
வரும் நாளுக்கு முந்தைய நாள் நினைவூட்டுங்கள் என்று சொன்னார். நான் மறுபடியும் அடுத்த நாள் காலை அலைபேசியில் நினைவூட்ட.. மதியத்துக்கு மேலும் நினைவூட்டுங்கள் என்று பதில்.. எரிச்சலும் கோபமும் வந்தாலும் எனது
முக்கிய தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பதால் மனதை அமைதியாக்கிக் கொண்டு மீண்டும் மதியம் அழைத்து நினைவூட்ட.. பின் அடுத்த நாள் காலையில் கண்டிப்பாக இது பற்றி மேலதிகாரிக்கு புகார் சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டே
சென்ற என்னிடம் நன்றாக பேசி கொடுத்து விட்டார்கள்.. ஒருவேளை நான் கோபத்தில் திட்டிவிடுவேனோ என்ற பயமோ என்னவோ தெரியவில்லை.. சொன்ன நேரத்துக்கு முன்பாகவே போன என்னைப் பார்த்து மகிழ்ந்துவிட்டார்கள் என்பது நேரத்துக்கு யாரும் வருவதே இல்லை என்ற புலம்பல் மூலம் எனக்கு பின் தான் தெரியவந்தது.

ஆனால் இதே இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் கட்டாயம் பெரிய தகராறு வந்திருக்கும்.. வயதில் மூத்தவர் என்ற மரியாதைக்காக ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே போல் பேசிய என்னிடம் மட்டும் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று தான் எனக்கு புரியவில்லை..

இது போலவே மருத்துவரைக் காணச் செல்கையிலும் எரிச்சலான பதிலை செவிலியரிடம் இருந்து பெற நேர்ந்தது.. எல்லாருக்கும் பிரச்சனை சகஜம் தான்.. ஆனால் இவ்வாறு எரிச்சலோடும் சிடுசிடுப்போடும் பதில் சொன்னால் அந்த இடத்தில் அமருவதற்கான தகுதியை அவர்கள் இழக்கிறார்கள் என்று தானே பொருள்..

நம் மொழி அழகானது.. அதனை முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், மக்களை நேரடியாக சந்தித்துப் பணியாற்றும் வகை வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பணிக்கான தகுதியுடனும் பயன்படுத்த வேண்டும். நம் பேச்சு தான் நம் மரியாதைக்கான முதல் படி. அதனை தவறாகப் பயன்படுத்தினால் மிஞ்சுவது அவமானமே.

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று."

-கனிவுடன் பூ.



Friday, October 14, 2011

புரட்டாசியும் புன்னகைக்கும்..!! - 2


பூக்கள் நிறமிழக்கின்றன - உன்
குளிர்கூந்தல் விடுத்து
கோடை பதம் சேர்ந்ததால்..!


-பூமகள்.


புரட்டாசியும் புன்னகைக்கும்..!!


பாதி எழுதிய பல்பம்..
எழுதாமலே பழுதான ஃபவுன்டன் பேனா..
தொலைந்து போன பொம்மை அழிப்பான்..
தேடிப் பிடித்தேன் அம்மா வீட்டில்.. - நான்
உன்னில் தொலைந்ததை அறியாமல்..!!


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


விண் தாண்டும் வேலையின் கடிது - உன்
உளக்கண் தாண்டும் வேலை..!!

-பூமகள்.


Saturday, June 11, 2011

நட்பு..!!



தீராது பேசி
தீண்டிய நட்பொன்று..
தீயாய் பறக்கிறாள்..
காகிதத்தை இரையாக்க....

பொழுதெல்லாம் பிரியாமல்..
விழுதாகத் தொடர்ந்தவள்..
தன் வீழ்ச்சிதனை சுமந்து
தலைகாட்ட மறுக்கின்றாள்..

நகை கொடுக்கும் அமுதவாய்க்காரி..
நெஞ்செங்கும் நெருங்கியவள்..
கல்யாணம் கண்டதும்
கல்மனம் காட்டுகிறாள்..

இருந்தாலும் நீயின்றி
ஓர் நினைவும் இல்லையடி..
வாழ்க்கைச் சுழற்சியிலே
சந்திப்போமா சொல்லடி...!!

--பூமகள்.


Thursday, May 19, 2011

அறிமுகமில்லாதவள்..!!



அவசரம் பூசி
அவதியாய் பேருந்தேற..

நடுவயது யுவதி
நட்பில் மலர்ந்தாள்
இதழ்..

நட்பு காட்ட
என் கையிலும்
மழலைச் சிரிப்பு..

நல்ல ஆங்கிலம்
பேசும் சீனப் பெண்
அவள்..

ஹோம் அலோன்
படத்தில் புறாக்களுக்கு
உணவூட்டும்
தாய் முகம் நினைவூட்டியது
அவள் முகம்..

பேருந்தேறும்
அனைவரோடும்
பேசினாள்..

அன்பு, கண்டிப்பு
என அளவாய்
வாயாடினாள்..

முதியவரும், இளைஞனும்
ஒருங்கே ஏற..
இளைஞன் இருக்கையை
எழுப்பி முதியவர்
அமரச் செய்தாள்..

எதிரமர்ந்து நாம்
தலையசைக்க..
எதையெல்லாமோ
புலம்பினாள்..

கால் பட்ட புண் காட்டி..
அலைபேசி படம் காட்டி..
அருகமர்ந்த குழந்தை மிரட்டி..
என் மழலை அடம் நிறுத்தி..

இப்படியாக
அவள் வாய் மட்டும்
ஓயவே இல்லை..

திடீரென எனைப் பார்த்து,
இந்தியரா என்றாள்..
என் பதிலசைப்பில்..
"செக்சன் இலக்கம் பகர்ந்து,
பெண் கொடுமை,
வரதட்சணை சட்டம் தெரியுமா?"
என்றாள்..

அவளளவு சொல்ல
தெரியாததால்
தெரிந்தும் தெரியுமென
சொல்ல வெட்கப்பட்டது
மனம்..

ஏதேதோ பேசி..
காற்றில் பாதி கரைய..
மீதி எங்களுக்கு புரிய..
இறங்கும் இடம் வர..
விடைபெற்றாள்..

அருகிருப்போர் மிரட்சியில்
சொன்னார்கள்..
அவள் ரொம்ப பேசுகிறாள்..
பைத்தியம் போல..

எனக்கும் மட்டும்
அன்பும் கண்டிப்பும் மிகுந்த
அற்புத ஆசானாகத் தான்
அறிமுகமாகியிருந்தாள் அவள்..!!

--பூமகள்.





Tuesday, May 3, 2011

தோர்(Thor) - திரை விமர்சனம்




நேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்..

படத்தில் அசத்தல் நடிப்பை வெளிக்காட்டினர் அனைவரும்.. படத்தை பத்து நிமிட தாமதத்தில் பார்த்ததால் முதல் சண்டைக் காட்சியைக் காணும் வாய்ப்பை இழந்தேன்.

வெகு நாட்களாகவே எல்லோராலும் பலத்த எதிர்பார்ப்பைக் கொண்ட படம் தோர். இது போன்ற படங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமென்றாலும்.. வன்முறை அதிபயங்கரமாக இருந்ததால் பெரியவர்களே சில இடங்களில் பயப்படலாம்.. நான் சொல்வது வளர்ந்த குழந்தைகளாகவே இருக்கும் பெரியவர்கள்..



வேற்று கிரகத்தில் ஒரு தந்தை அரசராகவும், அவரின் இரு மகன்களும் இருக்க..அரசராகும் வாய்ப்பு இருவருக்கும் இருக்கிறது என்று சொல்கிறார் தந்தை.. கோர முக எதிரி வம்சத்தை அழிக்க தன்னிடம் தந்தை கொடுத்த சக்தியை அவசரப்பட்டு பயன்படுத்தி தன் குழுவோடு எதிரிகள் கிரகம் செல்லும் மூத்த மகனான ஹீரோவும் அவருடன் செல்லும் தம்பி மற்றும் குழுவும் போடும் சண்டை கண்ணுக்கு விருந்து..

மகனை இழக்கும் நிலை வர.. தந்தை வந்து மகனைக் காப்பாற்றி தன் கிரகத்துக்கு உடன் அழைத்துச் சென்று.. அவர் அளித்த பல சக்திகளையும், பல சக்திகளை உள்ளடக்கிய சுத்தியலையும் பிடுங்கி பூமிக்கு எறிகிறார் தந்தை. மகன் சாதாரண மானிடனாக விழ, சுத்தியலோ வேறொரு இடத்தில் மணலில் பதிந்து விடுகிறது.. அதைச் சுற்றி வட்டமாக பெரும் பள்ளவடிவ வளையமே ஏற்பட.. அவ்வழியே வருவோர் போவோர் எல்லாம் வந்து அந்த சுத்தியலை எடுக்க படாத பாடு படுவது நகைக்க வைக்கிறது..



சாதாரண மானிடனாக விழும் நம் ஹீரோ கிரிஸ் ஹேம்ஸ்வொர்த் என்ன பாடு படுகிறார்.. தன் ஹீரோயினியை சந்தித்தாரா.. காதல் வயப்பட்டாரா.. அந்த சுத்தியலை அடைந்தாரா.. கோர முக சிவப்பு கண் எதிரிகளால் அவர் கிரகத்துக்கு வரும் ஆபத்து என்ன.. அதை எப்படி முறியடிக்கிறார்.. கதாநாயகனும் கதாநாயகியும் இறுதியில் சேர்ந்தார்களா.. என்பவற்றை திரையில் கண்டால் தான் சுவைகரமாக இருக்குமென்பதால் கதைச் சுருக்கத்தை இதோடு முடிக்கிறேன்.. இனி விமர்சனத்துக்கு வருகிறேன்..

ஒற்றைக் கண் அரசரான தந்தையாக வரும் நடிகர் நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவரின் மூத்த மகன் தான் நம் ஹீரோ.. சொல்லவே வேண்டாம்.. கட்டுமஸ்தான தன் உடம்பாலும் அமைதியான அதே சமயம் வீரமான நடிப்பாலும் அசர வைக்கிறார்.. மாய ஜாலக் கதைகள் வீடியோ கேமாக வந்தது போல் இருக்கும் இப்படத்தைக் கண்டால்..



வானவில் போல் கடலுக்கு மேல் இருக்கும் பாலம்.. அதைக் கடந்து போனால் வேற்று கிரகத்துக்கு செல்ல உருளும் உருளை வடிவ கருவி.. அதற்கு காவலாளியாக இருக்கும் இன்ரிஸ் எல்பா.. இவர் நடிப்பும் அசத்தல்.தீ கக்கும் முகமற்ற இயந்திர மனிதன் என என்னைக் கவர்ந்தவை ஏராளம்..

கதாநாயகி சிறிது நேரமே வந்தாலும் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இவர் தந்தை மற்றும் தங்கை நல்ல நகைச்சுவையைக் கொடுத்திருக்கிறார்கள் சில இடங்களில்..

முப்பரிமாணத்தில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பார்த்து சொல்லுங்கள்.. டிஜிட்டலில் பார்த்ததால் படத்தின் பின்னணி இசை மிரட்டுகிறது.. நல்ல துல்லியமான படமும் சேர்த்து அசத்துகிறது..

நல்ல உழைப்பு தெரிகிறது.. இன்னும் கொஞ்ச நேரம் படம் இருந்திருக்கலாம்.. அப்படி இருந்தது படம்.
__________________
-- பூமகள்.


Sunday, May 1, 2011

உழைப்பாளர் திருநாள் வாழ்த்துகள்..!!




உலகம் துவங்கிய காலம் முதல்..
பாறை கல்லாகவும்..
கல் மணலாகவும்..
மணலில் உயிர் உருவாகவும்..

உயிர் அமீபாவாகவும்..
அமீபா இருசெல்லாகவும்..
இருசெல் பல்லுயிராகவும்..

எல்லாமும் ஆக..
எல்லாவிடத்தும் என்றும்
இருந்து கொண்டே இருப்பது..

இன்றும்.. என்றும்..
உருவாக்கங்களின் பின்னால்
உருவமற்று ஒளிந்திருக்கும்
ஓர் அற்புதம்..
உழைப்பு..

அவ்வுழைப்பின் மகத்துவம் போற்றாதோர் யாருளர்??

சாக்கடை அள்ளுபவர் முதல்..
சால்னா செய்பவர் வரை..

வீதி கூட்டுபவர் முதல்..
பத்தி விற்பவர் வரை..

தார் சாலை போடுபவர் முதல்..
கூரை போடுபவர் வரை..

படிப்பவர் முதல்..
படிப்பிப்பவர் வரை..

உழுபவர் முதல்..
பயிர் அறுப்பவர் வரை..



இன்னும் ஆயிரம் ஆயிரம் வேலைகள் தன் கடமை தவறாது உழைக்கும் மனிதம் ஏராளம்..

எல்லாரிடத்தும் குவிந்து கிடக்கும் உழைப்புக்கு என் வாழ்த்துகள்..!!


உலகத்தினைப் புரட்டிப் போடும் வன்மை கொண்ட உழைப்பை சீரிய முறையில் சிறப்புற செய்யும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த உழைப்பாளர் தின வாழ்த்துகள்..!!

உலகம் உண்மை உழைப்பாளர்களை என்றும் வணங்கட்டும்..!!

--பூமகள்.

Tuesday, April 19, 2011

நிறப் பிரிகை..!!




வானவில்லின் நிறம்
பற்றி ஆயிரமாயிரம்
கேள்விகள்..

ஊதா துவங்கி
சிவப்பு வரை விடைகள்
முற்று பெற்றாலும்
முற்று பெறாத
கேள்வியின் நிறங்கள்..

வானவில்லில்
ஊஞ்சல் ஆடி,
ஒரு முனையேறி
மறுமுனை விழுந்து
கதை பல புனைந்தும்
விடுவதாய் இல்லை
கேள்விகள்..

வண்ணங்கள் குழைத்து
அறிவியல் தெளித்து
புதிர் உடைக்கையில்
உதிர்ந்து போனது
சின்ன இதயத்தில்
வளர்ந்த வானவில்…!!
__________________
-- பூமகள்.

சித்திரையின் சித்திரங்கள்..!!



*
அன்று..

வெயில்
அவர்களுக்காகக்
காத்திருந்தது..

அம்மா முந்தானையின்
காற்றாய் வீசும் மரத்தினடி
அவர்கள்..!!

இன்று..

வெயில்
அவர்களுக்காக
காத்திருந்தது..

தார்ச் சூடு தாங்காமல்
ப்ளாஸ்டிக் கூரையடி
அவர்கள்..!!

################

*

மழை
பிரசவிக்கும்
மேகம்..
மலடானது..

மரப் பஞ்சம்..!!

*

கழுத்தறுந்த மரக் கொம்பு
தவித்து நிற்கும்
கூடிழந்த பறவைகள்..

எங்கும் கூடாரங்கள்..
குருவிகளுக்கெங்கே
வாழ்வாதாரங்கள்??!!

*
__________________
-- பூமகள்.




Friday, April 8, 2011

ஈரம்...!! - சிறுகதை


"யார் மனசிலையும் ஈரமில்ல" என்ற வசனத்தை அந்த அறையில் இருக்கும் தொலைக்காட்சி ஒளி,ஒலி வடிவில் உமிழ்ந்து கொண்டிருந்தது..

மீரா அதை பார்க்கும் நிலையில் இல்லாமல் அவள் கண்கள் கலங்கி தொலைக்காட்சித் திரையை தெளிவில்லாமல் காட்டிக் கொண்டிருந்தது..

அறைக்கு அன்று தான் வந்திருந்தாள் தன் பத்தரை மாத்துத் தங்கமான ஒன்றரை மாதத் தங்கத்தை ஏந்தியபடி..

ஏன்.. எப்படி.. எதற்காக.. அங்கே மீரா எப்படி?? அந்த அறையின் நெடி பினாயிலையும் டெட்டாலையும் கலந்து வீசி அது ஒரு மருத்துவமனை என்பதை உறுதியாக்கியது.

"அப்பா.. சொல்லுங்கப்பா.. ஆங்… அஞ்சலி அழுதுட்டே இருக்காள்.. டாக்டர் வந்து பார்த்துட்டு தான் போயிருக்கார்.. எதாவதுன்னா கூப்பிட சொல்லியிருக்கா ர்.. என்ன.. அம்மாவுக்கு காய்ச்சலா? தூக்கிதூக்கி போடுதா.. சரிப்பா.. இங்கையே கூட்டிட்டு வந்துடுங்க.. அட்மிட் செஞ்சாலும் இங்கையே பார்த்துக்கலாம்.. சரி வைச்சிடறேன்"

மனதுக்குள்ளே அழுது புலம்பிக் கொண்டிருந்தாள் சத்தமாக மீரா. பித்து பிடிக்காத குறையாக மீரா உறங்கா விழிகளோடு கலங்கி தவித்திருந்தாள்..

அப்போது,

"வாங்க அத்தை, வாங்க மாமா.. " - மருத்துவமனை ஆனாலும் விருந்தினரை வரவேற்பது போல வரவேற்பது பண்பாடு.. இங்கே அது சம்பரதாயம் பார்க்கும் நபர்களுக்கு அத்யாவசியமானது.. இதை வைத்து புதுப் பிரச்சனை வரக் கூடதென்ற கவலை மீராவுக்கு..

"தங்கக்குட்டிக்கு என்னாச்சு.. எல்லாம் சரியாயிடும்.. திருநீறு பூசியாச்சு.. சரியாயிடும்.. இந்தா நீயும் வைச்சிக்கோ ஏம்மா மீரா.. டாக்டர் என்ன சொன்னாரு?"

"சரிங்க அத்தை.. டாக்டர் இப்ப வருவார்னு நர்ஸ் சொன்னாங்க.." என்றாள் மீரா.

டாக்டர் வரும் சத்தம் கேட்டு, அத்தையும் மாமாவும் வெளியில் செல்ல முயல.. அவர் "பரவாயில்ல இருங்க.. மீரா குழந்தைக்கு தடுப்பூசி போட்டதும் இப்படி காய்ச்சல் வந்ததால என்னால உடனே முடிவெடுக்க முடியல.. அதான் திரும்பத் திரும்ப காய்ச்சல் மருந்து ஆறு மணி நேரத்துக்கு ஒரு தரம் கொடுத்தீங்களான்னு கேட்டேன்.. இரண்டு நாள் ஆகியும் இப்படி இருக்கறதா சொன்னதால தான் நான் அழைச்சி வரச் சொன்னேன்.. "

மீரா, "டாக்டர், குழந்தைக்கு மருத்து சரியா தான் டாக்டர் கொடுத்திட்டு இருக்கேன்.. ஆனாலும் காய்ச்சல் 105 டிகிரி வந்து குழந்தை கண்ணும் முழிக்கலை. பாலும் குடிக்கலை.. அதான் உடனே உங்களைப் பார்க்க வர கூப்பிட்டேன் டாக்டர்.."

"மீரா, இப்போ குழந்தைக்கு பிளட் டெஸ்ட் எடுத்த ரிப்போர்ட் வந்திருக்கு.. அதுல நிறைய இன்பக்சன் இருக்குன்னு தெரிஞ்சிருக்கு.. பிளட்ல மட்டும் தான் அட்டாக் ஆயிருக்கு… முதுகுத் தண்டு வடம் வழியா மூளைக்கு போயிருந்தா அப்புறம் மூளைக் காய்ச்சல் ஆகியிருக்கும்.. ஐசியூல தான் வைச்சிருக்கனும்.. ஆனா முன்னமே பார்த்ததால அதையெல்லாம் தடுக்க முடிஞ்சிது.. எந்த கிருமினால.. அதுவும் யார் மூலமாக காய்ச்சல் வந்திச்சின்னு கல்சர் ரிப்போர்ட் வந்ததும் தெரிஞ்சிடும்.. அதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும் மீரா.."

"கலங்கிய கண்ணோடு, சரிங்க டாக்டர் என்று விழி நீரை மறைக்க முயன்றாள் மீரா.."

"மீரா, வீட்டுக்கு கெஸ்ட் நெறைய வந்தாங்களா குழந்தையைப் பார்க்க?? "

"ஆமாம் டாக்டர்.. "

"நான் குழந்தை பிறந்தப்பவே சொன்னேன்ல.. இவ்வளவு கெஸ்ட் வரக் கூடாதுன்னு.."

"ஒன்னும் பண்ண முடியலை டாக்டர்.. "

"இப்போ குழந்தை தான் கஸ்டப்படுது பாருங்க… " சொல்லிவிட்டு குழந்தையைப் பரிசோதித்துவிட்டுச் சென்று விட்டார்.

அப்பாவிடமிருந்து அழைப்பு… "ஹாஸ்பிடல் வந்தாச்சு மீரா.. அம்மாவை அட்மிட் செய்ய ரூம் புக் பண்ணிட்டேன்.. உன் அறைக்கு ஒரு அறை தள்ளி புக் பண்ணிட்டேன்.. சரியா.."

அப்பாவுக்கு பதில் சொல்லி, போனை வைத்த பின்,
"அத்தை, அம்மாவுக்கும் உடம்பு நெருப்பா கொதிக்கிறதாம்.. அதனால இங்கே கொண்டு வந்து அட்மிட் செய்யப் போறாங்க.. இன்னிக்கி மதியம் கூட எனக்கு சாப்பாடு கொடுத்து விட்டாங்க.. இப்போ என்னவோ திடீர்னு காய்ச்சல்.."

சரி.. நாங்க அப்படியே கிளம்பறோம்.. நாளைக்கு மூன்று மணிக்கு வந்து பார்க்கறோம்.. என்னவரைப் பெற்றவர்கள் இருவரும் கிளம்பிவிட்டனர்..

அம்மா பக்கத்திலேயே இருந்தும், குழந்தையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அருகே சென்று பார்க்கத் தடை விதித்திருந்தார் டாக்டர்.. மீரா கவலையின் உச்சத்தில் இருந்தாள்.. ஒரு புறம், அம்மா.. மறு புறம் குழந்தை.. என்னைப் பார்ப்பதா.. அம்மாவைப் பார்ப்பதா என்று தெரியாமல் தவித்தாலும் மனத் திடத்தை வரவழைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலையும் அப்பா..

அப்பாவுக்காகவே மனத் திடத்தை வரவழைத்துக் கொண்டாள் மீரா.

மறு நாள், குழந்தைக்கு ஊசியேற்ற வந்த செவிலியர்கள் அங்கு கொடுக்கும் உணவு பற்றாது.. நீங்கள் வீட்டிலிருந்து வரவழைத்துச் சாப்பிடுங்கள்.. ஹாஸ்பிடல் ரூல் பார்க்காதீங்க.. நீங்க தாய்ப்பால் மட்டுமே தருவதாலும், குழந்தைக்கு இப்போது அதிகமான தாய்ப்பால் தேவைப்படுவதாலும் நல்ல சத்துள்ள உணவை வீட்டிலிருந்து சமைத்துச் சாப்பிடுங்கள்.. உங்க அரோக்கியம் ரொம்ப முக்கியம்" என்று மீராவுக்குச் சொல்லிச் சென்றனர்..

உடன் ஓடி வந்த ரேவதி அக்காவோ, நான் உன் கூடவே இருக்கேன் மீரா.. கவலையை விடு.. யாராவது நம்ம சொந்த காரங்க கிட்ட சொல்லி சோறு வரவழைச்சிரு மீரா என்றார்.

அக்கா தன்னோடு இருப்பது பெரிய ஆறுதலாக இருந்தது அதுவுமில்லாமல். கல்லூரிக்குச் செல்லும் மகனையும் பொருட்படுத்தாமல் தன்னோடு குழந்தைக்கு நன்றாகும் வரை இரு என்று சொன்ன அவர் கணவர் மீதும் பெருத்த நன்றியுணர்ச்சி பொங்கியது மீராவுக்கு..

அருகில் இருந்தாலும் இரு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி தானும் பணிக்கு போகும் சீதா அக்கா நினைவு வர.. வேண்டாம்.. அவர்களுக்கு ஏன் சிரமம் என்று பின்வாங்கினாள் மீரா. சரி.. நம் மாமியாரும் நம் தாய் போலத் தானே.. தாயும் படுத்துக் கிடக்கையில் அவர் தானே நம் தாய்.. அவரிடம் கேட்போம்.. அத்தைக்கு மாமாவுக்கு சமைப்பதைத் தவிர பெரிய கமிட்மெண்ட் ஏதும் இல்லை என்பது கூடுதல் வசதியாகவே மீராவுக்குத் தோன்றியது.. அத்தைக்கு சிரமம் இருக்காது என்று காலையிலேயே போன் பண்ணினாள் மீரா.

"அத்தை, இன்னிக்கி மதியம் எனக்கு மட்டும் சாப்பாடு கொண்டு வருவீங்களா?? 3 மணிக்கு வருவதை, கொஞ்சம் முன்னாடி வந்திடுங்களேன்.."

"சரி கொண்டு வர்றேன்.." என்றார் அத்தை..

அத்தை மாமாவோடு வந்து மீராவைச் சாப்பிட வைத்தார்.. பின்பு, அப்பா வந்து குழந்தையை தொலைவிருந்தே பார்த்துவிட்டு பின் சென்று விட்டார்..

மணி 2 இருக்கும்.. மீராவுக்கு போன் வந்தது.. "மீரா.. நான் தான் அண்ணி பேசறேன்.. சவிதா.. (மீரா கணவரின் அக்கா..) அஞ்சலிக்கு எப்படி இருக்கு.. இப்போ பரவாயில்லையா.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு மீரா.. "

மீரா மனதுக்குள், பாவம் அண்ணி, ஏற்கனவே பத்து வயதிலும், 8 வயதிலும் ஒரு பையனையும் பொண்ணையும் வைத்துக் கொண்டு கூடவே வேலைக்கும் போய்க் கொண்டு வீட்டு வேலையையும் செய்து கொண்டு கஸ்டப்படுகிறார்.. நான் ஏன் தொல்லை தர வேண்டும் என்று எண்ணியபடியே..

"சொல்லுங்க அண்ணி.. இப்போ பரவாயில்லை.. காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது.. ஹெல்ப் எல்லாம் ஒன்னும் வேணாம் அண்ணி.. நீங்களே வேலைக்கும் போயிட்டு வீட்டையும் பார்த்திட்டு இருக்கீங்க.. பிரச்சனை இல்லை.."

"சரி.. நான் சாயிந்திரம் வர்றேன்.."

மாலை 4 மணி.. சொன்னது போலவே வந்து நின்றார் அண்ணி..

முகம், கை, கால்களைக் கழுவி விட்டு, பின் வந்து குழந்தை அருகில் நின்றார்.. வாங்க அண்ணி என்று மீரா கூப்பிட்டதைச் சட்டை செய்யவில்லை..

அத்தையும், அண்ணியும் குழந்தையைப் பார்த்து வாயில் சேலையை மூடி அழுதனர்..

"நோய் வந்து வந்து தான் எதிப்பு சக்தி வளரும்.." என்றார் அண்ணி..

"அதான் நல்லா வளர்ந்திட்டு இருக்கு பாருங்க… ஏண்டி பயாட்டிக் ஊசி ஊசியா போட்டு.. நானும் தாய்ப்பால் மட்டும் தான் கொடுத்திட்டு இருக்கேன்.. ஆனாலும் வந்துடுச்சே…" இது மீரா. 45 நாள் குழந்தைக்கு எந்த எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று புரியாது பேசத் தொடங்கினார் அவள் அண்ணி..

"எதிர்ப்பு சக்தி அப்போ இல்லைன்னு அர்த்தம்…. உன் பால்ல அப்ப சத்தில்ல.." இது அண்ணி..

சுளீர் என்றது மீராவுக்கு… தாய்ப்பாலில் சத்தில்லை என்று ஒரு பட்டம் பெற்றவர் சொல்லலாமா? அதுவும் இரு குழந்தைக்குத் தாய்.. கல்வி நிறுவனத்தில் பணியில் இருக்கும் ஒருவர்… தான் எந்த மனப் போராட்டத்தில் இரவும் பகலும் உறங்காது சதா அழுது கொண்டிருக்கும் குழந்தையோடு இருக்கேன்.. தன் கணவர் கூட அருகில் இல்லையே.. இவ்வாறாக சுயபட்சாதாபம் மேலோங்கியது மீராவுக்கு.. மௌனம் காத்தாள் மீரா..

பேச்சு திசை மாறியது..
"சாப்பாடு இங்கையே உனக்கு கொடுத்திடுவாங்களா மீரா" இது சவிதா அண்ணி.

"ஆமாங்க அண்ணி.. இங்கையே கொடுப்பாங்க.." என்றாள் மீரா.

"ஏம்மா… அப்போ ஹோட்டல்ல வாங்கி சாப்பிட வேண்டியது தானே.. நீ ஏம்மா சோறு செமக்கறே….." என்று ஓரக் கண்ணால் மீராவைப் பார்த்தபடியே சொன்னார் சவிதா அண்ணி..

"ஏ போயி வெளியில சாப்பிடனும்னு தான் கொண்டு வந்தேன்.." இது அத்தை..

மீராவுக்கு நெஞ்சில் நெருஞ்சியால் குத்தியது போல் வலி…

எழுந்து வெளியே வந்து விட்டார்.. தன் மகளுக்கு சோறு பரிமாறி உண்ண வைத்து அனுப்பினார் அத்தை..

அடுத்த நாள் மாமாவுக்குச் சமைக்க அத்தை கிளம்ப.. எனக்கும் சேர்த்து எடுத்து வர வேண்டாம் என்றாள் மீரா.. பதிலேதும் பேசாமல் சென்றார் அத்தை..

தனக்கு உண்ணக் கொண்டு வந்ததை அத்தை சிறிது கொடுத்தும் தொண்டைக்குள் இறங்க மறுத்தது மீராவுக்கு.. அப்படியே வைத்து விட்டாள்.

அப்பா, ஹோட்டலுக்கும் வீட்டுக்கும், ஹாஸ்பிடலுக்கும் அலைந்து கொண்டிருந்தார்.. மீரா விரும்பிய உணவெல்லாம் வாங்கி உண்ண வைத்தார்.. அத்தைக்கும் ரேவதி அக்காவுக்கும் என்ன வேண்டுமெனக் கேட்டு சேர்த்து வாங்கி வந்தார்..

மருத்துவர் வந்தார்.. "கல்சர் ரிப்போர்ட் வந்திடுச்சுங்க மீரா.. கை நகத்துல இருக்கிற கிருமிங்க தான் காரணம்.. சோ.. கெஸ்ட்ஸ் தான் பிரச்சனை.. விசிடர்ஸ் நாட் அலவுட்-நு போர்ட் போட்டாசு.. 3 மாசம் முடியறவரை கெஸ்ட்ஸை அவாய்ட் பண்ணுங்க.. இன் ஹைகீனிக்கா குழந்தையைத் தொடாதீங்க.. தொடவுடாதீங்க.."

"டாக்டர், என் அம்மாவும் காய்ச்சல்ல தான் பக்கத்து ரூம்ல அட்மிட் ஆகியிருக்காங்க.. "

"பார்த்தேன் மீரா.. அவுங்க இந்த இன்பக்சனுக்கு காரணம் இல்ல.. இருந்தாலும் அவுங்களுக்கு சிக்கன் குனியாங்கறதால 1 மாசத்துக்கு குழந்தையை அவுங்க தொட வேண்டாம்.."

"சரிங்க டாக்டர் " என்றாள் மீரா.

அத்தையை அழைத்துச் செல்ல மாமா வந்தார்.. அப்பா அவரிடம், ஓரிரு நாட்களுக்கு மீராவோடு அவள் மாமியாரை இருக்க வைக்கக் கேட்டுக் கொண்டார்.. பாவம் அக்கா.. உடனே திரும்பி வருவோம் என்று எண்ணி போட்டது போட்டபடி ஓடி வந்தவர்.. துவைத்த துணி பாதியும் துவைக்காத துணி பாதியும் இருக்க மீராவுக்காக வந்தவர்.. இப்போது வீட்டுக்கு போயே ஆகவேண்டிய இக்கட்டான பெண்களுக்கான பிரச்சனையான சூழல்... எல்லாவற்றையும் விவரித்தார் அப்பா..

என் மனைவிக்கு தூக்கம் கெட்டால் சேராது.. என்று ஒற்றை வாக்கியத்தில் பதிலளித்தார் மாமா..

சரிங்க என்று அப்பா இறுகிய முகத்தோடு சென்று விட்டார்..

சிறிது நேரத்துக்கு பின், கிளம்ப தயாராக இருந்த மாமாவிடம், மீண்டும் அப்பா கெஞ்சினார்..

சரி இருக்கட்டும் என்று ஒப்புதல் அளித்தார் மாமா.

4 நாட்கள் ரேவதி அக்காவும், 3 நாட்கள் அத்தையும் இருந்து குழந்தை அஞ்சலியும் அம்மாவும் தேற வீடு திரும்பினர்..

மீராவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.. பின்பொரு நாள் தான் 2 நாள்கள் இருந்ததையும், குலதெய்வத்துக்கு கிடா வெட்டுவதாக வேண்டிக்கொண்டு அதை நிறைவேத்தியதாலும் தான் தன் பேத்தி குணமானாள் என்று அத்தை சொல்வார்கள் என்று…!!

__________________
-- பூமகள்.

Monday, March 21, 2011

வரதட்சணை..!



மகிழம் பூ முகம்
தாழம் பூ மனம்
அல்லிப் பூ சிரிப்பு
அந்திமந்தாரை வனப்பு
அகில் தேகம்

வர்ணிப்புகள் வடித்த
கவி மனம்..
ஏங்குவதென்னவோ
வெள்ளை நிற
நெட்டை நங்கைக்கு தான்..!

கருப்பிங்கு அவமானம்..
கருப்பழகிகள் நிலையோ
அந்தோ பரிதாபம்..!

நகை கூட போட்டால்
கருப்பிங்கு ஏற்பாம்..
நகைக்காய் வாங்கும்
பொருளா பெண்கள்??

வரதட்சணை வடிவம்
வேரோடு பிணைந்து
இப்படி ஒரு நிலை வரலாம்..!

பெண் உள்ள வீட்டின் முன்
'பெண்கள் விற்கப்படும்'
பலகையும் மாட்டப்படலாம்..!

--பூமகள்.

Monday, March 14, 2011

வேர் நட்பு..!!


அடை மழை கால
புழுக்கங்கள் போல்
விடை தெரியாத
உன் மௌனங்கள்..!!

உரக்க எழுதினாலும்
இரங்கவில்லை இதயம்..
இரவு முழுக்க
ஈரம் எங்கும்…!!

பரிமாறல்களின்றி..
பார்வைகளின்றி..
பாசம் பேச
வேற்று மொழியை
விரும்பவில்லை நான்..!!

உன் கரம் பற்றி
விழி ஊன்றி
ஒரேயொரு முறை
நாம் நட்பு சமைப்போம்..!!

பகிர்தல் நட்பிற்கழகாம்..
பகிர ஏதுமில்லையெனினும்..
பகிராமலே பாத்திரம் நிரம்புவது
நட்பில் மட்டுமே சாத்தியம்..!!

அன்பின் ஊற்றை
அந்த நாள் நினைவுகளை
அழுந்த வாசிக்கையில்
நிரம்பி விடும் கண்ணீருக்கேனும்
பதில் சொல்வாயா நீ…??!!

--
பூமகள்.

Saturday, March 12, 2011

பூவின் கதம்பம்..!!

சமீபத்தில் பார்த்த திரைப்படம்:

காவலன் - நிச்சயிக்கப்பட்ட வெற்றி. நீண்ட நாட்களுக்கு பின், அநேகமாக காதலுக்கு மரியாதைகாலத்துக்கு பின் மென்மையான நடிப்புடைய விஜயை திரையில் காண்கையில் ஆச்சர்யம். இடையில்ஏற்பட்ட பல படங்களின் அனுபவம், அந்த மென்மையான நடிப்பைக் கடினப்படுத்தியிருப்பது தெரிகிறது. சிலஇடங்களில் விஜய் நடிக்க தடுமாறுகிறார்.

கதை மலையாளத்திலிருந்து வந்ததாலோ என்னவோ உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது. தோழிக்குதுரோகம் செய்யும் தோழிகளுக்கு சரியான சவுக்கடி. இக்காலத்தில் தன்னலம் மிகுந்து பிறர்நலம் குறைவதைஅழகாகக் காட்டுகிறது படம். ஈரம் படத்தில் சொல்ல வந்த அதே மனிதாபிமானம், இப்படத்தில் நட்புக்குஇல்லாமல் போகிறது. காதலுக்கு மரியாதை போலவே காதல் தொடங்கும் இடத்தில் வரும் பாடல் மனம்நிறைகிறது. கண்டிப்பாக பார்க்கலாம்.

சமீபத்தில் ரசித்த பாடல்:

நீல வானம்.. நீயும் நானும்..!! - மன்மதன் அம்பு படத்தின் பாடல். என் குழந்தை அழுகையை இப்பாடல் உடனேநிறுத்திவிடுவதாலோ என்னவோ.. மிகப் பிடித்துப் போனது கூடுதலாக..!!

சமீபத்தில் அதிர்ந்த செய்தி:

ஜப்பானிய நில நடுக்கம், சுனாமி. எனக்கு தெரிந்த நட்பு அங்கிருப்பதால் பதற்றம் அதிகமானது.. அதைக்குறித்த ஒளிப்பதிவைக் காணுகையில் நெஞ்சம் மேலும் பாரமானது.. இறந்தவர்களின் ஆத்மா சாந்திஅடையட்டும்.. இயற்கைத் தாய் கருணை காட்ட மாட்டாளா என ஏக்கம் மிகுந்த கவலை மேலிடுகிறது. ஹிரோஷிமா, நாகாசாஹி குண்டு வெடிப்புக்கு பின்பே எழுந்து வளர்ந்த நாடு என்பதால் அது ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு வரும் என்று நம்புகிறேன்..

சமீபத்தில் எழுந்த கேள்வி:

கோடி கோடியாக பணம் கார்களிலும் வேன்களிலும் ஒரு நாள் சோதனையிலேயே கிட்டியதாக சன்செய்தியில் கண்டேன்.. பின்பு ஏன் இன்னும் இந்தியாவின் கடனை யாராலும் முழுதாக அடைக்கமுடியவில்லை..?? கோடிகள் இப்படியாக தெருக்கோடிகளுக்கு செல்வதாலோ??!!

சமீபத்தில் ரசித்த கதை:

நிலாரசிகன் எழுதிய 'கண்மணி, இரவு மற்றும் மழை - சிறுகதை'. வெகு நாட்களுக்கு பின் நல்லதொருஎழுத்தாக்கத்தைப் படித்த நிறைவு.

சமீபத்தில் வியந்தது:

எனைப் பற்றி பெண் பதிவர்கள் குறித்த பகுதியில் குறிப்பிடுகையில் சகோதரர் பிரபாகரன் அவர்கள், நான்விமர்சனம் எழுதும் பதிவர் என்று குறிப்பிட்டிருந்தார். விமர்சனங்களை விட கவிதைகள் மேல் நாட்டம்கொண்டு படைக்கும் எனக்கு இது பெருத்த ஆச்சர்யம்.. என் பெயரும் குறிப்பிடும்படியாக இருப்பதில் ஒருமகிழ்ச்சி.


கொசுறு:

"நீங்க நல்லா எழுதறீங்களே.. புத்தகம் வெளியிடலாமே" இப்படியாக நட்பு வட்டம் ஒன்று எனைக் கேட்க.. நானோ அதற்கு இன்னும் நான் வளர வேண்டும் என்று சொல்லி எஸ்ஸாகிவிட்டேன்.. உண்மையில் எனக்குஅந்த தகுதி வந்துவிட்டதா என்ற சந்தேகம் ஒருபுறம், எப்படி எங்கு ஆரம்பிப்பது என்ற அறியாமை மறுபுறம்.. இப்போதைக்கு ஜூட்..

அன்புடன்,
பூமகள்.

Thursday, March 3, 2011

கதை கதையாம் காரணமாம்..!!


அன்றிரவும்
அப்படியாகத் தான்
ஆரம்பித்தேன்
கதை சொல்ல..

காகம்
பாட்டியிடம்
வடை திருடிய கதை..
திருந்தப்பட்டது
இப்படியாக..

பசிப்பொறுக்காத காகம்
பாட்டியிடம் வாங்கிய வடை
தந்திர நரி பறித்துப் போக…

புதிய கதைமாந்தராய்
பாட்டி அருகில்
இருவடையுடன்
என் குழந்தை…

காக்கை அழுகை
பொறுக்காமல்
தன் இருவடையும்
கொடுத்துச் சிரித்தது
குழந்தை..

நல்லவை விதைக்க
இதைப் போலவே
எல்லாக் கதையிலும்
அரும்பிவிடும்
புதிய பாத்திரம்
என் குழந்தை வடிவில்…!!

--பூமகள்.

Monday, February 21, 2011

தாயுமானவள்..!!


அதிகாலை என்றுமே
அப்படித் தான் ஆரம்பிக்கும்..

கண் மலர்ந்ததும்
மலரும் உன்னில்
என் பெயர்…

அழைப்பின் வேர்கள்
சமையல், தேடல்
என எதுவாகினும்
எனை அழைப்பதன்றி
முற்றுபெறாது உன் கேள்விகள்..

மிரட்டி, உருட்டி
காலை உணவு கொடுத்து
மதிய சாதம் வரை கட்டி
பையிலிட்டு அவசரகதியிலும்
அரவணைத்து வழியனுப்ப..

முதுகுச்சுமை பற்றி
பள்ளிக் குழந்தையாய்
நீ நடக்க..

ஒவ்வொரு காலையிலும்
முதல் நாள் பள்ளியனுப்பும்
மழலையின் தாயா ய்
கண்ணில் நீர் தெறிக்க
உன் தாயானேன் நான்..!!

--பூமகள்.

Wednesday, February 16, 2011

தளிர் நடை..!!

குளிர் பாறை தொடும்
பனித்துளி நீர் ஓடை..!!

கரை மணல் தீண்டும்
அலை கடல் மேடை..!!

மலைப் பள்ளம் விழும்
கதிரவன் ஒளி மாலை..!!

இவையாவும் தரும்
இன்பம் தோற்க்கடிக்கும்
மலர் பொன்னுடல்
ஆடி வரும் என்
அன்பு மகளின்
அன்ன நடை..!!

Thursday, January 27, 2011

உனக்காக..!!




உனை எழுத நினைத்து
தோற்றுப் போகிறேன்
ஒவ்வொரு முறையும்
நான்..!!

வார்த்தைகளுக்குள் வராமல்
வழி மாறிப் போகிறாய்
நீ..!!

உனைத் தொடரவே
நான் பயணிக்க..

என் பயணங்களின் தூரம்
சொல்லாமல் செல்கிறது
காலம்..!!

வளைந்து, மறைந்து,
வேகம் கூட்டி
கண்ணாமூச்சி ஆடுகிறா ய்
நீ..!!

குழந்தைகள் விளையாட்டாய்
உனையடைய துரத்துகிறேன்
நான்..!!

இலக்கின்றி ஓடி
ஓர் இடத்தில்
நிற்கிறாய்..!!

மூச்சிரைக்கும் இதயங்கள்
பேசிக் கொள்கின்றன..!
நா ம் மௌனம் உடைக்க
முயல்கிறோம்..!

வழக்கம் போலவே
தென்றல் நமைப் பற்றி
மென்னிறகால்
கவிதை தூவிச் செல்கிறது
நம்மிருவருக்குமிடையே..!!

--
பூமகள்.

Monday, January 17, 2011

பொங்கலோ பொங்கல்..!




மஞ்சக்கொம்பு காப்பு கட்டி
மண் பானை அடுப்பேற்றி
பொங்கி வரக் காத்திருக்கும்
சர்க்கரைத் தருணங்கள்
நினைவில் மட்டுமே..!!

குக்கருக்கு காப்பு கட்டி
தண்ணீர் கொஞ்சம் சேர்த்து ஊத்தி
விசில் பொங்கி வந்து கிழக்கில் விழ
சொல்லி வைக்கிறேன்
"பொங்கலோ பொங்கல்"..!!

--பூமகள்.

Tuesday, January 4, 2011

பூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்??





படம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண்டும் ஒரு சில நாட்களில் காண ஏக பரபரப்பில் கிளம்பி மகிழ வைத்தார் என்னவர்.

கதைச் சுருக்கம் சொல்லப் போவதில்லை.. படத்தைப் பற்றிய பலவாறான கருத்துகளோடு பார்க்கச் சென்றாலும் கதை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றேன்.


படத்தில் ஆரம்பமே நம்ம சூர்யா வந்து வரவேற்பாளரானார். மகிழ்ச்சி இரட்டிப்பானது. என்னே ஒரு நடனம். அந்த துள்ளல் மனதில் தொற்றிக் கொள்ள கதையில் ஐக்கியமானது மனம்.


திரிஷா, மாதவன் காம்பினேசன் புதிதாக இருந்தது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கொட்டக் கொட்டப் பார்த்ததில் எனக்கு எந்த பெரிய தவறும் தெரியவில்லை.. ஏனெனில் நான் சிந்திக்கும் நிலையில் இல்லை.. வயிறு வலிக்கச் சிரித்துக் கொண்டிருந்தேன்.. ஏன் திரையரங்கத்தில் அனைவருமே அப்படியான நிலையில் தான் இருந்தனர்.


கமல் வெகு அடக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் கண்கள் நடிப்பில் பின்னுகின்றன. மாதவன் கலக்கியிருக்கிறார். நகைச்சுவை ததும்புகிறது. சங்கீதா வெகு அசால்ட்டாக நடித்திருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன்.. என்று அவர் பாடும் காட்சி வெகு அருமை. அதே நேரம் தான் கொடுப்பது போல் கேமிராவை தண்ணீரில் போட்டு மாதவனிடம் ஏன் போட்டீர்கள் என்று பேசுமிடம் வெகு வேடிக்கை.. நல்ல டைம்மிங்..


மாதவன் படம் முழுதும் தண்ணீரிலேயே வசனம் பேசுகிறார். ஆனாலும் புரிகிறது. பாத்ரூமில் தன் செல்போனை தவற கீழே விடுவதும் அதன் பின்னான வசனங்களும் திரையரங்கையே அதிர வைக்கின்றன.


நிறைய நல்ல நகைச்சுவைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.. ஒவ்வொரு வசனத்திலுமே. தேவையற்ற சில இடங்கள் இழுவையாகத் தோன்றுவதாக பலர் சொன்னார்கள். எமக்கும் அது திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துவதாகவே கருதுகிறேன். ஆயினும் நகைச்சுவை நம்மை அதையெல்லாம் யோசிக்க விடுவதில்லை.


நீல வானம்,, பாடல் வித்தியாசமான முயற்சி.. கலக்கல்.. அதுவும் ஒரு ஆங்கிலப் படத்திலிருந்து எடுக்கப்பட்ட யோசனை தான் எனும் பொழுது கொஞ்சம் வருத்தம். இப்பாடல் தான் படத்தின் ஹைலைட்.


திரீஷா - கமல் காதல் எப்படி திடீரென்று பூத்ததென்று கதையில் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.. அது ஒரு சிறு நெருடல்.


கமல் பார்வையில் ஏதோ ஒரு வருத்தம் தோய்ந்திருக்கிறது படம் முழுதும். அது நம்மை என்னவோ செய்கிறது.


சினிமோட்டோ கிராஃபி கலக்குகிறது. பிரான்சும், இறுதியில் வரும் குரூசும் வெகு அழகு. படத்தைப் பார்த்ததிலிருந்து பிரான்சைப் பார்க்கும் எண்ணம் வலுத்தது.


மொத்தத்தில், மன்மதன் அம்பு எல்லோர் மனதையும் நகைச்சுவையால் தைக்கத் தவறவில்லை.


எந்திரனை விட எனக்கு பல மடங்கு இப்படம் பிடித்திருக்கிறது. ரஜினி ரசிகர்கள் கோவிக்காதீர்கள் ப்ளீஸ்..!!
__________________
-- பூமகள்.