RSS

Thursday, April 30, 2009

வெயில் கவிதைகள் - 2

நெருஞ்சிக் காட்டு
ஒற்றையடிப் பாதை முள்ளும்..

கோயில் தொடும்
கல் வழிப் பாதை கூர்மையும்..

பதம் பார்க்கும் குதியை
தன் கரங்களால்
பொடித் துகள்களாகச்
சுட்டுக் கொண்டிருந்தான்
துணையாக வந்த
வெப்பக் கதிரோன்..!!

வெயில் கவிதைகள் - 1

அலைந்து திரிந்து
பசித்த மதியத்தில்..
உச்சிக் கதிர்கள்
உச்சி வகிடு வழி
வழியத் துவங்கியிருக்கும்..

எப்போதும் நிற்கும்
மரத்தடி நிழலின்
புழுது படிந்த இலைகளின்
வடிகட்டிய குளுமை
வெப்பக் காற்றோடு
ஈர முதுகு சில்லிக்க வைக்கும்..

ஓரமாய் பானையோடு
கம்பங்கூல் தாத்தாவும்..
அவர் கொண்ட சுத்தமான
ஆறுவகை வற்றல் குவியல்களும்..

நினைவில் எழுந்து
நாவின் நீர் சுரப்பிக்க..
காத்துக் கொண்டிருக்கிறேன்..
அடுத்த வருட
வெயில் காலத்துக்காக...!!
__________________
-- பூமகள்.

Wednesday, April 29, 2009

மொட்டை மாடியும் சில இரவுகளும்...!!"இரவு என்பது ஒரு கையால் அள்ளி எடுக்க முடியாத ஒரு திரவம், அது எல்லாத் திசைகளிலும் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது"

"இரெவென்னும் வினோத மலர் எண்ண முடியாத இதழ்கள் கொண்டது. இரவின் கைகள் உலகைத் தழுவிக்கொள்கின்றன. அதன் ஆலிங்கனத்திலிருந்து விடுபடுவது எளிதானதில்லை."


- "யாமம்" நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன்

கவிந்து,சூழ்ந்து, எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் ஓர் ஆழ்ந்த இரவு ஒவ்வொரு முறையும் புதிய வடிவத்தில் சிந்தனையைத் தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கின்றன..

அத்தகைய இரவுக்கும் எனக்குமான பந்ததுக்கு உற்ற துணையாக இருந்தது என் வீட்டு மொட்டை மாடி
("வெற்றுத் தளம்" என்று மொழி பெயர்க்கலாம் தானே?)யும் அது அளந்து கொண்டிருந்த வான்வெளியும்..

ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது மண்டை பிளக்கும் வெயிலுடன் ஒரு மதியப் பொழுதில் என் முதல் வெற்றுத் தள அறிமுகம் அமையப் பெற்றது..

மூன்று அடுக்கு வீட்டின் மேல் தட்டுக்கு தட்டுத் தடுமாறி கைபிடியற்ற படியேறி சாகசம் மேற்கொண்டு, நின்று முதன் முதலாக எல்லாக் கோணத்திலும் எங்கள் ஊரை நோட்டம் விடுகையில் அருகிருந்த தென்னை மரத்தில் சுனாமிக் காற்று தாக்குதல் திக்குமுக்காடச் செய்தது..

என்னை கைபிடி சுவரற்ற தளத்திலிருந்து கீழே சாய்க்கும் முனைப்போடு தொடர்ந்து புயல் காற்று அடித்துக் கொண்டிருக்க நடுக்கத்தோடே இறங்கினேன்.. முதன் முதலில் காதலன் விரல் பிடித்த காதலியிடம் ஏற்படும் நடுக்கம் போல அந்த நடுக்கம் என்னைச் சூழ்ந்து கொண்டது... அதன் பின் எனக்கு அந்த மூன்றாவது வெற்றுத் தளம் ஒரு அதிபயங்கர மரணக் குகை போலவே தோன்றியது...

இரவுகளும் அது கொண்ட ரகசியங்களும் எப்போதும் அதன் வழியில் சென்று கொண்டே இருக்க காலம் நகர்ந்து கொண்டே இருந்தது..

(இரவுகளின் வாசனைகள் தொடரும்...)

Monday, April 13, 2009

அயன் - திரை விமர்சனம்

வாரணம் ஆயிரம் படத்துக்கு அடுத்ததாக சூர்யா நடித்து வெளிவந்திருக்கும் படம் அயன். மிகப் பெரிய எதிர்பார்ப்போடு அயன் பார்க்க ஆர்ப்பாட்டம் செய்து எப்படியோ நேற்று பார்த்தே விட்டேன்..

சூர்யா, பிரபு, தமன்னா ஆகியோர் நடிப்பில் அதிரடி திரைப்படமாக வந்திருக்கிறது.

பத்து நிமிட தாமதத்தில் சென்றதால் சில காட்சிகள் எங்கள் கண் படாமல் தப்பி விட்டிருந்தன.. வருத்தத்தோடு அமர்ந்து பார்க்கத் துவங்கினால் சூர்யாவின் தாய் சூர்யாவுக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பாட்டி திட்டு மழை பொழியத் துவங்கியிருந்தார்..

தப்பி ஓடிய சூர்யா தொடர்ந்து பாடத்துவங்கினார்.. "பளபளக்கும்....." என்று ஏதோ ஒரு பாடல் குத்தாட்டத்தோடு திரையை நிறைக்கிறது..

தேவா(சூர்யா), சிட்டி இரு நண்பர்கள் உலகின் எல்லா மூலைகளுக்கும் தொடர்ந்து பறந்த வண்ணமே இருக்கின்றனர்.. எதற்காக சுற்றுகிறார்கள்.. ஏன் சுற்றுகிறார்கள்.. என்று அடுத்தடுத்தக் காட்சிகளில் முடிச்சி அவிழ்கிறது..

பிரபுவுக்காக வேலை செய்யும் தேவா, அவன் தோழன் சிட்டி, உடன் வேலை பார்க்கும் கருணாஸ் இப்படி ஒரு பெரும் படை செய்யும் வேலையோ அன்டர் வேல்ட் தொழில்..

எதிரியாக வரும் ஹிந்தி பேசும் குடும்பத்து பையன் மிரள வைத்திருக்கிறார்.. பாடி லேங்குவேஜும் அவரின் தலை அலங்காரமும் அதிர வைக்கிறது..

தமன்னா அவ்வப்போது வந்து தமது பாடல்க் காட்சி நடனங்களைச் செவ்வனே செய்து சென்றிருக்கிறார்.. தமன்னா, நடிப்பு... அப்படின்னா என்று இன்னும் கேட்கும் நிலையில் இருப்பது வேதனை + வேடிக்கை..

ஆனால், ஒரு பாடல் கூட படம் விட்டு வெளிப்படுகையில் நினைவில்லை...

காதல் வசனங்கள் ஒன்று கூட மனம் தொடும்படி இல்லை.. பெரும் ஏமாற்றத்தை பக்கத்தில் நெளிந்து கொண்டே படம் பார்ப்போரைக் காணுகையில் உணர்ந்தேன்..

ஒரு எதிர்மறை வாழ்க்கைச் சூழலில் சிக்கிக் கொண்டு திறமையாக சாதிக்கும் இளைஞனாக வரும் சூர்யா, பொன் வண்ணனிடம் மாட்டிக் கொண்ட பின் வரும் காட்சிகளில் சிரிப்பை வரவழைக்கிறார்.. பொன்வண்ணன், வழக்கம் போல் தன் பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்..

தேவையற்ற இடங்களில் இரைச்சலான ஆடைக்குறைப்பு பாடல்கள்...

மனம் குமையச் செய்யும் வன்முறைக் காட்சிகள்..

அழுத்தமே இல்லாத வசனங்கள்...

ஆழப் பதியாத பாடல் இசை..

இவையனைத்தும் சேர்ந்து படம் விட்டு வெளிப்படுகையில் தலைவலியை உடன் அழைத்து வர வைத்துவிட்டன.

நிறைய இடங்களில் கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தேன்... அத்தனை வன்முறைக் காட்சிகள்..

உங்கள் இதயம் பூப் போன்ற மென்மையானதெனில்... இப்படம் உங்களுக்கான படம் அல்ல..

ஆக்சன், த்ரில்லர் எல்லாம் இருந்தும்... குமட்டுமளவுக்காக காட்சிகள் இருப்பதால் பெண்களும் குழந்தைகளும் பார்க்காமல் இருப்பதே நலமெனக் கருதுகிறேன்..

சூர்யா சிக்ஸ் பேக்கில் வந்து இளமையைக் காட்ட முனைந்திருந்தாலும்.. கன்னம் வற்றி பார்க்க ஏனோ அழகாகவே இல்லை..

இப்படியான கதைகளை இனி சூர்யா தொடர்ந்து ஒப்புக் கொள்வாரேயானால்.. விஜய் வரிசையில் இவரையும் மசாலாப் படம் பண்ணுபவர் லிஸ்டில் சேர்க்க வேண்டியிருக்கும்..

படத்தின் பலம்.. வித்தியாசமான நாடுகளில் எடுக்கப்பட்ட அதிரடி காட்சியமைப்புகள்..

ஏவிஎம் இவ்வகை படம் எடுத்து ஏன் தன் தரத்தை தாழ்த்திக் கொண்டதென்று வருத்தப்பட்டேன்..

படம் பார்த்ததும் நான் எடுத்த ஒரு தீர்க்கமான முடிவு..

இனி டைரக்டர் ராதாமோகன், பிரகாஷ்ராஜ் இவர்கள் படம் மட்டுமே பார்ப்பது..!

நல்ல படமென எல்லாரும் சொன்ன பின் மட்டுமே ஒரு படத்தைப் பார்ப்பது...!

ஆக மொத்தம்.. அயன்... உங்களின் தலையை அயன் செய்து தலைவலியை உண்டாக்கிவிடும் என்பது மட்டும் திண்ணம்..

தப்பிச்சிக்கோங்க மக்களே....!!
__________________
-- பூமகள்.