RSS

Friday, October 3, 2014

How old are you??!!

How old are you?

     இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ்க்கையின் பதினான்கு ஆண்டுகள் சிறைபட்டு அலுவலகம், வீடு என உழன்று கொண்டிருக்கும் பெண்ணுக்குள் எத்தனை கனவுகள் இருக்கக்கூடும் என கதாநாயகி தன்னை தன் மகளிடம் பறைசாற்றுகையிலெல்லாம் நிதர்சனம் தரும் வலி நம்மையும் ஆட்கொள்கிறது. மெல்ல விரியும் கதைக்களத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் நம்மையோ, நம் வீட்டுப் பெண்களையோ கண்டிப்பாக நினைவுபடுத்தும்.. பேருந்துப் பயணத்து நட்பாய் விரியும் ஒரு பாட்டியுடனான கதாநாயகியின் சந்திப்பு யார் மனதையும் கலங்கடிக்கும்.. " என்னைத் தேடி என்னை மட்டும் பார்க்கவா வந்தாய்? ஏதேனும் வேலைக்காகவோ, ஆதாயம் தேடியோ மட்டுமே என்னைப் பார்க்க வருவார்கள்.. என்னைப் பார்க்க வீடு தேடி வரும் முதல் ஆள் நீதான்.." என் அந்த பாட்டி நெகிழ்கையில் நம் மனதையும் அசைத்துவிடுகிறது. மகளின் அந்த பதின்பருவ செயல்பாடுகளும், அம்மாவை அவ்வப்போது சுட்டிக் காட்டுவதையும் சமாளிக்கையில் மஞ்சு வாரியார் நிமிர வைக்கிறார். தம்மை எள்ளி நகையாடும் அலுவலர்களையும் சமூகத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் இடத்தில் புது உத்வேகத்தை நம் உடலிலும் பாய்ச்சுகிறார். பல வருடங்கள் கழித்து மேடையில் ஏறிப் பேச எத்தனிக்கையில் நடக்கும் காட்சிகளின் மூலம் இயற்கை வேளாண்மை மற்றும் அதன் தேவையை அழகாய் கோர்த்து துவங்கும் இடம் உங்களை கட்டாயம் நிமிர்ந்தமரச் செய்யும்..

     வேலைக்கும் சென்று வீட்டையும் கவனிக்கும் பெண்ணாக வரும் கதா நாயகியையே கணவர் நடத்தும் விதமும் பார்க்கும் கோணமும் நம்மை யாரோ சம்மட்டியால் அடித்தது போல் வலிக்கறதென்றால், வீட்டில் இல்லத்தரசியாய் இருக்கும் பல பெண்களை சமூகமும், குடும்பமும் எப்படிப் பார்க்கிறது, எப்படிப் பார்க்க வேண்டும் என்று யோசிக்கவும் வைக்கிறது..


     நாங்கெல்லாம் பெண்களை மதிப்பர்கள் என்று மார்தட்டும் பல ஆண்களும் தங்கள் வீட்டு மனைவியை, அவளுக்குள் இருக்கும் திறமையை கண்டெடுத்து அவர்கள் அதை நோக்கிப் பயணிக்க உதவுவார்களா அல்லது வழிவிட்டேனும் நின்று வேடிக்கையாவது  பார்ப்பார்களா??!! இதற்கு ஆம் என்றாலும் இல்லையென்றாலும் எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய படம். முக்கியமாக எல்லா பெண்களும் போற்ற வேண்டிய படம்.

     How old are you??!! -- யார் பெண்களின் கனவுகளுக்கு Expiry date-ஐ நிர்ணயிப்பது ?? என்று கேட்டு நம்மை சிந்திக்க வைப்பதில் வெற்றி பெறுகிறது படம்.


--பூமகள்.