Wednesday, April 21, 2010
உறைந்த நிமிடம்..!
வெயில் பொழுது
துயில் கொள்ள
சாய்வுநாற்காலி தேடி
தோய்ந்து இருந்தது
கடலின் அருகில்..!
தூரத்து வானின்
கருத்த சீலையால்
மறைக்காத இடங்கள்
சிவந்த மேனியாய்
சித்திரம் காட்டியது!
எப்போது வேண்டுமானாலும்
விடைபெற காத்திருக்கும்
கொடியில் மாட்டிய பட்டம் போல்
நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..!
சிறுத்தையின் வேகத்தில்
சீறி வந்தாய் என் முன்..!
சிருங்கார பார்வையில்லை..!
சிரிப்பூட்டும் இதழில்லை..!
புரியாமல் பார்க்கின்றேன்..!
புரிந்தே நீ காண மறுக்கும்
என் விழியோர நேர்பார்வை..!
புரியத்துவங்கியது ஏதேதோ என்னுள்..!
"விலகிப்போ...மறந்துபோ..."
வார்த்தை சொல்லி
விலகி நின்றாய்..!
இரு வார்த்தையில் மரணம் வருமோ?
இதயத் துடிப்பு நின்று போனது..!
உள்ளம் உடைந்து, விழி வெடித்து
வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!
மேகத்துக்கு எப்படிக் கேட்டது??
முட்டிக் கொண்டு அதுவும் அழுதது..!
என் உயிர் பிய்த்து
உடல் மட்டும் சவமாய்
உறைய வைத்து
விட்டுச் சென்றாய்..!
சிதறிய கண்ணீர் மழைநீரோடு
மெல்ல உரையாடியது..!
வெகு நேரம் நின்று மழையோடு
விவரம் சொன்னேன்..!
வெறுத்து தகர்ந்து மெல்ல நகர்ந்தேன்
இதயத்து வலியோடு..!
சாலைகள் புதிதாய்..!
மழை மட்டும் என்னோடு
மருளாமல் துணையாய்..!
யாருமில்லை.. எவருமில்லை..!
இருட்டத் துவங்கும் தூரம் வரை
இரு காலும் இலக்கின்றி
நடந்து சோர்ந்தது..!
ஏதோ ஒரு கடை..!
உள்ளும் புறமும்
ஈரத்தோடு நுழைகிறேன்..!
உள்ளே அழுதாலும்
வெளியே வெளிரிச் சிரிக்கிறேன்..
"நக வெட்டி" வேண்டுமென்றேன்..!
வாங்கிவிட்டு வெளிவந்தேன்..!
மனம் கேட்டது!
உன் "நினைவு வெட்டி" கருவி!
வானம் வாஞ்சையோடு
வன்மழை மள்கி
மெல்லிய தூறலாக்கி
மனம் லேசாக்கியது..!
தூறலோடே திரும்பி
வந்தேன்..!
வெடித்து அழுதேன்..!
இப்போது கனமழை
என் வீட்டில்..!
Labels:
காதல் கவிதைகள்
3 comments:
மனம் கேட்டது!
உன் "நினைவு வெட்டி" கருவி!
அட.. அதெல்லாம் கூட விற்கிறார்களா..
எதையும் மறக்க முயன்று முடியாமல் தேம்புவதுதான் மனசு!
அழுது பின் ஆறுதலடைகிறது கவிதை....
புகைப்படம் மிக அழகு... வாழ்த்துக்கள்...
தெள்ளிய நடை கோர்வையான வரிகள்...வாழ்த்துக்கள்
Post a Comment