RSS

Saturday, January 26, 2008

பழையன கழிதல்..!

பழைய பேப்பரோடு
போட்டு மறக்க
முடியா சில..

கையெழுத்தோடு காதல் பேசிய
கடிதங்களும்...
வலி சொல்லி படபடக்கும்
விவாகரத்து பத்திரங்களும்..

மறக்க முடியாமல்
மறைக்கப்பட்டிருக்கும்
அலமாரியின் ஏதோவொரு
இடுக்கில்..!

தூசு தட்டி எடுத்து
தங்கமீன் குடம் வாங்க..
தயங்கியது மனம்..
கண்கள் குளமானதால்..!


~பூமகள்.

Friday, January 25, 2008

வலியின் விழி நீர்..!

வலியின் விழி நீர்..!



காலைப் பொழுதின்
துயில் கலக்க
பனித்திரை விடிகாலை..!

சுண்டி இழுக்கும்
அடிவயிற்று வலியால்
விழி தானாய் ஈரமாகும்..!

வன்வலியுணர்வு நரம்பு சுட..
பன்வலியோடு பறக்கும் கால்கள்..!

எட்டு மணி பேருந்து..
எட்டா தூரத்தில்..
சாய்ந்து வரும்..
கூட்டத்தினூடே..!

முட்டி மோதி..
மகளிர் கூட்டத்தில்
முழங்கை அழுத்த,
"ம்மா" என்ற அலரல்..
பேருந்து சத்தத்தில்
கரைந்து போகும்...!

நெரிசலில்
வயிற்றை பிடித்து ஒருகை...
கம்பி பிடித்து மறுகை..
கண்கள் மட்டும்
ஜன்னல் பார்க்கும்
கண்ணீரோடு....!

காலை உணவு
ரோட்டோரக் கடையில்
சுடச்சுட மணம் பரப்பும்..

வாசம் மட்டும் நுகர்ந்து
வாய் நிறைய சுவைக்கும்..
வலி கொஞ்சம் குறையும்..
வாசனை பிடிச்ச மகிழ்ச்சியில்..

ஒரு திடீர் நிறுத்தம்..
சட்டென ஏதோ அதிர
உள்ளிருக்கும் வலி
பளீர் என்று ஓங்கி அறையும்..!

வலி பொறுக்காமல்
உதடு கடிக்க..
பின்னிருந்து ஒரு கை..
உரசிப் பார்த்து
எக்காளமாய் சிரிக்கும்..!

திரும்பி முறைத்து..
முன்தள்ளி நிற்க..
திரும்பவோர் திடீர் வளைவில்
இடையில் மீண்டும் இடர்..

உள்வலி இடரும்..
அசதியின் கோபமும்
அந்நியள் ஆக்கும்..

திரும்பிப் பார்த்து
உரத்து ஒலிக்கும்
"தள்ளி நில்லுங்க...!"

பேருந்து ஸ்தம்பித்து
குரல் வந்த இடம்
பார்க்கும்..!

பார்வைக் கணைகள்
நெருப்பு கக்க,
கூனிக் குறுகி
பின்னவன் நிற்க..

நிம்மதி பெருமூச்சோடு
அடுத்த யுத்தத்துக்கு
தயாராகும் மனது..!

__________________
~பூமகள்.

Wednesday, December 26, 2007

நாம் யார்??







ரோஜாவின் செவ்விதழ்
தடவிய பனித்துளி
மிளிரும் புன்னகையோடு
பகலவன் முன்..!!


மகரந்த சூல்பையில்
மயங்கிய வண்டொன்று
பனித்துளி நோக்கி
படையெடுக்கும்
வைரம் திருட...!!

நொடிப்பொழுதில்
கரையும் பனித்துளி
வைரமென்றால்
காலத்தின் கையில்
நாம் யார்??


விடை தெரியா
வாழ்க்கை
விடைதேடும்
பூச்செடிகள் - நாம்!


__________________
~பூமகள்.

Sunday, December 16, 2007

கிளை தேடி...!





கிளை தேடி..!

கிளைகள் தேடும்
காற்றுப் பாதையில்
ஓர் விடுபட்ட இலை..!

தொலைத்த கிளையை
தேடும் விழியுடன்
தொலையா நினைவு..!

தெரிந்தே தேடும்
துன்பத்தின் வழியாக
தவிக்கும் பச்சிலை..!

துவண்டு விழுந்ததும்
தட்டி எழுப்பின
அன்புக் கரங்கள்..!

குற்றுயிராய் இருக்கும்
சருகுக்கு புரிந்தது
விடுபட்ட கிளையோடு
சிநேகம் இனி
செயற்கை என்று..!

உரமாகும் முயற்சியில்
இப்போது சருகு..!!
__________________
~பூமகள்.

Sunday, December 2, 2007

மழை...!!


மழை..!!




மழை இரவில்
கருக்கல் பயணம்..!!


ரகசியம் பு(உ)ணர
கரு மேக முகடு
கவ்விய இரவை
போர்வையாக்கியதால்
புலப்பட்டது காரிருளாயினும்
காட்டிக்கொடுக்க காத்துக்கிடந்தன
வானத்து எட்டப்பர்கள்..!!


சிதறிய கொலுசின் சிப்பாய்களாய்
மேகத்திரை(சிறை) தப்பித்து
நட்சத்திர மின்மினிகள்
கண்சிமிட்டி ஒளி சிந்தி
காட்சிக் கொடுத்தன...!!



முகில்கள் தழுவலின்
ஓங்கிய உரசல்
இடிகளாய் வந்து
இடித்துரைத்துக்
காட்டிச் சென்றன..!!



முகிலின் பு(உ)ணரல்
முரண்பட்டதால்
வாள் கொண்டு
போரிட்டதை மின்னல்
வெட்டி வெட்டி
வந்துரைத்துப் போயின..!!



மேக மைந்தன் முரணில்
முட்டி வென்றதால் வானம்
மகிழம்பூக்களாய் முகில்ப்பூக்கள் தூவி
வரவேற்க..!! - பூமிக்கு
பூமழையாக பொழிந்ததுவே..!!
__________________
~பூமகள்.