RSS

Monday, May 26, 2008

எவை இனிமை?

இனிமையானது தான்..
பரண் ஏறி
ஏதோ தேடும்..
பொழுதுகள்..

ஏதோ தேட
எத்தனிக்க..
எதேதோ அகப்பட்டு
நிதர்சன நிமிடங்களைத்
திருடிச் செல்லும்..

ஏடு தூக்கும் காலத்தில்
மழலைக் கையெழுத்தில்..
முதன்முதலில்
கிறுக்கிய ஐந்துமாத
கவிக்குழந்தை..

ஆரம்ப பள்ளி
புத்தகங்களின் இடையில்..
ஏதோ ஒரு வகுப்புத்தோழி
ரகசிய கிசுகிசுப்பில்..
குட்டி போடுமென
பத்திரப்படுத்தி வைக்கச் சொன்ன
மயிலிறகு பீலிகள்..

தினக்குறிப்பேட்டில்..
மனம் குறித்து வைத்த
ரகசிய குறியீடுகளோடான
பனிரெண்டாம் வகுப்பு..
ஆட்டோகிராப்புகள்..

இத்தனையும் கண்ணுற்று..
நிஜத்துக்கு வருகையில்..
மறந்தே போயிருக்கும்..
எதை தேட பரண் ஏறினேன்..??
__________________
--- பூமகள்.

Thursday, May 15, 2008

பூவப்பாயணம்..!!

உறங்கி கிடக்கும்
நடுநிசி நேரத்தில்..
இரவுப்பணி முடிந்து
கிரீம் ரொட்டி வாங்கி
ஊட்டி விட்ட நான்கு
வயது நாட்கள்..

சைக்கிள் முன்புறம்
கூடையில் பூவேற்றி..
ஊர் சுற்றி
காட்டித் திரிந்த
மூன்று வயது நாட்கள்..

காத்திருந்து எனை
ழைத்துச் செல்லும்..
என்அலுவலக
வேலை நாட்கள்..

பிறந்த நாள் முதல்
இன்று வரை..
சுமப்பது ஒன்றையே
சுகமாகக் கொண்ட
தங்கத் தந்தையே...

எப்போது எப்படி
என் கடன்
கழிக்க போகிறேன்??

குழந்தையான வயதிலேயே
குடும்ப குழுமத்தில்
பொருள் இருப்பும்..
உலக நடப்பும்
புரிவித்த வித்தகரே..

பொருளில்லா துயர்
நேரங்களில்...
புன்னகைப் பூக்க
படிப்பித்தவரே...

பகிராத விசயமென்று
எதுவுமில்லை உன்னில்..நான்
பகிராத ஒன்றிருந்தாலும்
மௌனத்தில் பரிமாறியவையே
அவை..!!

நேர்மையின் இருப்பிடமே..
மனத் திடம் இருந்தால்..
சூழ்நிலை எதுவும் நம்மை
மாற்றாதென வாழ்நாள்
சாட்சியானவரே...

இன்னும் சொல்ல
ஆயிரமுண்டு...
எத்தனை பிறவியெடுத்தாலும்
என் இக்கவியும்
உன் புகழும் சொல்லி
முடிக்க முடியாமலே...
தொடரும்..
நம் பந்தம் போலவே..!!

__________________
--- பூமகள்.

Friday, May 9, 2008

காலன் தீண்டிய கயலரசி



காலன் தீண்டிய கயலரசி..

முத்து பல் சிரிப்பாலே
மனம் மயக்கிய இளந்தளிரே..!
முனைப்பின்றி போனதேனோ - உந்தன்
மலர்விழி மூடி உறங்கத்தானோ??!

எடுத்து வைத்த சிற்பமே.. நீ
செய்யும் வேலை சித்திரமே..!
எழுச்சியின்றி போனதேனோ - எங்களை
அழ வைத்துப் போகத்தானோ??

அமைதியின் இருப்பிடம்.. நீ
பாசத்தின் பதிப்பிடம்..!
உன் பாசம் படிந்த நாட்களெண்ணி
உடைந்து அழுது போகத்தானோ??

கலைமகளின் கடைக் கண்
கிட்டாதென்று மரணமேன்??!
கலையரசி நீ நினைத்தால்
எட்டாததும் உண்டோ??!!

ஓராயிரம் கதை பேசி
ஒன்றாய் விளையாடிய
ஓயாத நினைவலைகள்
ஓடி வந்து தளும்புதே..!!

சிந்திய சிரிப்பொலியும்..
சீரிய உன் பண்பும்..
சிந்தை விட்டகலவில்லை..
சிந்திய கண்ணீரும் அடங்கவில்லை..!

அத்தை மகள் அட்சயமே..
அன்பு வீற்றிருக்கும் நாட்டியமே..!
கண்ணீரோடு ஏன் துமைந்தாய்..? - உன்
முடிவெழுதி ஏன் போனாய்??

கோலம் போடும் கோதரசி..
கண்கள் பாடும் கவியமுதே..
கோதை மன பலமெங்கே??
கோமதி உன் மதி எங்கே??!!

ஆறடி கூந்தலழகி.. உன்
ஆறறிவு.. போனதெங்கே??!!
அரைநிமிட அழுத்தத்தில்
அழிவெழுதி போனதேனோ??!!

அமைதியாய் கண்ணுறங்கு தளிர்பூவே - உன்
ஆன்மா துயரின்றி துயிலுறங்க
ஆண்டவனைப் பிராத்தித்து இந்நிலை
அடுத்திங்கு வராத வரம் கேட்பேன்..!

__________________
--- பூள்.

Saturday, May 3, 2008

அஞ்சாங்கிளாஸ்..!!



பட்டாம் பூச்சி தேடி
ஒரு பொழுது முழுக்க
அலைந்ததும் உண்டு..

சின்ன சின்ன
வெட்டுக் கிளி
பிடித்து
சிறைவைத்ததும் உண்டு..

அஞ்சாங்கிளாசினுள்
பாட்டிலில் வளர்த்தக்
கூட்டுப் புழு
பட்டாம் பூச்சியாகும் வரை
தினம்தினம் வகுப்புக்கு
பச்சிலை உணவுடன்
ஓடி வந்த
பள்ளி நாட்களும் உண்டு..

அறிவியல் ஆசிரியை
தாவரவியலினை
விளக்க..
வகுப்பறையில்
தேங்காய்த் தொட்டியில்
பச்சைப் பயிறிட்டு
முளைவிட்ட முதல்நாள்
சிலிர்த்துப் பார்த்த
பெருமிதமும் உண்டு..!!

தோற்றம் மாறிய (பள்ளி)முகப்பு
தாண்டிப் பயணப்படும்
நொடியெல்லாம்..
ஏற்றி வைத்த தீபமாக
ஒளிவீசிடும்
பள்ளி நாட்கள்..!!

______________
பூமகள்.