RSS

Thursday, March 25, 2010

கணினித் தோட்டம் -- ஒரு கண்ணோட்டம்


இணையம் வந்த பின்பு, இணைய வழி விளையாட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்தவண்ணமே இருக்கின்றன. பொதுவாகவே, இயற்கை மீதான என் பற்று அதிகம்.. அதை பல இடங்களில் என் நிஜவாழ்க்கையிலேயே உறுதிப்படுத்தியும் இருக்கிறேன்..

இறைவன் என்ற ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு அப்பால், எனக்கு டார்வின் கொள்கை மீதும், இயற்கை கொடுத்த பரிணாம வளர்ச்சியின் மீதும் நம்பிக்கை அதிகம். ஆக, என்னைப் பொறுத்த வரை, இயற்கை நம் வாழ்வின் ஆதாரம். ஆணி வேர்.

சமீபத்த்தில், இணைய வழி நட்பு வட்டத்தை ஓர் இடத்தில் இணைக்கும் பாலமாக விளங்கும் பேஸ்புக் என்றதளத்தில் ஓர் விளையாட்டு எதேட்சையாக காண நேர்ந்தது. அவ்விளையாட்டின் பெயர் ஃபாம் வில்லே.(FarmVille). இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், கணினித் திரையினுள் உங்களுக்கான ஓர்தோட்டம்.

அந்த ஃபாம் வில்லேயில் உங்களுக்கு பிடித்த காய்கறி, கனிகள், மரம், செடி, கொடி, பூக்கள் என ஒவ்வொருபடியாக முன்னேறுகையிலும் பயிறிட்டுக் கொண்டே போகலாம். உங்களுக்கென்று சொந்தமாக வீடு, தங்கக்குவியல் என அமர்க்களப்படுத்தலாம். அதாவது, ஓர் வெற்று நிலத்தை உழுது, பயிறிட்டு, உரமிட்டு, அறுவடைக்கான கால இடைவெளி விட்டு தகுந்த நேரத்தில் அறுவடையும் செய்யலாம். இத்தனையும் கணினியின் உள்ளேநிஜத்தில் தோட்டம் வைக்கக் கூட இடமில்லாத அடுக்குமாடி குடியிறுப்புகளில் இறுகியிருக்கும் மனங்கள் இந்த விளையாட்டில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருப்பது இயல்பே.

இவ்விளையாட்டை விளையாடும் போதெல்லாம், என் அடிமனதில் ஓர் ஓரத்தில் இயற்கை சார்ந்த சமூகப்பிரச்சனைகளும் நினைவுக்கு வருவது உண்மையே.

1. இங்கே இத்தனை மரங்களை நட ஆர்வமாக இருக்கும் நாம், எத்தனை போராடியும் நம் வீட்டின் முன்னால் வெட்டி வீழ்த்தப்பட்ட சாலையோர மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை என்ற ஆதங்கம் ஒருபுறமும்,

2. பல வருடங்களாக, நிழல் கொடுத்து, பல பறவைகளுக்கு வீடாகவும், நெடுஞ்சாலையின் வாகனப்புழுதியையும் புகையையும் போக்கும் அரணாகவும் விளங்கிய பல நூறு மரங்களை ஒரே நேரத்தில் சாலையகலப்படுத்துவதற்காக வெட்டி வீழ்த்திய அரசை எதிர்த்து ஒருகுரலும் எழுப்பாமல் விட்ட கோபம் மறுபுறமும்,

என இயற்கை மீதான என் பற்று நீண்டுகொண்டே போகிறது. ஆனால், இந்த ஃபாம் வில்லே பார்த்த பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் விவசாய நிலங்கள், அத்தனை விளை நிலங்களும் விலைபோய் அடுக்குமாடிகள் ஆகி மழை அருகிவரும் இவ்வேளையில், எனது இந்த பதிவும் முக்கிமானதாகவே படுகிறது.

இனி கணினியில் மட்டுமே மரங்களை வளர்த்தும், வயலமைத்தும் பார்க்க நேர்ந்துவிடுமோ என்ற அச்சமும் கூடவே எழுகிறது. அத்தகைய அச்சத்தில் இருக்கும் உண்மையும் ஓங்கி உறைக்கவே செய்கிறது.

அந்த நிலை வராமல் இருக்க என்ன செய்யலாம் என்ற சிறு எண்ணப்பொறியை உங்களுக்குள் என் இப்பதிவு உருவாக்குமேயாயின் நான் கடுகளவேனும் மகிழ்வேன்.

என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்களேன்.. மாற்றத்தை எங்கிருந்து கொண்டு வரலாம்.. எப்படிகொண்டு வரலாம்????


அன்புடன்,
பூமகள்.

1 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in