RSS

Monday, June 28, 2010

டாய் ஸ்டோரி 3 - 3டி (Toy Story 3 - 3D) - [பூ]மகளின் பார்வையில்..


டாய் ஸ்டோரி 3 - 3டி (Toy Story 3 - 3D) - [பூ]மகளின் பார்வையில்..


குழந்தைகளுக்கான கார்டூன் ஐஸ் ஏஜ்ஜுக்கு அப்புறம் எதையும் திரையில் பார்த்த நினைவில்லை.. அதுவும் முப்பரிமாணத்தில் இதுவரை எந்தப் படத்தையுமே பார்த்த அனுபவம் இல்லாததும், அவதாரை முப்பரிமாணத்தில் திரையில் பார்க்க இயலாது போன வருத்தம் என்னுள் நீடித்திருந்ததாலும் டாய் ஸ்டோரியையேனும் எப்படியாவது முப்பரிமாணத்தில் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வரவே இல்லை.. ஹி ஹி.. ஆயினும் வீட்டில் நான் பார்க்க இயலாது விடுத்த படங்களை ஈடு செய்ய இப்படத்துக்கு கட்டாயம் போகலாம் என்று அழைத்துச் சென்று விட்டார்கள்.

முப்பரிமாணத்துக்குண்டான கண்ணாடியை வாங்கிக் கொண்டு திரையரங்கில் நுழைந்தால், அங்கே சில விளம்பரக் காட்சிகளுக்கு அப்புறம் திரையில் உங்கள் கண்ணாடியை அணியுங்கள் என்று ஆங்கிலத்தில் சொற்றொடர் வரவே, அந்த சிவப்பு பிரேம் கண்ணாடியை அணிந்து கொண்டேன். குளிர் கண்ணாடியை விட அதிக கருப்பாக இருந்த காரணத்தால் திரையைத் தவிர எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை..

அப்புறமாவது படத்தைப் போடுவாங்க என்று ஆவலோடு பார்த்தால் விரைவில் வர இருக்கும் படங்களுக்கான திரைக்காட்சிகள்.. அதுவும் முப்பரிமாணத்தில்..

எப்போது எழுத்து போட்டு ஆரம்பிப்பார்கள் என்று சோர்ந்து போய் அமர்ந்த வேளையில் படத்தைப் போட்டே விட்டார்கள்..

டாய் ஸ்டோரியின் முதல் இரு பாகங்கள் நான் பார்த்ததில்லை ஆதலால் முன் கதை எனக்கு தெரியாது என்ற கவலை வேறு மனதில் ஓட படத்தைக் காண தயாரானேன்.

ஒரு வாலிபன், கல்லூரிக்காக முதன் முதலில் வேறு ஊருக்குச் செல்ல ஆயத்தமாகிறான்.. அவன் விளையாடிய பொம்மைகள் ஒரு பெட்டியில் தூங்குகின்றன..அந்த பொம்மைகள் அவனுக்கு பழைய கால நினைவலைகளை எழுப்புகின்றன.. வெகு பிடித்தமான கவ் பாய் பொம்மை அவனது உற்ற தோழன் போல் உடனேயே இத்தனை காலம் இருக்கிறது.

இந்த கவ் பாய் தான் படத்தின் ஹீரோ. ஹீரோயின் - பாஃர்பி பொம்மை, சின்ட்ரெல்லா மற்ற துணை கதாப்பாத்திரங்களாக டைனோசர், ஏலியன்ஸ், குதிரை, பன்னிக் குட்டி, விண்வெளி வீரன், ஸ்பிரிங் நாய்க்குட்டி, கிழங்கு ஜோடிகள் என பல பாத்திரங்கள் நம்மை நடிப்பில் அசத்துகின்றன..

பொம்மைகள்
விளையாடி முடித்தபடியால் அவை தேவையற்றவை என்று சொல்லி குழந்தைகள் காப்பகத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடலாம் என அந்த வாலிபனின் அம்மா வற்புறுத்த, வாலிபனோ தனக்கு மிகப் பிடித்தமானவை என்று சொல்லி பரணில் போட பொம்மைகளை மூட்டை கட்டுகிறான்..

அச்சமயம், தனது தங்கைக்கு உதவ சென்று விட, பாதியில் வைக்கப்பட்ட அந்த மூட்டை குப்பை என்று அம்மாவால் கருதப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்படுகின்றன. கவ் பாய் மட்டும் இம்மூட்டையில் மாட்டாமல் இவர்களைக் காப்பாற்ற பின் தொடர, குப்பையை எடுக்கும் லாரி வரும் வேளையில் பொம்மைகள் தப்பித்து மீண்டும் வீடு நோக்கி வருகின்றன.. கவ் பாய் ஆனந்தமாகிறான்..

பின்பு எல்லா பொம்மைகளும் அந்த வாலிபனின் தங்கை பொம்மைகளோடு சேர்க்கப் பட்டு சன்னி சைட் எனப்படும் குழந்தைகள் காப்பகத்துக்கு வருகின்றன..அங்கே வயதான கரடி, அழகான வாலிபன், குழந்தை மற்றும் ஆக்டோபஸ் போன்ற பொம்மைகள் ஏற்கனவே தனது ராஜ்ஜியத்தை செவ்வனே அமைத்து வாழ்ந்து வருகின்றன..
அவைகளோடு சேர்ந்தனவா.. அங்கிருக்கும் குழந்தைகளாலும் சுற்றத்தாராலும் என்னென்ன இடையூருகளைச் சந்தித்தன.. எப்படியெல்லாம் சிந்தித்தன என்பதை மனதையும் சிந்தையையும் தொடும் விதத்தில் தொய்வில்லாமல் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஆங்காங்கே, நல்ல நகைச்சுவையும் தெறிக்கிறது. அரங்கத்தில் அதிரும் சிரிப்பொலிகளை அவ்வப்போது பெரியவர்களிடமிருந்தே கேட்க நேரிட்டது.. நானும் அதில் அடக்கம்.

தனது வீட்டை விட்டுச் சென்ற பொம்மைகள் திரும்பி வீட்டுக்கு வந்தனவா? அவை செல்லாக்காசுகளாகக் கருத்தப்பட்டு வீசப்பட்டதாக எண்ணி வர மறுத்தனவா என்பது போன்ற நுணுக்கமான உணர்வுகளும், படத்தில் பார்ஃபி பொம்மையால் அழகிய காதல் காட்சிகளும் கருத்தைக் கவர்கின்றன.

படத்தில் கரடிக்கு வரும் ஃபிளேஸ் பேக் நகைச்சுவையாக சிரிக்க வைத்தது.. நம் தமிழ் படங்களின் பிளேஸ் பேக்குகளோடு ஒப்பிட வைத்தது.. ஆயினும் நாம் முதலில் விளையாடிய பொம்மை பற்றிய எண்ணம் வரத் தவறவில்லை..

கிழங்கு முகம் கொண்ட இரு பொம்மைகள் நகைச்சுவையில் நம்மைக் கட்டிப் போடுகின்றன.. முகத்தில் ஒரு கண்ணைத் தொலைத்தும், முகத்தையே தொலைத்து சப்பாத்தி மாவில் தனது கண், காது, மூக்கு, வாய் இவற்றை பொறுத்தி நடக்கும் தருணத்தில் புறாவால் கொத்தப்பட்டு கிழிந்த முகத்தோடு விழும் காட்சியிலும் சிரிப்பு அள்ளுகிறது.

2 மணி நேரம் சிறு குழந்தையாக நீங்கள் மாற எண்ணினால் கட்டாயம் இப்படத்தை முப்பரிமாணத்தில் திரையில் காணுங்கள்.. நிச்சயம் நீங்கள் குழந்தையாக உங்களை உணர்வீர்கள்.

மெல்லிய உணர்வுகளைத் தட்டி எழுப்பிய படம்.. மனதின் அடியில் நன்கு பதிந்துவிட்டது.. அடுத்த டாய் ஸ்டோரிக்காக காத்திருக்கத் தயாராகிவிட்டேன்.

1 comments:

ஆதவா said...

வாவ்.... வாவ்..... வாவ்..... பார்த்தாச்சா.........

எங்க ஊர்ல இந்த மாதிரி படங்களே ரிலீஸ் ஆகிறது கிடையாது. அதனால எல்லாமே சுட்டபழமாத்தான் கிடைக்கும்.

டாய் ஸ்டோரி தான் முதல் ஆங்கில 3D அனிமேஷன் கார்டூன் படம். பிக்ஸரின் அருமையான தயாரிப்பு. உங்களுக்கு பொம்மைகள் விளையாடிய நினைவுகள் படம் பார்க்கையில் வருவதாகக் கூறியிருந்தீர்கள். அதுதான் பிக்ஸர் அனிமேஷ்ன் ஸ்டுடியோவின் வெற்றி. பிக்ஸர்+டிஸ்னியின் இரண்டாவது 3D கோண திரைப்படம். எப்படியாவது நான் கண்டுவிடலாம் என்று நினைத்தால் ம்ஹூம்... அது நடக்காது./


உங்கள் விமர்சனம் சரியாக இருந்தது. அடுத்த டாய்ஸ்டோரி வருகிறதோ இல்லையோ, முதலில் பழைய PIXER படங்கள் பார்த்துவிடுங்கள், அல்லது அடுத்த வருடம் cARS 2 வையும் மறக்காமல் பார்த்துவிடுங்கள்.

அன்புடன்
ஆதவா.