
எப்போதும் போலவே
அன்றும் நீயே
சண்டையை
துவக்கி வைத்தாய்..!!
என்னோடு சண்டைபோட
சுலப வழி எப்பொழுதும்
உனக்கு
இருக்கவே இருக்கிறது..
நாளை செய்ய எத்தனித்து
விடுபட்ட வேலை மேல்
உன் வேல் விழி பாயும்..
அரும்பி விடும் உன்னுள்
அந்த அரிவாள் வாக்குவாதம்..
விடாப்பிடியாய் நீ பேச..
என் நியாயம் நான் பேச..
காரணங்கள் கரைந்து
ஏனோ என்
விழியோரம் நனைக்கும்..
கோபத்தோடே
அலுவலகம் சென்றிடுவாய்..
எதுவும் கேக்காமல்
ஊமையாகும்
வாயும் வயிறும்..
மதியம் அழைப்பு வரும்..
இயல்பு திரும்ப
இயல்பாக பேச
முயல்வாய்..
வறண்ட கிராமத்தில்
நீர் முடக்கும்
கையடி குழாய் போல்
உணர்வு முடக்கி
நான்…
உணவு அனுப்பி
உண்ண வைப்பாய்..
உன் பாசம் சொல்லி
நெகிழ வைப்பாய்..
பாறையை பூவாக்கும் வித்தை
பிரயோகிப்பாய்..
கல்பாறை கற்கண்டாகும்..
வீடு திரும்பிய
உனைச் செல்லமாய்
குத்தி நெஞ்சில்
முகம் புதைப்பேன்..
அர்த்தமற்ற சண்டையின்
அரிய நோக்கம்
அறியச் செய்வாய்..
முன்னை விட
தித்திக்கும்
நம் காதல் அன்று..
இறுதியில் சொல்வாய்..
இதற்குத் தான்
காத்திருந்ததாக…!!
--பூமகள்.
1 comments:
கற்பாறை கற்கண்டாகும்
சொல்லழகு :-)
Post a Comment