மைப் பேனாவும் நானும்..!!
இந்த முறை இந்திய பயணத்தில் போன தடவை விட்டு வைத்த
சில பலத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன்.. அந்த சிலதில்
சீனிப்புளியங்காய், நொங்கு, அப்புறம் பேனா.. அதுவும் லெட் பேனா கூடாது.. பள்ளி நாட்களில்
மை ஊற்றி எழுதுவோமே அந்த பேனா.. சென்ற முறை இந்தியப் பயணத்தில் வாங்காமல் வெறுமணே பார்த்து
விட்டு மட்டும் வந்தேன்.. காரணம், பேனாவில் தாளில் எழுதி வெகு வருடம் ஆனது தான்..
பள்ளி நாட்களில்.. மை பேனாக்களுக்கு இருக்கும்
வரவேற்பு அலாதி. அதிலும் கண்ணாடி வைத்த பேனா வைத்திருந்தால், அதில் எழுதும் அழகே தனி
தான்.. மை அளவை அதில் பார்த்து பார்த்து எழுதியும், சில துளிகளை தோழிகளிடம் கடன் பெற்றும்
எழுதும் நாட்கள் மனக்கிடங்கில் சுமந்துகொண்டிருக்கும் வசந்தமான நினைவுகள்..
முதன் முதலில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்காக
அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்த ஹிரோ பேனா தான் மிக பத்திரமாக என்னால் பாதுகாக்கப்பட்ட
ஒன்று.. பின்னர் அதன் போலவே கருஞ்சிவப்பு நிறத்தில் அடுத்த பனிரெண்டாம் வகுப்பு பொது
தேர்வுக்கும் அப்பா வாங்கித் தந்தார்.. அப்போதெல்லாம் எழுத்து மிக அழகாய் வருவது மை
பேனாவில் எழுதினால் மட்டுமே. லெட் பேனா எனக்கு அவ்வளவு வசப்பட்டதில்லை..
புது நோட்டுப் புத்தகத்தில் முதல் பக்கத்தில்
பெயர் எழுதி பின் மை பேனாவால் எழுதும் ஆவல் மனதில் நீங்காமல் பசுமையாக இருக்கிறது இன்றும்..
அத்தகைய அனுபவம் கிடைக்க வேண்டி, இம்முறை கடைக்கு வேறு பொருள் வாங்கச் சென்று பின்
போன முறை பார்த்த அந்த பேனாவின் மேல் நாட்டம் வந்தது.. ஒரு மை பேனாவும் ஹிரோ பேனாவும்
வாங்கியாயிற்று.. மைப் புட்டி மாத்திரம், கொண்டு வர எதுவாக இருக்காது என்றெண்ணி வாங்காமல்
விட்டு விட்டோம்.. ஒரு சிறிய நோட்டு, ஒரு பெரிய நோட்டு என்று சில நோட்டுகளும் வாங்கியாயிற்று..
அதையெல்லாம் வாங்கும் பொது இருக்கும் மகிழ்ச்சி.. பள்ளித்துவக்கத்தில் புதிய நோட்டுகளும்
புத்தகங்களும் வாங்கும் பொது வருமே.. அத்தகைய ஒரு மகிழ்ச்சி.. சொல்ல வார்த்தைகள் இல்லை..
சில நேரங்களில் வெகு சின்னச் சின்ன விசயங்கள் கூட நம் மனதுக்கு அளவில்லா மகிழ்ச்சி
தரும் இல்லையா?!!
பேனாவும் நோட்டுப் புத்தகமும் காத்துக் கொண்டிருக்க,
மைப் புட்டிக்காக மனம் தேடிக் கொண்டிருக்கிறது. இங்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
ஏக்கத்தோடு பேனாவைத் தடவிக் கொடுத்தபடி நான்..!!
அன்புடன்,
பூமகள்.
3 comments:
அன்புத்தோழி!
உரங்கொண்ட ஊற்றுகளே மையாக
திரமோடு தீட்டிடலாமே எண்ணங்களை....
விரைவில் எழுதுமும்’மை’ பார்த்து நானும் காத்திருக்கிறேன்.
வலைச்சர ஆசிரியப்பணி சிறக்கவும் என் நல் வாழ்த்துக்கள்.
இனிமையான நினைவுகள்..மை கிடைத்ததா?
இந்திய பயணத்தில் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகிறேன்.
Post a Comment