RSS

Saturday, May 16, 2009

யாமம் - நாவல் விமர்சனம்

"யாமம்" - நாவல் விமர்சனம்

- ஒரு வரலாற்றுச் சமூக நாவல்
நூலாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை
விலை: 225/- ரூபாய்.



எஸ்.ரா அவர்களின் எழுத்துகளின் வீரியமும் ஆழமும் அறியப்பெற்ற பின் அவரின் அனைத்து படைப்புகளையும் படிக்கும் முனைப்பு மெல்ல மெல்ல என்னில் வேர்விடத் துவங்கியிருக்கிறது.

அவ்வகையில் இது அவரின் படைப்பில் நான் படிக்கும் மூன்றாவது புத்தகம். "நடந்து செல்லும் நீரூற்று", "ஏழுதலை நகரம்" என்ற இரு புத்தகங்களும் முதன் முதலில் நான் படித்த அவரின் புத்தகங்கள்.

யாமம் இவ்விரு புத்தகங்களிலிருந்தும் பெருத்த வேறுபாடுகளைக் கொண்டிருப்பதை அது கொண்ட குறு பின் அட்டை விளக்க உரையே விளக்கியது.

"நடந்து செல்லும் நீரூற்று" - எஸ்.ரா அவர்களின் எதார்த்த வாழ்வின் முகங்களைக் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு.

"ஏழுதலை நகரம்" - குட்டீஸ் விகடனில் வெளியான குழந்தைகளுக்கான மாயஜாலக் கற்பனை நகர் பற்றிய கதை.

இவ்விரு புத்தகங்களுமே என்னுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. ஆயினும் அவற்றுக்கெல்லாம் விமர்சனம் எழுத ஏனோ என்னுள் தைரியம் இல்லாமல் இருந்தது. காரணம், அவரின் அத்தனை வலிமையான எழுத்தாளுமை.

ஆனாலும், நல்லப் புத்தக வாசிப்பு ஒரு சிறந்த நண்பருடன் உரையாடுவதை விட எனக்கு அதிக மனத் தெளிவைத் தந்துவருவதும் உணர்ந்த ஒன்று.

தனிமைக் கதவுகள் தாழிட்ட போதிலும்.. என்னைக் கற்பனையில் பிரபஞ்சம் அளக்கச் செய்பவை புத்தகங்களே.

அவ்வகையில் யாமம் பற்றிய என் உணர்வுகளையும் விமர்சனத்தையும் வழங்க நான் கடமைப்பட்டவளாகிறேன்.

யாமம் என்ற நாவல், புரியாத புதிர் போல மெல்ல மெல்ல நம் முன் விவரிக்கப் படுகிறது. வெவ்வேறு கிளைகள் பரப்பி அதன் மாட்சிமையை பிரம்மிக்கச் செய்கிறது.

யாமம் என்ற நாவலின் கதைக் களம் நான்கில் மூன்று பாகம், சென்னை என்றழைக்கப்படும் பண்டைய மதராப் பட்டிணத்தைச் சுற்றியே அமைந்திருக்கிறது. கப்பலில் வணிகத்துக்காக வந்திறங்கிய ஆங்கிலேயர் வசம் எப்படி மதராப்பட்டிணம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைக் குழைத்துக் கொண்டது என்பதை கற்பனையும் எதார்த்தமும் சரிவிகிதத்தில் கலந்தளித்து நம்மை எதார்த்ததைப் பிரித்தறிய இயலாதபடி அமைந்திருக்கிறது கதை.

நாவலின் மாட்சிமை பல கிளைகளோடு அமைந்திருந்தாலும், அதன் முக்கிய பாத்திரங்கள் நம் பயணமெங்கும் சரி விகிதத்தில் பங்கெடுக்கின்றனர்.

அவர்கள், அப்துல் கரீம், பத்ரகிரி, கிருஷ்ணப்ப கரையாளர், சதாசிவப் பண்டாரம் ஆகியோர் ஒருவருக்கொருவர் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும், யாமம் என்ற அர்த்தர்(வாசனைத் திரவியம்) மூலம் ஒருங்கே கூடி நம் நெஞ்சில் வாசத்தைப் பரப்புகிறார்கள்.

அந்த அர்த்தரின் காண இயலாத வாசனை போலவே இந்த நால்வரின் வாழ்க்கையும் பல புலப்படா சூட்சுமங்கள் நிறைந்து எவ்வகையில் முடிவுக்கு வருகிறது என்பதில் நாவல் எதார்த்தத்தைப் பின்னியிருக்கிறது.

ஆங்காங்கே,கரீம் கனவில் வரும் பக்கீர் என்ற மூதாதையரின் இரவுக்கும் கடலுக்குமான கேள்விகளும், விடைகளும் நம்மையும் ஆழ்ந்த சிந்தையில் ஆழ்த்துகின்றன. நாவலின் மிகச் சிறப்பான பகுதியாக இவைகளை நான் சொல்வேன்.

கரீம் கனவில் காணும் பக்கீர் அவருக்கு வழிகாட்டுவதும், "யாமம்" என்ற வாசனைத் திரவியம் மூலம் பெரும் செல்வந்தர் ஆவதும், அவரின் மூன்று மனைவிகளான சுரையா, வஹிதா, ரஹ்மானி ஆகியோரை விட்டுப் பிரிந்து சென்ற பின் ஏற்படும் அந்த அபலை மனைவிகளின் நிலையும் நெஞ்சில் நீங்காமல் ஓர் இடம் பிடிக்கின்றன. கரீமின் குடும்பத்தோடு எல்லா நேரங்களிலும் அருகிருக்கும் சந்தீபா என்ற ஏழைச் சிறுவனின் குணம், அவனின் ஓர் நாளைய கனவு என நாவலின் நகைச்சுவைப் பகுதியும் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது.

தன் சொத்துக்கள் தமக்கே கிட்டவேண்டுமென்று போராடும் கிருஷ்ணப்ப கரையாளர், அவரின் அற்புத மனமாற்றத்துக்கு காரணமான மேல்மலையின் வனப்பு, அவரின் ஒரே சொத்தான மேல்மலையையும் யாரோ ஒரு விலைமகளான எலிசபத் என்ற ஆங்கியேய மங்கைக்குப் பெயர்மாற்றும் கரையாளர் குணம் என்று பிரம்மிக்க வைக்கும் இடங்கள் அதிகம். மேல்மலையைப் பற்றிய விவரிப்புகளும், வர்ணனைகளும் நம்மையும் மேல்மலையில் சில காலம் தங்கவைத்த உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.

திருச்சிற்றம்பலம் என்ற அன்பும், பண்பும், அறிவும் நிரம்பிய தம்பி, அவரின் அன்பிற்கு அருகதையாகாத செயலைச் செய்த பின் வருந்தும் ஓர் அண்ணாக பத்ரகிரி, அவன் மனைவி விசாலா, திருச்சிற்றம்பலத்தின் ஆற்றலைப் புரிந்து கொண்டாலும், உடலாலும், மனதாலும் முதிராத அவன் மனைவி தையல். இவர்களின் தவறுகளும், அதற்கான தண்டனைகளும் மிகச் சிறப்பாகக் கதையில் கையாளப்பட்டிருக்கின்றன.திருச்சிற்றம்பலத்தின் பாத்திரம், பெருமை கொள்ளும் படியாக அமைந்திருக்கிறது. உல்லாசக் களிப்பிற்காகவே ஏங்கும் திருச்சிற்றம்பலத்தின் நண்பனாக வரும் சற்குணம், பின் எப்படியெல்லாம் பண்படுத்தப்படுகிறார் என்று நாவல் மிக அழகாக விவரித்திருக்கிறது. சற்குணத்தின் முடிவு மட்டும் எழுதப்படமாலே வாசகர் யூகத்துக்கு விட்டுவிடப்பட்டிருக்கிறது.

சதாசிவப்பண்டாரம் என்ற பண்டாரத்தின் வாழ்க்கை மாற்றம், அவரில் தோன்றும் மனிதருக்கான இச்சைகள், திரு நீலகண்டம் என்று தாமே பெயரிட்டு அழைக்கும் ஒரு நாயின் வழியில் தன்னைச் செலுத்தி இறுதியில் முடிவென்ன என்று நம்மைக் காக்கச் செய்த விதம் என்று நாவலில் அனைத்தும் அருமை. இவரின் செயல்பாடுகளும், அதற்கான நாயின் கண் கவனிப்புமே பதிலாக்கி வாசகருக்குப் புரிவித்திருப்பது சிறப்பானது.

ஆக, இவ்வெல்லாப் பாத்திரங்கள் மூலமும் வரலாற்றுச் சான்றுகளை ஆங்காங்கே விவரித்ததோடு, மனித வாழ்க்கையின் எதார்த்த மீறல்களும், அதற்கான எதிர்மறை விளைவுகளையும் தெளிவாக்கியிருப்பது சிறப்பு.

எஸ்,ரா அவர்களின் மற்ற நாவல்கள் பற்றி நானறியேன். ஆயினும், இந்நாவல் படித்து, இரு நாட்களுக்கு என்னுள் இக்கதை மாந்தர்கள் இரவில் யாமம் என்ற வாசனைத் திரவியத்தோடு என்னைச் சூழ்ந்து கொண்டே இருந்தார்கள்.

எஸ்.ரா அவர்களின் இப்புத்தகம், நிச்சயம் பலரின் மனதிலும் அடர்ந்த வாசத்தை ஏற்படுத்தத் தவறாது.


$$$$$$$$$$$$$$$$$$$

13 comments:

சென்ஷி said...

:-)

நானும் இப்ப யாமம்தான் படிச்சுட்டு இருக்கேன். ஆனா இதுவரை 125 பக்கம்தான் முடிஞ்சுருக்குது :-(

அத்தர் வாசனை மெதுவாத்தான் என்னை படிக்கவைக்குது. முன்ன மாதிரி படிக்க முடியறதில்லை!

சென்ஷி said...

தங்களது ”பூ வனம்” என்ற தளத்தின் டெம்ப்ளேட் மிக அழகாக உள்ளது. அதனாலேயே நீங்கள் எழுதியுள்ள எழுத்துக்கள் எதுவும் வாசிக்க முடியவில்லை. அங்கு பின்னூட்டமிட்டு சொல்ல நினைத்தும் முடியவில்லை. தயவுசெய்து சரிபார்க்கவும்! அல்லது எழுத்துக்கள் தனியே தெரியும்படி சற்று மாற்றியமைக்கவும்.

நன்றி!!

பூமகள் said...

நன்றிகள் சென்ஷி. யாமம் மெல்ல மெல்லத் தான் படிக்க இயலும். நானும் வெகு நாட்களுக்கு மிக மெதுவாக புத்தகத்தை வாசித்தேன்.

முழுதும் படிச்சதும் தோன்றும் கருத்தை கட்டாயம் பகிருங்கள். :)

பூ வனம் பக்கத்தில் இருக்கும் பிரச்சனை கண்டேன். ஆயினும், அதன் அழகுக்காகவே மாற்ற மனம் வராமல் இருக்கிறது. சரி செய்யும் வழி அறியேன். வேறு வடிவத்தை ஏற்றத் திட்டமிட்டுள்ளேன்.
கவனத்தில் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் சென்ஷி. :)

anujanya said...

பூமகள்,

யாமம் எஸ்ராவின் மிக அருமையான நாவல். நான் படித்து ஒரு 3-4 மாதங்கள் ஆகி இருக்கும். மலைகளைப் பார்க்கையில் பத்ரகிரியும், லாமிங்க்டனும் நினைவுக்கு வருகிறார்கள். எப்படி இருந்த பத்ரகிரி எப்படி சீரழிகிறான்!

நீலகண்டம் - சொல்லிக்கொண்டே போகலாம் இதைப் பற்றி.

மேல்மலையில் ஏறுவது எப்படி என்று தயங்குபவரிடம், அந்த வேடுவக் கள்ளன் 'மலை - எங்கிருந்து வேண்டுமானாலும் ஏறலாமே!' என்பான். அபாரமான வரிகள் அவை.

மிக நல்ல, அருமையான விமர்சனம். இது போலவே நிறைய படியுங்கள். எழுதவும் செய்யுங்கள்.

அனுஜன்யா

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்பின் பூமகள், நான் எஸ்ராவின் தீவிர வாசகன்.. நீங்கள் சொல்லுவது போல அவருடைய எல்லாப் புத்தகங்களையும் படிக்க வேண்டும் எனத் தோன்றியது, துணைஎழுத்து படித்த பின்புதான்.. சமீபத்தில் அவருடைய உறுபசி என்னும் நாவலை வாசித்தேன்.. வாழ்க்கை பற்றிய பல கேள்விகளை எழுப்பும் நாவல்.. உங்கள் விமர்சனம் அருமை.. யாமத்தை பொருத்த வரையில் வாழ்வின் விநோதங்களை நம் முன்வைக்கிறது.. எனக்கு சற்குணத்தின் பாத்திர படைப்பு ரொம்ப பிடித்து இருந்தது.. பண்டாரத்தின் வாழ்கையில் ஒரு பெண் குறுக்கிடுவதும் பின் அவர் அவளை நீங்கி போகும் பகுதிகளும் என்னை மிகவும் ஈர்த்தவை.. வாழ்த்துக்கள்..:-)

பூமகள் said...

உண்மை தான் அனுஜன்யா அவர்களே. எனக்கும் இனி என்று மலையைப் பார்த்தாலும், லாம்டனும், பத்ரகிரியும் மற்றும் மேல் மலையும் நினைவுக்கு வருபவையாகவே இருக்குமென நினைக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட வரிகளை நானும் வெகுவாக ரசித்தேன். அற்புதமான உரையாடல்களை இடையிடைப் படிக்கையில் நாவலின் மேல் அதீத ஈடுபாடு உருவாகும்.

நிச்சயம் நிறைய வாசிக்க திட்டம் உண்டு. அதற்கான சூழலும் காலமும் அமைய வேண்டுமென்பதே எனது தீராத வேண்டுதலாக இருக்கிறது.

கருத்திட்டமைக்கு நன்றிகள் அனுஜன்யா. :)

பூமகள் said...

வணக்கம் கார்த்திகைப் பாண்டியன். :)
நானும் உங்களைப் போலவே எஸ்.ராவின் தீவிர வாசகி ஆகியிருக்கிறேன்.
சமீபத்தில் ஆதவாவின் உறுபசி பற்றிய விமர்சனம் படித்தேன். அதிலிருந்து துணையெழுத்தும், உறுபசியும் அடுத்ததாகப் படிக்கும் எண்ணம் வந்திருக்கிறது.

தாங்கள் சொன்னது போலவே, சற்குணத்தின் பாத்திரம் அபரிமிதமானது. எதார்த்த வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளைப் புரிந்து கொண்டபின் அவனுள் ஏற்படும் அந்த தீவிர போராட்ட குணம் பாராட்ட வார்த்தைகள் இல்லை. சற்குணத்தைச் சந்திக்க வரும் திருச்சிற்றம்பலம், அவன் இருக்கும் வீதியின் நிலையையும், வீட்டின் சூழலையும் கண்டு ஒரு வித அருவருப்புடன் திரும்புகையில் திருச்சிற்றம்பலம் நம் நெஞ்சிலிருந்து ஒரு படி இறங்குவதாகவே எனக்குத் தோன்றுகிறது. மற்ற சாதாரண ஆடம்பர விரும்பி மனிதரைப் போல கோழையாக திருச்சிற்றம்பலம் மாறியிருப்பதை நாவலாசிரியர் சொல்லாமல் சொன்ன இடம் அதுவென நினைக்கிறேன்.

நல்ல கருத்து கொண்டு விமர்சித்தமைக்கு நன்றிகள் பாண்டியன். தொடர்ந்து ஊக்கமளியுங்கள். :)

கடைக்குட்டி said...

நான் பாத்ததுகூட இல்லீங்க ..

கூடிய விரைவில் படிக்கிறேன்.. :-)

பூமகள் said...

நானும் உங்களைப் போன்ற படிக்கும் வயதில் பாட புத்தகத்தை மட்டும் பார்த்ததோடு சரிங்க..

நேரம் கிடைக்கையில் படிச்சி பாருங்க.. நல்ல வித்தியாசமான உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தும். :)

"உழவன்" "Uzhavan" said...

தகவலுக்கு நன்றி.

த. ஜார்ஜ் said...

அன்பு பூமகள்
அருமையாக உங்களுக்கு விமரிசனம் எழுத வருகிறது..
அழுத்தில் வசிகரமும்,வாசிக்கையில் ஒரு வாசமும் மெல்ல மெல்ல பரவுகிறது;வியாபிக்கிறது.
உங்கள் விமரிசனம் அந்த படப்பை எல்லோரும் படித்தேயாக வேண்டும் என்ற ஒரு உந்துதலை ஏற்படுத்துகிறது.
வாழ்த்துக்கள்.

பூமகள் said...

@ உழவன்,
நன்றிகள் உழவன். இன்னும் கொஞ்சம் விமர்சித்திருக்கலாமே.. நன்றியோடு முடிச்சிட்டீங்க??!!

@ ஜார்ஜ்,
ரொம்ப நன்றிகள் ஜார்ஜ். உங்களைப் போன்ற சிறந்த படைப்பாளிகள் என் பதிவை ஊக்குவிப்பது பெரும் மகிழ்ச்சி. தொடர்ந்து ஊக்கமளியுங்கள்.

cheena (சீனா) said...

அன்பின் பூமகள் - யாமம் - புத்தக விமர்சனம் அருமை - படித்து அனுபவித்து எழுதப் பட்ட ஒரு ஆய்வு - ஒரு பார்வை - ஒரு விமர்சனம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா