தாரே சமீன் பர்... (நிலத்தில் பூக்கும் நட்சத்திரங்கள்)..
தலைப்பே கவிதை போல... கவிதை மனதை கவிழ்க்கத் தவறவில்லை..
படத்தின் ஆரம்பக் காட்சியில் தலைப்பு போடுகையிலேயே வண்ண வண்ண மீன்களால் என்னை தன் வசம் இழுத்துப் பிடித்துக் கொண்டது படம்..
ஒரு மூன்றாம் வகுப்பு மாணவன்.. "இஷான் அகஸ்தி" தன் பாடப்புத்தக எழுத்துகள் நடனமாடுகின்றன என்று அப்பாவியாகச் சொல்கையில்... அவன் பொய்யாக நடிக்கிறான்.. படிக்க பயந்து பாசாங்கு செய்வதாக நினைக்கும் காட்சி தொடங்கி...
தண்டனையாக வகுப்புக்கு வெளியில் நிற்க வைக்க.. அவன் துறுதுறுன்னு நின்று கொண்டே சுவற்றில் ஆடியாடி செய்யும் சேட்டைகள் எல்லாம்.. அப்படியே... அவ்வயதுக்கு நம்மை கட்டிப் போடுகிறது... மேலும்..
குளத்திலிருந்து குட்டி குட்டி மீன் பிடித்து தன் வீட்டில் வைத்து அழகு பார்க்கும் காட்சி வரை.. முதல் சில காட்சிகளிலேயே... நெஞ்சுக்குள் இடம் பிடித்து விடுகிறார்..
சிறுவனுக்கு ஒரு சபாஷ்..
இப்போதெல்லாம் படத்தில் ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை ஹீரோவே தெரிய வேண்டுமென்று விரும்பும் கூட்டத்துக்கு மத்தியில்.. நம்ம அமீர்கான்.. நிகுமாக.. இடைவேளையின் போது வருவது மிகுந்த சந்தோசத்தினை ஆச்சர்யத்தோடு வரவழைக்கிறது...
படத்தில் இந்தக் காட்சி.. அந்தக் காட்சி என்று தனியே சொல்லவே முடியாத படி.. அத்தனைக் காட்சிகளும் அற்புதம்..
குறிப்பாக...
நம்மையும் அறியாமல் கண்கள் கசிந்த சில காட்சிகள்..
தன்னை போர்டிங் பள்ளிக்கு அனுப்புவதாக அப்பா கண்டிக்க...
அம்மா கைபிடித்து வரும் இஷான்.. அம்மா மட்டும் ரயிலேற.. ரயில் வேகமெடுக்க புறப்பட.. தான் கூட்டத்தில் மாட்டி அழுவது போல கனவில் கண்டு பயந்து.. விழித்து அம்மாவிடம் போர்டிங் பள்ளி வேணாம்.. நான் நல்லா படிக்க முயற்சிக்கிறேன் பாரும்மா... என்று... "A B C D E F M N O..." என்று சரமாறியாக கண்ணீரோடு கெஞ்சும் காட்சியில்.. அந்த தாயினை விட அதிக வலியை மனம் அடைகிறது..
அதே போல.. எல்லாரும் பள்ளியின் விடுதியில் விட்டுவிட்டு.. காரில் புறப்பட.. தனித்து நின்று.. அழுகையோடு பார்க்கும் இஷான்.. மனதை பிசைந்துவிடுகிறார்..
ஒரு எட்டு-ஒன்பது வயதுக் குழந்தையை.. எல்லாரும் சதா சர்வ காலமும் திட்ட.. சரிவர அம்மா முந்தானையின் பிடியே விடுபடாத நிலையில்.. அந்தக் குழந்தை தனித்து நின்று யோசிக்கும் காட்சிகள்.. அற்புதம்..
அமீர் கானின் வகுப்பறைக் காட்சியாக அவர் வரும் முதல் காட்சியிலேயே.. கலகலக்க வைப்பதோடு மட்டுமல்லாமல்.. ஒரு ஆசிரியர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும் புரியவைக்கிறார்..
கோமாளி மாதிரி வேடமணிந்து முதல் முறையாக அவ்வகுப்புக்கு ஒரு இடைநிலை ஓவியாசிரியராக வரும் நிகும் என்கிற அமீர்கான்.. சில பாடங்களை நமக்கு சொல்லாமல் சொல்வது போல் இருந்தது..
எனக்கு அந்தக் காட்சியில் கிடைத்த படிப்பினைகள்..!
1. ஒரு குழந்தைக்கு.. அதுவும்.. ஆரம்ப நிலை வகுப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு எப்பவும் ஆசிரியர்கள் வில்லன்கள் போலத் தெரியவே கூடாது.. எப்போதும் அன்பு ததும்பும் முகத்தோடு ஒரு நட்புறவாடும் உணர்வோடும் தான் இருக்க வேண்டுமென்று சொல்ல வருகிறார்..
வகுப்பில் அனைவரையும் ஓவியன் வரைய சொல்லி அவரவர் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டுவிட்டு.. மிகவும் மூடியாக அமைதியாக இருக்கும்.. இஷான் அகஸ்தியை சற்றுப் பொறுமையோடு கவனிக்க.. அவன் வண்ணங்களையோ தாளையோ தொடாமல் அப்படியே சிலையாக அமர்ந்ததைப் பார்த்து கொஞ்சம் பதறிப் போய்...
"கியா குவா பேட்டா?" - என்று கேட்டு பேச்சைத் துவங்கி.. எதுவுமே அவசரமில்லை.. மெதுவா வரைப்பா என்று சொல்லிவிட்டுப் போகும் அந்த கனிவு... இத்தனைக்கும் இஷான் எதற்குமே பதிலளிக்க மாட்டான்..
2. எப்படியான சூழலாக இருந்தாலும் ஒரு ஆசிரியருக்கு அன்பான கனிவுப் பேச்சுத்தான் முக்கியம் என்று சொல்லியிருக்கிறார்..
நிகுமாக வரும் அமீர் கான்.. பல இடங்களில் இப்படியான படிப்பினைகளை சொல்லாமல் சொல்கிறார்...
இஷானின் நோட்டுப்புத்தகத்தை .. இஷான் ஆபத்தில் அஇருக்கிறானென நிகும் வருந்தும் காட்சிகளில்.. நிஜமாகவே மனம் பதைத்து கண்கள் பனிக்கின்றன.. அழுகை முட்டிக் கொண்டு வருவதை எந்த கல் மனம் படைத்தவரும் தடுக்கவே முடியாது..
நிகுமான அமீர்கான் இஷானின் பெற்றோரைச் சந்தித்து.. நோய் பற்றி விளக்கி.. விரிவாக பேசுகையில்.. அழுகை முட்டிக் கொண்டு வர.. நா தழுதழுக்க... கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? என்று கேட்டு அழுகையை அடக்குகையில்...
இங்கும் அருவி மாதிரி அழுகை வந்துவிடுகிறது... ஒரு நிஜமான பாரம் மனத்தில் விதைந்துவிடுகிறது..
தந்தையினை ஒரு சீன மொழி அட்டையைக் காட்டி படிக்க வைத்து.. அவருக்கு இஷானின் நிலைமையைப் புரியவைக்கும் காட்சியும்..
பின்னால் ஒரு நாள் இஷானின் தந்தை, இஷானின் பள்ளிக்கு இஷானைப் பார்க்காமல் சென்று.. நிகுமிடம் தனது மனைவி அந்நோயைப் பற்றி இணையத்தில் படித்தாரென மிகுந்த பொறுப்புள்ளவர் போல மிடுக்காக விளக்குகையில்..
நிகும், ஏன் இதை என்னிடம் சொல்கிறீர்களெனக் கேட்க..
இஷானின் தந்தை, "இல்லை.. பசங்க மேல் எங்களுக்கும் அக்கறை இருக்குன்னு காட்டத்தான்.."என்று சொல்ல வர..
எது அக்கறை.. என்று கேட்டு... "மகனே.. நான் உன் மேல் அதிகமாக பாசம் வைச்சிருக்கேன்.. உனக்கு என்ன பிரச்சனையென்றாலும் நானிருக்கிறேன்.. என்னிடம் ஓடிவாப்பா" இப்படி அன்பாக கைபற்றி தலைகோதி பேசுவது தானே அக்கறை... அப்படின்னு சொல்லும் காட்சிகள் சம்மட்டியடி..
சாலமன் தீவின் பெயரைச் சொல்லி.. அதைப் பற்றி உங்க மனைவி இணையத்தில் படித்திருக்கிறாரா என நிகும் கேட்க..
இல்லையே ஏனென இஷானின் தந்தை வினவ..
அங்கே.. வாழும் ஆதிவாதிகள்.. ஒரு மரத்தை வெட்ட வேண்டுமெனில் கோடாளியால் வெட்ட மாட்டார்கள்.. அவர்கள் வழக்கப்படி.. அந்த மரத்தைச் சுற்றி நின்று.. அதனைத் தூற்றியும்.. பெரும் கோசங்கள் சத்தங்கள் எழுப்பியும்.. மோளங்கள் கொட்டியும்.. நிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்..
காலப்போக்கில் அந்த மரம் தன் வலுவிழந்து.. அதுவே செத்து விழுந்துவிடும்.. - என்று சொல்லி முடிக்கும் நிகுமை.. வருத்தத்தோடும் அதிர்ச்சியோடும் பார்த்து விடைபெறுகிறார் இஷானின் தந்தை..
வெளியே வரும் தந்தை.. இஷான் அழகாக படிக்க முயன்று கொண்டிருப்பதைப் பார்த்து கண்ணீர் மல்க இஷானைச் சந்திக்காமலேயே விடைபெறுகையில்.. நமக்கும் அழுகை வந்தே விடுகிறது..
வகுப்பில் இஷானுக்கு நம்பிக்கை வரவழைக்க.. அவன் போலவே கடினப்பட்ட பல அறிவியலாளர்கள் பற்றி சொல்லிக் கொண்டே வந்து.. இறுதியில் இஷானையும் நன்றாக பதில் சொல்ல வைக்கிறார்..
அதுமட்டுமின்றி.. இஷானிடம் அவர் ரகசியமாக தன் பற்றி கூறி.. ஒரு நல்ல நட்புறவை ஏற்படுத்திக்கொள்கிறார்.. அந்த இடமும் கிளாஸ்..
இறுதிக் காட்சியில்...
படம் வரையும் போட்டியில்.. அத்தனை கூட்டத்தில் இஷான் வரைந்த ஓவியத்தைக் கொடுத்துவிட்டு.. நிகுமின் வரைபடம் என்னவென பார்க்க ஆவலோடு வரும் இஷானின் செயல்.. நம்மையும் குறுகுறுக்க வைத்து காண வைக்கிறது..
இறுதியாக வயிற்றை கட்டிக் கொண்டு அமீர் கானுடன் இஷான் அழும் காட்சி.. மனம் நெகிழ்ந்து அழ வைக்கிறது.. ஆனால் இது ஆனந்தக் கண்ணீர்..
இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. ஒவ்வொரு காட்சியிலும் இப்படி ஆயிரம் அர்த்தங்கள்..
இந்தப் படம்.. உண்மையிலேயே பல நல்ல விசயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது..
இப்படம் பார்த்தவுடன் என்னுள் ஏற்பட்ட இரு மாற்றம்..!!
1. சின்ன வயது முதலே குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டுமென்ற என் ஆவல்.. இன்னும் வலுப்பெற்றது..
2. ஓவியத்தில் ஈடுபாடு அதிகமுள்ள நான்.. மீண்டும் ஓவியம் வரை ஆரம்பிக்க வேண்டுமென்பதும்..
கண்டிப்பாக இப்படம் ஆஸ்காருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.. நிச்சயம் ஆஸ்கார் விருது கொடுத்தே ஆகவேண்டும்..
இன்னும் இது போன்ற பல படங்களை அமீர் கான் எடுக்க வேண்டும்..
எல்லாம் சரி தான்.. ஆனால் ஒரே ஒரு பெரிய ஏக்கம்..
எப்போ நம்ம தமிழ் மொழியில் இவ்வகைப் படங்கள் வரும்??!!!!!!!
--- பூமகள்.
3 comments:
indha maadhiri tamilla padam eduka niraya directors irukaanga. but paakuraduku yaaru irukaa. sollunga.
அன்பின் பூமகள் - நீண்டதொரு திரைப் பட விமர்சனம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Greetings! I've been reading your web site for a long time now and finally got the courage to go ahead and give you a shout out from Houston Texas! Just wanted to say keep up the excellent job! gmail login
Post a Comment