RSS

Thursday, June 25, 2009

சர்தார்ஜியுடன் ஓர் பயணம்..!


வெளி நாட்டு வாழ்க்கையின் எல்லா வித சாதக பாதகங்களும் ஓரளவு அறியப் பெற்ற நாட்களின் ஓர் நாளின் பின் மாலைப் பொழுதில் இரவுணவு முடித்துவிட்டு டாக்சி ஏறி அமர்ந்தோம்.

அது வரை வேற்று நாட்டு முகங்களையே ஓட்டுனர் இருக்கையில் பார்த்தும், புரியாத பெயர் கொண்டு ஒட்டப்பட்ட அடையாள அட்டை கொண்ட காரின் முன் கண்ணாடியும், புரியாத மொழியில் இரைச்சல் பாடல் கேட்டும், அரைகுறை ஆங்கிலம் பேசும் ஓட்டுனரையுமே பார்த்துப் பயணப்பட்ட எனக்கு அன்று வித்தியாசமான அனுபவம்...

ஆம்.. எப்போதுமே டாக்சி ஏறியதும் செய்யும் முதல் காரியம், பெயரைப் பார்த்துப் படித்துக் கொள்வது.. ஏறி அமர்ந்த உடனேயே அழகிய ஆங்கிலத்தில் இயல்பாக பேசும் அந்த வயதான ஓட்டுனரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்..

பின் பெயரைப் பார்த்ததும் மேலும் ஆச்சர்யம்.. சுக்வந்தர் சிங்.. ஆஹா.. இந்தியர் ஒருவரின் காரில் பயணப்படும் முதல் பயணம் இது என்று மனம் குதூகளித்தது.. ஆனால், சிங்குக்கான தலைப்பாகையும் தாடி மீசையும் இல்லாமல் சாதாரண மனிதர் போலவே இருந்தது மேலும் பல்மடங்கு ஆச்சர்யத்தை அளித்தது..

மெல்ல பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.. என்னவரோடு உரையாடிய உரையாடல், அவர்கள் பற்றி "அபியும் நானும்" படத்தில் தலைவாசல் விஜய் பிரகாஷ்ராஜுக்கு சொல்கையில் பிரகாஷ் ராஜ் கொடுக்கும் ஆச்சர்ய முக பாவமே எனக்கும் பயணம் முழுதும் ஏற்பட்டது..

அவரோடு உரையாடியதிலிருந்து என் நினைவில் இருக்கும் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்..

பேச்சு முதலில் பரஸ்பர ஆரம்பம், இந்த நாடு பிடித்திருக்கிறதா?? எத்தனை ஆண்டுகள் இங்கு இருக்கிறீர்கள்?? என்று வரிசையாக கேட்டு பதில் பெற்ற ஓட்டுனர் அவரே அவர் பற்றி பல தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார்..

சில காலம் இந்தியாவின் சென்னையில் தங்கியிருந்ததாகவும்.. அங்கே சாலை விதிகளையும், சிக்னல்களையும் மதித்து நடக்காத மக்களின் போக்கையும் நகைச்சுவையோடு சொல்லி சிரிப்பில் ஆழ்த்தினார்..

இவரின் அன்றாட பொழுதுபோக்கு, தினமும் சைக்கிளில் சென்று சென்னையில் ஏதேனும் ஒரு ட் ராப்பிக் சிக்னல் இருக்கும் இடத்தில் நின்று அங்கு பணி செய்யும் டிராப்பிக் போலீஸையும் மக்களின் போக்கையும் படம் பிடித்து வேடிக்கை பார்ப்பது என்று சொன்னார்..

இன்கிரிடிபில் இந்தியா என்று நகைச்சுவை பொங்க சொன்னார்... என்ன தான் வெளி நாடு ஆயினும் நம்ம நாடு போல வருமா?? எத்தனை மகிழ்ச்சிகரமான இடங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நாடு.. இங்கு எங்கு திரும்பினாலும் வணிக வளாகங்கள் தானே?? என்று கேட்டு நம் துக்கத்தில் பங்கெடுத்தார்..

பின்னர் அவரின் அழகிய ஆங்கிலப் பேச்சுக்காண காரணம் புரிந்தது.. கொஞ்ச காலம் அமெரிக்காவில் டாக்சி ஓட்டி வந்ததாகவும், போர் அடித்ததால் இங்கு வந்து சில வருடம் ஆகிறதென்றும் சொன்னார்..

இந்த நாட்டில் இந்தியர்கள் வந்து படும் பாடு பற்றி சொன்னார்.. அத்தனையும் நிஜமென்றே ஆமோதிக்கும் படி இருந்தது.. திரைகடல் ஓடி திரவியம் தேட வரும் நம்மவர்கள் வந்ததும் இங்கு தங்கும் செலவுக்கே பாதிக்கும் மேல் வருமானத்தை இழந்து தவிக்கும் போக்கைப் பற்றி வருத்ததோடு விளக்கினார்..

சென்னையில் தனக்கு அடையாரில் சொந்தமாக வீடு இருப்பதாகவும், அதை யாரோ ஒருவர் ஆக்கிரமித்துவிட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.. ஆக்கிரமிப்பாளர்களை விரட்ட அவருக்கு அளிக்கப்பட்ட யோசனையை நகைச்சுவை பொங்க கூறியது தான் உச்சம்..

இவரது நண்பர் ஒருவர், ரவுடி கும்பலுக்கு பணத்தைக் கொடுத்து சொத்தை மீட்டுவிடலாம் என்று சொல்ல, மற்றொருவரோ, பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் பெயர் சொல்லி அவரைச் சந்திக்க கூட்டிச் செல்வதாக சொல்லியிருக்கிறார்.. மற்றுமொருவர், அந்த தலைவரின் மகனைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்..

இவற்றுக்கெல்லாம் இவர் அளித்த பதில் தான் பெரும் காமெடி..

தாதா கும்பலுக்கு பணம் கொடுத்தால் கொஞ்ச பணம் போகும்..
தலைவரின் மகனைச் சந்தித்தால் பாதி சொத்து போகும்..

தலைவரைச் சந்தித்தாலோ முழு சொத்துமே போகுமே என்று சொல்லிச் சிரித்தார்.. அதில் இருக்கும் உண்மை உறைத்தது..

இறுதியில் நேர்மையாகவே போராடுவோம் என்று வழக்கு தொடுத்து, பல வருடங்களாக சிவில் கேஸ் நீதிமன்றத்தில் நடப்பதாகச் சொன்னார்..

அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிடவே, மேலும் பேசும் ஆவல் இருந்தும் ப்ரியாவிடை பெற்றோம்..

அத்துணை நேரம் பேசிய பேச்சிலிருந்து எனக்கு ஒன்று மட்டும் விளங்கியது..

சர்தார்ஜிக்கள் உண்மையிலேயே மிக அதிக தைரியமும் அறிவுக் கூர்மையும் நிறைந்தவர்கள்... அவர்களின் தொலை நோக்குப் பார்வையும் ஒரு விசயத்தை ஆராயும் போக்கும் உண்மையிலேயே வியக்க வைத்தது..

இப்போதெல்லாம் எங்கள் பகுதியில் இருக்கும் நூலகத்துக்கு செல்லும் போதெல்லாம் அங்கு செக்குயூரிட்டியாக நிற்கும் சர்தார்ஜி தாத்தாவைத் தாமாகவே என் கண்கள் தேடுகிறது.. எந்த சர்தார்ஜியை வழியில் பார்த்தாலும் பெருமை கொள்கிறது மனம்..!

6 comments:

Nathanjagk said...

//தாதா கும்பலுக்கு பணம் கொடுத்தால் கொஞ்ச பணம் போகும்..
தலைவரின் மகனைச் சந்தித்தால் பாதி சொத்து போகும்..//
பூவு... இது காமடியில்லீங்க.. இதுதான் அச்சுஅசல் நிஜம்!

பூமகள் said...

உண்மை தான் ஜெகநாதன் அவர்களே.. அதைத் தான் பதிவிலேயே சொல்லியிருப்பேனே.. சொன்னதன் உண்மை உறைத்தது என்று...!!

அவரின் அறிவுக் கூர்மை இந்த விசயத்தில் நன்கு பளிச்சிட்டது..

வருகைக்கு நன்றிகள். :)

anujanya said...

சர்தார்ஜிகள் நீங்கள் சொன்ன மாதிரியே அறிவுக் கூர்மையும், நல்ல நகைச்சுவை உணர்வும் நிரம்பியவர்கள். அடிப்படையில் எளியவர்கள்.

மாதம் ஒரு பதிவுதான் என்று ஏதாவது விரதமா :)

அனுஜன்யா

பூமகள் said...

நிஜம் தான் அனுஜன்யா.. அனுபவத்து உணர்ந்த உண்மை.

மற்றுமொன்று.. உழைக்கத் தயங்காதவர்கள்..!

ஹாஹா.. அப்படியெல்லாம் இல்லீங்க.. கொஞ்சம் பிசியாக இருப்பதால் எழுதுவதற்கான கரு கிடைத்தும் எழுத மனமும் உடலும் காலமும் ஒத்துழைப்பதில்லை..

தினமும் பல பதிவுகள் போடும் பதிவர்கள் மேல் சின்ன பொறாமை கூட வந்துவிட்டது எனக்கு..

விரைவில் நிறைய பதிவுகள் தர முனைகிறேன்.. ஆனால், சொந்த வாழ்க்கை தான் எல்லாவற்றையும் விட முக்கியமல்லவா??

Anonymous said...

அருமையான பதிவுங்க...
சர்தார்ஜி என்றாலே முட்டாள்கள் போன்றதொரு மாயை ஒழியட்டும்...

பூமகள் said...

@ இங்கிலீஸ்காரன்

ரொம்ப நன்றிங்க.. எனதிந்த பதிவு அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துமெனில் அதுவே இப்பதிவுக்கும் எனக்குமான வெற்றியாகக் கொள்வேன்.

@கலையரசன்,

ரொம்ப நன்றிங்க கலை.
நீங்க சொன்ன பின் தான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.