RSS

Saturday, September 4, 2010

எல்லையற்ற மனவெளி..!!



எங்களுக்குள்ளான உரையாடல்கள் இப்படித் தான் எப்போதுமே ஆரம்பிக்கும்.. முகமலர்ந்து எனைப் பார்த்து புன் சிரிப்புடன் கதவருகில் வந்து நிற்பார் பக்கத்து வீட்டு வட இந்திய விருந்தினப் பெண். உள் அழைத்து அமர வைத்து விருந்தோம்பல் முடித்து ஆயாசமாய் அமர்ந்து கதை பேச ஆரம்பிக்கும் முன் அவரே வெகு தூரம் பேசியிருப்பார்.. தம் பிரிவு குறித்தும் தங்களின் கடவுள் நம்பிக்கை குறித்தும் சொற்பொழிவாற்றுவார். நம் பக்கம் எப்பவும் போல் கேட்டலும் அதைச் சார்ந்த பதில்களும் தொடரும்.. பேசுபவர் கொஞ்சம் அவரே தன் பாணி மாற்றி பேச்சை கேள்வி - பதில் பேட்டியாக்குவார்..

உங்க வீட்டு திருமணம் எப்படி நடக்கும்? இப்படி ஆரம்பிக்கும் அவரின் கேள்விகள்.. ஒரிரு வாக்கியத்தில் என் விடை முடிய.. மீண்டும் அடுத்த கேள்வி அவரே ஆரம்பிப்பார்.. திருமணத்தின் முன் தேடு படலம் முதல் திருமணம் முடிந்து பிள்ளைப் பேறு வரை கேள்வி பதில்.. அவர்களின் வழக்கம் என இரு வேறு கலாச்சார பரிமாறல்கள் நடந்தேறியிருக்கும்..

குழந்தை பிறப்பு முதல் குழந்தை வளர்ப்பு பராமரிப்பு வரை அனைத்தும் அலசி காயப்போட்ட பின் வீட்டு நிலவரம் அறிய எத்தனித்தார் அவர். சொந்த வீட்டு நபர் பற்றி நாம் கூற.. அவரின் பட்டியலோ ரேசனுக்காக காத்திருக்கும் மக்களின் வரிசையைப் போல் நீளும். தந்தை வழி சொந்தம் அனைத்தும் ஒரே வீட்டில் ஒன்றாய் இருக்கும் அந்த பாங்கு அவர் சொல்லச் சொல்ல.. நம் விழி விரியும்.. ஏக்கப் பெருமூச்சு என்னுள் மேலோங்கும்..

காதல் திருமணமெனில் தன் ப்ரிவினரால் உண்டாகும் எதிர்ப்பு, ஜாதகம், இனம், பிரிவு சார்ந்த பற்று பற்றி விரிவாக எடுத்தியம்பும் அவர் பேச்சு.. மெல்ல எனை நோக்கி அந்த கேள்வி வீசப்படும்..

உங்கள் வீட்டில் நடந்த திருமணம் எப்படி...

எங்க வீட்டில் எதையும் பார்க்கவில்லை..

உங்களவர் எந்த ஊர்??

நம் நாடல்ல..

அப்படியெனில் எந்த பிரிவு?

அதை நாங்கள் பார்க்கலை..

எந்த மதம்?

அதுவும் எங்களுக்கு தெரியாது..

பின்னே உங்கள் இனமா??

என் முகத்தில் சிரிப்பை ஒட்டவைத்து பதிலுரைத்தேன்..
அனைத்தும் வித்தியாசம் தான்..

அப்போ ஜாதகம் பார்த்தீங்களா??

இல்லை.. இதயத்தைப் பார்த்தோம்..

புருவம் உயர்த்தி ஆச்சர்ய முகபாவத்தோடு ஒரு சில நிமிடம் அமைதி காத்தார். விடைபெற்று எழுந்து சென்றவர் அதன் பின் அது பற்றி பேசவே இல்லை.

புதியதோர் உலகம் செய்வோம்..!!

அன்புடன்,
பூமகள்.

3 comments:

மதுரை சரவணன் said...

super. heart touching answer. thanks for sharing.

"உழவன்" "Uzhavan" said...

good

ரிஷபன் said...

அப்போ ஜாதகம் பார்த்தீங்களா??

இல்லை.. இதயத்தைப் பார்த்தோம்..

வாழ்க.. எல்லையற்ற மனவெளி.