RSS

Monday, June 28, 2010

டாய் ஸ்டோரி 3 - 3டி (Toy Story 3 - 3D) - [பூ]மகளின் பார்வையில்..






டாய் ஸ்டோரி 3 - 3டி (Toy Story 3 - 3D) - [பூ]மகளின் பார்வையில்..


குழந்தைகளுக்கான கார்டூன் ஐஸ் ஏஜ்ஜுக்கு அப்புறம் எதையும் திரையில் பார்த்த நினைவில்லை.. அதுவும் முப்பரிமாணத்தில் இதுவரை எந்தப் படத்தையுமே பார்த்த அனுபவம் இல்லாததும், அவதாரை முப்பரிமாணத்தில் திரையில் பார்க்க இயலாது போன வருத்தம் என்னுள் நீடித்திருந்ததாலும் டாய் ஸ்டோரியையேனும் எப்படியாவது முப்பரிமாணத்தில் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வரவே இல்லை.. ஹி ஹி.. ஆயினும் வீட்டில் நான் பார்க்க இயலாது விடுத்த படங்களை ஈடு செய்ய இப்படத்துக்கு கட்டாயம் போகலாம் என்று அழைத்துச் சென்று விட்டார்கள்.

முப்பரிமாணத்துக்குண்டான கண்ணாடியை வாங்கிக் கொண்டு திரையரங்கில் நுழைந்தால், அங்கே சில விளம்பரக் காட்சிகளுக்கு அப்புறம் திரையில் உங்கள் கண்ணாடியை அணியுங்கள் என்று ஆங்கிலத்தில் சொற்றொடர் வரவே, அந்த சிவப்பு பிரேம் கண்ணாடியை அணிந்து கொண்டேன். குளிர் கண்ணாடியை விட அதிக கருப்பாக இருந்த காரணத்தால் திரையைத் தவிர எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை..

அப்புறமாவது படத்தைப் போடுவாங்க என்று ஆவலோடு பார்த்தால் விரைவில் வர இருக்கும் படங்களுக்கான திரைக்காட்சிகள்.. அதுவும் முப்பரிமாணத்தில்..

எப்போது எழுத்து போட்டு ஆரம்பிப்பார்கள் என்று சோர்ந்து போய் அமர்ந்த வேளையில் படத்தைப் போட்டே விட்டார்கள்..

டாய் ஸ்டோரியின் முதல் இரு பாகங்கள் நான் பார்த்ததில்லை ஆதலால் முன் கதை எனக்கு தெரியாது என்ற கவலை வேறு மனதில் ஓட படத்தைக் காண தயாரானேன்.

ஒரு வாலிபன், கல்லூரிக்காக முதன் முதலில் வேறு ஊருக்குச் செல்ல ஆயத்தமாகிறான்.. அவன் விளையாடிய பொம்மைகள் ஒரு பெட்டியில் தூங்குகின்றன..



அந்த பொம்மைகள் அவனுக்கு பழைய கால நினைவலைகளை எழுப்புகின்றன.. வெகு பிடித்தமான கவ் பாய் பொம்மை அவனது உற்ற தோழன் போல் உடனேயே இத்தனை காலம் இருக்கிறது.

இந்த கவ் பாய் தான் படத்தின் ஹீரோ. ஹீரோயின் - பாஃர்பி பொம்மை, சின்ட்ரெல்லா மற்ற துணை கதாப்பாத்திரங்களாக டைனோசர், ஏலியன்ஸ், குதிரை, பன்னிக் குட்டி, விண்வெளி வீரன், ஸ்பிரிங் நாய்க்குட்டி, கிழங்கு ஜோடிகள் என பல பாத்திரங்கள் நம்மை நடிப்பில் அசத்துகின்றன..





பொம்மைகள்
விளையாடி முடித்தபடியால் அவை தேவையற்றவை என்று சொல்லி குழந்தைகள் காப்பகத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடலாம் என அந்த வாலிபனின் அம்மா வற்புறுத்த, வாலிபனோ தனக்கு மிகப் பிடித்தமானவை என்று சொல்லி பரணில் போட பொம்மைகளை மூட்டை கட்டுகிறான்..

அச்சமயம், தனது தங்கைக்கு உதவ சென்று விட, பாதியில் வைக்கப்பட்ட அந்த மூட்டை குப்பை என்று அம்மாவால் கருதப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்படுகின்றன. கவ் பாய் மட்டும் இம்மூட்டையில் மாட்டாமல் இவர்களைக் காப்பாற்ற பின் தொடர, குப்பையை எடுக்கும் லாரி வரும் வேளையில் பொம்மைகள் தப்பித்து மீண்டும் வீடு நோக்கி வருகின்றன.. கவ் பாய் ஆனந்தமாகிறான்..

பின்பு எல்லா பொம்மைகளும் அந்த வாலிபனின் தங்கை பொம்மைகளோடு சேர்க்கப் பட்டு சன்னி சைட் எனப்படும் குழந்தைகள் காப்பகத்துக்கு வருகின்றன..



அங்கே வயதான கரடி, அழகான வாலிபன், குழந்தை மற்றும் ஆக்டோபஸ் போன்ற பொம்மைகள் ஏற்கனவே தனது ராஜ்ஜியத்தை செவ்வனே அமைத்து வாழ்ந்து வருகின்றன..
அவைகளோடு சேர்ந்தனவா.. அங்கிருக்கும் குழந்தைகளாலும் சுற்றத்தாராலும் என்னென்ன இடையூருகளைச் சந்தித்தன.. எப்படியெல்லாம் சிந்தித்தன என்பதை மனதையும் சிந்தையையும் தொடும் விதத்தில் தொய்வில்லாமல் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஆங்காங்கே, நல்ல நகைச்சுவையும் தெறிக்கிறது. அரங்கத்தில் அதிரும் சிரிப்பொலிகளை அவ்வப்போது பெரியவர்களிடமிருந்தே கேட்க நேரிட்டது.. நானும் அதில் அடக்கம்.

தனது வீட்டை விட்டுச் சென்ற பொம்மைகள் திரும்பி வீட்டுக்கு வந்தனவா? அவை செல்லாக்காசுகளாகக் கருத்தப்பட்டு வீசப்பட்டதாக எண்ணி வர மறுத்தனவா என்பது போன்ற நுணுக்கமான உணர்வுகளும், படத்தில் பார்ஃபி பொம்மையால் அழகிய காதல் காட்சிகளும் கருத்தைக் கவர்கின்றன.

படத்தில் கரடிக்கு வரும் ஃபிளேஸ் பேக் நகைச்சுவையாக சிரிக்க வைத்தது.. நம் தமிழ் படங்களின் பிளேஸ் பேக்குகளோடு ஒப்பிட வைத்தது.. ஆயினும் நாம் முதலில் விளையாடிய பொம்மை பற்றிய எண்ணம் வரத் தவறவில்லை..

கிழங்கு முகம் கொண்ட இரு பொம்மைகள் நகைச்சுவையில் நம்மைக் கட்டிப் போடுகின்றன.. முகத்தில் ஒரு கண்ணைத் தொலைத்தும், முகத்தையே தொலைத்து சப்பாத்தி மாவில் தனது கண், காது, மூக்கு, வாய் இவற்றை பொறுத்தி நடக்கும் தருணத்தில் புறாவால் கொத்தப்பட்டு கிழிந்த முகத்தோடு விழும் காட்சியிலும் சிரிப்பு அள்ளுகிறது.

2 மணி நேரம் சிறு குழந்தையாக நீங்கள் மாற எண்ணினால் கட்டாயம் இப்படத்தை முப்பரிமாணத்தில் திரையில் காணுங்கள்.. நிச்சயம் நீங்கள் குழந்தையாக உங்களை உணர்வீர்கள்.

மெல்லிய உணர்வுகளைத் தட்டி எழுப்பிய படம்.. மனதின் அடியில் நன்கு பதிந்துவிட்டது.. அடுத்த டாய் ஸ்டோரிக்காக காத்திருக்கத் தயாராகிவிட்டேன்.

Tuesday, May 18, 2010

அவதார் - திரை விமர்சனம்




ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டு, இன்னும் எல்லார் மனதிலும் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் படத்தை நான் என்னவோ சென்ற வாரம் தான் புளூ ரே தொழிற் நுட்பத்தில் அதி துல்லியமாக இரு பரிமாணங்களில் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.. திரையரங்கில் பார்க்க இயலாத சூழலால் இத்தனை காலம் காத்திருந்த எனக்கு சொர்க்க லோகம் சென்ற உணர்வை படம் ஏற்படுத்தத் தவறவில்லை.

படத்தின் நாயகன் தனது வெகு எதார்த்தமான நடிப்பாலும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கிலும் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார். பெண்டோரா கிரகத்தில் இருக்கும் புது விதமான நாவி இன ஜீவராசிகள், அந்த கிரகத்தின் இயற்கை கொண்டிருக்கும் அழகு, அவர்கள் இருக்கும் அந்த வெள்ளைப் பூ, விழுதுகள் கொண்ட ஒளிரும் கடவுள் மரம் என நம்மூர் மாயஜாலக் கதைகளைக் கண் முன் விரிய வைத்து வாய் மூடாமல் பார்க்க வைத்த அத்தனை தொழிற் நுட்பக் கலைஞர்களுக்கும் சிரம் தாழ்த்தி வாழ்த்த வேண்டும் போல் தோன்றுகிறது.

எப்போதும் ஏலியன்ஸ் எனும் வேற்று கிரக ஜீவராசிகள் நம் கிரகத்தை ஆக்ரமிப்பது போலே சிந்தித்துக் கொண்டிருந்த ஹாலிவுட் இப்போது முதல் முறையாக மனிதர்கள் வேற்று கிரகத்தை நோக்கிப் படையெடுப்பது போல் அமைத்திருப்பது வித்தியாசத்திலும் வித்தியாசம்.

மனிதர்கள் அவதாராக மாறி அந்நாவி இனத்தோடு சேர்ந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருக்கும் கனிம வளத்தைக் கொள்ளை அடிக்கும் திட்டத்தோடு மில்லிட்டரி படையும் அறிவியலாளர்களும் சேர்ந்து பெண்டோரா கிரகத்தை ஆக்கிரமிக்கிறார்கள்.

கதா நாயகர் அறிமுகமும் அவர் அவதாராக இயங்கி நாவி இனத்தோடு சேர்ந்து பயிற்சி பெறுகையில் நடக்கும் குறும்புகளும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கின்றன. அப்படி மாறுவது மாட்டிரிக்ஸ் படத்தில் வருவது போலவே மூளை கொண்டு அவதாரை இயக்கும் படி அமைத்திருக்கிறார்கள். தொட்டால் ஒளிரும் பூக்கள், நடக்கும் போது ஒளிரும் புல்வெளி, வண்ணமயமான மரங்கள், பூக்கள், தொங்கும் மலை, விழுதுகளில் முன்னோர் சத்தம் கேட்கும் திறன் என இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை காணுகையில் நாம் எத்தனை இயற்கை அன்னையை தண்டித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது.

கதா நாயகன் அவதாராகி ஒரு இடத்தில் அக்கிரக நாய்களோடு போராடி கொன்று போடுகையில் உடன் உதவ வரும் நாவி இன கதா நாயகியிடம் நாயகன் நன்றி சொல்ல, அதற்கு நன்றி சொல்லும் காரியம் செய்ய வில்லை நாம். இது நடந்திருக்கக் கூடாது.. இம்மிருகங்கள் தேவையில்லாமல் இறந்து விட்டன என்று சொல்லி சில மந்திரங்கள் சொல்லி அதன் ஆன்மாக்கள் சாந்தியடையச் செய்யும் நாயகி மனதில் உயர்ந்து நிற்கிறார். அவர்கள் கிரகத்தின் இயற்கை மேல் அவர்கள் கொண்ட அன்பும், அவர்களின் வாழ்க்கை அதனோடு இயைந்து போன மாண்பும் படமெங்கும் கண்டு வியக்க வைத்தது. நம்மில் இழந்து கொண்டிருக்கும் மர நேசம் நாயகி மூலம் படத்திலேனும் காண நேர்ந்தது.

படத்தில் வரும் மிருகங்கள் எனில், ஆங்காங்கே வரும் காட்டு யானை, நீண்ட வித்தியாசமான தந்தம் போன்ற எழும்பமைப்புடன் வந்து அசர வைக்கிறது.. கூடவே பச்சை, நீலம், சிவப்பு வண்ண ராட்சஸ பறவைகள், விசிறி போல் பறக்கும் பூச்சி, ஒளிரும் பூச்சிகள், காண்டாமிருகம் போன்ற மிருகம், ஓ நாய்கள், குதிரைகள் என அனைத்துமே வித்தியாசமான கற்பனைத் திறனில் படைக்கப் பட்டு கண்களுக்கு விருந்தாகிறது.

மனிதர் நினைப்பதை செய்யும், குதிரை, வண்ண ராட்சஷப் பறவை என எல்லாமே அசர வைக்கிறது.

மனிதப் படை அந்த கடவுள் மரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கையில் ஏனோ என் கண்களிலும் ஈரம் பனிக்கிறது.. அதுவரை அத்தனை அழகான வனமாக இருந்த அந்த இடம், சிறிது நேரத்தில் மூச்சு முட்டும் கரும் புகையோடு சாம்பல் காடாக காணுகையில் மனம் துடிக்கிறது.. ஏனோ நம் ஊரில் சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் பல நூறு பெரும் மரங்களை வெட்டி, வெகு சில அரளிச் செடிகளை நட்டுச் சென்ற நமது அரசு நினைவுக்கு வந்து மேலும் வேதனைப்படுத்தியது.

ஒரு இடம் பசுமையாய் இருக்கையிலும், சாம்பல் காடாய் மாறுகையிலும் பார்ப்பதற்கு நிறைய திடம் வேண்டும்.. அந்த திடம் என்னிடம் இப்படம் பார்க்கையில் இல்லாமல் போனதை உணர முடிந்தது.. அதுவரை அத்தனை அழகான கிரகமாகக் காட்டப்பட்ட பெண்டோரா, மனிதர்களின் தாக்குதலால் எப்படி சிதறடிக்கப்படுகிறது என்று இதை விட எவரும் துல்லியமாகக் காட்ட முடியாது.

கதா நாயகன் போன்றே இந்த கிரகத்தின் மீது தீராத பாசமும், காதலும் கொண்ட மற்ற மனிதர்களும் எப்படி தங்களது முயற்சியை மேற்கொண்டு பெண்டோராவைக் காப்பாற்ற முற்படுகிறார்கள் என்பதை வெகு அழகான கோர்வையான படமாக்கல் மூலம் அசர வைத்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் கதா நாயகருடன் வரும் வயதான பெண், வில்லனாக வரும் மில்லிட்டரி படை கேப்டன் முகத்தில் இருக்கும் வித்தியாசமான காயத்தாலும், கடும் உறுதி படைத்த முக பாவத்தாலும் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள்.



கதா நாயகன், அவருக்கு உதவும் ஹெலிகாப்டர் ஓட்டும் பெண், அவன் நண்பர் இருவர் என நால்வர் படை எப்படி மனிதர்களின் தாக்குதலை எதிர் கொள்கிறது என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வேர்கள் கொண்டு அவர்கள் காட்டும் ஒரு முக்கிய காட்சி அசர வைக்கிறது.. நம் ஆணி வேர் வரை பாயும் அவரது கற்பனைத் திறன் சிலிர்க்க வைக்கிறது.

படத்தை முப்பரிமாணத்தில் காணாதது வெகுவான வருத்தத்தை எனக்கு அளிக்கிறது.. என்றாவது பார்த்து விடுவேனென மனதில் நம்பிக்கை மட்டுமே நிலைக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் இப்படத்துக்காக ஒரு புதிய வகை கேமிராவைக் கண்டறிந்தார் என கேள்விப்பட்டேன். இத்தனை வயதிலும் எத்தனை விடா முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் இவரால் இது சாத்தியமாகும் என எண்ணி எண்ணி வியக்கிறேன்.

அவதார் - நிச்சயம் அவதாராக மாறி ஒரு நாளேனும் அக்கிரகத்தில் உலவும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்க வைக்கிறது.. இது எட்டாக் கனியாகினும், நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையை முடிந்த வரைக் காக்கவும், அழிக்காமல் தடுக்கவும் செய்தால் அதுவே நமக்கு பெண்டோரா போன நிறைவைத் தரும் என்பது திண்ணம்.

அவதார் - ஐ சீ யூ. ( ஐ சீ யூ என்றால் நாவிகள் பேசும் மொழியில் லவ் யு என்று அர்த்தமாம்..)

Wednesday, April 21, 2010

கரைந்த அன்பு…!



அன்றும் அதே
புன்னகையோடே
விடைபெற்றாய்..

இறுதியில் இனிக்கும்
நெல்லிக்கனியாய்
இனிக்காமல் போனது
உன் முத்தம் அன்று..

நீ தந்த முத்தக் குவியலை
முகர்ந்து பார்க்கிறேன்
உன்னிடமிருந்து நான்
ஆசையாய் கேட்டு வாங்கிய
கைப்பையில்…

இறுகப் பற்றிய
உன் விரல் இடுக்குகள்..
கொடுத்த நடுக்கம்
இன்னும் என்
விரல்களில் மிஞ்சி நிற்கிறது..

நீயின்றி போன
வீடும் தாழ்வாரமும்
வெறுமையைக் குலைத்து
எனைப் பார்த்த கணத்தில்
என்னுள் அப்பி அழுகிறது..

வரவேற்கத் தேடும் உன் விழி
தொலைந்து போன
அந்த முற்றம் நிரம்பிய
சோகம் தாளாமல்..

இப்போதெல்லாம்
நான் ஊருக்குப்
பயணிப்பதே இல்லை..
என் செல்லப் பாட்டியே…!!

உறைந்த நிமிடம்..!



வெயில்
பொழுது
துயில் கொள்ள
சாய்வுநாற்காலி தேடி
தோய்ந்து இருந்தது

கடலின் அருகில்..!

தூரத்து வானின்
கருத்த சீலையால்
மறைக்காத இடங்கள்
சிவந்த மேனியாய்
சித்திரம் காட்டியது!

எப்போது வேண்டுமானாலும்
விடைபெற காத்திருக்கும்
கொடியில் மாட்டிய பட்டம் போல்
நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..!

சிறுத்தையின் வேகத்தில்
சீறி வந்தாய் என் முன்..!
சிருங்கார பார்வையில்லை..!
சிரிப்பூட்டும் இதழில்லை..!

புரியாமல் பார்க்கின்றேன்..!
புரிந்தே நீ காண மறுக்கும்
என் விழியோர நேர்பார்வை..!
புரியத்துவங்கியது ஏதேதோ என்னுள்..!

"விலகிப்போ...மறந்துபோ..."
வார்த்தை சொல்லி

விலகி நின்றாய்..!

இரு வார்த்தையில் மரணம் வருமோ?
இதயத் துடிப்பு நின்று போனது..!
உள்ளம் உடைந்து, விழி வெடித்து
வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!

மேகத்துக்கு எப்படிக் கேட்டது??
முட்டிக் கொண்டு அதுவும் அழுதது..!

என் உயிர் பிய்த்து

உடல் மட்டும் சவமாய்

உறைய வைத்து

விட்டுச் சென்றாய்..!

சிதறிய கண்ணீர் மழைநீரோடு

மெல்ல உரையாடியது..!
வெகு நேரம் நின்று மழையோடு

விவரம் சொன்னேன்..!

வெறுத்து தகர்ந்து மெல்ல நகர்ந்தேன்
இதயத்து வலியோடு..!

சாலைகள் புதிதாய்..!
மழை மட்டும் என்னோடு
மருளாமல் துணையாய்..!

யாருமில்லை.. எவருமில்லை..!
இருட்டத் துவங்கும் தூரம் வரை
இரு காலும் இலக்கின்றி
நடந்து சோர்ந்தது..!

ஏதோ ஒரு கடை..!
உள்ளும் புறமும்
ஈரத்தோடு நுழைகிறேன்..!

உள்ளே அழுதாலும்
வெளியே வெளிரிச் சிரிக்கிறேன்..
"நக வெட்டி" வேண்டுமென்றேன்..!
வாங்கிவிட்டு வெளிவந்தேன்..!

மனம் கேட்டது!
உன் "நினைவு வெட்டி" கருவி!

வானம் வாஞ்சையோடு
வன்மழை மள்கி
மெல்லிய தூறலாக்கி
மனம் லேசாக்கியது..!

தூறலோடே திரும்பி
வந்தேன்..!
வெடித்து அழுதேன்..!
இப்போது கனமழை
என் வீட்டில்..!

Thursday, April 15, 2010

புன்னகைக்குப் பின்னால்…!!


எழுதி பல நாட்கள் ஆனதாலோ என்னவோ, எதைப் பற்றி எழுத வேண்டுமென்ற தீர்மானம் போடுவதற்கே பல காலம் எடுத்துக் கொள்கிறது மனம்… இதோ இதைப் பற்றி கட்டாயம் எழுதியே ஆகவேண்டுமென்று அமர்ந்துவிட்டேன்..

வெளி நாட்டில் அக்கம் பக்கத்தில் இருக்கும் வேற்று நாட்டவரோடு வெறும் புன்னகையை மட்டுமே உதிர்த்து வாழ்க்கை நடத்தும் பலரைப் போலவே, நானும் வாழ என்னைத் தயார் செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் என்னை புன்னகை பூத்து வரவேற்றது ஒரு பிலிஃபைனியப் பூ. அவர் பெயர் நினைவில் இல்லை.. ஆனால், எப்போதும் துறு துறுவென்று ஓடிக் கொண்டும், அந்த ஓட்டத்துக்கு இடையிலும் என்னை நோக்கி ஒரு புன்னகை பூத்துக்கொண்டும் இருக்கும் அவரோடு பேச மனம் ஏங்கியது..

அந்த கனவு, இத்தனை மாதங்கள் கழித்து ஈடேறியது.. வெறும் நட்பு பார்வைகளை மட்டுமே பரிமாறிக் கொண்ட எங்களுக்குள் பேச்சு தொடங்கப்பட்டது ஓர் பொன்னாளில்..

அவரின் பரஸ்பர அறிமுகத்துக்குப் பின்னால், மீண்டும் சில நாட்கள் கழித்து என் வாசலில் மீண்டும் அவர் கடந்து போகையில் பேச வாய்ப்பு கிடைத்தது..

அவர் எப்போதும் மலர்ந்த முகத்தோடு, அழகிய குதிரை வாலோடு ஓட்டமும் நடையுமாக ஓடி வருகையிலும் என்னைப் பார்த்ததும், முகம் மலர்ந்து பேசலானார். அவரின் கையில் பார்த்த விளையாட்டுப் பொருளைப் பார்த்து ஆச்சர்யம் எனக்கு… கையில் ஸ்கேட்டிங் வீல்ஸ்.. இப்போது தான் சிறுவர்களோடு விளையாடிவிட்டு வருவதாக அவர் கூறுகையில் இருந்த அந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது.. தான் வீட்டுப் பணியாளினியாக இருப்பதாகவும், கூடவே இளங்கலைப் பட்டம் படிப்பதாகவும் தெரிவித்தார். அது நாள் வரை நான் அவரை அவ்வீட்டில் இருக்கும் நபர் என்றே நினைத்திருந்தேன்.. எட்டு வயதிலும் ஆறு வயதிலுமான தனது இரு மகள்கள் தன் அம்மாவுடன் ஃபிலிபைனில் இருப்பதாகத் தெரிவித்தார்.. என்னால் நம்பவே முடியவில்லை.. காரணம், அவர் அத்தனை இளமையாக இருந்தது தான்… குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் போன் பண்ணுவதற்கே வருத்தமாக இருக்கிறது.. எப்போது போன் செய்தாலும், எப்போ அம்மா வருவீங்க.. என்று குழந்தைகள் அழுவதை கேட்க முடியவில்லை என்று அந்தத் தாய் சொல்கையில் என்னவோ போல் செய்தது என் மனம்…

எதார்த்தமாக பேச்சு வளர்ந்து கொண்டே போகையில், உங்கள் கணவர் எங்கு வேலை செய்கிறார் என்ற கேள்வியைத் தொடுத்தேன்.. தனது இரண்டாவது குழந்தை ஒரு வயதாக இருக்கையில் இறந்து விட்டார் என சொல்கையில் அந்த விழிகளில் தெரிந்த வலியும், வலிமையும் என்னை நிலைகுலையச் செய்தன.. அவ்விடத்தில், அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, வேறேதும் பேச வாயெழாமல் கண்கள் பனித்தது எனக்கு.. அவரே தொடர்ந்தார்.. குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக அவரை இழந்து வாழ்வது ரொம்பவே கடினமெனச் சொன்னார்.. அவ்விடத்தில், 'மொழி' படத்தில் பிரகாஷ்ராஜ் சொர்ணமால்யாவிடம் அவர் கணவர் பற்றி கேட்கையில் சொர்ணமால்யா எப்படி கண்கள் பனிக்க, தன்னம்பிக்கையோடு பதில் சொன்னது நினைவு வந்தது.. அதே போல் பதிலளித்தார்.. தான் விரைவில் படிப்பு முடித்து, நல்ல அலுவலக வேலையாகப் பார்க்கப் போகிறேன் என்று அவர் சொல்கையில் இருந்த தன்னம்பிக்கையும் தன் குழந்தைகளுக்காக வாழ வேண்டுமென்ற வைராக்கியமும் மனம் நெகிழச் செய்தன..

நன்கு படித்து நிச்சயம் நல்ல வேலைக்கு செல்வீர்களென அவரை உற்சாகப்படுத்தினேன்.. தனக்கு நிறைய நல்ல நண்பர்கள் என் நாட்டிலிருந்து கிடைத்திருப்பதாகச் சொல்லி மகிழ்ந்தார்.. நானும் அவரின் நட்பு வட்டத்தில் இருப்பதை நினைத்து மகிழ்ந்தது மனம்..

அவரின் இவ்வளவு அழகான புன்னகைக்குப் பின்னால், இத்தனை பெரிய வலியும் இழப்பும் இருக்குமென நான் அணுவும் நினைக்கவில்லை.. அவரின் நட்பு எனக்கு இந்நாட்டில் கிடைத்த குறிஞ்சிப் பூ என்று சொன்னால் அது மிகையில்லை.

நட்புடன்,
பூமகள்.