RSS

Wednesday, October 10, 2007

Artificial Intelligence(AI) - விமர்சனம்

Artificial Intelligence(AI)-"ஆர்டிஃவிசியல் இண்டலிஜெண்ட்" விமர்சனம்
"HIS LOVE IS REAL, BUT HE IS NOT"








குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களுக்காகவே தயாரித்த ஸ்டீபென் ஸ்பீல்பெர்க்கின் மற்றுமொரு மிகச் சிறந்த படம் "ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ்".

ஒரு அம்மாவுக்கும் - பத்து வயது மதிக்கத்தக்க இயந்திர மகனுக்கும் இடையே இருக்கும் பாசப்பிணைப்பைச் சொல்வதே இப்படம்.

ஒரு தம்பதியினர் டேவிட் என்ற இயந்திர மகனை ஒரு விஞ்ஞானியிடமிருந்து வாங்கி வீட்டிற்கு அழைத்துவருகின்றனர். டேவிட் என்ற மகனின் குணாதிசியங்கள் அம்மாவுக்கும் தந்தைக்கும் பாசத்தைக் காட்டும் படியே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

எப்போதும் அம்மாவிடம் பாசமாய் கொஞ்சி, பழகி, அம்மாவின் புன்னகை பார்த்து மகிழும் வண்ணம் டேவிட் வடிவமைக்கப்பட்டிருப்பான். டேவிட்டோடு பேசி நடக்கும் திறன் கொண்ட மற்றொரு சிறிய இயந்திர கரடி பொம்மையும் கூடவே இருக்கும் எப்போதும்.

அம்மாவுடனான டேவிட்டின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நீடிக்கவில்லை. அந்த தம்பதிகளின் நிஜ மகன் வீட்டிற்கு வந்தான். அவனுக்கு தன் இடத்தை டேவிட் பிடித்து விட்டதை நினைத்து டேவிட் மேல் மிகுந்த கோபமும் ஆத்திரமும். ஒரு முறை எல்லாரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து காலை உணவு அருந்திக்கொண்டிருப்பர். டேவிட் வெறும் தட்டுடன் அமர்ந்து சும்மாவேனும் கரண்டி கொண்டு சாப்பிடுவது போல செய்கை காட்டியபடி இருப்பான். அப்போது நிஜ மகன், டேவிட்டை சீண்ட வேண்டி, "நீ இயந்திரம் தான். உன்னால் மனிதரைப் போல சாப்பிட முடியாது." என்று கேலி பேசி சிரிப்பான். டேவிட்டின் மனமோ, தன்னை அம்மா மிகவும் நேசிக்கவேண்டும். தான் நிஜ மகனைப் போலவே இருக்க வேண்டும் என்று நினைத்த வண்ணம் இருப்பான். ஆகவே, அழுகையோடும் ஒரு வேகத்தோடும் உணவை எடுத்து வாயில் போட்டு மெல்லத்துவங்கிவிடுவான். இரண்டு, மூன்று தடவை சாப்பிட்டவுடன், டேவிட்டின் இயந்திரங்கள் பழுதாகவே அப்படியே சரிந்துவிடுவான். இதைப் பார்த்த தம்பதிகள் உடனே இயந்திர மனிதரை பழுதுபார்க்கும் பொறியாளர்களிடம் எடுத்துச் சென்று உள்ளிருந்த உணவுகளை அகற்றி டேவிட்டை உயிர் பிழைக்க வைப்பர். இந்த சம்பவத்தின் மூலம், டேவிட் எவ்வளவு ஆழமாக தமது தாயை நேசிக்கிறார் மற்றும் எப்படி தன்னை தம் அன்பை உண்மை என்று உணர்த்த நிஜ மகனாய் மாற முற்படுகிறான் என்று அழகாக இயக்குனர் சொல்லியிருப்பார்.

நிஜமகனின் கேலியும் கிண்டலும் டேவிட்டிடம் தொடர்ந்த வண்ணமே இருந்தன. அம்மாவின் பாசம் என்றும் தனக்கு மட்டும் தான் என்றும், டேவிட் வெறும் இயந்திரம் தான் என்றும் எப்போதும் மனிதராக முடியாது என்றும் கூறி டேவிட்டை மனம் நோகச் செய்தபடியே இருப்பான் அச்சிறுவன்.

ஒரு தடவை, இந்த வாக்குவாதத்தால் நீச்சல் குளத்தில் பெரிய சண்டை வர, மனிதரால் வெகு நேரம் தண்ணீருனுள் உயிரோடு இருக்க முடியாது என்பதை அறியாமல் நிஜ மகனை வெகு நேரம் தண்ணீருக்குள் வைத்து சண்டையிட்டுக் கொண்டிருப்பான் டேவிட். இதைப் பார்த்த அவனது தாய்,
பதறித் துடித்து ஓடி வந்து நிஜ மகனை மீட்டெடுப்பர். டேவிட் அனாதை போல வெகு நேரம் நீச்சல் குளத்தின் அடிப்பாகத்திலேயே படுத்துக் கிடப்பான்.

இந்தச் சம்பவம், அந்த தம்பதிகளிடையே டேவிட் பற்றிய வாக்குவாதத்தை ஏற்படுத்தும். நிஜமகன் வந்த பிறகு, டேவிடுக்கும் அவனுக்கும் இடையே பெரிய சண்டை உண்டாகிக் கொண்டே வருவதை அப்பெற்றோர் விரும்பவில்லை. அதனால் பாதிப்பு நிஜத்தில் தம் மகனுக்குத் தான் என்று கணவர் சொல்ல, டேவிட் மீது அதீத பாசம் கொண்ட மனைவியோ டேவிட் பற்றி பரிந்து பேசிக்கொண்டே வருவார். இறுதியில் கணவரின் சொல் கேட்டு டேவிட்டையும் அந்த சிறிய கரடி பொம்மையையும் அனாதையாக்க முடிவெடுப்பர்.

கணவரின் கூற்றை அரைமனதாய் ஒப்புக் கொண்ட மனைவி, தாய் மனத்தை மிகுந்த வேதனையோடு அழுது அடக்கி அந்த டேவிட் எனும் இயந்திர மகனை பிரிய முடிவெடுத்து அகன்ற காட்டில் பிக்னிக் என்று கூறி கூட்டுச் செல்கையில், டேவிட்டின் அந்த உற்சாகமான முகமும் பாசமும் அற்புதம். அங்கு கூட்டிச் சென்று இனி நீ இங்கு தான் இருக்க வேண்டுமென்று உரைத்து திரும்புகையில் உண்மையை உணர்ந்து "நோ நோ...." என்று டேவிட கதறும் காட்சி... நம் கண்களையும் பனிக்க வைக்க தவறுவதில்லை.

அங்கு விட்டுச் சென்ற பின் டேவிட் வெளி உலகினால் எந்த மாதிரியான துன்பங்களையும் ஆபத்துகளையும் சந்திக்கிறான். அவனது அன்புத் தாயை மீண்டும் பார்த்தானா? அவனது வேண்டுதலை அந்த நீல நிற தேவதை நிறைவேற்றினாளா? என்று பல விறுவிறுப்பான காட்சிகளோடு மீதிக் கதை முடிகிறது.

இந்த படத்தின் இறுதிக் கட்ட காட்சி, நிச்சயம் அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நான் இப்படம் பார்த்து வெகுகாலம் ஆகியும் என்னை காட்சிகள் மாறாமல் விமர்சிக்க வைத்த பெருமை அந்த டேவிட்டாய் நடித்த சிறுவனையும், தாயாய் நடித்த நடிகையையுமே சேரும்.

தமது அட்காசமான நடிப்பால் டேவிட்டாய் நடித்த சிறுவன் எல்லார் மனதையும் கொள்ளை கொண்டிருப்பான். நானும் இதில் விதிவிலக்கல்லவே...!!

அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். உங்களின் வீட்டு குழந்தைகளுக்கு கண்டிப்பாக காட்டுங்கள்.

ஸ்டீபன் ஸ்ஃபீள்பெர்க்கின் மகத்தான படைப்புகளில் இப்படமும் ஒன்று.

இப்படத்தைப் பார்த்து ஏற்பட்ட அழியாத என் மனத்தின் சந்தோசத்தை இங்கு பகிர்ந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

-பூமகள்.

1 comments:

cheena (சீனா) said...

அன்பின் பூமகள் - நல்லதொரு திரைப்பட விமர்சனம் - இயந்திர மகனுக்கும் நிஜ மகனுக்கும் ஏற்படும் இயல்பான சண்டைகள் - பெற்றோர் படும் பாடு - அனைத்தும் விளக்கமாக விமர்சிக்கப் பட்டிருக்கிறது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா