இல்லைகளின் இருப்பில்..
"அம்மா பால்.."
சத்தமில்லை..
'டண் டண்' எனக்
கதவு தட்டும்
கூர்கா தடியில்லை..
'தொப்' எனத்
தடுப்புச் சுவர் தாண்டி
வந்து விழும்
செய்தித்தாளுமில்லை..
சன்னலோர
தென்னையுமில்லை..
வாசலில் வரவேற்கும்
அவசரக் கோலமுமில்லை..
அடிக்கடி அம்மாவீடு போகும்
'மின்சார மனைவி'யுமில்லை..
எப்போதாவது
தண்ணீர் கேட்டு
கதவு தட்டும்
ஊமைப்பாட்டியுமில்லை..
முல்லைப் பூப் பந்தலில்லை..
நெல்லி மர நிழலுமில்லை..
இல்லைகள் நீண்டு
தன் இருப்புகளை
உணர்த்தியபடியே
இருக்கின்றன..
இவ்வெல்லா
இல்லைகளுக்குள்ளும்
ஒளிந்த படியே
தாய் வீட்டு நினைவுகளும்
இல்லையில் அழுத்தமாக
இருந்த படியே.....!!
-- பூமகள்.
0 comments:
Post a Comment