RSS

Monday, March 9, 2009

தேன் கூட்டில் ஓர் நாள்...!

ஒரு பெரிச வாசல்.. அதன் முற்றமெங்கும் அலங்கார தோரணங்கள்.. அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள்.. எதையோ தீவிரமாக செய்யும் முனைப்பில்..

மிகப் பெரிய கதவின் முன்னால், ஓர் காக்கி உடுப்பு பணியாளர்.. பவ்வியமாக சிரித்து வணங்குகிறார்.. வண்டி நிறுத்திய இருவர்.. விவரம் பகிர்ந்து உள்ளே நுழைகின்றனர்..

வலப்புற அலுவலகம் நோக்கி அகக்காவல் பணியாளர் கை காட்டிய திசையில் நான்கு கால்களும் விரைகிறது..!!

மெல்லிய புன்னகையோடு ஒரு பெண் பொறுப்பாளர் வரவேற்கிறார்… அமரச் செய்து.. வருவதாகக் கூறி செல்கிறார்.

அமைதியான அந்த சின்ன அறையில்.. நான்கு விழிகளும் துலாவுகின்றன.. சுவர்களில் காட்டிய சித்திரங்கள்.. அறிவியலாளர் அப்துல் கலாம் முதல் முதல்வர் கருணாநிதி வரை வருகை தந்தமையைப் பறைசாற்றுகின்றன.. மனம் நெகிழ்ந்து அவர்களின் கண்கள் விரிகிறது..

சிறிது நேரத்தில் அப்பெண் வந்தமர்கிறார்.. “இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்ப ரெடியாயிருங்க..” என்ற ஒரு வாக்கியம் சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

சிறிது நேரத்தில் சமிஞை வர கிளம்புகிறார்கள் இருவரும்..!!

ஒரு பெரிய அறையினை நோக்கி பயணப்படுகிறது.. அங்கே பொறுப்பாளர்களில் முக்கியமானவர்.. இருவரையும் ப்ளாஸ்டிக் நாற்காலிகளில் அமரச் செய்கிறார்.

எதிரில் ஒரு பெரிய குழந்தைகள் கூட்டம்.. வரிசையாக அமர்ந்து சிரித்து, சிணுங்கி, எங்கோ பார்த்து பயந்து, தலை குனிந்து.. தலை நிமிர்ந்து… பக்கத்திலிருப்பவரைப் பார்த்து.. இப்படி பல விதங்களில் குழந்தைகள்..!!

மாலை 6.30 மணி ஆகியிருந்தது.. பொறுப்பாளர்.. கடவுள் வாழ்த்து பாடச் சொல்கிறார். அனைவரும் எழுந்து நிற்க..

அனைத்து விதமான புல்லாங்குழல்களும் ஒருங்கே எல்லா ராகத்தையும் வாசித்தால் என்ன சங்கீதம் பிறக்குமோ.. அவ்வகை சங்கீதம் இருவரின் காதுகளையும் அடைமழை அமுதமாக நுழைகிறது.

கண் மூடி நின்று பிஞ்சுகளுக்காக பிராத்தித்து விழிக்கையில்.. இருவரின் கண்களிலும் கண்ணீர் திரண்டிருந்தது.. அங்கே… உடல் குறைபாட்டினால் மனம் குறைபடாத குழந்தைகள்..

பாடிக் கொண்டிருந்த சில குழந்தைகளில்..

தனக்கென சுதி அமைத்த குழந்தைகள்.. பாடுவோரை வேடிக்கை பார்த்தபடியே.. மௌனத்தில் இசையமைத்த குழந்தைகள்.. இப்படி ஒவ்வொரு வடிவில்.. நூற்றுக்கணக்கான பிஞ்சுகள்..!

பிராத்தனை முடிந்ததும்.. பொறுப்பாளர் பேச ஆரம்பிக்கிறார்.

“திருவாளர் பெயர் கூறி, அவர்களின் இனிய உள்ளத்தால் இன்று நமக்கு இவ்வேளை உணவு பறிமாறப்படுகிறது. அவர்களின் குடும்பமும் அவர்களும் என்றும் வளமோடு வாழ பிராத்திப்போம்..!”

இப்படி கூறியதும்.. மறுபடி வானை எட்டும் குரலோசையில்.. வாழ்த்துப் பாடல் பாடப்படுகிறது..!! மெல்லிய குயில்களுக்குள் இத்தனை வலிமையா??!!

பார்த்துக் கொண்டிருந்த இருவரின் மனமும்.. ததும்பி பரவச நிலையில் உடல் சிலிர்த்து நிற்கிறது.

அதுவரைக் கண்டிராத ஓர் உன்னத நிலையில்.. குழந்தைகளின் மொழி கேட்டு கற்பாறை உடைந்து கண்கள் கலங்குகிறது. பாடுவது நமக்காக என்ற பெருமிதத்தில் அல்ல.. பாடப்படும் அக்குழந்தைகளின் உள்ளதினைக் கண்டு..!!

பொறுப்பாளர் பேச அழைக்கிறார். இவருவருமே வார்த்தைகளற்ற மௌன நிலையில் அசைவற்று நிற்க.. அங்கே 'நா' எழ மறுத்து அழ வைக்கிறது.

தலையசைத்து இருவரும் மறுக்க, பிராத்தனை முடிக்கப்படுகிறது.

“ அக்கா… உங்க பேரு என்னக்கா??” ஓடி வந்து கை கொடுக்கும் ஆவலோடு சின்ன சின்ன மழலை முத்துகள்..!!

“என் பேரு… ****** உங்க பேரு என்ன? என்ன படிக்கிறீங்க??” இருவரில் ஒருவர் கேட்க.. கை பிடித்து குலுக்கிய மகிழ்ச்சியில்.. மழலை கண்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.

முறைத்த படியே சில குழந்தைகள்… பார்த்து பயந்தபடியே சில குழந்தைகள்:.. அழகாக சிரித்து பேச விரும்பிய சில குழந்தைகள்.. இன்முகத்துக்கு பூட்டிட்டு.. சலிப்புப் பார்வையில் சில பிஞ்சுகள்..!!

அப்பப்பா.. எத்தனை எத்தனை பரிதவிப்புகள் ஒவ்வொருவர் முகத்திலும்..??!!

இருவர் உள்ளமும் இனம் புரியாத புதிய உணர்வில் சிலிர்ந்து நிற்கிறது..

இரவுணவு பரிமாற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வரிசையாக குழந்தைகள் தட்டெடுத்துக் கொண்டு அமர்கிறார்கள்.. . நம் கையால் பரிமாறி, பிஞ்சுகள் உண்பதைப் பார்க்க கண் கோடி வேண்டும்.. அத்தகையதொரு பரவச உணர்வு பெற்ற மகிழ்ச்சியுடன் இன்முகம் மாறாமல் “லட்டு” இனிப்பு இருவராலும் பரிமாறப்படுகிறது.

ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் ஒன்றாக அமர்ந்து மலர் வனத்தில் தேனமுதை உண்பதைப் போல ஒரு தோற்றம்..!!

இரு முதிய பாட்டிகள்..!! அவள் பார்க்க.. கண்கள் அறியாமலே கலங்கி நிற்கிறது. குழந்தைகளும் முதியவரும் ஒன்றே தான்..!!

பரிமாறி முடிந்ததும்.. சுற்றிக் காட்டப் படுகிறது..!! அழகிய வகுப்பறைகள்.. பூச்செடிகள்.. கிளிகள்… படுக்கை அறைகள்..

எல்லாம் கடந்து அவர்களின் அன்பான மனம்.. எதையெதையோ சொல்லாமல் சொல்லிக் கொடுத்திருந்தது.

விடைபெற்று கிளம்புகின்றனர்.. இருவரும்..!!

போக மனம் இல்லாவிடினும்.. பயணம் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.

முற்றத்தில் அழகிய வண்ணக்கோலம் போடத் தயாராகும் பெண்கள்..!! ஏற்கனவே, வண்ண எண்ணங்களால் மனம் நெகிழ்ந்த இருவரும்.. மகிழ்ச்சியோடும் ஒரு வித துயரம் அப்பிய கணத்த மனத்தோடும் வெளிப்படுகின்றனர்.

நேரம் 7.30.. மணி…

ஒரு மணி நேரப் பயணத்தின் போதும்.. ஒன்றுமே பேசாமல் அந்தி வானம் பார்த்தபடியே பயணம் தொடர்கிறது.

கீழ்வானத்தில் சூரியன் உறங்க… விழிப்பு நிலையில் மனத்தினுள் மனசாட்சி ஓங்கி பேசியபடியே வந்தது..!!

உடம்பை உரசிய தென்றல் காற்று… மனத்தினுள் சுகந்த உணர்வையும் ஏற்படுத்தத் தவறவில்லை..!!

குழந்தைகள் காப்பகத்திலிருந்து இத்தனை உணர்வையும் ஆட்கொண்ட இருவரும்.. கடைசியில் பூவின் இல்லம் அடைய..

அது வரை நிகழ்ந்த அத்தனையும் அம்மாவிடம் ஒப்புவிக்கும் பூவைப் பார்த்த தந்தை மென்சிரிப்போடு மௌனமாகி ரசிக்கிறார்..!!

(முற்றும்)

--
பூமகள்.

0 comments: