உன் சுவடு விடுத்து
பல நூறு மைல்
பயணித்த வேளையில்..
அடுத்த பயணியாய்
நீ என் பின்னே..
விண் நோக்கி
விழி விரிய வைத்த
கணங்கள் என்
மனக் கண்ணில்..
தெரிந்தும் தெரியாதது
போல் சக பயணிகளோடு
நாம் இருவரும்..
விலக்க முயற்சிக்கும்
காந்த எதிர்புலங்களாய்
விழி முட்டி தவிர்க்கும்
வாழ்க்கையின் எதார்த்தம்..
இதழோரப் புன்னகையோ
விழியோர ஈரமோ
இருவரும் அறியாதபடி
கலைந்து இயல்பெனக்
காட்ட முயற்சிக்கிறோம்..
மண்ணில் காணக்
கிடைக்காதது..
ஏனோ விண்ணில்
கண்ட விந்தை..
எடுத்து அப்பிய
இறுகிய முகத்தை
இருவரும் காட்டி
அவசர கதி உடை
பூண்டு நகர்கிறோம்..
வலி மரத்த இதயம்
முன்னிலும் அதிகம்
வலித்தது அன்று..
ஒரு வார்த்தை
பேசியிருக்கலாமோ??
--- பூமகள்.
2 comments:
ஒரு வார்த்தை
பேசியிருக்கலாமோ??
பேசாத உணர்வுகளை கவிதை பேசிப் போகிறது.
கவிதையின் இயல்பு நடை சிறப்பு
சொல் சிக்கனம் இன்னமும் கவிதையின் வீர்யம் கூட்டும் என தோன்றுகிறது
Post a Comment