RSS

Saturday, October 6, 2007

மழை வேண்டி..!!

மழை வேண்டி..!!



மாலை வனப்பில்
கீழ்வானம் பார்த்து
மனமும் கொஞ்சம்
மயங்கும் வேளை..!!

பறவைக் கூட்டமும்
கூடு நோக்கி
துயில்கொள்ள விரையும்
அந்திசாயும் சமயம்...!!

காற்றில் ஏதோ
முனகும் சத்தம்....
காற்றைக் கொண்டே
காது தீட்டி
குரல் வந்த திசை
நோக்கி
கூர்மையாக்கினேன்..

பச்சிளம்பயிர்
பரவசமின்றி
எதிர்புறம்..!!

இமைகலங்க
அசைவற்றிருந்தது
இயற்கை மழலை..!!

பதறித் துடித்து
ஏனென
வினவியது என்
வாஞ்சையுள்ளம்...!!

விக்கும் குரலில்
வலி சொல்லியது
மெல்லிய செடி..!!

தாகத்திற்கு
நீரின்றி
தன்னுடல் கருகும்
தன்னிலைவிளக்கிற்று...

உற்றுநோக்கியது என்
உள்ளக் கண்கள்..
ஆம்....
பச்சையுடல்
பாழ்பட்டுக் கொண்டிருந்தது..
அழகிழந்து
காயும் சருகாகி
காட்சி கொடுத்தது...

வான்மழையே
தாய்பாலென
வேதம் சொல்லி
தவித்து புலம்பியது
பச்சிளம்பயிர்...

வருந்தும் பயிரின்
விம்மல் நிறுத்தி
வள்ளலாரைப் போல்
வெடித்துக் கதறினேன்
சத்தமின்றி...

பயிர்மழலை
பசிபோக்க
மழை வேண்டி
மன்றாடியது என்
மென்னுள்ளம்..!!

மழையே வா..!!
வானமுதே வா..!!
பச்சைப்பட்டாடை
தரித்து பூமி
மகிழ்ந்திட
மடைதிறந்து வா..!!

வேண்டிமுடித்து
வெகுநேரம்
வான் பார்த்திருந்தேன்..!!

காரிருள் சூழ்ந்தது...
மின்னல் சொல்லெடுத்து
கார்மேகங்கள் கலந்துரையாடி -அதன்
கல்மனம் கரைந்தது..

மழைத்துளிகள்
பயிர்தொட்டு
முத்தமிட்டு
பசிபோக்கி
மகிழ்ந்தது..!!

அடுத்த நாளின்
அந்திவரும் வேளை
அதே திசைநோக்கி
அனிச்சையாய் என்
அழகுவிழிகள்..!!

தேடும் முன்னே
திகைப்பும்
நகைப்புமாய்
நனைந்து நின்றது
பயிரிளம்பிஞ்சு..!!

நன்றி நவிழ்ந்து
நல்லாசி கூறி
தன் கையசத்து
சாமரம் வீசி
தென்றலனுப்பியது..!!

சிலிர்த்து நடுங்கி
பூரித்த நெஞ்சில்
கனத்த மழை
மகிழ்ந்து
முகிழ்ந்தது..!!


-பூமகள்.

(இக்கவிதையை நிஜமாகவே என் வீட்டின் அருகில் மழையின்றி வாடிக் கொண்டிருக்கும் பயிர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..!! அதன் தாக்கத்தில் மனம் கனக்க எழுதியதே இக்கவி.)

நிஜத்தில் பயிரின் நிலை.....!!
இன்று பயிர் எனக்கு தன் சோக முகத்தைக் காட்டியது இப்படித்தான்....!!


பயிர் மழலையின் கண்ணீர் கோலம்....!!


3 comments:

cheena (சீனா) said...

அன்பின் பூமகள் - மழையின்றி வாடும் பயிர்கள் - மழை பொழிந்த பின்னர் பயிர்கள் தழைத்தோங்கும். நல்ல சிந்தனை -நல்ல கவிதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமையான கவிதை! வாடியப் பயிரைக் கண்டு வாடி அதற்காக வானை வேண்டியது உங்கள் நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

மழைவர வேண்டி வடித்த கவிதை
பிழையிலா நெஞ்சின் பிறப்பு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு