RSS

Wednesday, November 14, 2007

BHAHBAN - பாஃபன் திரைப்பட விமர்சனம்

தொலைக்காட்சியில் எப்போதும் சில நல்ல ஹிந்தி படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம் எனக்கு உண்டு.

சில மாதங்கள் முன் தற்செயலாய் தொலைக்காட்சியின் அலைவரிசைகளை மாற்றி கொண்டிருந்த வேளையில் சோனி மேக்ஸில் "பாஃபன்" என்ற படம்
ஓடிக் கொண்டிருந்ததை பார்க்க நேர்ந்தது.

அழகான உணர்வுகளை சமகால நிகழ்வுகளை அழகாய் எடுத்து இயம்பிய அந்த படத்தைப் பற்றி இங்கு விமர்சிக்க பெரும் ஆவல் கொண்டு உங்கள் முன் என் எழுத்துக்களைச் சமர்ப்பிக்கிறேன்.


BHAHBAN - பாஃபன் திரைப்பட விமர்சனம்

நடிப்பு: அமிதாப் பச்சன், ஹேமா மாலினி


ஒரு ஆதர்ஷ வயதான தம்பதிகளின் குடும்பத்தினைக் காட்டியவண்ணம் துவங்குகிறது படம். குடும்பத்தின் தலைவர் அமிதாப். அலுவலகத்தில் பலவருடம் கணக்கராகவே வேலை செய்து
ஓய்வு பெற்று பல லட்சம் ரூபாய்களுடன் வீடு வருகிறார் அமிதாப். தனது மூன்று மகன்களுக்காய் தனது பங்கிற்கு அவர்களுக்கு படிப்பு முதல் வேலை வரை
எல்லா விதத்திலும் பாடுபட்டு வளர்த்து நல்ல நிலையில் அவர்களை வைத்திருக்கிறார்.

இரு மகன்களும் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு வேறு வேறு ஊரில் வசிக்க, கடைசி மகன் படிப்புக்காய் வேறு இடத்தில் இருக்க, அபிதாப்பினைப் பார்க்க அனைத்து மகன்களும் வருகின்றனர்.
பல லட்சம் ஓய்வு பெற்று வைத்திருக்கும் தந்தையிடம், வேலைக்காகவும், படிப்புக்காகவும், சொந்த தொழில் துவங்கவும் எல்லா மகன்களும் கேட்டு பணத்தை வாங்கிக் கொள்கின்றனர்.
மகன்கள் மீது வைத்திருக்கும் பாசத்தாலும் அன்பாலும் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு அமிதாப்பும், ஹேமாமாலினியும் பெற்றவர்களின் அன்பை அழகாக வெளிப்படுத்தியிருப்பர்.

அமிதாபின் அனைத்து பணத்தையும் வாங்கிக் கொண்ட மகன்கள், தம்மோடே வந்து தங்கும் படி கேட்டுக் கொள்கின்றனர். அமிதாபும் ஹேமாமாலினியும் சரி என்று ஒப்புக் கொள்ள கிளம்பி பெட்டியெல்லாம் எடுத்து வைத்து காரில் ஏறும் சமயம், மூத்த மகன் சொல்கிறார். அப்பா என்னோடும் அம்மா இளைய மகன் வீட்டிற்கும் போவதால் தம் தாயை இளைய மகன் காரில் ஏறச் சொல்கிறார். அதுவரை பிரிவையே பார்த்திராத அந்த வயோதிக தம்பதிகளின் கண்ணில் உண்மைக் காதலை அழகாய் காட்டி கலங்க வைத்திருப்பார் படத்தின் இயக்குனர்.
3 அல்லது 6 மாதம் கழித்து மீண்டும் இடமாற்றம்.. அப்பா இளைய மகன் வீட்டிலும் அம்மா மூத்த மகன் வீட்டிலும் என திட்டம் போட்டு இருப்பர் மகன்கள்.

பிரிந்து வாழும் கணவர் மனைவி இருவரும் புகைப்படத்தைப் பார்த்து வருந்தும் காட்சியிலும், தொலைபேசி அழைப்புக்காய் காத்து கண்ணீர் மல்க பாசத்தைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியிலும் ஹேமா மாலினி மற்றும் அமிதாப்பின் நடிப்பு முத்திரை இப்படத்தில்.

எப்போதும் மூத்தவர்களைத் தான் சாப்பாடு மேசையின் நடு நாயகமாய் அமர்த்தும் மரியாதை வழக்கம். அப்படி மகனது வீட்டில் அமிதாப் எப்போதும் போல் நடு நாற்காலியில் அமரும் போது, மருமகள் எழச் சொல்லி அது தன் கணவரும்
அமிதாப்பின் மகனுக்குத் தான் அவ்விடம், அவர் தான் வீட்டின் நாயகர் என்று சொல்லும் போது ஒரு வயோதிக தந்தைக்கு கிடைக்க வேண்டிய மரியாதை என்ன என்பதையும் அவர் கிடைக்காததால் படும் துயரையும்
இந்த சிறு காட்சியில் தெளிவாகக் காட்டியிருப்பார் இயக்குனர்.

தனக்கென எப்போதும் கூடவே வைத்திருக்கும் தட்டச்சு இயந்திரத்தை வைத்து இரவு மனைவிக்காய் தட்டச்சு செய்து கொண்டிருப்பார் அமிதாப். மருமகள் தூக்கத்திலிருந்து எழுந்து கணவரிடம் அச்சிறு சத்தத்தைக் கூட பொறுக்காமல் திட்ட, தன் மகன் வந்து திட்டி அப்பாவை அவமதிக்கும் காட்சியில் அமிதாப் உறக்கமின்மையால் தான் தட்டச்சு செய்வதாய் கூறி தன்னிலை விளக்கும் முன்னரே மகன் கதவடைத்து தன் படுக்கையறைக்கு சென்ற காட்சியில் அதிர்ந்து கலங்கி அசத்தியிருப்பார்.

அடுத்த நாள் முதல் காஃபி சாப்பிட வெளியில் செல்ல... அங்கே பழக்கமாகும் ஒரு அழகான தம்பதிகளின் நட்பு. பல நகைச்சுவையான சம்பவங்கள் இந்த தம்பதிகள் செயலிலிருக்கும். அந்த சிற்றுண்டி கடையை நடத்தி வரும் தம்பதிகளின் நகைச்சுவைப் பேச்சில் கலந்து அவர்களின் அன்பிற்கு பாத்திரமாய் மாறி 'மோட்டா பாய்' என்று அழைக்கப்பட்டார் அமிதாப்.

இவரது எழுத்துப் பணியை அங்கு வைத்தே செய்ய முற்படுகையில் அவர்கள் தமது சிற்றுண்டி நிறுவனத்தின் கணக்குகளையும் அவரிடம் ஒப்படைத்து பார்க்கச் சொல்லி மரியாதை செய்வர். அமிதாப்பின் உள்ளக் குமுறலை அவர் மனைவியின் நினைவு தரும் வலியை அழகாக அந்த தம்பதிகளிடம் பகிரும்காட்சி அருமை.

அமிதாப்பின் பேரனால் மூக்குக் கண்ணாடி உடைந்துபோகையில், தன் மகனிடம் கேட்பார் கண்ணாடி மாற்றித் தரும்படி. சரியாக அதே சமயம் மனைவி ஹேமா மாலினியிடம் இருந்து கடிதமும் வரவே, அந்த கடிதத்தைப் படிக்க இயலாமல் கஸ்டப்படும் காட்சியிலும், தன் பேரன் அப்பாவிடம் ஷூவுக்காய் பணம்
வாங்கி தன் தாத்தாவிடம் கொடுத்து கண்ணாடி மாற்றம் படி கூறும் காட்சியும் அருமை.

அந்த கடிதத்தை படிக்க ஆவலாய் இருக்கும் அமிதாப் அந்த சிற்றுண்டி நிறுவன தம்பதிகளிடம் சென்று கடிதத்தைப் படிக்கச் சொல்கிறார்.
அந்த கடிதத்தைப் படித்துக் காட்டுகையில் கண்ணீர் மல்க அதற்கு மேல் படிக்க இயலாமல் அழுதுவிடும் காட்சி கண்ணீர் வரவைக்கும் அனைவரையும்.

தனக்கான நேரத்தை இந்த கடையிலேயே மோட்டா பாய் ஆக கழிக்கும் அமிதாப். இறுதியாக அவர்களிடம் விடைபெற்று செல்லும் காட்சியில் அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை ஏற்க மறுக்கிறார். அவர் செய்த வேலைக்காய் கொடுத்து கண்ணீருடனும் பாசத்துடனும் அனுப்பும் காட்சி அசத்தல்.

ஹேமா மாலினியும் அமிதாப்பும் தொடர்வண்டியில் இரு மகன்களின் வீட்டிற்கும் மாறும் தருணம் வந்தது. பயணிக்கையில் ஒரு நகரத்தில் 10 நிமிடம் இருவரின் ரயிலும் வந்து ஒன்றாய் நிற்கும் என்பதைச் சொல்லி... அந்த சில நிமிடமேனும் பார்த்துக் கொள்ளும் ஆவலில் பயணிக்கும் அமிதாப் மற்றும் ஹேமா மாலினியின் நடிப்பு அருமை.

குறிப்பிட்ட ஸ்டேசன் வர, இருவரும் ஓடி வந்து சேர்ந்து கொள்ள, சில வினாடி கண்ணீர்... பின் பேச்சு என்று நேரம் கரைய... ரயில் மெல்ல நகர ஆரம்பிக்க.. இருவரும் ஒரு முடிவு எடுத்தவர்களாய் ரயில் பயணிக்காமல் அந்த நகரிலேயே தங்குகின்றனர்.

சிறு வயதில் சூபாலிஸ் வேலைசெய்து வந்த சல்மான்கானின் படிப்புக்கு உதவி முன்னேற்றிய அமிதாப் எதிர்பாராத விதமாக சல்மான்கானைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்களை அடையாளம் தெரிந்து கொண்ட சல்மான் அவர்களை வீட்டிற்கு அழைத்து, தான் சமீபத்தில் தான் வெளிநாட்டிலிருந்து வந்து அவர்களைத் தேடினதாகவும் கூறுகிறார். சல்மானின் வற்புறுத்தலில் அவரது வீட்டிற்குச் செல்கிறார் அமிதாப் மற்றும் ஹேமா. நல்ல பாசமிக்க மகனாய் நடந்து கொள்கிறார் சல்மான்.

சல்மான் தம்மோடே இருக்கச் சொல்ல அதைத் தவிர்த்து தம் வீட்டிற்குச் செல்ல உத்தேசித்து செல்ல முற்படுகையில் அமிதாப்பின் கனவு காரை பரிசாக தருகிறார் சல்மான்.

வீட்டிற்கு சென்று வசித்திருக்கையில், மோட்டா பாய் என்ற அழைத்த தம்பதிகள் ஓட்டோடி வருகின்றனர் அமிதாப்பை பார்க்க. அவர் எழுதிய சுயசரிதையை "பாஃபன்" என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டு பல லட்சம் பரிசாக ஒரு நிறுவனம் தருவதாக கூறி பாராட்டுவிழாவிற்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

இறுதியில் என்ன ஆயிற்று, தம் மகன்கள் வந்தார்களா அமிதாப்பைத் தேடி என்று பல விசயங்களோடு மீதிக் கதை முடிகிறது.

இன்றைய நவீனத்துவத்தில் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடும் பல மகன்களுக்கு பாடம் புகட்டும் வண்ணம் அமைந்த படம் என்னை கவர்ந்ததால் இந்த படத்தைப் பற்றி விமர்சிக்க உத்தேசித்தேன்.


இப்படத்தில் கணவர் மனைவியின் ஆழ்ந்த அன்பையும் புரிதலையும் மகன் தந்தை உறவையும் அழகாய் காட்டியிருப்பர். நல்ல சமூகச் சிந்தையுள்ள படம்.

~ பூமகள்.

0 comments: