RSS

Monday, November 12, 2007

தாய்க்கிழவியின் தவிப்பு..!

தாய்க்கிழவியின் தவிப்பு..!

கரிசக்காட்டு மண் போல
காத்துடம்பு சுருங்கிடுச்சு..!

ராசா உன் நினைப்பு மட்டும்

நிதம் என்னை எழுப்பிடுச்சு..!


நீசத்தண்ணி நான் குடிச்சி
காசுபணம் சேர்த்து வச்சேன்..!
நீ உண்ண பன் ரொட்டி

வரும் நாளில் சேர்த்து வச்சேன்..!



காருல நீ வருவன்னு

என் மவ சொல்ல காத்திருந்தேன்..

தேருல நான் போகுமுன்னே

தேடி என் முகம் பார்க்க வருவாயா??



நீசத்தண்ணி குடிச்சதாலே

நீர் கோர்த்த நெஞ்சாச்சு..!



மூச்சடச்சு நான் கிடக்க

தொண்டைக்குழியில் பேராண்டி

உன் பாசம் வந்து விக்கிச்சு..


வர முடியா கண்டத்தில்

மவராசா நீயிருக்க..

நிழல்படத்தில் முகம் கண்டு

மறுகி அம்மாயி
(அம்மாவின் அம்மா) நானிருக்கேன்..!


பல்லு போயி எல்லாம் போயி

பாதி உயிரான உடம்பால

பலூன் ஊதச் சொல்லி

மிச்ச உயிர பறிக்கிறாங்க..!



நெஞ்சுக்கூட்டில் குழாவிட்டு

நீர் எடுக்க பார்த்துப்புட்டு

தூர்விட்டு போயி

நுரையீரல் சுருங்கிடுச்சாம்..!

மருத்துவர் கை விரிச்சாச்சு..!


உன் பூமுகத்தைப் பார்த்துப் புட்டா

சொர்க்கம் உன் மடியாச்சு..!


ஏதேதோ நெனப்பு வந்து

கண்ணு மட்டும் கலங்கிடுச்சு..!


நல்வாக்கு வாயில் வந்து

வாழ்த்திட்டு விம்மிருச்சு....!


போனில் நீ சொன்ன சொல்லு

காதில் இன்னும் ஒலிக்குதிங்கு..!


அந்த சத்தம் காதுல இன்னும்

அடிச்சுக்கிட்டே காக்குதிங்கு..!


உன் பாசம் காத்தில் வந்து

கண்ண தொடச்சி விட்டுடிச்சி..!

ஊசி வலியும் ஊமைப்

புண்ணும் உன் நேசத்தால மறஞ்சிருச்சி..!


உடம்பு எல்லாம் வலியாச்சு..!

உசிரு எல்லாம் நீயாச்சு..!



கண்ணு மூடி போயிட்டேனா

அழாதேடா ராசாக்குட்டி..!

சாமியா நானிருந்து

காத்து நின்னு பார்த்துக்குவேன்

அழாதேடா ராசாக்குட்டி..!



குறிப்பு:

பூமகளின் கவிதையில் இது அழுவாச்சிகாவியம். ஆம்.. இது என் பாசமிகு அம்மாயிக்காக எழுதப்பட்ட அர்பணக் கவிதை..!

உயிர் பிரிந்த தருவாயில்
அவர் அருகே நானிருந்து
நெஞ்சில் ஏற்றிவைத்த
வலிகளை கவி வரிகளாக்கி
வடித்திருக்கிறேன்..!

வார்த்தைகள் சொல்லும் சேதி
உண்மை..!
சொல்ல நினைத்த சேதி
பன்மை..!
பாதித்த சில நிகழ்வை
'பா' வாக்கி படைத்திருக்கிறேன்..!

சொர்க்கம் எட்டும் இக்கவி
என்றே நம்புகிறேன்.

இதைப் படிக்கும்
என் அம்மாயி
ஆன்மா அமைதியடையும் என்று
பிராத்திக்கிறேன்.

__________________
~ பூமகள்.

0 comments: