RSS

Wednesday, November 7, 2007

இருளும் ஒளியும்..!!



உன் வானம் தூரல் போட்டு கொண்டாடும் பூவானம்..!
என் வானம் துக்கத்தை மட்டுமே தூரலாக்கிச் சென்ற செவ்வானம்..!


உன் கனவில் நீ இளவரசர்களின் இதயமெட்டு..!
என் கனவில் நான் இம்சையரசரின் அடிமையிளஞ்சிட்டு..!


உன் காதுகளில் சந்தோசங்கள் சஹானா ராகம் பாடும்..!

என் செவிகளில் சங்கடங்களே சஹாரா முகாரி பாடும்..!



உன் கைப்பையின் சொச்சமாய் இருக்கும் நாணயங்கள்..!!
என் கிழிந்த சேலைநுனியின் மிச்சச் சொத்தாக நாணயங்கள்..!

சிதறும் உன் சிரிப்பில் மிளிரும் உன் செழுமை..!!
பதறும் என் பதபதைப்பில் மிரளும் என் வறுமை..!



உன் கூந்தல் சிங்காரமாய் செலவாக்கி சிவப்பாகியிருக்கும்..!

என் கூந்தல் செல்புசிக்கா எண்ணெயால் சிவப்பாகியிருக்கும்..!


உன் வாயில் கொரித்துச் சிதறும் துண்டுகள்..!

என் ஒரு வேளை ஆகாரத்துக்கு போதுமான துண்டுகள்..!!


உன் செல்ல நாய்க்குட்டியின் சோப்புச் செலவு..!

என் குடும்பத்தினரின் மொத்த உணவுச் செலவு..!

உன் கிழிக்கப்பட்ட ஆடையால் புலப்படும் அங்கம் நாகரிகச் சின்னம்..!
என் கிழிந்த உடையில் தெரியும் அங்கம் அவமானச் சின்னம்..!

உன் செருப்பின் ஒரு ஜோடி விலை..!

என் சேலையின் ஒன்பது ஜோடி விலை..!


செயற்கை வெளிச்சத்தில் உன் வீட்டு மேல்சுவற்றில் பளிச்சிடும் நட்சத்திரங்கள்..!!

இயற்கை வெளிச்சத்தில் என் வீட்டு மேல் கூரையின் சிரித்திடும் நட்சத்திரங்கள்..!!


உன் பார்வை வெயில் படாத கருப்பு கண்ணாடியின் பின்..!

என் பார்வை வெயில் பட்டும் கருத்த இருட்டின் முன்..!!


இருட்டான என் உலகில்
உன் வெளிச்சம் பதிக்க வரும்

ஒளியாண்டு எப்போது??

ஒளிந்திராமல் வருவாயோ??

-பூமகள்.

0 comments: